இராஜேந்திர சோழனின் கல்வெட்டு முதன் முதலாக நடுகல்லில்..
இராஜேந்திர சோழனின் கல்வெட்டு
முதன் முதலாக நடுகல்லில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்திற்கு அருகில் அனுசோனை என்ற கிராமத்தில் சோழ பேரரசன் இராஜேந்திர சோழனின் 28 ஆவது ஆட்சியாண்டை குறிப்பிடும் கல்வெட்டும், இதனை சார்ந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிகுத்தப்பட்டான் நடுகல் ஒன்றும் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அருகே கெலமங்கலத்திலிருந்து இராயக்கோட்டை போகும் சாலையில் அனுசோனை என்ற கிராமத்தில், சாலையோரத்தின் வலதுபுறத்தில் இக்கல்வெட்டும் நடுகல்லும் இருக்கிறது.தொல்லியல் துறை 1975 ஆம் ஆண்டு இதனை பதிவு செய்திருக்கிறது.அடையாளம் காணப்பட்டு 45 ஆண்டுகள் ஆகியுள்ளது. தமிழ் நாட்டின் மிக முக்கிய வரலாற்று தடயம் இதுவாகும்.
உலக வரலாற்றில் ஓப்பில்லா பேரரசன், யாராலும் வீழ்த்த முடியாதவன் இராஜேந்திரசோழன்.
ஐம்பது வயதில் ஆட்சிக்கு வந்து அறுபது வயதிற்குள் கங்கை வரை படை எடுத்து சென்று, வெற்றியுடன் திரும்பி வந்து சோழகங்கம் ஏரியை வெட்டிவைத்து ,கங்கைகொண்டசோழபுரம் தலைநகரை உருவாக்கி, அறுபது வயதிற்மேல் கடல் கடந்து போர் செய்து இலங்கை ,இந்தோசியா,தாய்லாந்து ,ஜப்பான் ,சிங்கபூர் ,மலேசியா,சீனா,அங்கோர்வாட் சென்று ,தெற்காசியா முழுவதும் வென்று வெற்றி வாகை சூடி, கடாரம்கொண்டான் என்ற பட்டத்தோடு நாடு திரும்பி பத்தாண்டு காலம் ஒய்வுக்கு பிறகு 82 வயதில் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்து போனான் என்பதே இராஜேந்திரசோழனின் வரலாறாகும்.
அலெக்சாண்டர் ,நெப்போலியன் ,அசோகன்,என்று யாரோடும் ஓப்பிட முடியாத பேரரசனாக விளங்கியவன்.
இராஜேந்திரசோழனை அடையாளப்படுத்த இரண்டு பட்டப்பெயர்களை முதலில் குறிப்பிடுவார்கள்.”கங்கை வென்றான்,கடாரம் கொண்டான்” இந்த இரண்டு வரிகளை முதல் அடியாக கொண்டே இந்த கல்வெட்டு தொடங்குகிறது.
இராஜேந்திரசோழனின் கல்வெட்டுகள் பலஇடங்களில் இருந்தாலும் நடுகல்லில் இம்மன்னனின் இரண்டு வெற்றிகளை குறிப்பிட்டு கல்வெட்டிருப்பது இங்கு தான் முதன் முதலாக இருக்க முடியும் என நினைக்கிறேன்.
கல்வீடு அமைப்பில் இந்த நடுகல் அமைக்கப்பட்டிருக்கிறது.நடுகல்லில் ஓரு வீரன் தனது வலது கையில் வாளை ஓங்கியபடியும்,இடது கையில் குறுவாளை கொண்டு தன் மீது பாயவரும் புலியை குத்துவது போன்று இக்கற்சிற்பம் அமைக்கப்பட்டுளது.கல்வெட்டானது வீரனின் வலதுபுறத்தில் வெளிபுறம் தெரியும்படி கிடைவாக்கில் வைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ கெங்கையு கிடாரமு பூர்தேச
மு கொண்ட கோப்பரகேசரி பன்மராகிய ஸ்ரீ ராஜே
(ந்)திர சோழ தேவர்க்கு யாண்டு உயஅ
நுழம்பபாடியான நிகரிழிசோழ
மண்டலத்து தகமாரு நாட்டு குயினா
ட்டு அஞ்சிட்டத்தில் நாய......
ர்கங்க ஆடவர் சாமியாரு மகன்
கங்கமார்த்தாண்ட ஆடவர்சாமி
கோயில் காயத்துக்கு ஏர்ப்பணி செய்து குத்தி அளித்து பட்டான்”
என்ற பத்து வரி கல்வெட்டில் கூறப்பட்டுள்ள செய்தி
கங்கையையும்,கடாரத்தையும்,பூர்வதேசங்களையும் வென்று திரும்பிய கோப்பரகேசரியான ஸ்ரீ இராஜேந்திர சோழனின் 28 ஆவது ஆட்சியாண்டில் அதாவது 1040 ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி ,கிருஷ்ணகிரி உள்ளடக்கிய மாவட்டங்கள்ஓன்பதாம் நூற்றாண்டில் நுளம்பபாடியாக இருந்தது.அதன்பிற்கு ராஜராஜசோழன் காலத்தில் நிகரிழிசோழமண்டலமாக மாற்றினார்.அதனை குறிப்பிடும் வகையில் நுளம்பபாடியான நிகரிழிசோழமண்டலத்தில் இருக்கும் குயில் நாட்டில்(நாடு என்பது ஓரு ஊராகும்)அஞ்சிட்டம்(இப்போது அஞ்செட்டி) என்ற ஊரை நாயகம் செய்கின்ற கங்க ஆடவர்சாமியின் மகன் கங்க மார்த்தாண்ட ஆடவர்சாமி என்ற வீரன் கோயில் நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்தபோது,தன்னை தாக்க வந்தபுலியை குத்தி கொன்றுவிட்டு அவனும் மாண்டான் என்ற செய்தியை இக்கல்வெட்டில் இருப்பதை அரியமுடிகிறது.
இராஜேந்திரசோழன் கங்கையையும்,கடாரத்தையும்,பூர்வதேசங்களையும் வென்றான் என்பதற்கு நடுகல்லில் கிடைக்கப்பெற்ற முதல் ஆதாரம் என்பதாலும், ஆயிரம் ஆண்டு பழமையானது என்பதாலும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் .மாவட்டம் நிர்வாகமும் ,வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த இவற்றை பாதுகாக்க முன்வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.