கல்வெட்டுகளில் காணப்படும் சில சொற்கள்

கல்வெட்டுகளில் காணப்படும் சில சொற்கள் 

வெட்டி

நாம் ஒரு பணியைச் செய்து அதற்கு கூலி வழங்கப்பட்டால் அது வேலை எனப்படும். மன்னர்கள் காலத்தில், குளம், ஆறு போன்றவற்றின் கரையை அடைத்தல், தூர்வாருதல் போன்ற பணிகளை மக்கள் இலவசமாக செய்தார்கள். இவ்வாறு கூலி வாங்காமல் நாட்டுக்காக செய்து தரும் இலவசப் பணி வெட்டி எனப்பட்டது. 




முட்டாள்

நாட்டுக்காக செய்து தரும் இப்பணியை சில வசதியானவர்கள், வயதானவர்களால் செய்ய இயலாதபோது அவர்களுக்குப் பதில் அந்த வேலையை செய்து தரும் நபரை முட்டுக்குப் போன ஆள் என்ற பொருளில் முட்டாள் என்கிறார்கள். அந்த நபர்களுக்கு உணவு அல்லது பணம் பொருள் போன்றவற்றை வழங்குவார்கள். திருவிளையாடல் புராணத்தில் வயதான பாட்டி செய்ய வேண்டிய ஆற்றின் கரையை அடைக்கும் பணியை பிட்டுக்காக சிவன் செய்வதாக குறிப்பிடப்படுவதை நினைவில் கொள்ளுங்கள்.

மடையர்

ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றின் மடையை திறந்து மூடும் பணி செய்தவர்களை மடையர் என்பர். இப்பணியை எல்லோராலும் செய்து விட முடியாது. இதில் பயிற்சி பெற்றவர்களே இதை செய்ய முடியும். சில சமயங்களில் இப்பணி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். 

உதிரப்பட்டி

பொதுத்தொண்டு செய்தபோது இறந்த நபரின் குடும்பங்களுக்கு அவரின் உயிரிழப்புக்கு ஈடாக நிலம் கொடுக்கப்பட்டது. இப்படிக் கொடுக்கப்பட்ட நிலம் உதிரப்பட்டி என அழைக்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கருங்குளத்தைச் சார்ந்த பெருந்தேவப்பள்ளன் என்பவர் இவ்வூரின் குளத்தில் நீர் அதிகமாகி உடைப்பு ஏற்பட்ட சமயத்தில் மடையை  அடைக்கும் பணியைச் செய்த போது தன் உயிரை இழந்தார். தன் ஊரின் நலனுக்காகத் தன்னுயிரை இழந்த  அவருக்கு இவ்வூர் மக்கள் கி.பி.1302இல் ஒரு நினைவுக்கல்லை நட்டு மதிப்பளித்தனர். மேலும் இவரது பிள்ளைகளுக்கு உதிரப்பட்டியாக நிலமும் கொடுத்தனர்.

குளப்பட்டி 

ஊர் நன்மைக்காக குளம் வெட்டித் தருமம் செய்வது புண்ணியமாகக் கருதப்பட்டது. அக்குளத்தின் பராமரிப்புக்காகத் தானமாகத் கொடுக்கப்பட்ட நிலம் குளப்பட்டி எனப்பட்டது. 

பொலிசை, பொலிசையர்

கல்வெட்டுகளில் காணப்படும் பொலிசை என்ற சொல்லுக்கு "வட்டி" என்று பொருள். வட்டியை வசூல் செய்பவர்கள் பொலிசையர் எனப்பட்டனர். இந்த பொலிசையர் என்ற சொல்லில் இருந்தே ஆங்கிலத்தில் POLICE என்ற சொல் உருவாகியுள்ளது. 

மங்கலம்

நான்கு வேதங்களையும் அறிந்த  பிராமணர்களுக்காக உருவாக்கப்படும் ஊர்கள் "சதுர்வேதிமங்கலம்” எனப்பட்டது. காலப்போக்கில் சதுர்வேதி மறைய மங்கலம் மட்டும் நிலை கொண்டது. 

பிரம்மதேயம்

பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்படும் நிலம் பிரம்மதேயம் எனப்படும்.

தேவதானம்

கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் நிலம் தேவதானம் எனப்படுகிறது.

வே.இராஜகுரு