குடைவரைக் கோயில்கள் ஒரு ஆய்வு!

மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் "குடைவரைக் கோயில்கள்" என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் கி.மு. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. கி.மு. 2-3 ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரியமலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில்:

        தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும். மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர்.

பல்லவர் காலக் கற்கோயில்கள்:

          பக்தி இயக்கக் காலமாகிய பல்லவ மன்னர் காலம், ஆலயக் கட்டடக் கலை வரலாற்றில் சிறப்புமிகு பொற்காலமாகும்.

குடைவரைக் கோயில்கள்:

          தமிழகத்தில் தெய்வ வழிபாட்டுமுறை, காலத்தின் கட்டாயத் தேவையாயிற்று. பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட கோயில்களனைத்தும் செங்கல், மரம், மண், சுண்ணாம்பு முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. எனவே, சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கட்டடப்பட்ட சிறப்புமிக்க வீடுகளும், ஆலயங்களும் காலத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சிதைந்து போயின. இதனைப் புரிந்து கொண்ட பல்லவர்கள், சிறப்பாக மகேந்திரவர்மன் செங்கல் முதலியவற்றைப் பயன்படுத்தாமல், மலைப்பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைக் கட்டினான். இந்தச் சாதனையை அவன் கட்டிய மண்டகப்பட்டுக் கோயிலின் கல்வெட்டிலே குறித்துள்ளான்.

         கடல் மல்லை என்ற வைணவத் தலம் பூதத்தாழ்வாரால் குறிப்பிடப் பெற்றுள்ளது ; எனவே, அது மிகவும் தொன்மையானது. பல்லவர்கள் காலத்தில் குடைவரைக் கோயில்கள் பல எழுந்தன. அவை எந்த அளவு வரலாற்றுக்குத் துணை புரிகின்றன என்பதைச் சிறிது காண்போம்.

        பல்லவர்களை முன்னோடிகளாகக் கொண்டு, பாண்டியர்கள், முத்தரையர்கள், அதியமான்கள், சேரமன்னர்கள், கீழைச் சாளுக்கிய மன்னர்கள் தத்தம் நாடுகளில் பல்வேறு மாற்றங்களுடன் குடைவரைக் கோயில்களை அமைத்துள்ளனர். பல்லவர் பாணியைப் பின்பற்றிச் சங்கரன் கோயிலிலிருந்து கோவில்பட்டிக்குச் செல்லும் வழியிலுள்ள வெட்டுவான் கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு முதலாவது குறிப்பிடத்தக்கது முருகன் கோயில். அந்தக் குடைவரைக் கோயிலையொட்டி அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். அடுத்துக் காணப்படுவது வெட்டுவான் கோயில்; இது முருகன் கோயிலுக்குப் பின்னால் மலையின் ஒரு பகுதியில், மலையிலிருந்து வேறுபடுத்திய நிலையில் கற்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.

      இந்த வெட்டுவான் கோயிலில் முன் பகுதியாகிய முகமண்டபம் கட்டட அமைப்பில் முடிவு பெறாமல் உள்ளது. இந்தக் கோயில் கருவறையின் மேல் எட்டுப்பட்டைகள் கொண்ட விமானம் அணி செய்கிறது ; பட்டைகள் தோறும் கூடுகள் அமைந்துள்ளன. விமானத்திலுள்ள கூடுகள் அல்லது சைதன்ய பலகணிகளில் யாளி, சிங்கமுக உருவங்கள் செதுக்கப்பட்டும், வளைந்து செல்லும் பூவேலைப்பாடுகளும் நிறைந்து, கட்டடக் கலைக்குச் சிற்பங்கள் அலங்காரக் கூறுகளாகப் பயன்படுகின்றன.

சிறப்புமிகுந்தவை:

         புதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் வழியிலுள்ள குன்னக்குடி (மூன்று குகைகள்), மிகச் சிறப்பான ‘பிள்ளையார்பட்டி’, அரிட்டா பட்டி, திருமலை போன்ற இடங்களிலும், மதுரைக்கு அருகில் மாங்குடி, ஆனைமலை (இரண்டு குகைகள்), திருப்பரங்குன்றம், மலையடிக் குறிச்சி, வீரசிகாமணி, ஆனையூர், திருமலைபுரம், சொக்கம்பட்டி, திருச்செந்தூர் ஆகிய குடைவரைக் கோயில்கள் கண்டு வியக்கத்தக்கவை, கழுகுமலைக் கோயில் மிகச் சிறப்பு வாய்ந்தது.

          குமரி மாவட்டத்தில் திருநந்திக் கரை, துவரங்காடு, சிவகிரி, அழகிய பாண்டியபுரம், பூதப்பாண்டி போன்ற இடங்களில் காணப்படும் குடைவரைகள் ஆய்வேளிர் மரபினரால் அமைக்கப்பட்டவை ; எனினும் பாண்டியர் பாணியில் அமைந்தவை.

பல்லவ தேர்க் கோயில்கள்:

        கோயிற் கட்டட அமைப்பில் முன்னோடிகளாகப் பல புதுமைகளைப் புகுத்திச் சிறந்த வரலாறு படைத்தவர்கள் பல்லவ அரசர்களே பெருமைக்குரியவர்கள்.
        
       கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்திலே தனிப் பெரும் கற்பாறைகளைக் குடைந்தும், புராணச் சிறப்புடன் சிற்பங்களைச் செதுக்கியும், ஒற்றைக் கல் கோயில்களாக்கியும் பல்லவர்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

    ஒற்றைக் கல்கோயில்களைப் பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்று மக்கள் வழங்கினாலும், பஞ்சபாண்டவர்களுக்கும் இந்தத் தேர்க் கோயில்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.

    தருமராசர் தேர் எனப்படும் கோயில் மூன்று அடுக்குகள் கொண்ட விமானத்தை உடையது. இரண்டாம் அடுக்கின் நடுவில் மாடப்புரை போல உள்ளிடம் வெட்டப்பட்டுள்ளது. அதனடியில் சோமாஸ்கந்தர் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

    பீமசேனன் தேர் எனப்படும் கோயில் நீண்ட சதுர அமைப்பில் காணப்படுகிறது. அதன் விமானத்தைச் சுற்றி வழிவிடப் பட்டிருத்தலைக் காணலாம். 45 அடி நீளம், 35 அடி அகலம், 26 அடி உயரம் கொண்ட இக் கோயிலில் தூண்களின் அடிப்பாகம் அமர்ந்த சிங்க உருவத்துடன் உள்ளது. தூண் அமைப்பினைக் கொண்டே நரசிம்மவர்மனின் கலைப்பாணியைப் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப் பெற்றுள்ளது.

    அருச்சுனன் தேர் எனப்படும் கோயிலின் விமானம் நான்கு நிலைகளைக் கொண்டது. 11 சதுர அடி அமைப்புடையது.

    திரௌபதி தேர் எனப்படும் கோயில், தமிழ்நாட்டில் சிற்றூர்ப் புறத் தேவதைகளுக்கு அமைத்திருக்கும் சிறுகோயில் போல் உள்ளது. இதன் அடித்தளம் 11 சதுர அடி, உயரம் 10 அடி. பல்லவர் காலத்துச் சிற்பத் திறனையும் கலைக் கற்பனையையும் புலப்படுத்தும் வகையில் இத்தேரிலுள்ள துர்க்கையின் சிலை உள்ளது.

    சகாதேவன் தேர் எனப்படும் கோயில் தன் பின் புறத்தில் யானையின் முதுகைப் போன்ற அமைப்பினையுடையது. பண்டைக் காலத்துப் பௌத்தர்களின் பள்ளிகளைப் போன்ற அமைப்புடையது. ஒவ்வொரு பாறைக் கல்லிலும் அமைந்த இந்தத் தேர்க் கோயில்களை முன் மாதிரியாக வைத்துக் கொண்டு, பிற்காலத்தில் பல தேர்வடிவ ஆலயக் கட்டடங்கள் அமைக்க முற்பட்டனர் என்பது மனங் கொள்ளத்தக்கது.


மண்டகப்பட்டு:

இக்குடைவரைக் கோயில், தமிழ் நாடு , விழுப்புரம்  மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு  என்னும் ஊரில் அமைந்துள்ளது இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் குடைவரை கோயில். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ  மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட முதலாவது கோயில்  என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை  வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.
           
      இக்குடைவரையில் காணப்பட்ட மகேந்திரவர்மனின் வடமொழிக்  கல்வெட்டு இரும்பு, மரம், செங்கல், சுதை என்பவற்றைப் பயன்படுத்தாமல் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறது. 
    
      பல்லவ மன்னர்களுள், முதலாம் மகேந்திரவர்மன் குறிப்பிடத்தக்கவன். இவனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி என்று பல்வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு. `குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி' என்று போற்றப்படும் மகேந்திரவர்மன், முதலில் சமண சமயத்திலிருந்து பின்பு சைவ சமயத்தைத் தழுவியவன். இவன் உருவாக்கிய இரு குடைவரைக் கோயில்கள் விழுப்புரம் அருகே அமைந்துள்ளன.

     தமிழகக் கட்டடக் கலையில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாக கி.பி 6 - ம் நூற்றாண்டைச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில்தான் பல்லவர்கள் தமிழகம் எங்கும் முதிர்ந்த பாறைகள் இருந்த மலைகளைக் குடைந்து எழில்மிகு கோயில்களை உருவாக்கினார்கள். தொண்டை மண்டலத்தில் காணப்படும் மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள குடைவரைக் கோயில்கள் உலகப் புகழ்பெற்றவை. இவைதவிர்த்த பிற இடங்களிலும் சில குடைவரைக் கோயில்களை பல்லவ மன்னர்கள் எழுப்பினர். அவற்றுள், 6 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு குடைவரைக் கோயில்கள் விழுப்புரத்திற்கு அருகே காணப்படுகின்றன. விழுப்புரம் - செஞ்சி சாலையில் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

       பல்லவ மன்னர்களுள், முதலாம் மகேந்திரவர்மன் குறிப்பிடத்தக்கவன். இவனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி என்று பல்வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு. `குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி' என்று போற்றப்படும் மகேந்திரவர்மன், முதலில் சமண சமயத்திலிருந்து பின்பு சைவ சமயத்தைத் தழுவியவன். இவன் உருவாக்கிய இரு குடைவரைக் கோயில்கள் விழுப்புரம் அருகே அமைந்துள்ளன.
அவற்றுள், `மண்டகப்பட்டு’ எனும் கிராமத்தில் அமைந்துள்ள, குடைவரைக் கோயிலே காலத்தால் மூத்த குடைவரை என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. அதை அங்கு காணப்படும் கல்வெட்டு உறுதி செய்கின்றது. 
இந்த ஆலயம், பிரமாண்டமான கலை வேலைப்பாடுகள் ஏதுமின்றி மிக எளிமையாக பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் கோயில் என்று சொல்லப்படும் இந்த ஆலயத்தில் மும்மூர்த்திகளுக்கும் தனித்தனி கருவறை அமைந்துள்ளது. ஆனால், கருவறைகளில் தற்போது விக்கிரகத் திருமேனிகள் ஏதும் இல்லை. மும்மூர்த்திகளின் திருமேனிகளை மரத்தில் செய்து வழிபட்டு இருக்கலாம்; அது காலப்போக்கில் அழிந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

       இந்தக் கோயிலின் எதிர்புறத்தில் இரண்டு கம்பீரமான துவார பாலகர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த கட்டுமானமும் பல்லவர் காலச் சிற்பபாணியான, `சதுரம் - எண்கோணம்' என்ற கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளன. முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என அமைந்திருக்கும் இந்தக் குடைவரைக் கோயில் காண்பதற்கு மிகவும் எழிலுடன் திகழ்கிறது. சதுர வடிவம் கொண்ட நான்கு பெரிய தூண்கள் ஆலயத்திற்கு எழில் சேர்க்கின்றன. இங்குள்ள தூண் ஒன்றில் சம்ஸ்கிருத கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது. அந்தக் கல்வெட்டில் கீழ்க்காணும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

`செங்கல், மரம், உலோகம், சுதை இவற்றை ஏதும் பயன்படுத்தாமல் `லக்ஷிதாயனம்' என்னும் இக்கற்றளி, பிரம்மா, சிவன், விஷ்ணு  எனும் மும்மூர்த்திகளுக்கு விசித்திர சித்தனால் உருவாக்கப்பட்டது. `விசித்திர சித்தன்’ என்பது மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று. 
இந்த மண்டகப்பட்டு கோயிலை உருவாக்கியதற்குப் பின் சிலகாலம் கழித்து, இங்கிருந்து 10 கி. மீ தொலைவில் உள்ள `தளவானூர்’ எனும் கிராமத்தில் சிவனுக்கான மற்றொரு குடைவரைக் கோயிலை உருவாக்கினான் மகேந்திரவர்மன். பரந்து விரிந்த வயல்வெளிகளின் நடுவே தளவானூரில் காணப்படும் இந்தக் கோயில் மகேந்திரவர்மன் சைவ சமயத்தை தழுவியதைக் குறிக்கும் வகையில் உள்ளது. மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்பில் காணப்படும் இந்தக் கோயிலை, வயல்வெளிகளுக்கு நடுவே காணப்படும் ஒரு சிறிய ஒற்றையடிப் பாதை வழியே சென்று அடையலாம். தெற்கு திசை நோக்கிய வாயிலைக் கொண்ட இந்தக் கோயிலின் அடித்தளம் மற்ற குடைவரைக் கோயில்களை ஒப்பிடுகையில் வளர்ச்சியடைந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
வாயிலின் மேலே நாசிக்கூடுகள், மகரதோரணம், இருபுறத்திலும் இரண்டு துவாரபாலகர்கள் என அனைத்தும் ஒரே ஒரு பெரிய பாறையில் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள தூண்கள், மாமல்லபுரத்தில் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியின் மண்டப தூண்களுக்கு முன்னோடி என்று கூறப்படுகிறது.

இந்தக் கோயிலினுள் பெரிய மண்டபம் ஒன்று காணப்படுகிறது. அதையொட்டி கிழக்கு திசை நோக்கிய, சதுர வடிவக் கருவறை அமைந்துள்ளது. இந்தக் கருவறையின் வாயிலில் இரு துவாரபாலகர்கள் வரவேற்க, லிங்க ரூபமாய் தரிசனம் தருகிறார் சிவபெருமான். ஆலயத்தின் வெளிப்புறத்தில் சம்ஸ்கிருத கல்வெட்டும் அதன் மொழிபெயர்ப்பான தமிழ்க் கல்வெட்டும் காணப்படுகின்றன. 
``இந்த ஆலயத்தின் பெயர் `சத்ரு மல்லேஸ்வரர் ஆலயம்’. இந்தக் கல்வெட்டில், `ஒரு வலிமையான தண்டெடுத்து அனைத்து அரசர்களையும் எளிமையாக அடக்கி ஆட்சி புரிந்துவந்த நரேந்திர சத்துரு மன்னன் என்பவன் இந்தக் குடைவரைக் கோயிலை உருவாக்கியுள்ளான்’ என்று சொல்லப்பட்டுள்ளது. சத்ருமல்லன் என்பது முதலாம் மகேந்திரவர்மனின் இயற்பெயராகும். அவன் தன்னுடைய பெயராலேயே இந்தக் கோயிலை அமைத்துள்ளான். இந்த ஆலயத்தின் நுழைவாயிலில் காணப்படும் மகரதோரணம் வேறு எந்தக் குடைவரை கோயிலிலும் காணமுடியாதது. அதேபோல் இந்தக் குடைவரை கோயிலில் மேற்பகுதியில் சமணர் படுக்கையும் உள்ளது”

கழுகுமலை வெட்டுவான்:           

    இக்கோயில்  என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து  22 கிமீ தொலைவில் கழுகுமலை  என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில் ஆகும். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில், இவ்வூரின் பெயரைக்கொண்ட மலையின் ஒரு பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திராவிடக் கட்டிடக்கலையைப்  பயன்படுத்தி சுமார் கி.பி. 800-ல் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.

குகைக்கோயில்:

       தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக்கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால்  செதுக்கப்பட்டதாகும். மிகவும் நுணுக்கமான சிற்பங்களைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

அமைப்பு:
       கழுகுமலையில் மலைப்பகுதியில் குடையப்பட்டுள்ள நிலையில் வெட்டுவான்கோயில்
மலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஒரே கல்லால் ஆனதாகும். கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. சற்றே தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் இறங்கியே இக்கோயிலுக்குச் செல்ல முடியும். ஒரு சிறிய கோயிலில் கருவறையுடன் கூடிய விமானம் எவ்வாறு அமையுமோ அந்த அளவு இக்கோயில் காணப்படுகிறது.

சிற்பங்கள்:

      இங்கு பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர் மற்றும் பூத கணங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து சிலைகளும் உயிரோட்டத்தோடு காணப்படுகின்றன. முழுமை பெறாமல் உள்ள சிற்பங்களையும் அங்கு காணமுடியும்.

குன்றக்குடி குடைவரை:

      இக்கோயில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள குன்றக்குடியில்  அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில். கிபி 7 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால்  அமைக்கப்பட்டது. இதில் பாறையில் வெட்டப்பட்ட மூன்று குகைகள் காணப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அமைப்பு:
    இம்மூன்று குடைவரைகளும் இவை குடையப்பட்டுள்ள குன்றின் தெற்குப் பகுதிச் சரிவில் உள்ளன. இவை ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றதாக அடுத்தடுத்து வரிசையாகக் குடையப்பட்டுள்ளன. அடுத்தடுத்த குடைவரைகளுக்கு இடையில் உள்ள பகுதியில் கோட்டங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோட்டத்தில் சிவலிங்கமும், மற்றதில் வலம்புரி விநாயகர் சிற்பமும் உள்ளன. இம்மூன்று குடைவரைகளுக்கும் முன்னால், அவற்றை முழுவதுமாக மறைக்கக்கூடிய வகையில் மண்டபம் ஒன்று உள்ளது. இது பிற்காலத்தைச் சேர்ந்தது.

சிற்பங்கள்:
        இக்குடைவரை கோயிலில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. இவை அக்காலத்துச் சிற்ப மரபையொட்டிய புடைப்புச் சிற்பங்களாகும். ஒரு முறை, சிவனைத் திருமால் ஆயிரத்து எட்டுத் தாமரை  மலர்களால் அர்ச்சிக்கும் போது திருமாலைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒருமலரை எடுத்து ஒளித்து வைத்தாராம். அப்போது திருமால் காணாமற் போன ஒரு தாமரை மலருக்கு ஈடாகத் தனது கண்களுள் ஒன்றைப் பிடுங்கி மலராக அர்ச்சித்தாராம். இச்செயலால் மகிழ்ந்த சிவபெருமான் திருமாலுக்குச் சக்கர ஆயுதத்தை அளித்ததாகக் கூறப்படும் புராணக்கதை இக்கோயிலில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில், சிவபெருமான் நடனமாடுவதைத் திருமால் கருடன்மீது சாய்ந்தபடி பார்ப்பதையும், பிடுங்கி எடுத்த ஒரு கண் திருமாலின் கையில் இருப்பதையும் காண முடிகிறது.

கல்வெட்டுக்கள்:
        இங்குள்ள குடைவரைகளின் சுவர்களிலும், தூண்களிலும், முன் மண்டபத்திலுமாக மொத்தம் 45 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.[4] இவற்றுட் பெரும்பாலானவை பாண்டிய மன்னர் காலத்தவை. இவற்றுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனின்  கல்வெட்டுக்கள் மட்டும் 12 உள்ளன. இவற்றுடன், சடையவர்மன் சிறீவல்லபதேவன், விக்கிரம பாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன. சோழ மன்னர்களில் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சில கல்வெட்டுக்களில் மன்னர் பெயர்கள் காணப்படவில்லை.

நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில்:

    நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில் (அ) யோக நரசிம்மர் கோயில் தமிழகத்தின் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள நரசிங்கம் எனும் இடத்தில் அமைந்த தொன்மையான குடைவரைக் கோவில்

வரலாறு:

        இக்கோவில் மதுரைப் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) காலத்தில் அவரது அமைச்சரான மதுரகவி என்ற மாறன் காரி என்பவரால் கி.பி. 770இல் உருவாக்கப்பட்டது. மாறங்காரியின் சகோதரர் மாறன் எயினன்  இக்கோவிலுக்கு ஒரு முகமண்டபத்தைக் கட்டினார்.

சிறப்பு:
     நரசிங்கம் யோக நரசிம்மர் கோயில் கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும். இக்கோயிலை ஒட்டியுள்ள மலையில் சமணர் படுகைகள் அமைந்துள்ளது.

தென்பரங்குன்றம்:
       மதுரைக்கு தென்மேற்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது ஆகும். திருப்பரங்குன்ற மலையில கிரிவலம் வரும் வழியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில் தென்பரங்குன்றம் அமைந்துள்ளது. தென்பரங்குன்ற மலையில் சமணர் குடை வரை கோவில் உள்ளது. இம்மலை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது.

வரலாறு:
       2300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் சமண துறவிகள் வாழ்ந்தமைக்கான அடையாளமாக கற்படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளன. தென்பரங்குன்ற மலையில் கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரருடைய குடை வரை கோவிலும், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுடைய மெய்கீர்த்தி கல்வெட்டுகளும் காணப்படுகிறது.

சமண மற்றும் சைவ மத சிற்பங்கள்:

இங்கு தியான நிலையில், அமர்ந்த கோலத்தில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் காணப்படுகிறது. குடைவரைக் கோவிலின் வலப்பக்கம், நடராஜனும், சிவகாமியும் நடனம் ஆடியபடி சிற்பங்கள் காணப்படுகிறது. இவ்விரண்டு சிற்பங்களும் சேதமடைந்துள்ளன. நடராஜனின் உருவச் சிலைக்கு மேலே விநாயகர், சுப்பிரமணியர் சிற்பங்கள் எழிலுற விளங்குகின்றன. மேலும் சைவ சமயத்தை சேர்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மற்றும் சுந்தரர் சிற்பங்களும் காணக் கிடைக்கிறது. இடப்பக்கமாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரின் புடைப்புச் சிற்பம் விளங்குகிறது.

குடை வரை கோவில்:
       இக்குடை வரை கோவில் அமைந்த காலம் கி.பி. முதல் நூற்றாண்டு ஆகும்.இக்குடை வரை கோவிலில் மூன்று பெரிய தூண்கள் உள்ளன. இக்கோவில் உள்ளே இடப்புறம் அமைந்துள்ள தனிச் சந்நதியில் அழகான கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. தெற்கு திசையைப் பார்த்த வண்ணம், மூலவரான தில்லைக் கூத்தனின் திருவுருவச் சிலை பாதி சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. கல்வெட்டுச் செய்திகளின்படி, இது உமையாண்டாள் கோவில் என அழைக்கப்படுகிறது.

மெய்கீர்த்தி கல்வெட்டுகள்:

       இங்கு இரு கல்வெட்டுகள் காணப்படுகிறது.அவற்றில் ஒன்று கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து, அந்நாட்டை வென்று பாண்டிய நாட்டு ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதைக் குறிக்கும் விதமாக, அந்த மெய்க்கீர்த்தி கல்வெட்டு அமைந்துள்ளது

    மேலும்   பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.  தமிழ்நாட்டில் பல்லாவரம், திருச்சி, சித்தன்னவாசல், திருமெய்யம் போன்ற ஊர்களில் உள்ள குகைக் கோயில்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை ஆகும்…


அன்புடன்,
பாலமுருகன்,M.A,,TPT, PGD.CA, PGD.YOGA, PGD.E.A, D.EM,                                                                
தொல்லியல் & கல்வெட்டு ஆர்வலர்.