எல்லாளன் இறந்த பின்பு இலங்கையில் நடந்தது என்ன?? அறியாத வரலாறு..!

எல்லாளன் இறந்த பின்பு இலங்கையில் நடந்தது  என்ன?? அறியாத வரலாறு..!


மாமன்னன் எல்லாளனின் 44 வருட நீதிநெறிதவறாத ஆட்சி, கி.மு.101 இல் முற்றுப்பெற, சிங்கள ஆட்சி அனுராதபுரத்தில் அரசோச்சத்தொடங்கியது. காமினியைத் தொடர்ந்து கி.மு.44 வரை அனுராதபுரசிம்மாசனத்தில் சிங்கள மன்னர்கள் அமர்ந்திருந்தனர். வட்டகாமினி என்ற மன்னன் காலத்தில் அனுராதபுரத்தின் மீது மீண்டுமொரு தமிழர் படையெடுப்பு நிகழ்ந்தது. வட்டகாமினி அனுராதபுரத்தில் ஆட்சி செய்தபோது உருகுணையில் தீசன் என்ற குறு நில மன்னன் ஆதிக்கம் பெற்றிருந்தான் எனத் தெரிகிறது, அவன் அனுராதபுர மன்னனுக்கு எதிராகக் ஆட்சியுரிமை வேண்டிக் கலகம் செய்ததாகத் தெரிகின்றது. 


அதேவேளை உத்தரதேசத்தைச் சேர்ந்த ஏழு தமிழ்க் குறுநில மன்னர்கள் மாந்தை வழியாக அனுராதபுரத்தை நோக்கிப் படையெடுத்தனர். இந்த ஏழு தமிழர்களைப் பாண்டியர்களாக வரலாற்றாசிரியர் சிலர் குறிப்பர், மகாவம்சத்தில் எவ்விடத்திலும் இவர்களைப் பாண்டியர்களாகக் குறிக்கவில்லை. இலங்கையின் குறுநில மன்னர்கள் அனுராதபுர ஆட்சியை ஏற்காது கிளர்ச்சி செய்கின்ற நிகழ்ச்சிகள் இலங்கை வரலாற்றில் புதியனவன்று, தென்னிலங்கையில் தீசன் கிளர்ந்தெழுந்த போது வடக்கே ஏழு குறு நிலத்தமிழ்மன்னர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவர்களோடு உருகுணைத்தீசனும் சேர்ந்து கொண்டானெனத் தெரிகின்றது. இவர்கள் எண்மரும் சேர்ந்து ஆட்சியைத்தம்மிடம் ஒப்படைத்து விடுமாறு வட்டகாமினிக்கு ஒலையனுப்பினர். 



வட்டகாமினி, உருகுணைத் தீசனோடு சமாதானம் செய்து கொண்டான். ஏழு தமிழ்க் குறுநில மன்னர்களின் படைகளைத் தடுத்து நிறுத்தி வெற்றி கொள்ளில், அனுராதபுரஆட்சியைத் தீசனிடம் ஒப்படைப்பதாக ஒப்புக் கொண்டான். இதனையேற்ற தீசன், தமிழ்ப்படையோடு மோதி தோல்வியடைய நேர்ந்தது. உருகுணைப் படையை வெற்றி கொண்ட ஏழு தமிழ்க்குறுநில மன்னரின் படை அனுராதபுரத்தை நோக்கி விரைந்தது. கொலம்பலாகா என்றவிடத்தில் இருபடைகளும் சந்தித்து மோதிக் கொண்டன. வட்டகாமினி தோல்வியைத் தழுவி, பின்வாங்கி அரண்மனைக் கோடித்தன்னிரு மனைவியரையும் புதல்வனையும் ஒரு தேரில் ஏற்றிக் கொண்டு வேகமாகத் தப்பியோடினான். தமிழர்படை துரத்தியதால் தேரின் வேகத்தைக் கூட்டும்பொருட்டுப் பாரத்தைக் குறைப்பதற்காக, அவன் தனது இரண்டாவது மனைவி சோமாதேவியைத் தேரினின்றும் இறக்கி விட்டுத்தப்பி ஓடிவிட நேர்ந்தது. 


ஏழு குறு நிலத்தமிழ் மன்னரில் ஒருவன் சோமாதேவியைத் தன்னுடைமையாக்கிக் கொண்டான். மற்றொருவன் புத்தரின் ஐயக்கலத்தைத் தன தாக்கி கொண்டான். இந்த இருவரும் தமது பிரதேசங்களுக்கு மீண்டுசென்றனர் எனவும், மிகுதி ஐந்து தமிழரும் அனுராதபுரத்தை 14 ஆண்டுகளும் 7 மாதங்களும் அரசாண்டனர் எனவும் அறியக்கிடைக்கின்றது. இந்த ஐந்து தமிழ் மன்னர்களாக புலகத்தன், பாகியன், பனையமாறன், பிணையமாறன், தாடிகன் என்போர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் அனுராதபுரத்திலிருந்து அரசாண்டனர் என அறியப்படுகின்றது. இவர்கள் ஒருவரையொருவர் கொன்றே ஆட்சிபுரிந்தனரென 15 மகாவம்சம் குறிப்பிடுகின்ற போதிலும், இக்குறுநில மன்னர்கள் முறைவைத்து தமக்குள் அனுராதபுர சிம்மாசனத்தை அலங்கரித்தனரெனக் கொள்ளலாம். 


தாடிகன் அனுராதபுரத்தை ஆண்டபோது வட்டகாமினி மீண்டும் அனுராதபுரத்தைக் கைப்பற்றி மன்னனானான். தமிழ்க்குறுநில மன்னனால் கவர்ந்து செல்லப்பட்ட சோமாதேவியை மீளப்பெற்றுத் தனது ராணியாக்கிக் கொண்டான். வட்டகாமினியின் ஆட்சி கி .மு.17 வரை நிலவியது. அதன்பின்னர் கி.பி.9 ஆம் ஆண்டுவரை சிங்கள ஆட்சி இலங்கையில் நிலவியதாக அறிய முடிகிறது. சோர நாகன் என்ற மன்னன் ஆட்சியிலிருந்த போது, அவனது மனைவியான அனுலாதேவியின் விபரீதக்காம ஆசையால் ஆட்சி அதிகாரம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. 


அனுலாதேவி தனது கணவனை நஞ்சூட்டிக் கொன்றபின், திசா என்பவனை மணந்து அவனை அரசனாக்கினாள். அதன் பின்னர் சிவா, வாதுகன், தீசன், நீலியன் என ஒவ்வொருவராக மணந்து மன்னனாக்கிப் பின்னர் நஞ்சூட்டிக் கொன்று இறுதியில் தானே நாட்டின் தலைமையை ஏற்றுக்கொண்டாள். அவளது ஆசைக்கும் விருப்பத்திற்கும் 32 அரண்மனைக்காவலர் உட்பட்டனரென வரலாறு கூறுகிறது. வாதுகன், நீலியன் ஆகிய இருவர் தமிழராவர். 
இவர்கள் அனுலாவுடன் அனுராதபுரச் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்துள்ளனர். 


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய வரலாற்றுக் காலத்தினை உள்ளடக்கிய 250 ஆண்டுகளில் மூன்றிலொரு பகுதியில் தமிழரின் ஆட்சி நடைபெற்றதைப் பாளிநூல்கள் கூறுகின்றன எனலாம்.