உலகின் தொன்மைக் கடலோடிகள் -தமிழர்கள்

அமெரிக்கா கண்டுபிடிப்பதற்கு முன்பாக இந்தியர்கள் கடலின் வழியாக உலகின் பல நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.  நமது பாட்த் திட்டங்களில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்விகளையே நாம் இன்றளவும் மாணவர்களுக்கு கற்பித்து அவர்களை அடிமை நிலையிருந்து இன்னும் மாற்றத்தை நோக்கிச் செல்லா இயலா நிலையில் உருவாக்கி வைத்துள்ளோம் என்பதே  நிதர்சன உண்மை. நம்மில் பலருக்கு தெரியாது இன்று உலகத்தின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி உலகத்தின் அனைத்து செயல்களுக்கும் எஜமானாக விளங்கும் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட கதை. அமெரிக்க கண்டம் கண்டுபிடிக்க முக்கிய காரணமாக விளங்கியது இந்தியா தான். அதன் பொருளாதாரம் உலகை 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆட்சி செய்து வந்தது. 

16 ஆம் நூற்றாண்டு வரை உலகம் என்பது அமெரிக்கா ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகள் இல்லாத ஒரு பகுதியாகத்தான் கருதப்பட்ட்து. பொது ஆண்டு 1453 இல் துருக்கியர்கள் ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் யூரல் மலைத்தொடர்பகுதியிலிருந்த காண்ஸ்டாண்டிநோப்லைக் கைப்பற்றிய பின் அதுவரை ஆசியப் பகுதிக்கு குறிப்பாக இந்தியாவிற்கு நில வழியாக நடைபெற்ற வாணிகத்திற்குத் தடை ஏற்பட்ட்து. ஐரோப்பிய சந்தைகளில் இந்தியப் பொருள்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. குறிப்பாக தென்னகத்திலிருந்து சென்ற நறுமனப்பொருள்களும் தேக்கு அகில், சந்தனம் மிளகு, ஆடைகள் மயில் தோகை போன்ற பொருள்கள் ஐரோப்பிய சந்தைகளில் 3000 ஆண்டுகளாகத் தட்டுப்பாடு இல்லாமல் சென்றன.  இந்தியர்கள் குறிப்பாக தமிழகர்கள்  2500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்திருந்த கடல்வழியை நாளடைவில் மறந்த ஐரோப்பியர்களும் இந்தியர்களும் நில வழியாகவே வாணிகத்தை செய்து வந்த்தும் அது காண்ஸ்டாண்டிநோபிலை 16 ஆம் நூற்றாண்டில் கைப்பற்றியதன் விளைவாக வர்த்தகம் முழுவதுமாக சீரழிந்த்து. இதனால் பயந்த ஐரோப்பிய நாடுகளும் இங்கிலாந்தும் தங்களது மாலுமிகளை ஊக்கப்படுத்தி இந்தியாவிற்கு எவ்வாறேனும் மாற்று வழியைக் குறிப்பாக புதிய கடல்வழியைக் கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்டன. மேலும் கடலோடிகள் கடலில் எவ்வித இடையூறும் இன்றி செல்வதற்காக புதியதாக கப்பல்களையும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்ய முன் வந்தன. அதன் விளைவாக இந்தியாவிற்குக் கடல்வழியைத் தேடுவதில் பலர் முனைப்பட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நம் பாடப் புத்தகங்களில் இன்று வரை இடம்பெற்றுள்ள கொலம்பஸ், வாஸ்கோடாகாமா,அமெரிக்கோ வெஸ்புகி பார்த்தலோமியா டையஸ் குறிப்பிடத்தக்கவர்கள்.



இதனை இன்று வரை நமது மாணவர்கள் தங்களது தேர்வுகளிலும் பதிலாக எழுதி வருகின்றனர். ஆனால் உண்மையில் உலகின் கடல்வழியை முதன் முதலில் கண்டறிந்தவர் தமிழர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என நமக்குத் தெரியாது.இதற்குக் காரணம் நமது வரலாற்றுப் பாடங்களில் இந்திய வரலாற்றையோ அல்லது தமிழக வரலாற்றையோ முறையானப் பாடத் திட்டமாக இதுவரை சேர்க்காமல் இருப்பது தான். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆங்கில அரசாங்கம் வகுத்தளித்த பள்ளிக் கல்லூரிப் பாடத்திட்டங்களை நமது அரசுகளும் நமக்கு கற்பித்து வருவதும் இன்னும் நமது மாணவர்கள் அயல் நாடுகளின் வரலாற்றையும் அடிமை வரலாற்றையும் படித்து வருவதும் காலங்காலமாக நடந்து வருகின்றது. 

இந்தியர்களுக்கு வரலாற்று அறிவு இல்லை என்னும் பொத்தம் பொதுவாக ஆங்கில அரசாங்கம் சொல்லிச் சென்ற பொய்யுரைகளை வைத்து மாணவர்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உலகிலேயே தொன்மையான  தொல்லியல் சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் பாரம்பரியச் சின்னங்களையும் அதிக அளவில் கொண்ட முதல் நாடாக இந்தியா மட்டுமே விளங்குகிறது. இவற்றின் மூலம் இந்தியாவின் தொன்மையான பண்பாட்டுக் கூறுகளையும் இந்திய நாடு 5000 ஆண்டு காலமாக கொண்டுள்ளதுடன் பல நாடுகளுடன் கடல் வழியாகவும் நில வழியாகவும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தமையையும் அறிய முடிகிறது. 

இந்தியாவின் தொன்மை நாகரிகமான சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் கடல் வழியாகவும் நில வழியாகவும் பல நாடுகளுக்கு வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அக்காலகட்டத்தில் தழைத்தோங்கிய சுமேரியாவில் சிந்துவெளி நாகரிகத்தின் முத்திரைகள் பல கிடைத்துள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள லோதால் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் சிறந்த துறைமுகம் இருந்துள்ளது. இத்துறைமுகத்தின் வழியாக மேலை நாடுகளுக்கு கப்பல்கள் சென்றுள்ளன. சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்துள்ள முத்திரைகளிலும் கப்பலின் உருவம் உள்ளன.  சிந்துவெளி நாகரிகத்தை பெரும்பாலான ஆய்வாளர்கள் திராவிட நாகரிகம் என்றும் தமிழர் நாகரிகம் என்றும் குறிப்பிடுகின்றனர். சிந்துவெளியின் தொடர்ச்சியான சான்றுகள் பல தமிழகத்திலும் கிடைத்துள்ளன.
தமிழர்கள் பொதுவாக கடலோடிகளாக விளங்கியிருந்தனர். தமிழகத்தில் பல துறைமுகப்பட்டினங்கள் வழியாக மேலை நாட்டிலிருந்து வணிகர்கள் பலர் வந்துள்ளனர். அதே போன்று தமிழகத்திலிருந்து மத்தியத் தரைக்கடல் நாடுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் தமிழ் வனிகர்கள் பலர் குழுக்களாகச் சென்றுள்ளனர். ஆதிச்ச நல்லூர் அகழாய்வுகளில் கிடைத்த பல பொருள்களின் அமைப்பில் தென்கிழக்காசிய நாடுகளின் அகழாய்வுகளில் பொருள்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக இரும்பு உருக்கும் கலையை தமிழர்கள் அறிந்து வைத்துள்ளனர். தென்கிழக்காசியப் பகுதிகளில் பெருமளவில் இரும்புச் சுரங்களில் தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே சென்று பணி செய்துள்ளனர். தமிழகத்தில் கிடைக்கின்ற சில பாறை ஓவியங்களில் கடலில் செலுத்துகின்ற கலம் என்ற படகு அமைப்பு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்ட்த்தில் கீழ்வாளை ஓவியத்தில் கடலில் செலுத்துகின்ற கலம் ஒன்று காணப்படுகிறது. 
 மதுரையை ஆண்ட பாண்டியர்கள் தங்களை கடலோடிகளாகவே கருதினர். அவர்களது மீன் சின்னம் அதனை புலப்படுத்தும். மேலும் மதுரைக்கருகிலுள்ள மாங்குளம் என்ற இடத்தில் கிடைத்துள்ள கி.மு 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழிக் கல்வெட்டில் ”கடலன் வழுதி நெடுஞ்செழியன்” என்ற பெயர் பாண்டியர்கள் கடலை எளிதில் வணிக உறவை வளர்த்துக் கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் பூலாங்குறிச்சி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றில் ”கடலகப் பெரும்படைத்தலைவன்” என்ற பெயர் காணப்படுகிறது. கடலில் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய படைத்தலைவராக இவர் இருந்திருத்தல் வேண்டும். 
சங்க இலக்கியங்களில் தமிழர்களின் கடல் வாணிகம் பெரிதும் சொல்லப்படுகிறது.  மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு மேற்குக் கடற்கரையில் இருந்த முசிறித் துறைமுகம் வழியாக தமிழ் வணிகர்கள் சென்றுள்ளனர். அதேபோன்று அந்நாடுகளிலிருந்து பல அயலக வணிகர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். ஐக்கிய நாட்டின் அவையில் இடம் பெற்றுள்ளதும் உலகமே வியக்கும் வண்ணம் இன்றளவும் பேசப்படும்  கணியன் பூங்குன்றனாரின் " யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற புறநானூற்றுப் பாடல் பாடிய இடம் சேரர்களின் தலைநகரமான முசிறித் துறைமுகமாகும். இங்கு தான் அவர் பல நாட்டு வணிகர்களைக் கண்டு இப்பாடலை எழுதுகின்றார். முசிறித் துறைமுகத்திற்கு வரும் படகுகளை இப்பாடலில்  குறிப்பிடுகின்றார். 
 முசிறித் துறைமுகத்திலிருந்து பல பொருள்களை தமிழர்கள் ஏற்றுமதி செய்து ஆப்பிரிக்க நாடுகளில் செங்கடலை ஒட்டி இருந்த துறைமுகங்களுக்கு பெருங்கப்பல்களில் ஏற்றிச் சென்றனர். அவ்வாறு செல்லும் பொழுது காற்றின் போக்கிற்கேற்ப பல கலங்களைச் செலுத்தினர்.

கடல் கொள்ளைக்கார்களின் அச்சுறுத்தலும் அக்காலத்தில் இருந்துள்ளன. சேர மன்னன் செங்கோட்டு வேலன் இக்கடல் கொள்ளையர்களை அழித்து ”கடல்பிறகோட்டிய செங்கோட்டு வேலன்” என்ற பட்டம் பெற்றான். கடல்கொள்ளையர்களான கடம்பர்களை இம்மன்னன் அழித்து தமிழக வணிகர்களுக்கு ஊக்கம் அளித்தான். 
பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டில் முசிறியிலிருந்து சென்ற தமிழ் வணிகன், செங்கடல் பகுதியில் இருந்த தனவந்தர்களிடம் தனது வணிகத்திற்காக பெருமளவில் கடன் பெறுகின்றார். இதற்காக அவர் கிரேக்க மொழியில் ஒரு கடன்பத்திரத்தை எழுதி அளிக்கின்றார். இக்கிரேக்க ஆவணம் மத்தியத் தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள அலேக்சாண்டிரியா அருங்காட்சியகத்தில் தற்பொழுது உள்ளது. இக்கிரேக்க ஆவணத்தில் முசிறியிலிருந்து கப்பலில் எடுத்துச் சென்ற பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் அவ்வணிகன் ஏற்றிய சரக்குகள் மூன்று கப்பல்களில் ஏற்றக்கூடியவையாக இருந்துள்ளன. அக்கப்பல் செங்கடலை ஒட்டியிருந்த குசிர் அல் குதாம் என்ற துறைமுகத்திற்கும் பெரினிகே என்ற துறைமுகத்திற்கும் சென்றன. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல அக்காலத்தில் சூயஸ் கால்வாய் வெட்டப்படவில்லை. நமது தமிழ் வணிகர்களோ செங்கடலை ஒட்டியுள்ள துறைமுகங்களில் கப்பல்களை நிறுத்தி விட்டு, அத்துறைமுகங்களிலிருந்து தமிழகத்திலிருந்து கொண்டு வந்த வணிகப் பொதிகளை ஒட்டகங்களில் ஏற்றி ஆப்பிரிக்காவில் தெற்கிலிருந்து வடக்காக ஓடும் நைல் நதிக்கு எடுத்துச் செல்வர், நைல் நதியில் அலெக்சாண்டிரிய வணிக நகரத்திற்குச் செல்லும்  கப்பல்களில் மீண்டும் சரக்குகளை ஏற்றுவர். நைல் நதி  மத்தியத் தரைக்கடலில் அலெக்சாண்டிரியா துறைமுகத்திற்கு அருகில் கடலில் கலக்கும் ஆறாகும்.

தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற வணிகப் பொருள்களை விற்றபின் அதன்  வருவாயில் தாம் வாங்கிய கடனை அடைப்பதாக அந்த உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிடுகின்றார். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகத்தைச் சுற்றியவனாக தமிழன் இருந்திருப்பது இதிலிருந்து தெரிகிறது. அலெக்சாண்டிரிய துறைமுகம் வழியாக மத்தியத் தரைக்கடலைக் கடந்து தமிழகப் பொருள்கள் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் ரோமிற்கும் அக்காலத்தில் சென்றிருத்தல் வேண்டும்.
பொதுவாக மேலை நாட்டு வணிகர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளமையை சங்க இலக்கியங்கள் யவனர் எனக் குறிக்கின்றன. தமிழகத்திற்கும் அந்நாடுகளிலிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். யானர் என்ற சொல்லிலிருந்து பிறந்தது யவனர். யானர் என்றால் புதியவர் என்பது பொருள். எனவே தமிழகத்திற்கு வந்த மேலை நாட்டினரை யவனர் என சங்க இலக்கியங்கள் சுட்டும். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வசவசமுத்திரம், அரிக்கமேடு, அழகன் குளம் ஆகிய துறைமுகங்களில் சங்க காலத்தில் யவனர்கள் வந்து தங்கியிருந்தமைக்கான சான்றுகள் மிகுந்த அளவில் கிடைக்கின்றன. யவனத் தேறல் எனப்படும் மதுவை யவனர்  ஆம்போரா எனப்படும் யவனர்களின் குடுவைகளில் எடுத்து வந்துள்ளனர். இம்மதுக்குடங்கள் இத்துறைமுகங்களில் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன் குளம் என்ற இடத்தில்  செய்யப்பட்ட அகழாய்வில் கப்பல் உருவம் பொறித்த மட்கலன்கள் கிடைத்துள்ளன. இத்துறைமுக நகரம் இரண்டயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முன்பாகவே அயல் நாடுகளுடன் கடல் வழி வாணிகம் மேற்கொண்ட நகரமாக விளங்கியிருந்தது.

பண்டையத் தமிழகத்தில் குறிப்பாக கொங்குப் பகுதியிலும் கேராளாவிலும் தான் இதுவரை அதிகமாக யவன நாணயங்கள் அதிகமாக கிடைத்துள்ளன. யவன வனிகர்கள் தமிழகத்தில் பொன் நாணயங்களைக் கொடுத்து  நறுமணப் பொருள்களையும், அகில், சந்தனம், தேக்கு, தந்தம், மயிற்தோகை போன்ற பொருள்களையும் வாங்கினர். ”பொன்னொடு வந்து கறியோடு பெயர்ந்து” என சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. உரோமானிய அரசரிடம் பிளினி என்ற வரலாற்று ஆசிரியர் எச்சரிக்கை ஒன்றை விடுவதாக அவரது குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வணிகத்தால் ரோமானிய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாகவும் தமிழகத்தின் நறுமணப் பொருள்களுக்காக ரோமானிய கஜானா காலியாகி வருகின்றது எனவும் அதனால் தமிழர்களின் கடல் வணிக உறவைக் கட்டுப்படுத்தும்படி அவர் எச்சரிக்கை விடுகின்ற அளவிற்கு தமிழர்கள் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கினர். செங்கடல் பகுதியில் குசிர் -அல் -குதாம், பெரினிகே மற்றும் ஏமன் பகுதியில் அமைந்துள்ள கோரொரி ஆகிய  துறைமுகப்பட்டினங்களில் அண்மையில் அகழாய்வுகளில் தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவ்வோடுகளில் கணன், சாதன், கொற்றபூமான், ..ந்தை கீறன் ஆகிய தமிழ் வணிகப் பெருமக்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இத்தமிழி எழுத்துக்களுடன் 40 கிலோ எடையுள்ள மிளகு, பானை ஒன்றில் அகழாய்வில் கிடைத்துள்ளது. கீழை நாடுகளான சுமத்ரா ஜாவா, சீனம் ஆகிய நாடுகளிலும் தமிழ் வணிகர்கள் பலர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முன்பாகவே கடல் வாணிகம் செய்துள்ளனர். அப்பகுதியிலும் தமிழர்கள் சென்றமைக்கான தடயங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலை மற்றும் கீழை நாடுகளுடன் தமிழகம் சிறந்த வணிக உறவையும் அரசியல் உறவையும் கொண்டிருந்தது.  இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முன்பாகவே உலகை கடல் வழியாகச் சுற்றி வந்தவர்கள் தமிழர்கள் என்பது நன்கு விளங்கும். வரலாற்றுப் பிழைகளால் நாம் இன்னும் வாஸ்கோடாமைவையும் கொலம்பஸையும் படித்துக் கொண்டிருப்பதால் தமிழரின் பெருமையை நம்மால் அறிய இயலவில்லை.
மேற்குறித்தவாறு இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடிக்க  முயன்ற ஐரோப்பியர்களான மாலுமிகளில் ஒருவரான அமெரிக்கோ வெஸ்புகியின் கப்பல் காற்றின் திசை மாறி மேற்கு நோக்கிப் பயனப்பட்டு இறுதியில் அமெரிக்க கண்ட்த்தின் கிழக்குக் கடற்கரைப பகுதியை அடைகின்றது. அமெரிக்கோ வெஸ்புகி தான் வந்த பகுதி இந்தியா அல்ல என்பதை முதலில் உணரவில்லை.  எனவே அவர்களை செவ்விந்தியர் என அழைத்தார். ஆனால் அம்மக்களின் பண்பாடு மற்றும் செயல்பாடுகள் இந்தியர்களிலிருந்து வேறுபாடுடன் இருப்பதைக் கண்ட அவர் தாம் இந்தியாவிற்கு வருவதற்குப் பதிலாக வேறு ஒரு புதிய நிலப் பரப்பிற்கு வந்துவிட்ட்தை உணர்ந்தார். எனவே அப்பகுதி அவரது பெயரால் அமெரிக்கா எனப் பெயர் பெற்றது. எனவே இந்தியாவின் கடல் பொருளாதாரமே அமெரிக்கா என்ற நாடு கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது.  தமிழர்களின் தொன்மையும் பண்பாடும் உலக அளவில் அயலகர் வரும் வரை மிகச் சிறந்த்தாக விளாங்கியது. இதனைக் கண்டு பெரிதும் வியந்த அயலகத்தார் இந்தியாவிற்கு எவ்வாறேனும்  தொடர்பை காலம் காலமாக மேற்கொள்ள முயன்று வந்துள்ளனர். பல படையெடுப்புகள் அந்நியர் ஊடுருவல்கள் மூலம் இந்தியப் பொருளாதாரமும் தொன்மையான தமிழர்களின் கடல்வழிப் பயணமும் தொடர்பறுந்து போயின என்பதே முற்றிலும் உண்மை.