சிவாலயத்தில் கிடாய் வெட்டு!

சிவாலயத்தில் கிடாய் வெட்டு
~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் உயிர்ப்பலி நிகழ்வுகள் பெருங்கோயில்களில் நிகழ்வில்லை எனும் கருதுகோளை உடைக்கிறது இந்த கல்வெட்டு. கி.பி.1417 ஆம் ஆண்டித்திய, விஜயநகர மன்னர் வீர விருப்பண்ண உடையார் காலத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூரிலுள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் சாசனத்தில், வடபற்றுப் பனையூர் மற்றும் குளமங்கலத்தைச் சேர்ந்த இரண்டு ஊர், "ஊரவர்களுக்கான, இந்த ஆலயத்தின் கோனாட்டு நாச்சியாருக்கு எடுக்கப்படும் சித்திரை மாத திருநாட்களில் வரும் விழா கட்டளைகள்  {சந்தி} தோறும் , மேற்கண்ட ஊரைச் சேர்ந்த, "இடையன் பொன்னன்கோன் எழும்பன்"  என்பவர், வண்டியில் ஆட்டுக் கிடாய் குட்டி ஏற்றி வந்து வெட்டிப் பலி கொடுத்தமைக்காக இவருக்கு "கலங்காத கண்டக்கோன்" எனும் பட்டம் கொடுத்து, கோயிலின் கருவூலத்திலிருந்து வரியும் கொடுத்து அதைக் கல்வெட்டில் பொறித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வு, சந்திரனும் சூரியனும் உள்ளவரை, நடக்கவேண்டும் எனவும், இதைப்போல தொடர்ந்து கிடாய்குட்டிகளை வெட்டும் நடைமுறை தொடரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.




சிலாசாசனம்.
~~~~~~~~~
1. சுபமஸ்து ஸ்ரீமன் மகாமண்டலேசுரன் அரிய இராய விபாடன்

2.[பா]ஷைக்குத் தப்புவராயர் கண்டன் மூவாயிர கண்டன் பூறுவ பச்சிம

3.தெட்சிண உத்திர சமுத்திராபதி ஸ்ரீவீர அரியப்ப உடையர் குமாரன் ஸ்ரீ

4.வீரவிருப்பண்ண உடையர்க்குச் செல்லாநின்ற சகாத்தம் [௲௩ள]௩ய௯ ன் மேல் செல்-

5.லானின்ற ஈசுர வருஷம் சித்திரை ௴  ௨ய௨ ௳ பொன்னமராபதி நாட்டு கூடலூர்[நாட்டு] வடபற்றுப்பனையூர் குளமங்கலத்து கோனாட்டு நாச்சியார் திருநாளுக்கு 

6. நம்முடைய ஊரில் இடையன் பொன் [ னன் கோன்] எழும்பன் நம்முடைய திருநாளுக்கு வ [ண்டி ]லிலே கிடாய்க்குட்டி யேற்றிவந்து 

7.சந்திகள்தோறும் கிடாய் வெட்டினது கொண்டு இரண்டு ஊராரும் இருந்து இவனுக்கு கலங்காத கண்டக்கோன் என்று பட்டமுங் கொ

8.டுத்து கோயிலிலே ஓடுக்கும் கொடுத்து [இந்த]ப் பட்டமும் இந்த ஓடுக்கும் சந்திராதிற்றைவரை செல்ல இவனே அனுபவித்து போதக்கடவா

9.ன் ஆகவும் [ ll *]மேலும் திருநாளுக்கு கிடாய்க்குட்டியும் இடக் கடவதாகவும் [|| *] இப்படிக்கு இரண்டு ஊரவர் சொற்படிக்கும் கணக்கு அறிவுடை மூவேந்திர வேளார் . . . .




நன்றி.

கி.ச.முனிராஜ்வாணாதிராயன்.