முகப்பு வரலாறு தமிழீழம் வரலாறு ஆதி காலத்தில் தமிழர் சிங்களர் யாழ்ப்பாணத்தில் தமிழர் அரசு முடிவுற்ற வரலாறு..!
யாழ்ப்பாணத்தில் தமிழர் அரசு முடிவுற்ற வரலாறு..!
யாழ்ப்பாண அரசன் சங்கிலி செகராசசேகரனின் மறைவுக்குப் பின் புவிராசபண்டாரம் என்பவன் "செகராசசேகரன்" என்ற பட்டப் பெயருடன் ஆட்சி புரிந்தான். புவிராச பண்டாரமும் போர்த்துக்கேயருடன் போர் புரிந்தான். போரில் இவன் இறக்க, போர்த்துக்கேயரின் துணையுடன் பெரியபிள்ளை என்பவன் பரராசசேகரன் என்னும் பட்டப்பெயருடன் அரசு புரிந்தான். போர்த்துக்கேயரின் போர் தொடர்ந்தது. பல அரசர்களுக்குப் பின் "எதிர்மன்னசிங்கன்" என்பவன் அரசாட்சி புரிந்தான்.
இவன் போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாக விளங்கினான். அரச அலுவல்களில் அவன் பங்கு கொள்ளவில்லை. தமிழ்த் தலைவர்கள் மனம் வருந்தினர்.
பல சாதியினரும் ஒன்று சேர்ந்து படை திரட்டினர். தஞ்சை மன்னன் அச்சுதப்ப நாயக்கனிடம் உதவி கோரினர். கண்டி மன்னனிடமும் உதவி கேட்டனர். இதனை அறிந்த எதிர்மன்ன சிங்கன் மன்னாரில் உள்ள போர்த்துக்கேயத் தலைவனுக்குத் தகவல் அனுப்பினான். தஞ்சை மன்னன் படையைப் போர்ததுக் கேயர் படை முறியடித்தது.
எதிர்மன்ன சிங்கன் இறக்கும் போது அவன் மகனுக்கு மூன்று வயது. எனவே அரசனின் தம்பி "அரசகேசரிபண்டாரம்" அரச பாதுகாவலனாகப் பொறுப்பேற்றான். அரச குடும்பத்துள் ஒருவனான "சங்கிலிகுமாரன்" அரசகேசரி பண்டாரத்தைக் கொன்று தானே அரச பாதுகாவலனானான். போர்த்துக்கேயர் இதனை எதிர்த்தனர். அவன் அவர்களுக்கு வேண்டிய வரியைக் கொடுத்தான்.
முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததினால் போர்த்துக்கேயர் அவனை நெருங்கினர். சில காலம் ஊர் காவற்றுறையில் ஒளிந்திருந்தான். இவன் தேவியர் தஞ்சை மன்னனுக்கு முறையிட்டனர்.
சங்கிலி குமாரன் தஞ்சை மன்னனினது படையின் உதவி கொண்டு மீண்டும் அரசைக் கைப்பற்றினான்.
தமிழ் மக்கள் சங்கிலி குமாரனின் ஆட்சியில் திருப்தி கொள்ளவில்லை. அத்துடன் போர்த்துக்கேயரையும் மதிக்கவில்லை. போர்த்துக் கேயருக்கு மாறாகக் கண்டி அரசனுக்கு உதவியளித்தான். அத்துடன் ஒல்லாந்தருடன் தொடர்பு கொண்டான்.
மிகவும் சீற்றம் கொண்ட போர்த்துக்கேயர், "பிலிப்த ஒலிவீரா" என்ற தளபதியின் கீழ், பெரும் படையை அனுப்பினர். சங்கிலியும் படை திரட்டினான். பல நாட்களாகப் பெரும் போர் நிகழ்ந்தது. சங்கிலியின் படை தோற்கடிக்கப்பட்டது. சங்கிலி பிடிபட்டான். சங்கிலி கோவாவிற்கு அனுப்பப்பட்டான். யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் வசமானது. தமிழ் அரசர் பரம்பரையும் முடிவுற்றது.