பாலஸ்தினியரும் இலங்கைத் தமிழர்களும் ஒரு பன்முகப் பார்வை..!

பாலஸ்தினியரும் இலங்கைத் தமிழர்களும் ஒரு பன்முகப் பார்வை..!


மத்திய கிழக்கில் பாலஸ்தீனியரும் தென்கிழக்கு ஆசியாவில் இலங்கைத் தமிழர்களும் சந்தர்ப்பவசத்தால் தமது நல்வாழ்க்கையை இழந்து விட்ட இரு இனங்கள் வந்தவரை வாழ வைத்து அகதிகளாகிவிட்ட இந்த இரு இனங்களும் தம்மைத் தாமே ஆட்சி செய்த இனங்களே. இவர்கள் இன்று உலகம் முழுவதும் அகதிகளாக இருக்கின்றார்கள் என்றால் பாலஸ்தீனியர்களும் தீர்க்கதரிசனமற்ற அரசியற்பாதையில் தவழ்ந்து வந்ததே காரணம். ஆடன் ( Auden ) என்பவர் ஒரு பாலஸ்தீன கவிஞர் பாலஸ்தீன் மக்களை அவர் பாடுகின்றார்.


"அன்றொருநாள் 

எமக்கொரு நாடிருந்தது. 

அதை நியாயமானதென 

நாம் எண்ணினோம் 
உலகப் படத்தைப் 
பார்த்திடுவாய் 

அதிலே தெரிந்திடுவாய் 

அன்புக்குரியவனே ! 

அங்கு நாம் இப்போது போகமுடியாது" 



" Once we had a country and we thought it fair, Look in the atlas and you find it there. Wecannot go there now, my dear we cannot go there now ” 

   
   இந்த நிலைமை இன்று தமிழ் மக்களுக்குமே. கோட்டையில் தமிழ் அரசர்கள் ஆட்சி செய்ததுண்டு. கண்டியில் கடைசி அரசன் தமிழ் மகன் என்ற பெருமையையும் எமக்குண்டு. அத்துடன் யாழ்ப்பாணமும் வன்னியும் இறையாண்மைமிக்க அரசுகளாக இருந்தன, என்பதற்கு ஆதாரங்களுமுண்டு. 


பாதியான் என்ற சீன யாத்திரிகன் இலங்கைக்கு வந்த போது புத்தளத்தில் அழகக்கோனார் என்ற தமிழ்ப்பிரதானி அங்கு அரசாண்ட தாகக் குறிப்பிட்டடுள்ளான். அவனுக்கு ஒரு கண் குருடென்றும் அவன் எழுதி வைத்துள்ளான். சுருங்கச் சொன்னால் இறைமையை இழந்து விட்ட எமது இனமும் தனது ஒற்றைக்கண் ஒன்றினை இழந்துவிட்ட நிலையிலேயே இருக்கின்றது. இந்த இரு இனங்களும் கடந்த காலத்தில் விட்ட பிழைகள் இறந்தகாலமாகவே இருக்க வேண்டியவை. எதிர்காலத்திற்கு வழிகாட்ட வல்லமை அல்ல. 


ஹிட்லரின் நாஸிஸ ஆட்சிக்கு முன்பே பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இன்று பாலஸ்தீனத்தில் இருக்கும் பல குடியிருப்புக்கள் பாலஸ்தீனியர்களால் யூதர்கட்கு விற்கப்பட்டவை. பணத்தாசை கொண்டே இந்த நிலங்கள் யூதர்கட்கு விற்கப்பட்டவை. ஆயினும் ஹிட்லரின் கெடுபிடியின் பின்பே லட்சக்கணக்கானோர் பாலஸ் தீனத்தில் நுழைந்தார்கள் . பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றப் புள்ளிவிபரம் பின்வருமாறு 


ஆண்டு    பாலஸ்தீனத்தில்                                          யூதர்கள்


  1920             5514  பேர்


 1925              33801  பேர்


 1934              42359  பேர்


 1935              61854  பேர்


இக்கால கட்டத்தில் 1366518 ஆக இருந்தது. இருப்பினும் கட்டாயக் குடியேற்றத்தின் மூலம் யூதர்கள் நாட்டைப் பிடித்தது மட்டுமன்றி பாலஸ்தீனியர்களை அகதிகளாக்கியும் விட்டனர். இன்று யூதர்களின் குடித்தொகை 15 லட்சத்தைக் கடந்து விட்டது. பாலஸ்தீனியர்களோ மேற்குலக வஞ்சனையால் அகதிகளாகிப் பல நாடுகளுக்கும் சென்று அகதிகள் முகாமிலேயே படுகொலை செய்யப்படுகின்றனர். 


இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம். டொனமூர் அரசியற் திட்டம் 1931ல் கொண்டுவரப்பட்ட போதே இத்தாயகம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் 250 சிங்கள மக்களே கிழக்கிலே இருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மை மக்கள் ஒரு சிலரே இருந்தனர். கிழக்கு மாகாணத்தின் ஒருபகுதியான அம்பாறையில் இக்குடியேற்றம் எவ்வாறு வேகமாகப் பரவியது?


 இதன் புள்ளி விபரம் இதோ : 


                             1971      1981 அதிகரிப்பு வீதம்


சிங்களவர்      82280  146371      77.8%


தமிழ்பேசும் 
முஸ்லிம்கள்  127308  161754     27%


தமிழர்கள்       62296     78315      25%
 

      1947ம் ஆண்டில் 1984 பேராக இருந்த சிங்கள மக்கள் இன்று குடித் தொகையில் முஸ்லிம் குடிசனத் தொகைக்குச் சமமாக வளர்ந்து தமிழ் மக்களை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியுள்ளார்கள். அம்பாறையை விட்டு திருகோணமலையை உதாரணத்திற்கு எடுப்போம். 


அங்கு சிங்கள மக்கள் குடியேறிய போது அவர்களிடம் அதிக பணம் பெற்றுக் கொண்டு தமிழ் மக்கள் தமது வீடுகளை அவர்கட்கு விற்றுள்ளார்கள். இது பாலஸ்தீன மக்கள் பணத்திற்காக தமது நிலங்களை யூதர்கட்கு விற்றதையே நினைவூட்டும். 


வட்டமேசை மகாநாடு கூட்டி ஏமாற்றப்பட்டவர்களில் பாலஸ்தீனியரும் தமிழர்களும் முக்கியமானவர்கள், யூதர்களின் குடிசனம் அதிகரிக்கவே 1936ல் இனக் கலவரம் ஆரம்பமானது. பாலஸ்தீனத்திலே பல யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படுகொலைகள் நடந்த போது பாலஸ் தீனத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர் மப்டி (mufti) இக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வர லண்டனில் 1938ம் ஆண்டு ஒரு வட்ட மேசை மாநாடு கூடியது. இதில் பாலஸ்தீன நாடு பிரிட்டிஸ், யூத, பாலஸ்தீனம் என்ற மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட யோசனை சொல்லப்பட்டது. ஆயினும் அரபு உலகத்தின் செல்வாக்கு அதை முறியடித்தது. 


1982ம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர ஒரு வட்டமேசை மகாநாடு கொழும்பில் கூடியது அது முடிவு எதுவுமற்ற கிழவிகள் மகாநாடாக கலைந்தது. பலகட்சிகளை அமைத்து ஆளுக்கொரு மேடை அமைத்தவர்களிலும் இரு இனங்களும் சளைத்தவர்களல்ல. 


1930ல் பாலஸ்தீனத்தில் ஆறு கட்சிகள் இருந்தன. அதில் முக்கியமானது மப்டிக் கட்சி (Mufti - Party) இதன் தலைவரே மப்டி. இக்கட்சிகள் மூர்க்கத்தனமாக ஒன்றையொன்று எதிர்த்தன. மப்டி 1936 இனக்கலவரத்தில் தலைமறைவானது. தேசிய பாதுகாப்புக்கட்சி (National Defence Party) பலம் பெற்றது. இதன் தலைவர் ரகேப்பே நாசாசிபி (Raghep Bey Nashashibi) இவர் ஒரு மிதவாதிகாலத்தைக் கட்டுவதில் நியாயவாதிகளை மிஞ்சியவர். ஜெருசலேசத்தின் மேயராக பதினைந்து வருடம் பதவி வகித்தவர். இவரின் ஒற்றமையின்மை யூதர்களின் ஆக்கிரமிப்புக் குடியேற்றத்தை வளர்ப்பதற்கு காரணமானது. 


இலங்கையின் பெரும்பான்மை திட்டமிட்ட குடியேற்ற காலத்தில் இலங்கைத் தமிழர்கள் பல கட்சிகளாகப் பிளவுபட்டு ஆளுக்கொரு கொடி பிடித்தனர் என்பதனை மறுக்க முடியாது. பலஸ்தீனத்தில் "Jaffa” என்று ஒரு இடம் இருக்கிறது. இந்த இடத்திற்கே உலகிலுள்ள யூதர்கள் எல்லாம் முதலில் அகதிகளாக வந்தார்கள். வந்தவர்கள் எல்லோருமே திறமைசாலிகள். இப்பொழுது அவர்களின் பிற்சந்ததியினர் சிலர் மொசாட்டுக்களாக Jaffnaவில் இருப்பதாக சொல்லப்டுகிறது. Jaffa வில் இருந்து jaffnaவிற்கு இவர்களின் வருகை நல்ல மாற்றமல்லவென அரசியல் அவதானிகள் கருதுகின்றார்கள்.


Reference book : தமிழும் தமிழரும்