முகப்பு வரலாறு தொல்லியலும் வரலாறும் கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் கல்வெட்டுக்கள் சுட்டும் சாதியச் செய்தி
தமிழக வரலாற்றில் தொழில் அடிப்படையில் தொடக்கத்தில் பிரிந்திருந்த மக்கள் பின்னாளில் வடவரின் வருகையால் ஏற்படுத்தப்பட்ட வர்ணமுறையின் ஆதிக்கத்தால் 'சாதி' என்னும் நிறுவனமாகச் செயல்பட்டனர். தமிழரின் தொன்மை நூலான தொல்காப்பியம் நான்கு வர்ணப்பாகுபாட்டை எடுத்தியம்புகின்றது. சங்க இலக்கியத்தில் "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே" எனப் புறநானூற்று பாடல் சுட்டுகின்றது.
தமிழரின் சமுதாய அமைப்பு அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் எனும் படிநிலையமைப்பின்கீழ் இயங்கியதோடு அடியோர், வினைவலர் போன்ற கீழ்நிலையான தொழில் பிரிவு மக்களையும் கொண்டிருந்தது. இத்தகைய சமூக அமைப்பில் உயர்ந்த சாதிகள் ஆளும் அதிகாரங்களில் இடம் பெற்று அவை தங்களுக்குக் கீழாக இருந்த சாதிகளை ஆதிக்கம் செலுத்தியநிலைகளைப் பெரும்பான்மையான கல்வெட்டுகளில் காணமுடிகிறது.
தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பெரும்பாலும் மனுதர்மத்தின் அடிப்படையிலேயே ஆட்சியை மேற்கொண்டதால் ஆளும் வர்க்கமான சத்திரியவர்க்கமும் அதற்குத் துணை நின்ற வேளாள வர்க்கத்தினரும் ஆட்சியதிகாரங்களில் இடம் பெற்றனர். சமய நிலையில் முதல் படியில் இருந்து இச்சமுதாயத்தை இயக்கிய பிராமணர்களும் சமூக அமைப்பில் மேலிடத்தைப் பெற்றனர். உழைக்கும் மக்களான பிறர்சமூகத்தளத்தில் கீழ்நிலையிலேயே இடம்பெற வேண்டியதாயிற்று.
கல்வெட்டுகள் சுட்டும் சாதிப்பெயர்கள்
கல்வெட்டுகள் பல்வேறு சாதிப் பெயர்களைப் பதிவு செய்துள்ளன. சில வருமாறு:
"பள்ளி", "கலனைகள்" " வண்ணார்" "அகம்படித்தனமுதலி", "கைக்கோளர்" "பிள்ளைமுதலி" "செட்டி" "முவச்சர்" "பெரும்வேடம்" "பாணர்" "பள்ளு" "பறையர்" "பறைமுதலி" "செக்கிலியர்" "இருளர்" "அந்தணன்" "வெள்ளாழர்" "எண்ணெய்வாணியர்", "நாவிதர்" , "நாட்டுச்செட்டிகள்" முதலிய சாதிகளைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. ஒவ்வொரு சாதியும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பழக்க வழக்கங்களை மேற்கொண்டும் அந்த அந்தத் சாதிக்குரிய தொழிலை மேற்கொண்டும் இயங்கின.
கல்வெட்டுக்கள் சுட்டும் சாதிக்குரிய இடங்கள்
தமிழர் வாழ்வில் மனுதர்மம் போதித்த பல சடங்குகள் வாழ்வியல் கூறுகளாயின. இந்நிலையிலேயே வாழிடம் முதல், இறந்தவர்களைப் புதைக்கவும் எரிக்கவுமாக அமைந்த ஈமக்காடுகள் வரை அனைத்து நிலைகளிலும் ஒவ்வொரு சாதிக்குமான வரையறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மக்கள் வாழிடங்கள் அந்த அந்தச் சாதிநிலைக்கேற்ப அமைக்கப்பட்டிருந்தன. "சோழர் கல்வெட்டுக்களில் பறைச்சேரி, கம்மான்சேரி, ஈழச்சேரி, வண்ணாரச்சேரி, தீண்டாச்சேரி எனத் தனி ஊர்ப்பெயர்கள் குறிக்கப்பெறுகின்றன. பிராமண சுடுகாடு, வெள்ளாள சுடுகாடு, பறைச்சுடுகாடு எனத் தனித்தனிச் சுடுகாடுகளும் அச்சுடுகாட்டுக்குப் போகும் வழிகளும்" தனித்தனியே இருந்தமையைக் கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது.
"உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் குடுத்த ஊர்களில் ஊர்நத்தமும் ஸ்ரீ கோயில்களும் குளங்களும், ஊடறுத்துப்போன வாய்க்கால்களும் பறைச்சேரியும் கம்மானசேரியும் சுடுகாடும் உள்ளிட்டு இறையிலி நிலங்களும்" எனவும், "ஸ்ரீ கோயில்களம் சுடுகாடும், ஈழச்சேரியும் கம்மாண சேரியும் பறைச்சேரியும் பறைக்குலங்குழியும்" எனவும், "புலத்தில் குலங்களும் தீண்டாச்சேரியும் பறைச்சேரியும், சுடுகாடும் ஆக இறையிலி நிலம் நான்கரையென முக்காணி" எனவும், 'இவ்வூர் ஈழச்சேரியும், பறைச்சேரியும், வெள்ளான் சுடுகாடும் பறைச்சுடுகாடும் கற்கிடையுமாக" எனவும், "உழல்பறையர் இருக்கும் கீழைச்சேரியும்" எனவும்,
வரும் கல்வெட்டு வரிகள் சாதிக்குரிய சேரிகளையும் ஈமக்காடுகளையும் சுட்டுகின்றன. மேற்கண்ட சான்றுகளின் வழி மக்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு பிரிவுகளாக வாழ்ந்து வந்தனர் என்பதையும், பறையர்கள், வண்ணார்கள், கம்மாளர்கள், வெள்ளாளர்கள் போன்றவர்கள் தனித்தனியே வாழ்ந்துள்ளனர் என்பதையும் அறிய முடிகின்றது. இவையன்றி மேற்கண்ட இடங்களும், சுடுகாடுகளும் வரி நீக்கம் பெற்று விளங்கின.
இன்றளவிலும் சுடுகாடுகள் சாதிக்குத்தக ஒதுக்கப்பட்டுள்ளன. சேரியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிறசாதியினர் வாழும் பகுதிகளுக்கு அருகே உள்ள சுடுகாடுகளுக்குப் பிணத்தை எடுத்துச் செல்லும்போது கலவரங்கள் ஏற்படுகின்றன. இவையே சாதியப் பூசல்களுக்கு அடிப்படையாய் அமைகின்றன.
சாதியச் சடங்குள்
சடங்குகளை மையமாகக் இயங்கிய சமூக அமைப்பில் சாதிக்குச் சாதி சடங்குகள் வேறுபட்டன. இதனால் சாதியின் வளர்ச்சிக்கும் அதனைக் கட்டிக் காப்பதற்கும் சடங்குகள் பெரிதும் துணைநின்றன.
சாதியின் வளர்ச்சிக்கான சூழல் அச்சாதிகளுக்கென்று நிர்ணயம் செய்யப்பட்ட பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் கொண்டு இயங்கியமையால் ஒரு சாதியின் பழக்கவழக்கங்கள் அல்லது சடங்குகளைப் பிற சாதியினர் கடைப்பிடிக்கும் போது அங்குச் சாதியப்பூசல்கள் ஏற்பட்டன. சமுதாயத்தில் உயர்ந்த சாதிக்குரிய பழக்கவழக்கங்களைக் கீழ்சாதியில் உள்ளோர் பின்பற்றுவது சமூகக் குற்றமாகக் கருதப்பட்டது.
சாதியக் கட்டுப்பாடுகள்
காலந்தோறும் அரசர்களாலும் ஆளும் வர்க்கத்தினராலும் வர்ணமுறையிலான சாதியக்கட்டுக்கோப்புகள் கட்டிக்காக்கப்பட்டன. இச்சாதியக் கட்டுகளை மீறுவோரும் மீற முயற்சிப்போரும் கடுமையான சட்டங்களின் வழித் தடுக்கப்பட்டனர். வீரப்ப நாயக்கர் காலத்தில் சாதிக்கு இல்லாத காரியங்கள் செய்வது மிகப்பெரிய குற்றமாகக் கருதப் பெற்றது. சூத்திரர்கள் வீடுகளில் உண்ணக்கூடாது; அவ்வாறு செய்பவர்கள் சாதிக்குப் புறம்விட்டுக் கண்ணும் பறித்துத் தேசம் கடத்தப்பட்டனர். உற்பத்தி கன்று காளி கோயிலுக்கு உரித்தானது. அவர்கள் வீடு குளம் பறித்து வண்ணான்துறை ஆக்கப்பெற்றது, எனவே, சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் அதற்கென்று வரையறுக்கப்பட்ட பழக்கவழக்கங்களும் சடங்குகளுமே வாழ்வியல் கூறுகளாக அமைந்தன. தொழில்வழிப் பிரிந்து வாழ்ந்த மக்கள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலே ஒதுங்கி வாழ்ந்தனர்.
சாதிய ஏற்றத்தாழ்வுகள் பெருகிய காலத்தில் உயர்ந்த சாதிகள் கடைபிடித்த பழக்கவழக்கங்களைச் சாதியப்படிநிலையில் கீழான இடத்தில் இருந்தவர்கள் பின்பற்றி அதன்வழி தங்களைச் சாதிப்படி நிலையில் உயர்த்திக்கொள்ள முயன்றனர்.
"தொழிலாளர்கள் பெரும் முயற்சிகள் எடுத்துப் பல உரிமைகளைப் பெற்றது உண்டு. எடுத்துக்காட்டாகத் தச்சுத் தொழிலாளர்கள் தேர்த்திருவிழாக்களின் போது தங்களுடைய தலையில் தலைப்பாகை அணிந்து கைகளில் உளியும் சுத்தியும், மரம் அறுக்கும் வாளையும் கொண்டு, தேரின்பின் போவதும், சிலர் இடுப்பில் அங்கவஸ்திரம் அணிந்து போவதும் வழக்கங்கள்" எனக்கு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய உரிமைகள் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்பெறவில்லை என்பது கவனத்திற்குரியது.
நில விற்பனையில் சாதி
சாதிப்படி நிலையில் உயர்ந்தவர்கள் தங்களின் கீழானவர்களுக்கு நிலத்தை விற்பதோ அல்லது அவர்களிடமிருந்து வாங்குவதோ கூடாது எனச் சமூகத்தடை இருந்ததைக் கல்வெட்டுக் குறிப்புகள் வழி அறியமுடிகின்றது. விஜயநகர மன்னர்களது ஆட்சிகாலத்தில் "ஓரினத்திற்கு அல்லது சாதிக்குச் சொந்தமான நிலங்களை வேறு இனத்தை அல்லது சாதியை சேர்ந்தவர்கள் வாங்கக்கூடாதெனத் திட்டங்களும் அக்காலத்தில் நிலைபெற்றிருந்தன. மைசூர் நாட்டில் மாலவல்லி என்னும் கிராமத்தில் வசித்த அந்தணர் மற்ற வகுப்பினர்களுக்கு நிலங்களை விற்கக்கூடாதெனவும் அதற்குமாறாக விற்றால் கிரயம் செய்த அந்தணர்கள் சாதியிலிருந்து விலக்கப்படுவாரென்றும், கிரயம் செய்யப்பெற்ற நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சும் முறை வழங்கப்படாதெனவும் சமுதாயத் திட்டம் ஒன்றை இயற்றியுள்ளனர்".
சாதிகளுக்கான வரி நீக்கம்
சமுதாயம் மேற்கண்ட முறைகளில் இயங்கியபோது உயர்ந்த சாதிகள் சமூக ஆளுமையில் உளர்வான இடத்தில் இருந்தன. அரசர்களுக்கும் கீழ்சாதி மக்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துகின்ற நிலையில் உயர்ந்த சாதிகள் விளங்கின. வரி வசூலிலும் ஊர் நிர்வாகத்திலும் சமூகநிலையில் உயர்ந்திருந்த சாதிகளே இடம்பெற்றன. "பிராமணர் வெள்ளாளர் முதலிகள் ஊரில் உள்ள பணத்தை வசூலித்துக் கோயிலுக்குச் செலவு செய்ய உரிமை பெற்றிருந்தனர்". மேலும், கம்மாளருக்கான வீட்டு, நிலத்து வரிகளும் மானியமாக வழங்கப்பட்டன. "சுளுவ நாயக்கர் திருவதிகையில் வாழ்ந்த கம்மாளருக்கு வாசல் வரி, தென்னைமரத்துவரி போன்றவற்றை மானியமாகத் தந்துள்ளதைக்" கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
சாதிகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம்
சாதிய அமைப்பு இறுக்கம் பெற்ற நிலையில் மக்களிடையே பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுதல் தொடர்பாக அவ்வப்போது பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதைக் கல்வெட்டுகள் பதிவு செய்து வைத்துள்ளன. இத்தகைய ஒப்பந்தங்கள் வேறுபட்ட சாதிகளுக்குள்ளும், ஒரே சாதிக்குள் அச்சாதியினர் வேறு வேறு தெருக்களில் குடியிருக்கும் போதும் நிகழ்ந்துள்ளமையைக் கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. இத்தகைய ஒப்பந்தம்,
1. ஆட்சியதிகாரம் பெறுதல் தொடர்பாகவும்,
2. திருவிழாக்காலங்களில் எத்தகைய உரிமைகளை யார் யார் கடைப்பிடிப்பது என்பது தொடர்பாகவும் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியதிகாரம் பெறுதல் தொடர்பாக உள்ள கல்வெட்டு
திருவண்ணாமலை ரிஷிமேஸ்வர ஆலயக்கல்வெட்டொன்று குடும்பத்தில் உள்ளவர்களில் ஆட்சியை அடுத்து யார் ஆளுவது என்பது தொடர்பாக ஏற்பட்ட சிக்கல்களையும் அச்சிக்கல் தொடர்பாக அவ்வூர் பகுதியைச் சேர்ந்த சாதிகள் மேற்கொண்ட செயல்பாடுகளையும் விளக்குவதாக அமைந்துள்ளது.
"பிள்ளை, முதலிகளும் நாட்டு நாயகம் செய்வார்களும் மன்றாடுவார்களும், படைநாயகஞ்செய்வார்களும், தனியாள் முதலிகளும், மலையன் முதலிகளும், மலையாள முதலிகளும், செட்டிகளும், வாணிகரும், கணக்கரும், மன்றாடிகளும், முவச்சரும், பன்னிரண்டு பணி மக்களும், பெரும் வேடரும், பாணரும், பறையரும், பறை முதலிகளும், செக்கிலியரும், இருளரும், உள்ளிட்ட அனைத்துச் சாதிகளும் அந்தணன் தலையாக அரிப்பன் கடையாக அனைத்துச் சாதிகளும்" சுற்றுப்பட்டு மக்களுமாகச் சேர்ந்து அரசாள்கின்ற தகுதி தாய்வழிவந்த நரசிங்கப்பன்மர் மகன் பெரியுடையானுக்கே அன்றி மாற்றாந்தாய்ப் பிள்ளையான அம்பட்டாழ்வானுக்கோ அவரது தம்பிக்கோ ஆளும் உரிமை இல்லை எனத் தீர்மானித்தனர். இதை மீறி மக்கள் அம்பட்டாழ்வானுடனோ அல்லது அவனுடைய தம்பியுடனோ தொடர்பு உண்டாகில் இவர்கள் இராச துரோகிகள் எனவும் நாயினும் பன்றியினும் கடையாளவர்கள் எனவும் இப்படி நாங்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதை மீறி நடப்போமென்றால் "வல்லவரையன் சத்தியம், தங்கள் அம்மைக்குத் தானோமனாளன் அசல் வன்னியர் குதிரைக்குப் புல்லுப்பறிக்கிற பறையர்க்கு எங்கள் பெண்டுகளைக் கொடுத்தோமாகில்" எனச் சூளுரைக்கின்றனர். மேற்கண்ட கல்வெட்டு அன்றைய சமூக அமைப்பு சாதியவழியாகச் செயல்பட்ட முறையை நன்கு புலப்படுத்துகின்றது.
'அந்தணன் தலையாக அரிப்பன் கடையாக' எனவும், "வன்னியக்குதிரைக்குப் புல்லுப்பறிக்கிற பறையர்க்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாகில்" எனவும் வரும் தொடர்கள் அக்காலத்தினுடைய சாதிய நிலையைத் தெளிவு படுத்துகின்றன. சமூகத்தளத்தில் அந்தணர்கள் உயர்ந்திருந்ததையும் பறையர்கள் சாதிய தளத்தில் கீழ்நிலையில் இருந்தமையையும் இக்கல்வெட்டின் அடிகள் நன்குணர்த்துகின்றன.
சாதிய தளத்தில் உயர்ந்திருப்போர் தங்களுக்குக் கீழான சாதிகளுக்குப் பெண்களைத் திருமணம் முடித்துத் தருவதை இழிவாகவும் தகுதி குறைவானதாகவும் கருதினர் என்பதை உணர முடிகிறது. சாதியச் சமூக அமைப்பில் தமிழரிடையே வழங்குகின்ற திட்டும் முறையில் உயர்ந்த சாதியினர் தங்களைவிடக் கீழானச் சாதியின் பேரைச் சொல்லித் தாழ்த்திப் பேசுகின்ற பழக்கத்தை மேற்கொண்டு வருவதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
ஒரே சாதியினருக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம்
இரண்டு தெருக்களுக்குள் வசித்த ஒரே சாதியினருக்குள் ஒப்பந்தம் நிகழ்ந்துள்ளதைக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. இவ்வொப்பந்தமானது தேவி வழிபாட்டில் பயன்படுத்தக்கூடிய உரிமைப் பொருள் தொடர்பாக நடந்துள்ளது. கி.பி. 1455 ஆம் ஆண்டு பண்டேரி தேவன் காலத்தில் கொண்டபூர் என்ற இடத்தில் வாழ்ந்த இரண்டு தெரு செட்டிகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தமாவது "திருவிழாக் காலங்களில் தேவி வழிபாட்டிற்கு இவ்விரண்டுத் தெருவைச் சேர்ந்த செட்டிகளில் ஒரு பிரிவினர் ஆடுகளையும் அரிக்காமரத்தையும் உடன்கொண்டு செல்ல" ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
எனவே, மேற்கண்ட கல்வெட்டுகளின் வழிச் சாதிகள் தங்களுக்குள்ளாக ஒன்றுகூடி சமூக முரண்பாடுகள் ஏற்படாத வண்ணம் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு இயங்கினர் என்பதை உணரமுடிகிறது. மேலும் கல்வெட்டுகளில் நிறுவனமயப்பட்ட சாதிய அமைப்பின் வெளிப்பாடுகளே பதிலாகி உள்ளன.
முனைவர் அரங்க. மு. முருகையன்