முகப்பு வரலாறு தொல்லியலும் வரலாறும் கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள்
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள்
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் பல வகைகளில் தனித்தன்மை மற்றும் சிறப்பு பெற்றவை. கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று.
"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...."
பேரரசரான இராஜராஜ சோழர், தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று.
இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் -- தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன.
கோவிலைப் பற்றிய அநேக தகவல்களை கல்வெட்டில் காண்பது என்பது இந்த கோயிலின் சிறப்பு. இத்தகு கல்வெட்டுகளின் மூலம் ஓர் ஒழுங்கான ஆவணத்தை அழியாத வகையில் நமக்கு விட்டு சென்றிருக்கிறார் இராஜராஜ சோழன் என்றே சொல்ல வேண்டும்.
கோவிலின் அமைப்பு, அதன் கட்டுமானப் பணி விபரங்கள், கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்ட நாள், கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள், கோவிலுக்கு என்று நியமிக்கப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள், அவர் தம் பணிகள், ஒரு அதிகாரியோ, பணியாளரோ விடுப்பு எடுத்தால் செய்யப்பட வேண்டிய மாற்று ஏற்பாடுகள், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விவரங்கள் என்று பல்வேறு செய்திகள் இந்த கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
கோவிலின் தினப்படி பூசனைகள், வழிபாட்டு முறைகள், சிறப்பு வழிபாடுகள் அவை எப்போது செய்யப்பட வேண்டும் என்னும் விபரங்கள், மாதம் தோறும் மற்றும் ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டிய விழாக்கள், அந்த விழாக்களின் போது பின்பற்ற வேண்டிய முறைமைகள் என்று அனைத்தும் கல்வெட்டுகளில் உள்ளன. கிரக நிலைகளை கணித்து அதற்கேற்றார் போல எந்த விழவுகளை எப்போது கொண்டாட வேண்டும் என்பதை தெரிவிக்க பெருங்காணி என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவற்றை ஆவணங்களாக அல்லது செப்பு பட்டயங்களாக உருவாக்கியிருந்தால் அவை அழிந்து போக வாய்ப்பு உண்டு. ஆனால் கல்வெட்டுகளாக பொறித்ததன் மூலம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அவை நமக்கு கிடைப்பது சிறப்பு.
இராஜராஜ சோழனின் 19 ஆம் ஆட்சியாண்டில் கோவிலின் கட்டுமானப் பனி தொடங்கப்பட்டதும், அவருடைய 25 ஆம் ஆட்சியாண்டின் 275 ஆம் நாள் கோவிலின் குடமுழுக்கு நடத்தப்பட்டது என்னும் தகவல்களும் கல்வெட்டுகளில் உள்ளன. இந்த நாளில் பேரரசர் ஒரு செப்பு குடத்தை, இராஜராஜ தேவரின் விமானத்தின் மீது பொருத்துவதற்காக கொடுத்தார் என்கிறது கல்வெட்டு. இதன் மூலம் இது நடந்தது 1010 ஆம் ஆண்டு என்று கொள்ளலாம்.
கோவிலுக்கு பலரும் அளித்த செப்பு திருமேனிகளின் பட்டியல், திருமேனிகளின் அளவுகள், அவய அடையாளங்கள், நகைகள் அவற்றில் பதித்து இருந்த விலை உயர்ந்த கற்கள், முத்து, பவழங்களின் விபரங்கள் எல்லாமும் கல்வெட்டுகளில் உள்ளன.
கோவிலுக்கு நிவந்தமாக அளிக்கப்பட்ட தங்க மற்றும் வெள்ளி பாத்திரங்களின் பட்டியலும் உள்ளது. அவற்றின் எடை, வடிவம் முதற்கொண்டு குறிப்பிடப்பட்டுள்ளன. நெய் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் நெய் முட்டை என்னும் சிறிய கரண்டியின் விபரம் வரை அத்தனையும் விடுபடாமல் பட்டியலில் உள்ளன. சாளுக்கிய மன்னனான சத்யாஸ்ரயனை வெற்றி கொண்டது இராஜராஜ சோழரின் ஒரு முக்கியமான போர் வெற்றி. அதன் பின்னர், அவர் இராஜராஜீஸ்வரமுடையாருக்கு பொன்னால் ஆன மலர்களை பூஜைக்காக கொடுத்துள்ளார். இந்த செய்தியும் கல்வெட்டாக பதிவாகியுள்ளது.
கோவிலின் வடக்கு வெளிப்புற சுவற்றில் உள்ள கல்வெட்டுகள் தளிச்சேரி கல்வெட்டுகள் என்று புகழ் பெற்றவை. இக்கோவிலின் மூலவரை ஆடல்வல்லான் என்றே விளிக்கிறது ஒரு கல்வெட்டு. ஈசனின் அம்சமான நடராஜர் அல்லது ஆடல்வல்லானின் மீது அபார பிரியம் கொண்டிருக்க வேண்டும் இராஜராஜ சோழர்.
ஆடல்வல்லானின் சந்நிதியில் ஓயாது நடனம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பல ஏற்பாடுகளை செய்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடற்கலையில் சிறந்த பெண்களை பெரிய கோவிலில் இறைவன் முன் நடனமாட தஞ்சைக்கு அழைத்து வந்திருக்கின்றனர். இவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் தளிச்சேரி. கடவுளுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்து தேவரடியார் என்று அழைக்கப்பட்ட இந்த ஆடல் மங்கைகள் மொத்தம் 400 பேர் என்பது கல்வெட்டு குறிப்பு. இவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைக்கோலி என்னும் மூத்த ஆசிரியை உண்டு. ஒவ்வொரு குழுவிலும் நடன மங்கையரும், இசை கலைஞர்களும், நட்டுவாணர்களும் உண்டு.
இவர்கள் எல்லோருக்கும் வாசிக்க ஒரு புத்தம்புது குடியிருப்பு கட்டப்பட்டது. அதில் வரிசை வாரியாக ஒதுக்கப்பட்ட வீடுகளின் விபரம் மற்றும், எந்த குழு எப்போது கோவிலில் நடனம் புரிய வேண்டும் போன்ற விபரங்கள், அவர்களுக்கு கொடுக்கப் பட வேண்டிய ஊதிய விபரங்கள், அவர்களுக்காக கட்டப்பட்ட பயிற்சி கூடம் என்று பல விபரங்கள் உள்ளன.
கோவிலுக்கு என்று நிவந்தங்களாக அளிக்கப்பட நிலங்களின் விவரணங்கள், பல்வேறு வழிகளை கோவிலுக்கு கிட்ட வேண்டிய வருமானங்கள், அவை எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்னும் முறைமைகள், அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பத்தும் மற்றும் இவற்றுக்கான கணக்கு வழக்குகள் பதியப்பட வேண்டிய வழிமுறைகள் எல்லாமும் தெளிவாக கல்வெட்டுகளில் உள்ளன.
இடையறாது போர் புரிந்து கொண்டிருந்த மன்னனின் படை வீரர்கள் பலர் கோவில் சேவகத்தில் சேர்ந்தனர் என்பது கல்வெட்டுகள் சொல்லும் ஒரு வியப்புக்குரிய செய்தி. கோவிலுக்கு என்று அமர்த்தப்பட்ட இசைக்க கலைஞர்களும் 18 பேர் போர் வீரர்களாக இருந்தவர்கள் என்ற கல்வெட்டு குறிப்பு உள்ளது. சில படைப்பிரிவுகளுக்கும், வணிகர்களுக்கும் சிறிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் சில தேவர்களின் சந்நிதிகளுக்கு தேவையானவற்றை தந்துள்ளனர்.
இதற்கு சிறந்த உதாரணம், தெற்கு சுற்றுப் பிரகாரத்தில் உள்ள கணபதியார் சன்னதி. இதன் வாயிலில் உள்ள கல்வெட்டு செய்தி கூறுவதாவது "கணபதியாருக்கு தினமும் நிவேதனமாக படைக்க வேண்டிய வாழைப்பழங்களை தருவிக்க, கோவில் கருவூலத்தில் இருந்து வணிகர்களுக்கு கடன் கொடுக்கப்படும். வணிகர்கள் வட்டிக்கு பதிலாக, கணபதியாரின் பூஜைக்கு வாழைப்பழங்களை முறைமை வைத்து தினமும் அளிக்க வேண்டும்". இதன் மூலம், வணிகர்கள் கோவிலின் வழிபாடுகளில் பங்கேற்கும் சிறப்பையும் பெறுகிறார்கள், இந்த நிவந்தத்திற்கென ஒதுக்கப்பட்ட மூலதனம், கரையாமல் வட்டியின் மூலம் வருமானமும் தடையின்றி கிடைக்கப் பெறுகிறது. நிதி நிர்வாகம், நிதி சுழற்சி, வணிகம், பொது மக்களுக்கும் பங்களிக்கும் வகைமை என்று பல நண்மைகள் இதன் மூலம் கிடைக்கின்றன.
கல்வெட்டுகள் மூலமாக கோவில் காட்டும் பணியில் ஈடுபட்ட சிற்பிகளின் தலைவர் பெயர் குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சன் என்று அறிகிறோம்.
கோவில் கட்டும் பணிகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் அவர்களின் பங்களிப்புகளும் கல்வெட்டுகளில் உள்ளன. அது மட்டுமன்றி கோவிலை சுத்தம் செய்ய அமர்த்தப்பட்ட பணியாளர்கள், சலவை தொழிலாளர், நாவிதர், கருமார், கொடி மற்றும் குடை ஏந்துபவர்கள், பல்லக்கு தூக்குபவர், பந்தம் பிடிப்போர், சமையல் செய்பவர், தேவாரம் ஓதுவோர், திருமுறை இசைப்பவர்கள், வடமொழி மந்திரங்களை ஓதுபவர்கள் என்று கோவிலின் தினப்படி செயல்பாடுகளில் பங்கேற்கும் எல்லோரையும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக கோவில் கல்வெட்டுகளில் அக்கோவிலுக்கு அளிக்கப்பட நிவந்தங்களை பற்றிய விபரங்கள் இருக்கும். அந்த நிவந்தம் அளிக்கப்பட்டதிற்கான காரணத்தை பொறுத்து அன்றைய வாழ்வியலின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கும். பல வரலாற்று செய்திகள் கல்வெட்டுகளுக்குள் பொதிந்து கிடக்கும்.
தஞ்சை இராஜராஜேஸ்வரம் என்னும் பெரிய கோவில் அன்றைய வாழவியலின் வெற்றி சின்னம். ஒரு நதிக்கரை நாகரீகத்தின் வெளிப்பாடு. சோழ சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பறை சாற்றுகிறது.
இவ்வளவு பிரம்மாண்டமான கோவிலின் வரைவு திட்டம் தொடங்கி அதனை பற்றிய அத்துணை தகவல்களும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. அத்தனையும் கோவிலின் சுவர்களிலே கல்வெட்டுகளாக உள்ளன. இத்தகைய சிறப்பு வேறந்த கோவிலுக்கும் இல்லை. இதனை வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமை பேரரசர் இராஜராஜ சோழரையே சேரும்.