முகப்பு வரலாறு தொல்லியலும் வரலாறும் கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் பாளையங் கோட்டையில் அமைந்த கோபால சுவாமி கோயில் கருவறை வடக்கு அதிட்டானம் முப்படைக் குமுதத்தில் பொறித்த 9 வரிக் கல்வெட்டு.
நன்றி : சேசாத்திரி ஸ்ரீதரன்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டை வட்டம், பாளையங் கோட்டையில் அமைந்த கோபால சுவாமி கோயில் கருவறை வடக்கு அதிட்டானம் முப்படைக் குமுதத்தில் பொறித்த 9 வரிக் கல்வெட்டு.
சாற்றின – அறிவித்த; செறுகை – ; பறிக்க – வலுவில் பிடுங்க; கவர் – கொள்ளையிடு; பட்ட – போரில் இறந்த; உதிரப்பட்டி – உயிர் ஈகம் செய்தவர் குடும்பத்திற்கு தரப்படும் இரத்த காணிக்கை நிலக் கொடை; பணிச்ச நிலம் –
விளக்கம்: இரட்டப்பாடி ஏழரை இலக்கம் என முதலாம் இராசராசதேவரின் மெய்கீர்த்தியொடு தொடங்கும் இந்த கல்வெட்டு அவனது 25-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1010) வெட்டப்பட்டுள்ளது. இராசராச மண்டலத்தில் அடங்கிய கீழ்களக் கூற்றத்தில் அமைந்த பிரம்மதேயமான ஸ்ரீ வல்லப சதுர்வேதி மங்கல (பாளையங்கோட்டை) மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் கூட்டத்தில் மக்கள் திரளாக கூடி இருந்து எடுத்த முடிவு யாதெனில்,”நம்மூரில் புகுந்து ஊரையே அழிப்போம் என்று இங்குள்ள பிராமணர் உடைமைகளைப் படைக்களம் வலுவந்தமாகப் பிடுங்கியது. பிராமணிகளான மாமிகளின் தாலியையும் காதையும் அறுத்ததோடு கொள்ளையிட முற்பட்ட நேரத்தில் அப்படிக் கொள்ளையிட முடியாமல் தடுத்து போரில் இறந்து போன வள்ளுவன் மாணிக்கன் மணியன் ஆன கவறை இகைற்சி_ _ மயில் ஒப்பனுடைய குடும்பத்தாருக்கு இரத்த காணிக்கை நிலம் கொடையாக திருவரங்கனேரி குளத்தடி பக்கம் வழங்கப்பட்டது.
வேந்தர், மன்னர்களின் பேராதரவு பெற்றவர்களாகக் கருதப்பட்ட பிராமணர்களுக்கே இப்படி ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழல் இருந்தது என்றால் மற்றவர் உயிர் பாதுகாப்பும் கேள்விக்கிடமானதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
5-ம் வரியில் அதிகமான தட்டச்சுப் பிழை உள்ளது. நூலைப் படிப்பவர் யாரும் மூலக் கல்வெட்டொடு ஒப்பிட வாய்ப்பில்லாத போது ஒருவர் தட்டச்சிய கல்வெட்டு வாசகத்தை இன்னொருவரைக் கொண்டு சரிபார்த்த பின்னர் தான் அதை அச்சிடுட வேண்டும் அதுவே சரியானது. இந்தக் கல்வெட்டில் அவ்வாறு கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிகின்றது.
பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் – I, பக்கம் 42, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.