தமிழர்களின் தாய்த்தெய்வம் – முந்து கொற்றவை
தமிழர்களின் தாய்த்தெய்வம் – முந்து கொற்றவை:
இந்திய நாட்டின் பண்பாட்டு சமயக் கூறுகளில் தமிழகம் பன்னெடுங்காலமாக தனித்துவம் பெற்ற பகுதியாக விளங்கி வந்தது. ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே தமிழகத்தில் இரும்புக்காலம் எனப்படும் பெருங்கற்காலப் பண்பாடு நிலவி வந்தது. அதன் தொடர்ச்சியான சங்க காலம் முடிய கி.பி. 300 வரை தமிழகம் தனித்தியங்கிய ஆட்சியமைப்புகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டு விளங்கின. வட இந்தியாவில் சந்திரகுப்த மௌரியனால் போற்றப்பட்ட சமணமோ அல்லது அசோகனால் பரவாலாக்கப்பட்ட பௌத்தமோ அல்லது வைதிகத்திற்கு உட்பட்ட வைதீக சமயமோ தமிழகத்தில் பல்லவர் காலம் வரை தலையெடுக்கவில்லை. இதற்கு முழுமையான காரணமாக தமிழகத்தில் இருந்த மூன்று பேரரசுகளான சேர, சோழ பாண்டிய அரசுகளே ஆகும்.
அசோகனின் கல்வெட்டுகளில் தனது ஆட்சிக்குட்படாத அரசுகளாக கேரளபுத்திரர் எனப்படும் சேரர்களையும் மதுரையை ஆட்சிபுரிந்த பாண்டியர்களையும் உறையூரைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த சோழர்களையும் தகடூர் பகுதியை ஆட்சிபுரிந்த சத்தியபுத்திரர் அதியமான் மரபினரையும் தமிழகத்தின் தென்பகுதியில் ஆட்சி செய்த புலிந்தர்களையும் குறிப்பிடுகின்றார். அம்மரபுகளுக்கு நிகராக அயல் நாட்டு அரசர்களையும் அசோகனின் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மாசிடோனிய அரசர், ஆண்டியோகஸ், ஆண்டிகினிஸ்,பிலிப் மற்றும் மகா ஆகிய அரசர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். எனவே அந்நியருடைய ஆட்சிக்கு உட்படாத தமிழகம் தனித்துவம் பெற்ற பகுதியாகவே கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கியது. இதன் விளைவாகத் தான் வட இந்தியாவில் தோன்றிய மேற்குறிப்பிட்ட சமய ஊடுருவல்கள் தமிழகத்தில் பரவ இயலாத நிலை ஏற்பட்டது.
சுடுமண் பெண் உருவங்கள்
சங்க இலக்கியங்களில் தமிழர்கள் நிலங்களை ஐவகையாகப் பிரித்து ஐந்நிலங்களுக்கும் தனித்தனிக் கடவுள்களை உருவாக்கிக் கொண்டனர். இவற்றைத்தவிர தமிழர்களின் தொன்மையான தெய்வமாக தாய்த்தெய்வ வழிபாடு விளங்கி வந்தது. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் சுடுமண் பெண் உருவங்கள் புதிய கற்காலத்திலிருந்து கிடைத்து வருகின்றன. பாறை ஓவியங்களிலும் தாய்த்தெய்வ வழிபாடு குறித்த ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் சுடுமண் தாய்த்தெய்வ உருவங்களின் தலைப்பகுதி அல்லது நின்ற நிலையில் இருக்கின்ற சுடுமண் தாய்த்தெய்வங்களே தமிழகத்தில் கிடைத்துள்ளன.
ஆதிச்சநல்லூர்:
இத்தாய்த்தெய்வங்களில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் கிடைத்த இரண்டு தாய்த்தெய்வ உருவங்கள் காலத்தால் பழமையானது. ஆதிச்ச நல்லூர் பகுதியை கடந்த நூற்றாண்டில் பல ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜோகர் என்பவரும் அலெக்சாந்தர் ரீ என்பவரும் ஆவர். அலெக்சாந்தர் ரீ செய்த அகழாய்வில் அவர் இப்பகுதியில் தாமிரத்தால் ஆன பல பொருள்களை அகழ்ந்து எடுத்துள்ளார். அத்துடன் இரும்புக் கருவிகளும் பொன்னாலான அணிகலன்களும் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
`அலெக்சாந்தர் ரீ கண்டுபிடித்த பொருள்களில் செம்பாலான கனமான பெண் தெய்வத்தின் படிமம் ஒன்று குறிப்பிடத்தக்கது. இத்தெய்வம் சிந்து வெளியில் கிடைத்த செம்பாலான பெண் உருவத்தினை ஒத்த நிலையில் அமைந்துள்ளது. மிகச் சிறிய அளவிலான இத்தெய்வம் முகத்தில் கண்கள் கோடுகள் போன்று கீறப்பட்டும் அவற்றிற்கு இடையில் மேல் நோக்கிய நிலையில் மூக்கின் அமைப்பும் காணப்படுகிறது. தலையைச் சுற்றி ஒருவளைவான அலங்கார அமைப்பு தொடங்கி முடியாக கீழ் தொங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற முக அமைப்பை உடைய இத்தாய்த்தெய்வத்தின் கழுத்தில் கணமான பருத்த அணிகலன் வட்ட வடிவ அணிகலன் ஒன்றும் உள்ளது. இத்தெய்வத்தின் மார்புகள் புடைப்பாக உருண்டை வடிவில் தனியாக வடிவமைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. நீண்ட அங்கி ஒன்றை அணிந்த நிலையில் உள்ள இத்தாய்த்தெய்வத்தின் வயிற்றின் நடுப்பகுதியில் தடித்த அமைப்பு ஒன்று உதர பந்தம் எனப்படும் வயிற்றுக் கச்சையுடன் இணைந்து மேல் நோக்கிய நிலையில் மார்பின் நடுப்பகுதி வரை தண்டு போன்று செல்கிறது.
இத்தாய்த்தெய்வம் வளமைக் கடவுளாக இருக்கலாம். இத்தெய்வத்தின் கைகள் குட்டையாக உள்ளன, விரித்த உள்ளங்கைகள் மேல் நோக்கிய நிலையில் கைகளில் எதையோ பற்றியவாறு இத்தெய்வம் காணப்படுகிறது. இடக்கையில் வாலுடன் கூடிய ஊர்வன விலங்கை வைத்துள்ளது போல் காணப்படுகிறது. இது நீரிலும் நிலத்திலும் இருக்கின்ற முதலையாக இருக்கலாம். குட்டையான கால்களை உடைய இத்தெய்வம் ஆதிச்ச நல்லூரில் கிடைத்த முந்து கொற்றவையான தாய்த்தெய்வமாக இருக்கலாம்.
ஆதிச்சநல்லூரின் ஈமப்பகுதியில் 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகளுடன் கவிழ்ந்த நிலையில் ஒரு உடைந்த மட்கல ஓடு கிடைத்தது. இம்மட்கலவோடு பல்வேறு வகைகளில் சிறப்புக்குரியது. இவ்வோட்டின் மேல்பகுதியில் கைகளால் வனையப்பட்டு சிறிய குச்சியால் அழகுபடுத்த புடைப்பான கோடுகள் கொண்ட திரளான ஒரு தாய்த்தெய்வத்தின் உருவம் காணப்படுகிறது. அலெக்சாந்தர் ரீ அகழாய்வில் கிடைத்த தாய்த்தெய்வம் போன்று முக அமைப்புடன் இத்தெய்வம் விளங்கினாலும் இவ்வுருவத்தின் தலை அலங்காரம் பல்வேறு புள்ளிகள் கொண்டு விரிந்த சடைமுடியாக காட்சியளிக்கிறது. தலை அலங்காரம் புள்ளிகளால் இடப்பட்டுள்ளமை மிக நேர்த்தியான உள்ளூர் கைவினைஞரால் வடிவமைக்கப்பட்ட தெய்வமாக இது காணப்படுகிறது. நின்ற நிலையில் இருக்கும் இத்தெய்வம் முழங்கால் வரை நீண்ட அங்கியை கொண்டு விளங்குகிறது. இரு நீண்ட கைகளை தொங்க விட்ட நிலையில் கைகளில் எதையோ வைத்துள்ள நிலையில் இத்தெய்வம் உள்ளது. முகத்தின் அமைப்பு செப்புப் படிவ தாய்த்தெய்வத்தின் உருவத்தையே ஒத்துள்ளது. வட்ட வடிவ முகம் கண்கள் மூக்கமைப்பு காட்டப்படாத நிலையில் இத்தெய்வம் உள்ளது. இத்தெய்வத்தின் உடல் அமைப்பு நன்கு களிமன்னைக்கொண்டு மெலிதான மேட்டுக் கோடாக இடப்பட்டு இடைவெளிகளில் குச்சி ஒன்றைக் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தோள்பகுதி விரிந்து இடுப்புப் பகுதியில் குறுகி மீண்டும் கீழ்பகுதி விரிந்து தொப்புள் அருகில் குறுகிச் சென்று மீண்டும் விரிவடைந்த நிலையில் கால்களை அகல விரித்து காட்டப்பட்டுள்ளது.
தாய்த்தெய்வத்தின் மார்பு உருண்டையாக களிமன்னை வைத்து தனியாக சேர்த்துள்ள நிலையில் காணப்படுகின்றன. இத்தெய்வத்தின் கைகளும் கீழே இடைப்பகுதியில் சற்று வளைந்து தொங்கவிட்டவாறு உள்ளது. கைகளை அகல விரித்த நிலையில் இத்தெய்வம் உள்ளது.
தாய்த்தெய்வத்தின் வலப்பக்கம் வளமையான நெற்கதிரின் செடி காட்டப்பட்டுள்ளது பல இதழ்களை உடைய இக்கதிரின் ஒரு இலைப்பகுதியின் மேல் நீர்ப்பறவை ஒன்று அமர்ந்துள்ளது. அப்பறைவையின் மூக்கில் மீன் ஒன்று புள்ளிகளாக காட்டப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் இடப்பக்கத்தில் அழகிய மான் ஒன்று உள்ளது. அதன் கீழே முதலை ஒன்றும் முதலைக்கு கீழ் நிலையில் வட்டவடிவ ஆமை ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. நீர்ப்பறவை, முதலை. ஆமை, மீன் ஆகியவையும் நெற்கதிரும் இத்தாய்த்தெய்வம் தமிழர்களின் வளமைக்கடவுளாக இருத்தல் வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது. இவ்வனைத்து அமைப்புகளும் மட்கலத்தின் மீது களிமண்ணைக்கொண்டு கோடு போல் உருவாக்கி இனைத்தபின் அக்கோட்டினை குச்சியின் துணையுடன் இடைவெளி விட்டு பள்ளமாக்கி புடைப்பாக அழகு நயத்துடன் ஆதிச்சநல்லூர் கைவினைஞர் படைத்துள்ள பாங்கு நம்மை வியக்கவைக்கிறது.
மான் இருப்பதும் வளமைக்கான ஆமை, மீன் நெற்கதிர் அமைப்பும் இத்தாய்த்தெய்வம் முந்து கொற்றவையாகத் தமிழர்களின் தெய்வமாக ஆதிச்சநல்லூர் மக்களால் வணங்கப்பட்டிருத்தல் வேண்டும். இத்தெய்வத்தை வணங்கிய குடும்பத்தில் இறந்தவர் ஒருவரின் முதுமக்கள் தாழிக்கருகில் இவ்வுருவத்தை செய்து படையல் பொருளாக வைத்து உள்ளனர்.
கொற்றவை வழிபாடு
சங்க காலத்திலும் அதன் தொடர்ச்சியான வைதீக சமயம் தமிழகத்தில் தோன்றிய பல்லவர் காலத்திலும் கொற்றவை வழிபாடு தமிழகத்தில் சிறந்து விளங்கியது. தமிழர்களின் தாய்த்தெய்வமான முந்து கொற்றவை சங்க காலத்தில் திணைக்கடவுளாக மாறிப் பின்னர் வைதிக சமயத்தில் துர்க்கை எனும் பெயரில் வழிபடப்படுகிறாள். இவளது வாகனமாக மான் இருந்துள்ளது. எனவே ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாய்த் தெய்வங்கள் முந்து கொற்றவையாக இருந்து பின்னர் திணைக்கடவுளான கொற்றவையாகவும் பல்லவர் காலத்தில் துர்க்கை எனவும் மாற்றம் பெற்று தமிழர்களின் தெய்வமாக இன்றளவும் வழிபடப்படுகிறாள். ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த தாய்த்தெய்வங்கள் தமிழகத்தின் கிடைக்கப்பெற்ற தாய்த் தெய்வங்களில் சிறப்பானதாகவும் முதன்மையானதாகவும் அமைந்துள்ளன.
வரலாற்று தகவல்கள்:
சு. இராசவேலு
வருகைப் பேராசிரியர்
வரலாற்றுத்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி