வெள்ளப்பெருக்கு தடுப்பு
திருக்குவளை தியாகராஜர் கோவில் சண்டேசுர சன்னதியின் மேற்குச் சுவரில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியரின் 8 ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டுள்ளது. அக்கல்வெட்டு ஒரு சிறப்பான தகவலைக் கூறுகிறது.
" ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைய பன்மரான
திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர
பாண்டிய தேவர்க்கு யாண்டு அ ௵
வைகாசி மாதத்து இருப்பத்தொன்பதாந்
தியதி நாள் உடையார் திருக்கோளிலி
உடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர
தேவகன்மிகளுக்குப் பாலைக் குறுச்சி
உடையார் ராயன்
திருமறைக்காடுடையானான
வயிராதராயனேன் இசைவு தீட்டுக்
குடுத்த பரிசாவது சந்திரமௌலிப்
பேராற்றுப் பெருக்காலே தென்கரையும்
அழிந்து இந்நாயனார் கோவில் வடக்கில்
திருவீதியிலே நீர் நிலத்து வருகையாலே
திருவீதி தொ(டா)மல் இவ்வாற்றுத் தலை
விலக்கிக்க வேணுமென்று இவர்கள்
சொல்லுகையில் இவ்வாறு குண்டையூர்
எல்லையிலே விலக்குவதாக இற்றை
நாள் பார்த்து "........
சந்திரமெளலிப் பேராற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், ஆற்றின் தென்கரை அழிந்து, வெள்ளம் இக்கோவிலின் வடக்குத் திருவீதியில் புகுந்துவிடுகிறது. (இக்குறிப்பைக் கொண்டுப் பார்க்கையிலே இக்கோவிலின் வடக்கில் சந்திரமெளலிப் பேராறு ஓடியிருக்கவேண்டும்.) உடனே வெள்ளப் பெருக்கினை வடிய செய்யப் பாலைக் குறுச்சி உடையார் ராயன் திருமறைக்காடுடையான் என்பவரால் திருக்குவளைக்கு அருகில் வடக்கில் உள்ள குண்டையூர் எல்லையில் வடிக்கால் செய்து, இவ்வாற்றின் வடகரையைத் தென்கரையாக்கி திசைமாற்றித்தரப்படுகிறது. இரண்டாம் திருவீதியாக ஊரைச் சூழ்ந்து திருவீதியும் செய்யப்படுகிறது. இப்படி செய்யும்போது திருநாமத்துக்காணியாக இருந்த விலைநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. (இது என்ன இப்ப இருக்க அரசாங்கமா மக்களிடமிருந்து நிலத்தைப் பிடிங்கி அவங்க நினைச்ச செய்யுறதுக்கு) அதற்கு ஈடாக அவருக்குச் சொந்தமான பரமேஸ்வர சதுர்வேதிமங்கலத்தில் இருந்த 2 வேலி நிலத்தினைக் கொடுத்துள்ளார். புதிய வாய்க்காலும், திருவீதி செய்ததால் அவற்றிற்கு அவரது பெயரே வைக்கப்பட்டுள்ளது.
தகவல்: நாகை மாவட்டம் கல்வெட்டுகள்.