அரிக்கமேடு அகழாய்வு
பண்டைத் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்துள்ளதையும் அத்துறைமுக நகரங்களிலிருந்து கடல் வழி வாணிகம் பெரிதும் நடைபெற்றதையும் சங்க இலக்கியங்களும் அயல் நாட்டார் குறிப்புகளும் தெரிவிக்கின்றன. குறிப்பாகப் "பெரிப்ளஸ் ஆப் எரித்ரியன் ஸீ” என்ற கிரேக்கப் பயண நூலில் ‘பொதுகே’ என்ற கடற்கரைத் துறைமுகத்தைப் பற்றியக் குறிப்பு காணப்படுகிறது. தாலமி என்னும் கடல் வழிப் பயணி தமது குறிப்பில் ‘கபேரிசு’ (காவேரிப் பூம்பட்டினம்) துறைமுகத்திற்கு வடக்கே ‘பொதுகே’ அமைந்திருந்தது என்பதையும் குறித்துள்ளார். இத்துறைமுகப்பட்டினம் யவனர் வாணிகத்துடன் தொடர்புடையது என்றும் இக்குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. இக்குறிப்புக்களில் குறிக்கப்படும் ‘பொதுகே’ என்னும் துறைமுக நகரம் இன்றைய அரிக்கமேடு என்னும் பகுதியே எனக் கண்டறியப்பட்டு அகழாய்வுகள் நடைபெற்றன.
அரிக்கமேடு-அமைவிடம்
அரிக்கமேடு என்று தற்பொழுது வழங்கப்படும் பகுதி அருகன் மேடு என்பதின் திரிபாகும். புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் புதுச்சேரிக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் வலக்கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அகநானூற்றில் ‘வீரை’ என்ற கடற்கரைப்பட்டினம் குறித்துக் குறிப்புகள் உள்ளன. இது வேலூர் சிற்றரசர்களின் துறைமுக நகரமாக விளங்கியது. அரிக்கமேட்டிற்குச் சற்றுத் தொலைவில் வீராம்பட்டினம் என்னும் ஊரும் உள்ளது. சங்க இலக்கியங்கள் சுட்டும் வீரையே தற்பொழுது வீராம்பட்டினம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்பட்டினத்தின் ஒரு பகுதியே அரிக்கமேடு எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
லீ ஜென்டில் ஆய்வுகள்
இக்கருதுகோளை மெய்ப்பிக்கும் வகையில் பழமை மிக்க மண்மேடுகள் கடற்கரை ஒட்டிய இப்பகுதியில் இருப்பதை 18 ஆம் நூற்றாண்டிலேயே பிரான்சு நாட்டின் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அரியாங்குப்பம் ஆற்றுப் பெருக்கால் இம்மண்மேடு அரிக்கப்பட்டு பழமையான எச்சங்கள் வெளிப்பட்டதை முதன் முதலில் லீஜென்டில் (1768-71) என்பவர் குறிப்பிட்டுள்ளார். தொன்மையான கட்டிடச் சிதைவுகளும் உறைக் கிணறுகளும் இப்பகுதியில் இருப்பதை இவர் கண்டறிந்தார். இங்கு நிலக்கிழாராக விளங்கிய கிருஷ்ணசாமி கவுண்டர் என்பார் தம் நிலத்தினை அகழ்ந்தபொழுது பல கட்டிடச் சிதைவுகள் மற்றும் அரும்பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்தார். இதனை துப்ராயில் என்ற ஆய்வாளருக்குத் தெரிவித்தார். இதற்கிடையில் சென்னை அருங்காட்சியகத்தின் அலுவலர் அய்யப்பன் என்பாரும் குறுகிய அளவில் இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார். இவ்வாய்வுகளிலும் பல அரும்பொருள்கள் வெளிப்பட்டன.
ஜுவ்யோ துப்ராயில்
இப்பகுதியின் சிறப்பினை அறிந்த துப்ராயில் என்னும் ஆய்வாளர் இங்கு 1937 ஆம் ஆண்டு கள ஆய்வுகள் மேற்கொண்டார். இவருடன் பாதிரியார் போஷே என்பவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். இக்கள ஆய்வுகளில் துப்ராயிலுக்கு பல அரும்பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது உரோமானியப் பேரரசன் அகஸ்டஸ் சீசரின் தலை பொறிக்கப்பட்ட மணிக்கல் ஒன்றாகும். இதன் அடிப்படையில் கிறித்துவ ஆண்டின் தொடக்க காலத்தில் உலக அளவில் மிகச் சிறந்த பன்னாட்டு வாணிக நகரமாக அரிக்கமேடு விளங்கியிருந்திருக்க வேண்டும் எனத் துப்ராயில் கருதினார். தொடர்ந்து இங்கு பெலிகூ என்பாரும் ஆய்வுகள் மேற்கொண்டு இப்பகுதி ஒரு சிறந்த துறைமுக நகரமாக இருந்திருக்கவேண்டும் என உறுதி செய்தார்.
பௌசெக்ஸ் என்னும் பிரெஞ்சு ஆய்வாளர் 1941 முதல் 1944 ஆண்டுகளில் சிறிய அளவில் அகழாய்வுகளை இப்பகுதியில் மேற்கொண்டார். இப்பகுதியில் இரண்டு இடங்களில் குழிகள் இடப்பட்டு அரும்பொருள்கள் பலவற்றை இவ்வாய்வாளர் கண்டுபிடித்தார்.
மார்டிமர் வீலர் மற்றும் விமலா பெக்ளி
இவ்வாய்வுகளின் விளைவாக அரிக்கமேட்டுப் பகுதியில் அறிவியல் சார்ந்த அகழாய்வினை இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குனராக விளங்கிய சர் மார்டிமர் வீலர் என்பார் 1945 ஆம் ஆண்டு மேற்கொண்டார். இவ்வகழாய்விற்கு புதுவை ஆளுனராக விளங்கிய பான்வின் என்பார் பெரிதும் உதவி புரிந்தார். பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியை விமலா பெக்ளி என்பார் 1989-92 ஆம் ஆண்டுகளில் இங்கு மீண்டும் அகழாய்வுகளை மேற்கொண்டார். இவ்வகழாய்வுகளிலும் பல முக்கியப் பொருள்களும் கட்டிடச் சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
வீலர் மேற்கொண்ட அகழாய்வுகளில் இப்பகுதியில் செங்கற்களால் கட்டப்பட்ட பல கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வடக்குப் பகுதியில் நடந்த அகழாய்வில் இங்கு ஒரு பண்டக சாலை இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உள் நாட்டில் இருந்து வரும் ஏற்றுமதிப் பொருள்களையும் வெளி நாட்டில் இருந்து வரும் பொருள்களை இறக்கி வைக்கவும் இப்பண்டக சாலை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பண்டக சாலை 45 மீட்டர் நீளமும் 11 மீட்டர் அகலமும் உடையது. இக்கட்டடத்தின் வடக்குப் பகுதியில் தானியக கிட்டங்கி ஒன்றின் கட்டிடச் சிதைவுகளும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. உறுதியான செங்கற்கள் கொண்டு குழைத்த களிமண் கொண்டு இக்கட்டடங்கள் கட்டப்பட்டன. வெளிப்பகுதியில் சுண்ணாம்புக் கரையால் பூசப்பட்டு இக்கட்டிடங்கள் விளங்கியுள்ளது. இப்பகுதியில் பல உறைக்கிணறுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
சாயத்தொட்டி
அரிக்கமேட்டின் தென் பகுதியில் அகழாய்வில் இரண்டு சாயத் தொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொட்டிகள் இரண்டும் 3மீ X 4 மீ அளவினை உடையவை. ஒரு தொட்டியின் தென்பகுதியில் அறை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு தொட்டியின் தெற்குப்பகுதியில் முற்றம் ஒன்றும் காணப்படுகிறது. இக்கட்டிடங்கள் யாவும் தரைப்பகுதியுடன் காணப்பட்டது. இவ்விரு தொட்டிகளின் உள்ளே தேங்கும் நீரை வெளியேற்ற இரண்டு கால்வாய்ப் புழைகள் இருந்துள்ளமையை அகழாய்வில் கண்டுபிடித்தனர். முற்றப் பகுதியில் கதவு நிலை இருந்ததற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அரிக்கமேட்டில் நெசவுத் தொழில் சிறந்து விளங்கியிருந்துள்ளமையை இக்கட்டிடத்தின் பயன்பாட்டின் மூலம் அறிய முடிகிறது. துணிகளைச் சாயங்கள் தோய்க்க இத்தொட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.
விமலா பெக்ளி 1989-90 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட அகழாய்வு வீலர் மேற்கொன்ட வடக்குக் கட்டிடப் பகுதிக்கு அருகிலேயே மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்விலும் கட்டிடத்தின் சிதைவுகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
மட்கலன்கள்:
அரிக்கமேடு அகழாய்வில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட மட்கலன்களும் வெளி நாடுகளில் இருந்து தாயரிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மட்கலன்களும் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக உரோமாபுரியைச் சார்ந்த மட்கலன்களான அரிட்டைன், ஆம்போரா மதுக் குடுவைகள் ரௌலட்டட் எனப்படும் தட்டு வகைகள் பெருமளவில் கிடைத்தன. ஆம்போரா வகைக் குடுவைகள் கைப்பிடியுடன் காணப்பட்டன. இவ்வகைச் சாடிகள் உரோமாபுரியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர் வகை மதுக்களைக் கொண்டு வருவதற்காக அக்காலத்தில் பயன்படுத்துப்பட்டுள்ளது. இவ்வகழாய்வில் உள்ளூரில் வனையப்பட்ட மதுக்குடுவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அரிட்டைன் எனப்படும் மட்கலன்கள் இத்தாலியில் அரிசோ என்ற இடத்தில் இருந்த சூளையில் தயாரிக்கப்பட்டு முத்திரைக் குத்தப்பட்டு காணப்படுகிறது. இம்மட்கலன்கள் மிக நேர்த்தியான மண்ணால் குழைந்து செய்யப்பட்டுள்ளன. இம்மட்கலன்களின் காலம் கி. பி. 20 இலிருந்து கி.பி. 50 வரை ஆகும். பல வகை சுடுமண் விளக்குகளும் கூறை ஓடுகளும் அகழாய்வில் கிடைத்தன.
பேராசிரியர் விமலா பெக்ளி நடத்திய அகழாய்வில் டெர்ரா சிகிலிட்டா என்ற பகுதியில் தயாரிக்கப்பட்ட மட்கல ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இம்மட்கலக் கண்டுபிடிப்புக்கள் மூலம் மத்தியத் தரைக்கடல் வாணிகர்கள் இத்துறைமுகத்திற்கு வருகைப் புரிந்துள்ளமையை அறியமுடிகிறது. குறிப்பாக யவனர்கள் இங்கு பெருமளவில் வந்து தங்கியுள்ளனர்.
தொல்பொருள்கள்:
அரிக்கமேடு அகழாய்வில் அரிய கல்மணிகள் தங்கத்திலான மணிகள், சங்கு வளையல்கள், மணிகள், சுடுமண் மணிகள் பெருமளவில் கிடைத்தன. அரிய கல்மணிகள் இந்நகரத்திற்கு அருகில் இருந்த மணிக்கொல்லை என்ற பகுதியில் தயாரிக்கப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி இத்துறைமுகத்தின் வாயிலாக ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வகழாய்வில் சுடுமண் உருவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சுடுமண் உருவங்களில் அழகும் வனப்பும் மிக்க பெண் உருவம் குறிப்பிடத்தக்கது. இப்பெண் தன் ஒரு கையைத் தொடையில் இருத்தியவாறு மறு கையில் கூடை ஒன்றினைத் தாங்கியவாறு காணப்படுகிறாள். உடலில் உள்ள ஆடை மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர சதுரங்க காய்கள் காதணிகள் போன்றவைகளும் அகழாய்வில் கிடைத்தன. தேர் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை ஒன்றும் இங்கு கிடைத்தது. இதன் நீளம் 5.5. கசெ.மீ. அகலம் 5.0 செ.மீ. களிமண்ணால் உருவாக்கப்பட்ட இம்முத்திரையில் தேரினை இரண்டு குதிரைகள் இழுக்க அதன் மீது நின்ற நிலையில் தேரோட்டி உருவம் பொறிக்கப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாணயங்கள்
அரிக்கமேடுப் பகுதியில் நடைபெற்ற கள ஆய்வுகளிலும் அகழாய்வுகளிலும் பல் வகை நாணயங்கள் கிடைத்தன. குறிப்பாக உரோமாணிய நாணயங்களையும் சங்க கால சோழர் நாணயத்தையும் குறிப்பிடலாம். டைபிரியன் தினாரிஸ் நாணயமும் , காண்ஸ்டான்டைன் மன்னரின் செப்பு நாணயமும் சதுர வடிவில் அமைந்த சங்க கால சோழர் நாணயமும் குறிப்பிடத்தக்கவை. சங்க கால சோழர் நாணயத்தின் ஒருபக்கம் யானை உருவமும் மற்றொரு பக்கம் புலியின் உருவமும் காணப்படுகிறது. இவற்றின் மூலம் உரோமானிய தொடர்புடைய வாணிக நகரமாக சங்க காலத்தில் அரிக்கமேடு விளங்கியிரு ந்தமையை அறிய முடிகிறது.
தமிழி எழுத்துப் பொறிப்புகள்
அரிக்கமேடு அகழாய்வுகளில் தொன்மையான தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் கொண்ட மட்கல ஓடுகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. முதன் முதலில் தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் அகழாய்வில் கிடைத்த இடமாக அரிக்கமேடு விளங்குகிறது. பின்னர் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அகழாய்வுகளில் தமிழி எழுத்துப் பொறிப்பு மட்கல ஓடுகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.அரிக்கமேட்டில் கிடைத்த ஓடுகளில் உள்ளவை பெரும்பாலும் ஆட்பெயர்களாகும். தமிழ் பெயர்களும் இவற்றுடன் சில வட இந்தியப் பிராகிருதப் பெயர்களும் இலங்கைப் பகுதியில் இருந்த பெயர்களும் இவற்றில் காணப்படுகின்றன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை குளவாய், லாதன், அதன்மகன், கணன், குப்பிரன், உத்திரன் மற்றும் வணதிகஸ ஆகியவை ஆகும்.
சிறப்புகள்
தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் பல துறைமுகங்கள் சங்க காலத்தில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியிருந்தமையை சங்க இலக்கியங்கள் சுட்டுவதை அறிவியல் முறை அடிப்படையில் நட்த்தப்பட்ட அகழாய்வுகள் பல உறுதி செய்து வருகின்றன. தமிழர்கள் கடல் கடந்து வாணிகம் மேற்கொண்டு தமிழகத்தின் நறுமணப் பொருள்களையும் பட்டாடைகளையும் அணிமணிகளையும் ஏற்றுமதி செய்தும் மேலை நாடுகளின் பல பொருள்களை தமிழகத்திற்கு இறக்குமதி செய்ததையும் குறிப்பாக யவனர்கள் தமிழகத்துடன் பெரிதும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் நடந்த அகழாய்வுகள் உறுதி செய்கின்றன.
இராமநாதபுரம் பகுதியில் அழகன் குளம் என்ற இடத்தில் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளிலும் மேற்கு நாடுகளுடன் தமிழகம் சங்க காலத்தில் மேற்கொண்ட வாணிகத் தொடர்பை அறிய முடிகிறது. இதே போன்று காவேரிப் பூம்படினம் அகழாய்வும் மேலைக் கடற்கரையில் பட்டினம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வும் செங்கடற் பகுதியில் பெரினிகே மற்றும் குவசீர் அல் குதாம் ஆகிய இடங்களில் நட்த்தப்பட்ட அகழாய்வுகளும் சங்கத் தமிழர்களின் கடல் கடந்த வாணிகத் தொடர்பை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
இத்தகு வரிசையில் அரிக்கமேடு அகழாய்வு முதலிடம் பெரிகிறது. இவ்வகழாய்வின் மூலம் தமிழகம் கி.பி. 1 ஆம் நூற்றாண்டளவில் மத்தியத் தரைக் கடல் நாடுகளுடன் குறிப்பாக உரோமாபுரியுடன் கடல் வாணிகம் மேற்கொண்டு இருந்ததை அறிய முடிகிறது. அரிக்கமேடு நெசவுத் தொழில் நகரமாகவும் அரிய மணிகள் மற்றும் உள் நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி நகரமாகவும் உரோமபுரியிலிருந்து மதுவகைகளை இறக்குமதி செய்யும் நகரமாகவும் விளங்கியுள்ளதை அறிய முடிகிறது. பொன்னொடு வந்து கரியோடு பெயரும் சங்க வாக்கியத்திற்கு கட்டியம் கூறும் வகையில் அரிக்கமேடு அகழாய்வுகள் உண்மைச் சான்றுகளை வெளிப்படுத்தி தமிழரின் கடல் வாணிகத் தொடர்பை உலகிற்கு எடுத்தியம்பி உள்ளது. இன்றைக்குப் பெரிதும் பேசப்படுகின்ற கீழடி அகழாய்வின் கட்டிடச் சிதைவுகளும் உரோமாபுரியுடன் நேரிடையாக தொடர்பு கொண்ட துறைமுக நகரமாகவும் அரிக்கமேடு விளங்கியுள்ளது. கீழடி போன்று பல கட்ட அகழாய்வுகள் இப்பகுதியில் மேற்கொண்டால் மேலும் தமிழர்களின் கடல்வாணிகம் நகரமயமாக்கல் பற்றிய வரலாற்றை நம்மால் அறிய இயலும்
துணை நூல்கள்
1.Wheeler, R.E.M. et al. 1946 ‘Arikamedu an Indo Roman trading –station on the East coast of India,’ Ancient India, vol-2.
2. Begley,V.1996 The Ancient port of Arikamedu, Vol.I. Ecole Franchcaise D’Estreme-orient, Pondicherry,
3.Aiyappan, A. 1941 A Dakshina Taxila, Historic Relics from Arikamedu.’ The Hindu, march.23.
4.Kasinathan, N. 1992 Alagankulam: a preliminary report. Madras.
5. Whitcomb,D. and J.H.Johnson 1979 Quseir al-Qadim 1978 preliminary Report.Princeton: American research Centre in Egypt.
6.இராஜவேலு.சு, திருமூர்த்தி, கோ. 1995. தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை.