உலகின் மக்களாட்சிக்கான தேர்தலை உருவாக்கிய தமிழர்கள்
அன்மையில் தமிழகத்தில் ஊராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெற்று பல கட்சியின் உறுப்பினர்கள் அவ் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பெற்று ஊராட்சிகளின் மேம்பாட்டிற்காக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உள்ளனர். இந்தியா ஆங்கிலேயர்களின் ஆளுகையில் அடிமையாக கடந்த நூற்றாண்டுகளில் இருந்த பொழுது தான் மக்களாட்சி பற்றியும் தேர்தல் முறைகள் பற்றியும் அறிய முடிந்த்து என்பதை இன்றளவும் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். உலகிற்கே மக்களாட்சியை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர்கள் தமிழர்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியாகும். இந்தியா அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்றபின் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து பல தேர்தல்களைக் கண்டு மக்களின் உறுப்பினர்களைத் தெரிவு செய்து குடியாட்சியை நடைமுறைப் படுத்தி வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொன்றுதொட்டு விளங்கி வருகின்றது.
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் விதிமுறைகள் பல விதித்தும் தேர்தலை ஒவ்வொரு முறையும் நேர்மையாக நடத்த முயற்சியும் செய்து வருகின்றது. இதற்காக இளைஞர்களின் வழியாகவும் நடிகர்களின் வழியாகவும் பல விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவை முறையாக பின்பற்ற வேண்டிய கடமை கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் குறிப்பாக மக்களுக்கும் உள்ளது. இதனை மக்கள் புரிந்து கொண்டு தகுதியும் நேர்மையும் மக்களுக்கு கடமை ஆற்றக்கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்து அனுப்புதல் வேண்டும்.
உலக அளவில் மக்களாட்சித் தத்துவத்தை ஏற்படுத்திய மிகப் பழமையான நாடு இந்தியா. குறிப்பாக தமிழகம் என்று நாம் அனைவரும் பெருமைப் பட வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் உள்ளூர் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்து ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள் என்பதை சங்க இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. குழிசில் எனப்படும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உறுப்பினர்களின் தகுதிகள் என்ன தேர்தல் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் தமிழர்கள்.
சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் 919 ஆம் ஆண்டு உத்தரமேரூர் என்னும் ஊரில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகள் குறித்து கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டது. இக்கல்வெட்டே உலகளவில் தேர்தல் விதிமுறைகளையும் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களின் தகுதிகள் தகுதியின்மைகள் குறித்து குறிப்பிடும் முதல் சான்றாகும்.
உத்தரமேரூர் இக்காலத்தில் சொல்லப்படுகின்ற ஒரு தனித்தொகுதி போன்றது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் அதிகமாக வசிக்கும் பகுதியாதலால் அந்த வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியாக இன்றைய நிலையில் நாம் அதனை கருதலாம். அவ்வூரில் பிற வகுப்பினரும் வசித்து வந்தனர். எனவே தேர்தல் விதிமுறைகள் அனைத்து ஊர்களுக்கும் அக்காலத்தில் பொருத்தமானதாகவே இருந்திருக்க வேண்டும். இது போன்று பல ஊர்களில் தேர்தல் நடந்துள்ளமையைத் தமிழ்க் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே இது போன்ற தேர்தல்கள் அக்காலத்தில் பரவலாக இருந்தது என்பதை அறிய முடிகிறது.
919 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்வெட்டு அரச ஆணையாக வருகின்றது. இத்தேர்தல் முறை மக்களுக்காக மக்களே தங்களைத் தேர்வு செய்யும் குழுக்கள் முறையாகும். இதில் வாக்குரிமையும் இருந்தது அதிஷ்டமும் இருந்தது. இக்கல்வெட்டில் குறிக்கப்பெறும் உறுப்பினர்களின் தகுதி இன்றளவும் மிகச் சிறப்பான விதிமுறைகளாக விளங்குபவை ஆகும்.
தேர்தலில் நிற்போரின் வயது 30 லிருந்து 60 ற்குள் இருத்தல் வேண்டும். அவ்வாறு நிற்கும் உறுப்பினர்கள் அதே ஊரைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அவ்வூரில் கால் வேலி நிலம் உடையவராகவும் தனது சொந்த மணையில் வீடு கட்டி வசிப்பவராகவும் அதற்கான உரிய சொத்து வரியைத் தவறாமல் கட்டியவராக இருத்தல் வேண்டும். இதன் மூலம் உள்ளூரில் இருப்பவர் மட்டுமே அம்மக்களின் நலனில் அக்கறை உடையவராக இருப்பர் என்பது தெளிவாகிறது. மேலும் அவர் அக்கால முறைப்படி கல்வி கற்றிருக்கவேண்டும். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் வாரியத்தின் உறுப்பினராக இருப்பர். அவ்வாறு ஏற்கனவே உறுப்பினராக இருந்தவர் அடுத்த தேர்தலில் உடனடியாக நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் அவரது உறவினர்கள் நிற்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டபின்பு தான் அவரோ அவரைச் சார்ந்த உறவினர்களோ மீண்டும் தேர்தலில் போட்டியிடமுடியும். இரண்டு ஆண்டுகள் கழித்து அதாவது 921 ஆம் ஆண்டு மீண்டும் அரசரிடமிருந்து ஒரு ஆணை வருகின்றது. அதன்படி தேர்தலில் நிற்கும் உறுப்பினர்களின் தகுதிகள் சில மாற்றங்களைப் பெற்றிருந்தது. அதன்படி தேர்தலில் நிற்பவரின் சொத்தான நிலச் சொத்து அவ்வூரில் குறைந்த அளவு ஒன்றில் எட்டு பங்கு இருந்தால் போதுமானது என்றும் தனது சொத்துக்களை நல்லவழியில் சம்பாத்தியம் பெற்றவராக இருத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
உறுப்பினராக விரும்புபவர் ஓரளவிற்கு கல்வி கற்றவராகவும் சாஸ்திரங்களைத் தெரிந்தவராகவும் இருத்தல் போதுமானது என்றும் வரையறுக்கப்படுகிறது. வயது வரம்பு 35லிருந்து 70 வயதிற்குள் இருத்தல் வேண்டும் என்பதும் இரண்டாவது கல்வெட்டில் திருத்தம் பெறுகிறது. பணியில் அனுபவம் வாய்ந்த மூத்தோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை இதன் மூலம் அறிய முடிகிறது.
மேலும் முன்பு உறுப்பினராக இருந்திருப்பின் அவரது சொத்துக் கணக்கைக் காட்டுதல் வேண்டும் என்றும் முறையாக வரி செலுத்தியோராக இருத்தல் வேண்டும் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. உறுப்பினராக விரும்புவோர் ஐந்து பாவங்களில் ஒரு பாவம் செய்திருந்தாலும் உறுப்பினராவதற்கு தகுதியற்றவராவர். ஏற்கனவே உறுப்பினராக இருந்தவர் தனது பணிக்காலத்தில் கையூட்டு (இலஞ்சம்) பெற்றவராக கண்டுபிடிக்கப்பட்டால் அவரோ அவரது குடும்பத்தைச் சார்ந்தவரோ, அவர் பெண் எடுத்த குடும்பமோ, பெண் கொடுத்த குடும்பமோ அவரது குடும்பமோ அவரது சகோதரர், சகதோரி, பெரியப்பா, சிற்றப்பன், மாமன், மாமன் குடும்பத்தினர் அவர்களுடைய உறவினர்கள் குடும்பத்தினர் எவருமே தேர்தலில் நிற்க இயலாது. அனைத்து தகுதிகளும் பெற்று தேர்தலில் நிற்க விரும்பும் உறுப்பினர் ஆண்டில் 365 நாட்களும் மக்களுக்காக பணியாற்றுதல் வேண்டும்.மேலும் உறுப்பினர் நல்ல உடற்தகுதியும் மன நோய் இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும். பிறர் சொத்துக்களை அபகரித்தவர் பிறர் மணை நோக்கியவர் தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர்.
இத்தகைய கட்டுப்பாடுகளால் தேர்தலில் நிற்பவரின் தகுதி தீர்மானிக்கப்பட்டது. அதனை தீர்மானிப்பவராக அவ்வூர் மக்களும் உறுப்பினரும் அரசும் இருந்தனர். தவறுகள் ஏற்பாடதவாறு உறுப்பினர் இருந்தால் மட்டுமே அவர் தேர்தலில் நிற்க முடியும்.இல்லையெனில் உறுப்பினர் ஆகும் தகுதியை அவர் நிரந்தரமாக இழப்பதுடன் ழுமையாக அவரது சுற்றத்தார்களும் உறவினர்களும் உறுப்பினருக்கான தேர்தலில் நிற்கும் தகுதியை இழப்பர். எனவே ஒருவர் செய்யும் தவறால் அவரது சுற்றத்தார் அனைவருமே தகுதியற்றவர்களாக ஆக்கப்படுவர். எனவே தவறுகள் முழுமையாக களையும் முயற்சிகள் அக்காலத்தில் ஏற்பட்டதுடன் ஒவ்வொரு உறுப்பினரும் எச்சரிக்கையுடன் சமூகத்திற்கு எவ்வித தவறும் செய்யாமல் செயல்பட வேண்டிய நிலையில் இருந்தனர்.
தேர்தல் நடத்தப்படும் நாள் அன்று ஊரின் நடுவில் உள்ள கோயில் முற்றத்திலிருந்து ஒவ்வொரு வீதியாக வாக்களிக்கப்படும் துணியால் மூடப்பட்ட குடத்தில் ஒவ்வொரு வீதிக்கும் எடுத்துச் செல்லப்படும். இத்தேர்தலை நடுவனரசிலிருந்து வரும் தேர்தல் அதிகாரியும் அவ்வூரின் முக்கிய பிரமுகர்களும் வயோதிகர்களும் கண்கானிப்பர். அவ்வாறு ஒவ்வொரு தெருவிலும் எடுத்துச் செல்லப்படும் குடத்தில் தமக்கு உறுப்பினராக தகுதி இருக்கும் எனக் கருதும் நபர் தன்னுடைய பெயரை தானே ஓலையில் எழுதி அதனை அக்குடத்தில் இடுவார். இவ்வாறு மேற்குறித்த தகுதிகள் உள்ள அவ்வூரைச் சார்ந்த எவரும் தமது பெயரை ஓலை நறுக்கில் எழுதி குடத்தில் இடுவர். அனைத்துப் பகுதிகளுக்கும் மாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்ட குடம் மீண்டும் ஊரின் நடுவில் உள்ள கோயிலின் முற்றத்தில் ஊர் பிரமுகர்களின் முன்னிலையில் நடுவண் அரசிலிருந்து வந்த தேர்தல் அதிகாரி முன்னிலையில் வைக்கப்படும்.
துணியால் மூடப்பட்ட அக்குடத்தினை ஊர் மக்கள் முன்னிலையில் ஒரு சிறுவனை அழைத்து குடத்தினுள் கையை விட்டு ஒவ்வொரு ஓலை நறுக்காக எடுக்கச் செய்து அதனை ஊர் பிரமுகர்கள் முன்னிலையில் ஓலையில் இடப்பட்ட பெயரை ஊர் மக்கள் அறியும் வண்ணம் உரக்கப் படிப்பர். அவ்வோலை நறுக்கி பிற ஊர் பெரியோர்களும் கையில் வாங்கி அப்பெயர் சரியாகப் படிக்கப்பட்டதா என ஆய்வு செய்து பெயர் சரியாக உள்ளது என ஆமோதிப்பர். தேர்தல் அதிகாரி ஒன்றும் அறியாத சிறுவனிடமிருந்து குடத்திலிருந்து ஓலையை எடுத்து கொடுக்கச் செய்வதற்கு முன்பாக அங்கு கூடியுள்ள மக்களின் முன் தனதி இரண்டு கைகளையும் மேலே தூக்கி அகல விரித்து தம் கையில்
ஏற்கனவே எந்த ஓலை நறுக்கும் இல்லை என்பதை கூறி பின்னரே குடத்திலிருந்து ஓலையை வாங்கிப் படிப்பார். இவ்வகையில் அவ்வூரில் முப்பது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
குடஓலை முறையில் தாம் உண்மையான உறுப்பினராக இருந்த அவ்வூரைச் சேர்ந்த அனைத்து தகுதிகளும் வாய்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டாலும் இறுதி வாக்கு சிறுவன் எடுத்துக் கொடுக்கும் ஓலையின் மூலமாகவே அவர் உறுப்பினர் ஆவதற்கு வழி வகுத்தது. இருப்பினும் உறுப்பினரின் தகுதிகள் அக்காலத்தில் கடுமையாக இருந்ததுடன் ஊரில் தீங்களித்த, செயல்படாத, பாவங்கள் செய்த இலஞ்சம் வாங்கிய, சொத்துக் கணக்கைக் காட்டாத அவ்வூரைச் சாராத எவருமே முதலிலேயே உறுப்பினராக ஆவதற்கான தகுதியை இழந்து விடுகின்றனர். மேலும் அவ்வாறு தகுதி இழந்த அவர் மட்டுமன்றி அவரைச் சார்ந்த அவரது குடும்ப வாரிசுகள் குடும்ப உறுப்பினர்கள் உறவினர்கள் அனைவருமே தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய முறையால் தவறுகள் நடைபெறாது பெரிதும் தடுக்கக் கூடிய நிலை அக்காலத்தில் இருந்துள்ளது. இன்றைய நிலையில் முதலிலேயே மேற்குறித்த விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தேர்தலில் நிற்கும் உறுப்பினர்களுக்கு வகுத்தால் நிச்சயமாக இந்திய ஜனநாயகம் பிழைத்து உலகமே இவற்றைப் பின்பற்றும் நிலை ஏற்பட்டு சிறந்ததொரு ஆட்சிமுறையை நல்லோர் கையில் மக்கள் ஒப்படைக்கும் வாய்ப்பு ஏற்படும். தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றவும் அதனை நடைமுறைப்படுத்தவும் அரசு எந்திரங்களும் விளம்பரங்களும் தேவையற்றதாகிவிடும் இதற்காக செய்யப்படும் செலவுகளும் கட்டுப்படுத்தப்படும்.