அன்றைய தமிழரின் ஆதிவழிபாடான "கல்லெடுத்தல்"

அன்றைய தமிழரின் ஆதிவழிபாடான "கல்லெடுத்தல்" எனும் வழிபாடே இன்றைய பெருங்கோவிற்களின் முன்னோடி எனலாம். ஆரம்பத்தில் வெறும்கல்லெழுப்பி, அதற்கடுத்து இறந்தோரின் பெயரையும், எதன்பொருட்டு இறந்தனரோ! அச்செய்கையையும் எழுத்துகளாய் பொறித்து, அதன்பின்னே இறந்தோரின் உருவத்தினை காட்சிபடுத்தியும்,
அவ்வீரர்களின் நினைவாய் உயர்பதுக்கை, வளாகம் அமைத்தும் நடுகற்கோவிலெழுப்பினர் இம்முறையின் கூறுகளை நாம் இன்றுள்ள பெருங்கோயில்களில் காணலாம். சிலப்பதிகாரத்தில், "வச்சிரக்கோட்டம்","தறுக்கோட்டம்" 
இன்னும் பல கோவில்களை கூட இலக்கியத்தில் காணலாம்.

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
என்று அக்கால கோவில்களின் அமைப்பை காணலாம். ஆதலால் நமக்கு கட்டடகலை ஒன்றும் புதிதல்ல என்பது விளங்கும்.

9ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 
மாறன்காரி எனும் பாண்டியஅமைச்சர் ஒருவன் நரசிங்கபெருமாளுக்கு குடைவரையொன்றை குடைவித்தான், முற்றுபெறும்முன் இறக்கவே அவன்தம்பி மாறன்எயினன் கோவிலை முழுமைபடுத்தி, நீர்த்தெளித்தான் எனும் தகவல் கல்வெட்டு வாயிலாக அறியலாம்.

கல்வெட்டின் பாடம்

1   கோமாறஞ்சடையற்கு உ
2    த்தர மந்த்ரி களக்குடி வை
3   யந்  மூவேந்தமங்கலப்
4   பேரரையன் ஆகிய மாறங்
5   காரி இக்கற்றளி  செய்து
6   நீர்த்தளியாதேய் ஸ்வர்க்காரோ
7   ஹணஞ் செய்த பின்னை அவ
8   னுக்கு அநுஜந் உத்தர
9   மந்த்ர பதமெய்தின பாண்டி
10  மங்கல விசைஅரையன்
11  ஆகிய மாறன்னெஇ
12  னன் முகமண்டபஞ்செ
13  ய்து நீர்த்தளித்தான்.

 இடைக்காலத்தில் கோவிலும் இறையும் வடமொழி ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறது. ஆகவே கோவிற் கட்டடப்பகுதிகளும் கட்டிடடக் கலைச்சொற்களும், வழிபாட்டுக் கலைச்சொற்களும் வடமொழியாயின. கோயில் ஆலயமாயிற்று. இலக்கியத்திலோ, கல்வெட்டிலோ காணப்படாத "கர்ப்பகிருகம்" என்ற சொல், தமிழகமெங்கும் வழக்கில் இருந்த உண்ணாழிகை, அகநாழிகை என்ற அழகிய சொற்களை வழக்கிலிருந்தே அகற்றிவிட்டது. இறைவனை சுற்றிவரும் திருச்சுற்று என்பது பிரகாரமாகவும், திருச்சுற்று கோவில்கள் பரிவாராலயங்களாகவும் மாறிவிட்டது. 
காலவெள்ளத்தால் அழிவுற்ற கோவிலை திருத்திகட்டிய "அழிவுதிருத்தல்" சீரனோத்தாரணமாயிற்று. நீர்தெளித்து கோவிலை தூய்மைப்படுத்திய "நீர்த்தெளிவிழா" கும்பாபிஷேகமாயிற்று. இவற்றைப்பற்றி கூறும் தமிழ்நூல்கள் அழிந்தோ, அழிக்கப்பட்டோவிட்டது(?), இதற்கு மாற்றாய் காசிபசில்பசாத்திரம், மயமதம் வடமொழிநூல்கள் இன்று நம் கட்டடக்கலையின் நூல்கள் ஆகிவிட்டது.

பூசை, விழா, கொட்டு, ஆட்டு, பாட்டு என அனைத்திலும் வடமொழிவாடை, தமிழ் மணத்தை அமுக்கியேவிட்டது. 

அறிந்தோ, அறியாமலோ நாம் நீண்ட நாட்களாய் வடமொழியை பயன்படுத்திவிட்டோம். நம் வழக்கில் வந்த ஓர் மொழியை வெறுக்க கூடாது. ஆனால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை, அவற்றின் நலதீங்குககளை நாம்தான் சீர்தூக்கி பார்க்க வேண்டும். வடமொழி எழுத்துகள் பெருகி நம்மொழியும் மணிப்பிரவளம் என்ற பொல்லாநடைக்கு ஆட்படக்கூடாது. 

ஆகவே  பெரியகோவில்களில்  நீர்த்தெளிவிழா சிறப்பாய் நடக்கவேண்டும் என்பதே அனைவரின் அவா!!!!


நன்றி : திருச்சி பார்த்தி