தாழியில் உயிருடன் கிழவி..

தாழியில் உயிருடன் கிழவி..

கை கால் உடைந்தால் கட்டுவதற்கு வைத்தியர்களை நிறையக் கொண்ட ஊர் இது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் "இவனை பண்டார விளைக்கு அனுப்பினால் தான் சரிப்படுவான்" என்று கூறுவது வழக்கம்.  இதற்கு என்ன அர்த்தம் என்றால் " அந்த ஆளைக் கையையோ அல்லது காலையோ உடைத்தால் தான் சரிப்படுவான்" என அர்த்தம்.

பரம்பரை பரம்பரையாக இங்கு எலும்பு முறிவிற்கு மருத்துவம் பார்க்கும் நாட்டு வைத்தியர்கள் நிறைய உள்ளனர். இவர்களை பண்டுவர்கள் என அழைக்கப்படுகிறனர். விளை என்றால் நிலம் எனப் பொருள் கொள்ளலாம். பண்டுவர் விளை மருவி பண்டார விளையாக உருவெடுத்துள்ளது என நினைக்கிறேன். பண்டுவர் என்பது சாதி சார்ந்த சொல் இல்லை மாறாக மருத்துவத் தொழில் சார்ந்த சொல்..

பண்டார விளை என்ற ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரத்திற்கும்  பெருங்குளத்திற்கும் இடையே உள்ள ஒரு கிராமம். இது செம்மண் பூமி. நிறைய பனைமரங்கள் நிறைந்த இடம். 
 இந்த எலும்பு முறிவு வைத்தியத் தொழில் நெடுங்காலமாக இந்த ஊரில் நடந்து வருகிறது. என் கணிப்பு சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் இங்கு எலும்பு முறிவுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது என நினைக்கிறேன். காரணம் இந்த ஊருக்கு அருகில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கட்டபொம்மனுக்கு உதவிய ஒரு ஜமீன் உள்ளது.

அந்த ஊர்   நட்டாத்தி என அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் அரசாங்க சங்கதிகள் இங்கு நிறைய நடந்துள்ளது. உதாரணத்திற்கு ராணி மங்கம்மா ஒரு பெரிய சாலையை இங்கு நிறுவியுள்ளார். அந்த சாலை நட்டாத்தி வழியாகப் பண்டார விளையைக் கடந்து பெருங்குளம் செல்கிறது.  பண்டார விளையில் இந்த சாலையை ஒட்டி எலும்பு முறிவு வைத்தியர்களின் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றன.

பெருங்குளத்திலிருந்து குரங்கணி என்ற ஊர் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில்  இருக்கும்.
குரங்கணியிலிருந்து முக்காணி என்ற ஊர்  சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  அணி என்றால் படை எனவும் கொள்ளலாம். 
குரங்கணி மற்றும் முக்காணி என்ற பெயர் அணி என முடிவடைவதால் இங்கு மன்னர் காலத்தில் போர் வீரர்களைத் தங்க வைத்த இடமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
 இந்த இரண்டு ஊருக்கும் இடையில் கொற்கை உள்ளது. கொற்கையைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு பாண்டிய மன்னன் ஆண்டுள்ளான். இந்த மன்னன் வெளியிட்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.. 
படைவீரர்கள் தங்கும் இந்த ஊருக்கு அருகில் பண்டார விளை அமைந்திருப்பது காரணமாகத்தான் என நம்புகிறேன். அதாவது பயிற்சியின்போதோ அல்லது போரின்போதோ வீரர்களின் கை அல்லது கால் உடைந்தால் பண்டார விளையில் உள்ள வைத்தியர்கள் மருத்துவம் பார்க்க வேண்டும். அதனால் விவரமாகப் படைகள் இருக்கும் இடத்திற்கு அருகில் இந்த வைத்தியர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த கிராமத்தின்   நுழைவாயில் ஒரு கோயில் உள்ளது. அதனைக் கிழவி அம்மன் கோயில் என அழைக்கின்றனர். இந்த கோயில் எப்படி வந்தது என்ற தகவல் ருசிகரமானது.
உவரியில் நூறு வயதைத் தாண்டிய ஒரு கிழவி ஒருத்தி இருந்திருக்கிறாள். உவரி கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரு சிற்றூர்.  இந்த ஊர் பண்டார விளையிலிருந்து தெற்கே சுமார் அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவளுக்கு நான்கு பிள்ளைகள். முதல் மூன்றும் பையன்கள். கடைசியில் பிறந்தது ஒரு பெண். இந்த நான்கு பேரும் வாலிபப் பருவம் வரை கிழவியுடன் சந்தோசமான வாழ்ந்து வந்துள்ளனர்.

வயது முதிர்வு காரணமாகக் கிழவி கூன் விழுந்து, உடல் சிறுத்து, எலும்பும் தோலுமாய் நடக்கமுடியாத நிலையை அடைகிறாள். 
 
உவரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் இவர்கள் வீடு அழிந்ததாம் அதனால் அங்கிருந்து இவர்கள் கிழவியைத் தாழியில் வைத்துச் சுமந்த வண்ணம் பண்டார விளை வந்ததாகவும் கூறுகின்றனர்.
குற்றுயிரும் குலையுயிருமாய் தாழியிலிருந்த  கிழவியை  உயிருடன் அப்படியே புதைத்ததாகச் சிலர் கூறுகின்றனர். சிலர்  இறந்த கிழவியைத்  தாழியுடன் அங்குப் புதைத்ததாகக் கூறுகின்றனர். அந்த இடத்தில்  தான் கிழவி அம்மன் கோயில் உள்ளது.
இது நடந்து சுமார் 800 வருடங்கள் இருக்கும் என்பது என் கருத்து. 
சுமார் 45 ஆண்டுகளுக்கு இது செங்கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்ட கோயிலாக இருந்தது. இந்த கோயில்
ஒரு அறைக் கொண்டதாக  இருந்தது. அதில்  கிழவி  மட்டும் தான் பிரதான பீடம் இருந்தது.

அது போகச் சுயம்புலிங்கத்திற்கும், பிரம்ம சக்திக்கும், பேச்சிக்கும் பீடங்கள் இருந்தது. இந்தக் கோயிலைத் தான்  கிழவி அம்மன்  கோயில் என மக்கள் அழைக்கின்றனர். 
இப்போது சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின் இந்த கோயில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. 

இப்போது இந்த கோயிலில்  சுயம்புலிங்கத்திற்கு ஒரு அறையும், விநாயகருக்கு ஒரு அறையும், பிரமசக்தி என்ற அம்மனுக்கு ஒரு அறையும், பெருமாளுக்கு ஒரு அறையும், கிழவி அம்மனுக்கும் மற்றும் பேச்சி அம்மனுக்கு ஒரு அறையும், பத்ரகாளி அம்மனுக்கு ஒரு அறையும் என மொத்தம் ஆறு  அறைகளைக் கொண்ட பெரிய கோயிலாக உருவெடுத்துள்ளது. கிரானைட் கல்லில் இந்த கோயில் பளபளக்கிறது. கோயிலைக் கடந்துதான் ஊருக்குள் செல்ல வேண்டும். 
சுயம்புலிங்க சாமிக்கு 
உவரியில் ஒரு பெரிய கோயில் உள்ளது. உவரியில் அவர்கள் வணங்கி    சுயம்புலிங்க சாமிக்கும்  பண்டார விளையில் கிழவி அம்மனுக்கு அருகே  ஒரு கோயிலை அமைத்துக் கொண்டனர். தங்கள் முன்னோரான  கிழவிக்காகச்  சுயம்புலிங்கத்திற்கு   அருகே கோயில் கட்டிவணங்குகின்றனர்.
இதைப் பார்க்கும் போது  சுயம்புலிங்கமும் இந்த  மக்களின் முன்னோராகத்தான் இருப்பார் எனத் தோன்றுகிறது. 
கிழவியின் மூத்த மகன் எலும்பு முறிவு வைத்தியராகவும் மற்ற இரண்டு மகன்களும் விவசாயம் செய்பவர்களாகவும் இருந்துள்ளனர்.   ஊரின் தெற்குப் பகுதியில் கடைசி மகனின் வாரிசுகளும்; கிழவி அம்மன் கோயில் அருகில் இரண்டாவது மகளின் வாரிசும்; ஊரின் கீழ் பக்கம்  மூத்தவரின் வாரிசுகளும் உள்ளனர்.

மூத்தவர்களின் வாரிசுகள் இன்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் எலும்பு முறிவு வைத்தியம் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகின்றனர். பண்டார விளை வைத்தியர்கள் என்றால் எலும்பு முறிவு வைத்தியத்தில் கைதேர்ந்தவர்கள் என்பது இந்த மூன்று மாவட்டங்களில் இன்றும் நம்பிக்கை உள்ளது.  
இந்த ஊரின் கீழ்ப் பகுதியில் மங்கம்மா சாலை உள்ளது. அதன் வழியே தெற்கு நோக்கி நடந்தால் பண்ணை விளைக்கு மேற்கில் பெருங்குளத்திற்கு அருகில் ஒரு சுடலைமாடசாமி கோயில் உள்ளது. அங்குப் புகழ் பெற்ற எலும்பு முறிவு வைத்தியர் நாராயண பண்டுவர்
 அவர்களின் நினைவு பூடம் ஒன்று உள்ளது.  வருடாவருடம் இந்த கோயிலில் திருவிழா நடத்தப்படுகிறது.. 
ஆக இந்த  ஊருக்குள் நுழைய‌ இரண்டு வழிகள் உள்ளன. இரண்டிலும் தன் முதாதயர்களையே தெய்வங்களாக இந்த மக்கள் வணங்கி வருகின்றனர். 
சில மணி நேரம் இந்த ஊர் சார்ந்த தகவலைத் திரட்டும் போதும் திரட்டிய தகவல்களை அசை போடும்போது  புரிந்து கொண்டது என்னவென்றால்:
நடக்க முடியாத நிலையில் உள்ள  வயதான பெரியவர்களைத் தாழியில் வைத்துத்தான் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் தாழியில் வைத்துப் புதைக்கும் பழக்கம் இந்த பகுதியைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டவரை  இருந்துள்ளது எனக் கனிக்க முடிகிறது. ஆங்கிலேயர் வரவுக்குப் பின் மரப்பெட்டி என மாறியது என நினைக்கிறேன்.  
மேலும் நாராயண பண்டுவருக்காக சுடலைமாடசாமி கோயிலில் பூடம் போட்டு வாங்குவதைப் பார்க்கும் போது மாடசாமி,  சுடலை, முண்டன் போன்ற தெய்வங்களும் இவர்களின் முன்னோர்கள் தான் என்பதை நன்கு உணரமுடிகிறது. தமிழகத்தில் மாடசாமி,  சுடலை, முண்டன் போன்ற தெய்வங்கள் உள்ள கோயில்கள் ஊருக்கு வெளியே காணப்படுகிறது. இந்த கோயில்கள் முன்னோர்களை அடக்கம் செய்த‌ இடமாக இருக்கும். உதாரணத்திற்குக் கொற்கை அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தில் ஒரு புகழ் பெற்ற சுடலை மாடசாமி கோயிலில் உள்ளது. அங்கு நிறையக் கல்லறைகள் இருப்பதைக் காணலாம். இந்த கோயில்களில் தோண்டிப் பார்த்தால் அங்குத் தாழிகள் கிடைக்கும் என எண்ணுகிறேன்.
அந்த தாழிகளில் அதனை வணங்கும் பக்தர்களின் முன்னோர்களைப் பார்க்க முடியும் என நம்புகிறேன். 
அதேமாதிரி பிரம்ம சக்தி, ஈசுவரி, பேச்சி, போன்ற தெய்வங்கள் அதனை  வணங்குபவரின் முன்னோர்களே என முடிவுக்கு வரத் தோன்றுகிறது. காரணம் பண்டார விளையில்  பேச்சி அம்மனுக்கும் கிழவிக்கும் பிடங்கள் ஒரு அறையில்  இருக்கிறது. இங்கும் அதே தான். தாழியில் புதைத்த தம் முன்னோர்களையே கடவுளாக  வணங்குகின்றனர்.
அதாவது நம் மக்கள் தன் தாய் தந்தையர்களை வணங்கும் பண்புள்ளவர்களாக இருக்கின்றனர் எனக் காணமுடிகிறது.
மாடசாமி,  சுடலை, முண்டன் மற்றும் பிரம்ம சக்தி, ஈசுவரி, பேச்சி, போன்ற தெய்வங்களைக்  கொண்ட சிறு கோயில்கள் தென்மாவட்டங்களில் நிறைய உள்ளன. 

இது எப்படி?
ஒரே பெயரில் நிறைய நபர்கள் வாழ்ந்தார்களா? 
அல்லது 
ஒரு ஒரே நபரைத் தான்  தெய்வங்களாக அனைவரும் கொண்டாடுகின்றார்களா? 

இந்த கேள்விகளுக்கு என் பதில் சுடலை என்ற பெயரைக் கொண்ட சாமியை யாரெல்லாம் கும்பிடுகின்றார்களோ அவர்களெல்லாம் இரத்த பந்த உறவினர்கள் என நான் ஆழமாக நம்புகிறேன். இது மாதிரி மேற்கண்ட சாமிகளை வணங்கும் அனைவரும் ஒரு தாய் மக்கள் தான் என் கணிக்க முடிகிறது. 
என் காலம் சென்ற அப்பாவை நினைக்கும்போது கடவுளுடன் வாழ்த்தாகவே தான் தோன்றுகிறது. முன்னோர்களை வழிபடும் இந்த பண்பு  நம் மக்களின் உணர்வில் ஊறிப்போய் உள்ளது. 

பரவலாகக் கிராமத்தில் எல்லா குடும்பத்திற்கும் ஒரு அம்மன் (பெண் தெய்வக்) கோயிலும் ஒரு சாமி  (ஆண் தெய்வக்) கோயிலையும் வணங்குவதைப் பார்க்கலாம். அதாவது அவர்களின்  அம்மாவையும் அப்பாவையும் வணங்குவதாகவே நான் பார்க்கிறேன்.
ஆக, நம் பாரம்பரிய கடவுள் வழிபாடு என்பது முன்னோர்கள் வழியில் வாழ்க்கை நடத்துவது எனக் கொள்ளலாம்.

நன்றி : பேராசிரியர் சி சுதாகர்