முகப்பு வரலாறு தொல்லியலும் வரலாறும் கோயில்கலை,சிற்பங்கள் ,ஓவியங்கள், படிமங்கள், பிற கலைகள் பிற்கால பாண்டியர்கள் கட்டிய கோவில்கள்
பத்தாம் நூற்றாண்டு தொடங்கிப் பாண்டியநாடு சோழர் ஆதிக்கத்திலிருந்தபோது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஒன்றும் நடைபெறவில்லை . அவர்கள் தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற தங்களது ஊர்களில் கட்டிய பெருங்கோயில்களைப் போன்று பாண்டிய நாட்டில் கட்டவில்லை, எனினும் கொற்கையிலுள்ள கற்றளி போன்ற பல நடுத்தரக் கோவில்களைத் தொடர்ந்து கட்டிவந்தனர்.
சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் காலத்தில் (கிபி946-966) பள்ளிமடம் என்னுமிடத்தில் 'சுந்தர பாண்டீஸ்வரர்' என்னும் ஒரு பள்ளிப்படைக் கோவில் கட்டப்பட்டது, தவிரவும் சில கற்றளிகளும் மண்டபங்களும் இக்காலத்தில் கட்டப்பட்டன. கோவில்களில் அம்மனுக்குத் தனிக்கோவில் ஏற்பட்டதும் இக்காலத்தில் தான்.
ஆனால் 12 - 13ஆம் நூற்றாண்டில் பாண்டியர் செல்வாக்கு மீண்டும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்போது அவரது கலைப்படைப்புகளும் புதிய பொலிவு பெற்றுத் திகழ்ந்தன. சடையவர்மன் சுந்தரபாண்டியன் தனது பல வெற்றிகளின் மூலம் பெற்ற ஏராளமான பொன்னையும் பொருளையும் கொண்டு பல திருப்பணிகளைச் செய்ததை ஸ்ரீரங்கத்திலுள்ள கல்வெட்டின் மூலம் அறிகிறோம். பொதுவாக இக்காலத்தில் பல கோவில்களில் வெளிப்புறக் கோபுரங்கள், பிராகாரங்கள், மண்டபங்கள் ஆகியவை கட்டப்பட்டன.
பழைய கோவில்களெல்லாம் பெரிய அளவில் விரிவாக்கப்படும் ஒரு புதிய கட்டம் தொடங்கிற்று, சோழர் காலத்தில் கோவில்களில் கருவறையின் மீது எழுப்பப்பட்ட விமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது திருமதிலிலுள்ள நுழைவாயிலில் பெரும்கோபுரங்கள் கட்டி அணி செய்யப்பட்டன. ஸ்ரீரங்கம், சிதம்பரம் போன்ற பழம்பெரும் கோவில்களில் உள்ள கருவறையைப் புதுப்பித்துக் கட்டவோ விஸ்தரிக்கவோ பாண்டியர்கள் விரும்பவில்லை. ஆகையால் விமானங்களுக்குப் பொன்வேய்ந்து சிறப்பித்தனர்.
ஆனால் வெளிப்பிரகாரங்களிலுள்ள துணைக் கோவில்களையும், மண்டபங்களையும், கோபுரங்களையும் கட்டுவதில் அவர்களுடைய கவனத்தைச் செலுத்தினர். மதுரை மீனாட்சியம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி விசுவநாதர் கோவில், தென்காசி அழகர் கோவில் போன்ற கோவில்கள் பிற்காலப் பாண்டியர்காலத்தில் தான் விரிவாக்கப்பட்டன.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள சுந்தரேஸ்வரர் சன்னதியும், அதன் அர்த்த மண்டபம், மணி மண்டபம், சன்னதி முன்கோபுரம் போன்ற பல கட்டடங்கள் குலசேகர பாண்டியனால் (கி.பி 1168 - 1175) கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது. மதுரையில் சுந்தரேஸ்வரர் கோவிலின் கிழக்குப் பிரதான கோபுரம் அவனிவேந்தராமன் என்கிற சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. கோவிலின் வெளிப்புறச் சுவர்களை எழுப்பியவனும் இவனே. இது சுந்தரபாண்டியன் திருமதில் என்றே வழங்கப்படுகிறது.
மேலக்கோபுரம் சடையவர்மன் பராக்கிரம் பாண்டியனால் கி.பி.1323ல் கட்டப்பட்டது. ஒன்பது நிலைகளைக் கொண்ட இக்கம்பீரமான கோபுரம் நூற்றுக்கு மேலான அழகிய சுதைச் சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பிரதான கருவறையைச் சுற்றியுள்ள நடைக்கூடத்தை அல்லது திருச்சுற்று மாளிகையை முதலாம் மாறவர்மன் குலசேகரன் கட்டினான். அழகர் கோவிலில் "கோவில் பொன் வேய்ந்த பெருமாள் திருமண்டபமும்" "ஸ்ரீரங்கத்தில் சேரனை வென்றான் திருமண்டமும் " சடையவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் துலாபார மண்டபமும் யாகசாலையும் அவனால் கட்டப்பட்டன.
பாண்டிய மண்டலத்தையும் கடந்து, அவர்களது ஆட்சி சோழநாடு, தொண்டைநாடு பரவிய போது அவர்களது கலைத்தொண்டு அங்கும் பரவியது. திருவானைக்காவிலுள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிராகாரக் கோபுரம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதே. அதுபோலச் சிதம்பரத்திலுள்ள மேலைக் கோபுரம் பாண்டியர் கோபுரப் பாணிக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். ஏழுநிலைகளைக் கொண்டு நிற்கும் இக்கோபுரம் சற்று அகன்ற தோற்றமுடைய தாயும் சிற்பங்கள் நிறைந்ததாயும் காட்சியளிக்கின்றது. அலங்கார வேலைப்பாடுகள் மூலம் கட்டடங்களின் எழிலை அதிகப்படுத்துவதற்குப் பாண்டிய நாட்டுக் கலைஞர்கள் முயன்றார்கள்.
பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறியுள்ளது போல் சோழர் காலக் கட்டடக்கலை அடக்கமான முதிர்ச்சியுடையது. பிற்காலத்தில் வழக்கத்திற்கு வந்த விசய நகரக்கலை மிக நேர்த்தியாக இருந்தாலும் அளவு கடந்த அலங்காரக் கூறுகளை உடையதாய் இருந்தது. இவ்விரு கலைப்பாணிகளும் ஒன்று மற்றொன்றாய் மாறுவதற்குத் தேவையான இடைக்காலப் பாணியாய்ப் பாண்டியர் கலை விளங்கியது. பொதுவாக கோபுரத்தின் அடித்தளம் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். அதற்குமேல் செங்கல்லும் சாந்தும் சேர்ந்து கட்டிய மேல்கட்டுமானம் நிற்கும். இங்கு எண்ணற்ற சிற்பங்கள் அணி செய்வதற்கேற்ற பிறைகளும் கூடுகளும் இருக்கும். பல பாண்டியர் கோபுர வாசல்களில் அவர்களது சின்னமாகிய இரு கயல்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
எடுத்துக்காட்டாக மதுரை சுந்தரேஸ்வரரின் கீழக் கோபுரமாகிய அவனிவேந்தன் கோபுரத்திலும் மேற்குக்கோபுர வாசலிலும் மீன் இலச்சினையைக் காணலாம்.
மற்றபடி அடித்தளத்திலிருந்து சுற்றியிருக்கும் அரைக்கம்பங் களும் பிறைகளும் சற்று நல்ல வேலைப்பாட்டுடன் காணப்படுகின்றன. கும்பஞ்சரம் அல்லது கோஷ்ட பஞ்சரம் போன்ற அரைக் கம்பங்களும் இருக்கும். பாண்டியர் மண்டபங்களில் உள்ள தூண்களைச் செய்யும் கலையும் வளர்ச்சி பெற்றது. தூணில் உள்ள இதழ் சோழர் காலத் தூண்களிலுள்ள இதழைக் காட்டிலும் முனைப்பாய் இருக்கிறது. போதிகை மேற்கவிந்து தொங்குகின்ற உறுப்பாய் உருவாக்கப்பட்டது. பலகையும் சுற்று அகலமாய் இருக்கும்.