முகப்பு வரலாறு தமிழக வரலாறு மூவேந்தர் வரலாறு பாண்டிய சகோதரர்களின் வாரிசு உரிமை போர் - சரித்திரத்தை தலைகீழாக மாற்றிய வரலாறு..!
பாண்டிய சகோதரர்களின் வாரிசு உரிமை போர் - சரித்திரத்தை தலைகீழாக மாற்றிய வரலாறு..!
மாலிக் கபூரின் படை மதுரையின் மீது படையெடுத்து வரும்போது, முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் பொற்கால ஆட்சி முடிந்திருந்தது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 40 ஆண்டு கால ஆட்சியில், அவன் 1200 கோடி பொற்காசுகளை கஜானாவில் சேர்த்து வைத்ததாக மார்க்கோ போலோவும், அப்துல்லா வாசஃப் எனும் சரித்திர ஆசிரியரும் தெரிவிக்கிறார்கள். முதலாம் மாறவர்மன் குலசேகரனின் ஆட்சியின் இறுதியிலேயே தமிழகத்திற்கு சோதனை காலம் ஆரம்பமாகி விட்டது.
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய னுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் பெயர் மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்தேவன் , மற்றொருவன் பெயர் மூன்றாம் சடையவர்ம தேவர் வீரபாண்டியன். இதில் வீரபாண்டியன் தாதிக்குப் பிறந்தவன். வீரபாண்டியன் திறமையான வனாக இருந்ததால் அவனை பட்டத்து 'அரசனாக குலசேகரன் நியமனம் செய்தார்' இதனால் கோபம் கொண்ட சுந்தரபாண்டியன், தன் தந்தை யாரான மாறவர்மன் குலசேகர பாண்டியனைக் கொன்றுவிட்டான். தந்தையைக் கொன்ற காரணத்திற்காக சுந்தர பாண்டியனை, வீரபாண்டியன் சண்டையிட்டு அவனை மதுரையை விட்டே துரத்திவிட்டான்.
மதுரையிலிருந்து தப்பியோடிய சுந்தரபாண்டியன் டெல்லியில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினான். அப்போது அலாவுதீன் கில்ஜியின் ராஜபிரதி நிதியும், தளபதியுமான மாலிக் கபூர் தென்னிந்தியாவை ஆண்டு கொண்டிருந்த இந்து ராஜ்ஜியங்களின் மீது படையெடுத்து வென்று கொண்டிருந்த சமயம்தான் அது. மாலிக் கபூருக்கு தமிழகத்தின் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என்றும், சுந்தரபாண்டியனுக்கு ஆதரவாகத்தான், அவன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தான் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
ஆனால், மாலிக் கபூர் தமிழகத்திற்குள் வருவதற்குள் ஹொய்சாள வள்ளால தேவனின் முயற்சியால் பாண்டிய சகோதரர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு, வீரபாண்டியன் சோழ நாட்டில் வீரத் தலவாய்புரத்தை தலைநகராகக் கொண்டு, ஆட்சி செய்து வந்தான்; சுந்தரபாண்டியன் மதுரையிலிருந்து ஆட்சி புரிந்து வந்தான்.
மாலிக் கபூரிடம் தோற்ற வள்ளால தேவன், அவனது கட்டளையின் பேரில், மாலிக்கபூரின் படை பாண்டியர்களின் ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்கு வழிகாட்டினான். வீரபாண்டியன் நேரடியாகப் போர் புரியாமல், கோட்டையைப் பூட்டிக்கொண்டு, சுல்தான் படைகளின் மீது ஆங்காங்கு திடீர் தாக்குதல்கள் புரிந்தான். இதனால் மாலிக்கபூர் அதிக வெறுப்புக்கு ஆளானான். வீரத்தலவாய்புரம் சுல்தான் படையினரிடம் வீழ்ந்தது. ஆனால் வீரபாண்டியன் தப்பித்து ஓடிவிட்டான். மாலிக்கபூர் தன் படையை காஞ்சிபுரத்திற்குத் திருப்பி, அங்குள்ள கோயில்களையெல்லாம் தரைமட்டமாக ஆக்கினான். சிதம்பரமும், மாலிக்கபூர் படையின் தாக்குதலுக்கு உள்ளானது. அங்குள்ள கோயில்களில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டன. செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன, பின்னர் மாலிக் கபூர் தன் கவனத்தை மதுரைப்பக்கம் திருப்பினான்.
வீரபாண்டியன், சுந்தரபாண்டியனுடன் சேர்ந்து விட்டான். இப்போது சகோதரர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு, சுல்தான் பயனோ மதுரை படையை எதிர்க்கத் தீர்மானித்தனர். சுந்தரபாண்டியன் படையைத் திரட்டிக்கொண்டு மாலிக்கபூரை எதிர் நோக்கி செல்ல தீர்மானித்தான். ஆனால் வீரபாண்டியனோ மதுரையிலிருந்து கொண்டே தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட என்று வலியுறுத்தினான். முடிவில், சுந்தரபாண்டியன் சுல்தான் படையை எதிர்நோக்கிச் செல்ல வேண்டும், வீரபாண்டிய மதுரையில் இருந்து கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சகோதரர்கள் இருவரும் முடிவுக்கு வந்தனர். ஆனால் இம்முறையும் நிலைமை மாலிக் கபூருக்குச் சாதகமாகவே இருந்தது.
மேலைத் திருக்காட்டுப்பள்ளி வரை, சுந்தரபாண்டியனின் படை வெற்றிகரமாக வந்தது. கோடை காலமாக இருந்ததால் போர் வீரர்களின் தண்ணீர்த் தேவை அதிகரித்தது. துரதிர்ஷ்ட வசமாக வழக்கத்துக்கு மாறாக காவிரி நதியில் தண்ணீர் இல்லை. நிலைமையை முன்கூட்டியே அறிந்த மாலிக் கபூர் படையினர் தண்ணீரைப் பக்குவமாகப் பயன்படுத்தினர். தண்ணீரைத் தேடி சுந்தரபாண்டியனின் படை, இலக்கை விட்டு மேற்குப் பக்கமாக காவிரிக் கரையோரம் சென்றது. இதனால் பாண்டியப் படை களின் வேகமும் குறைந்தது. மாலிக்கபூரின் படை சுந்தர பாண்டியனின் படையை திருச்சிராப்பள்ளியில் எதிர்கொண்டது. ஏற்கனவே சோர்வுக்கும் உளைச்சலுக்கும் ஆளான பாண்டியப் படையினரால், சுல்தானியப் படையை எதிர்கொள்ள முடியவில்லை. பாண்டியர் படை வீழ்ந்தது. சுந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டான். சுந்தரபாண்டியனைத் தவிர மற்ற படைவீரர்கள் மற்றும் தளபதிகளின் தலை துண்டிக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளியிலும் திருவரங்கத்திலும் உள்ள கோயில்கள் சூறையாடப்பட்டன. அங்குள்ள செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் திருவரங்க கோயிலிலிருந்து ரெங்க நாதர் மூலவர் சிலையை மாலிக் கபூர் படை தூக்கிச் சென்றது.
சுந்தரபாண்டியனின் படை நிர்மூலமானதால், மாலிக்கபூர் பெரும்படையை எதிர்நோக்க முடியும் என்று மதுரையிலிருந்த வீரபாண்டியனுக்குத் தோன்றவில்லை. எனவே அவன் பெண்களையும் குழந்தைகளையும் மதுரையிலிருந்து மலை தேசத்திற்கு பாதுகாப்பாக அனுப்பும் முயற்சியில் ஈடுபட எதிர்பார்த்தது போல் மாலிக்கபூரின் படை மதுரையை முற்றுகையிட்டது. ஆனால் மாலிக் கபூர் எதிர்பார்க்காத விதமாக, சுந்தர பாண்டியனின் மாமா விக்கிரம பாண்டியன் ஒரு பெரும் படைகளைக் கொண்டு மாலிக் கபூர் படையினர் மீது திடீர் தாக்குதல்கள் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தினான். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மாலிக் கபூரால் முற்றுகையைத் தொடர முடியவில்லை. அதனால் வீரபாண்டியனுடன் மாலிக் கபூர் ஓர் ஒப்புதலுக்கு வந்தான். ஒப்பந்தத்தின்படி,
1. மதுரை மீனாட்சியம்மன் கோயில் இடிக்கப்படாமல் இருக்க, அக்கோயிலுக்குச் சொந்தமான 96000 மொடக்கு பொற்காசுகளையும், விலைமதிக்க முடியாத நவரத்தினங்களையும் சுல்தானுக்குத் தரவேண்டும்.
2 . மதுரையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களில் பாதியை சுல்தானியப் படையினருக்கு கொடுக்க வேண்டும்.
3. பாண்டியர்கள் வசமிருக்கும் அனைத்து யானைகளும் குதிரைகளும் சுல்தான் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இதற்குப் பிரதிபலனாக மாலிக்கபூர் வசம் சிறைப்படுத்தப் பட்டிருந்த சுந்தரபாண்டியன் விடுதலை செய்யப்படுவான். மேலும் மதுரை கோயிலில் உள்ள மீனாட்சி அம்மனுக்கும் சொக்கனாதருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை மாலிக் கபூர் அளித்தான்.
மாலிக் கபூர் மதுரை மீது படையெடுப்பு நிகழ்த்திய வருடம் கி.பி.1311ம் ஆண்டு. ஏகப்பட்ட செல்வங்களுடனும், 612 யானைகளுடனும், 20,000 குதிரைகளுடனும் மாலிக் கபூர் படை மதுரையை விட்டு டெல்லிக்குப் புறப்பட்டது.
டெல்லிக்குச் சென்ற மாலிக்கபூரின் படையினர் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களையெல்லாம் அலாவுதீன் கில்ஜியின் பார்வைக்குப் பரப்பி வைத்தனர். அலாவுதீன் கில்ஜி உன்னுடைய தளபதியான மாலிக் கபூருக்கு நிறைய பரிசுகள் காடுத்து கவுரவித்தான். அரசாங்கத்தைச் சேர்ந்த மற்ற உயிர்களுக்கு (பிரபுக்களுக்கு) கொள்ளையடித்தப் பொருட்கள் பங்கிட்டு கொடுக்கப்பட்டன.
இந்த படையெடுப்பிற்கு பின்பு மேலும் பல முஸ்லிம்கள் படையெடுப்புகள் மதுரையில் நிகழ்ந்ததால், வலுவற்ற பாண்டிய பேரரசால் சமாளிக்க முடியவில்லை. மதுரையானது டில்லி சுல்தான் கீழ் வந்தது. இதனால் மூவேந்தர்களின் சரித்திரமே மாறிவிட்டது.