முகப்பு வரலாறு தொல்லியலும் வரலாறும் கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் 32 வரிக் கல்வெட்டு நீட்சி கருதி சாய்வுக் கோட்டில்
நன்றி : சேசாத்திரி ஸ்ரீதரன்
நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம் இஞ்சிக்குடி ஊரில் அமைந்த ஸ்ரீ பார்வதீசுவரர் கோவிலின் மகாமண்டபம் வலப்புறத் தூணில் உள்ள, 32 வரிக் கல்வெட்டு நீட்சி கருதி சாய்வுக் கோட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்வஸ்தி ஸ்ரீ திரு / வுலளகளந்த கணக் / கிந்படி இரட்டபா / டி ஏ[ழ]ரை இலக்கமு / ங் கொண்டு ஆ / கோமல்லனை இரும / டி வெந்கண்டு / _ _ _ குலைவிந் கொட / _ _ _[கானை] தேவற்கு / [பா]டு ஆத[லை] / இரட்ட ராச்சியந் / துமிச்சு பேரா / ற்றங்க[ரை] கேய் வ / ந்து ஆகோமல் / லனோடு பொ[ரு] / த பூசலில் ஆனை / முகத்தில் குதி / ரை பாச்சியட்[ட] / சங்கரன் பெரி / யாநான கல்லி / யாணபுரங் கொ / ண்ட சோழ பிர / மாதராயந் [மக] / [ன்] ராஜாதிராஜனுக் / கும் அரையன் திரு / ச்சிற்றம்பலம் / முடையாநுக்கு / ம் இவநு_ _ _ _ / ந்த சங்கரன் இரா / மநான ராஜேமஹே / ந்த்ர _ _ _ ராம / நுக்கு _ _ _ _
பாச்சியட்ட – பாயவிட்டு மறிக்க, தடுக்க; பிரமாதராயன் – மன்னனால் கோவில் செயற்பாட்டை கவனிக்க அமர்த்தப்படும் பிராமண அதிகாரி.
விளக்கம்: இரண்டாம் இராசேந்திரச் சோழனின் 10–ம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மேலைச் சாளுக்கிய வேந்தன் ஆகவமல்லனான முதலாம் சோமேசுவரனை கி.பி. 1054 ல் கொப்பத்து பேராறான துங்கபத்திரைக் கரையை அண்டிய போர்க்களத்தில் இராசேந்திரச் சோழதேவர் எதிர் கொண்டான். அப்போது யானைப் படையை நோக்கி குதிரைப்படையைப் பாயவிட்டு யானைப் படையை முன்னேற விடாமல் மறிக்க, தடுக்க என்ற செய்தியோடு வேறு ஒரு செய்திக்கு கல்வெட்டு தாவுகின்றது. சங்கரன் பெரியானான கலியாணபுரம் கொண்ட சோழ பிரமாதராயன் மகன் ராஜாதிராஜனுக்கும் அரையன் திருச்சிற்றம்பலமுடையானுக்கும் இவனொடு உறவுடையவனான சங்கரன் இராமனான ராஜேந்திர _ _ _ ராமநுக்கும் என்று மூவரைக் குறித்துவிட்டு அதற்கு மேல் கல்வெட்டுச் செய்தி ஏதும் கிட்டாமல் நின்றுவிடுகின்றது. ஏனென்றால் அதன் பின் கல்வெட்டின் சில வரிகள் சிதைந்துவிட்டன. எனவே செய்தி இன்னதென்று மேலும் தெளிவாகத் தெரியவில்லை.
கோவிலில் கோவிலுக்கு தொடர்பற்ற செய்திகள் கல்வெட்டில் இடம்பெறா. இக்கல்வெட்டு இக்கோவிலில் இடம்பெற்றதென்றால் அது தொடர்பான செய்தி தான் சிதைந்த வரிகளில் இருக்கும். பிரம்மராயன் என்போர் கோவில் செயற்பாட்டை மேற்பார்வையிடவும் கோவில் செயற்பாடு சீராக நடந்து வரவும் வேந்தரின், மன்னரின் நேரடி பார்வையில் நியமிக்கப்பட்ட பிராமண அதிகாரிகள் ஆவர். தொழில் தர்மத்திற்கு மாறாக பிரம்மராயரான இந்த பிராமணர் போரில் கலந்து கொண்டு வீரசாவடைந்தார் என்று விளக்கப் பகுதியில் குறித்திருப்பது தவறானச் செய்தியாகப்படுகின்றது. கல்வெட்டுகளை படிப்போர் நூல் வெளியீட்டாளர் கொடுக்கின்ற விளக்கத்திற்கு மேல் தாமாக முயன்று எந்த கல்வெட்டிற்கும் பொருள் விளக்கம் கொள்ளப் போவதில்லை என்பதே நடப்பாக உள்ள நிலையில் இப்படியான தவறான விளக்கத்தை படிப்போர் அதையே உண்மை என்று கருதும் அவல நிலை தான் உள்ளது. ஒரு அரசு அமைப்பான தொல்லியல் துறை இத்தகு தவறுகளை தவிர்க்க வேண்டும்.
பார்வை நூல்: நன்னிலம் கல்வெட்டுக்கள் – I, எண்: 171/1977, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.