பாண்டியர் காலத்தில் இருந்த கல்விச் சாலைகளும் இராணுவ பயிற்சிகளும்...! - அறியப்படாத தகவல்

பாண்டியர் காலத்தில் இருந்த கல்விச் சாலைகளும் இராணுவ பயிற்சிகளும்...! - அறியப்படாத தகவல்
    
அக்காலக் கல்வி பெரும்பாலும் குருகுல முறையிலேயே நடைபெற்றது. அவரவர்கள் குடும்ப வழக்கப்படி கல்வி கற்பிக்கப்பட்டது. புரோகிதம், ஜோதிடசாஸ்திரம், மருத்துவம் போன்ற துறைகளில் பல தலைமுறைகளாக ஈடுபட்டிருந்த குடும்பத்தினரே அவற்றைக் கற்றனர். அதுபோன்று, தொழிற்கல்வியும் குடும்பக் கல்வியாக அன்றாட  நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டது. கட்டிடம் கட்டுதல், தச்சுவேலை, நெசவு, இரும்பு வேலை, நகைகள் செய்தல், சிற்பம், ஓவியம் போன்ற தொழில் நுணுக்கங்களெல்லாம் பரம்பரையாகக் குடும்பத் தொழிலாகக் கற்கப்பட்டுச் செய்யப்பட்டு வந்தன. ஒவ்வொரு வகுப்பினர் ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டு அதற்குரிய நுட்பங்களை நன்கு கற்றுத் தேர்ந்தனர். எடுத்துக்காட்டாக ஸ்தபதி என்று வழங்கும் கோவில்  கட்டட வல்லுநர்கள் ஆகம் வாஸ்து சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்தவராய் இருந்தனர். 


வைத்தியர் அல்லது மருத்துவர் ஆயுர்வேதம், சித்த வைத்தியம் போன்ற துறைகளில் நல்ல அனுபவமிக்கோராய்த்  திகழ்ந்தனர். நடன ஆசிரியர்கள் நாட்டிய சாஸ்திரங்கள் கற்றறிந்தார். அதற்குரிய நூல்களை வைத்துப் போற்றி வந்தனர். எல்லோரும் எல்லாக் கல்வியும் கற்கலாம் என்ற இக்காலக் கருத்து அக்காலத்தில் நிலவியதாகக் கருதமுடியாது. பரம்பரைத் தொழிலாகவே எல்லாம் நடைபெற்று வந்ததனால் பொதுப்பள்ளிகள் வைத்துத் தொழில்படிப்பைக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 


அறுபத்து நான்குகலைகள்,  பதினான்கு அறிவுத்துறைகளைப் பற்றிக் குறிப்புகள் கிடைப்பதைக் கொண்டு அக்கால மக்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினர் என்பது விளங்கும். அரசாங்கப் பணிகளை விரும்பியவர்கள் அதற்குத்தக்க கல்வி கற்றிருக்க வேண்டியது அவசியமாயிற்று. 


தளவாய்புரச்செப்பேடு வழங்கும்போது உடனிருந்த கணக்கர் கணக்கு நூல்களைப் பயின்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தணர்கள் தோற்றுவித்த கல்விச்சாலைகளைப் பற்றிப் பல குறிப்புகள் கிடைத்துள்ளன. அவர்கள் நடத்திய வடமொழி கல்லூரிகள் 'கடிகை' , 'வித்யாஸ்தானம்' அல்லது 'சாலை' என்று வழங்கப்பட்டன. இவ்வகைக் கல்லூரிகள் பல்லவர் காலத்தில் காஞ்சி, பாகூர் போன்ற ஊர்களில் இயங்கி வந்தன. சோழர் காலத்தில் திருபுவனை, எண்ணாயிரம், திருமுக்கூடல் போன்ற ஊர்களில் இயங்கிய கல்லூரிகளைப் பற்றியும் அவற்றில் கற்பிக்கப்பட்ட பாடங்களைப்பற்றியும் அறிகிறோம். இவற்றில் கல்வி கற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் அளிக்கப்பட்டன. 


ஆசிரியர்களுக்குப் 'பட்டவிருத்தி' என்றும் பாடசாலைகளுக்குச் 'சாலா போகம்' என்றும் நிலங்களை தானமாக அரசர்களும் செல்வந்தர்களும் ஈந்தனர். இதுபோன்ற கல்விச்சாலைகள் பாண்டிய நாட்டிலும் இருந்தன . அவற்றைப் பற்றிய குறிப்புகளை இங்குக் காண்போம். கன்னியா குமரியில் ஸ்ரீவல்லப் பெருஞ்சாலையும்,  ஆய்நாட்டிலுள்ள பார்த்திபசேகரபுரத்தில் ஒரு சாலையும், திருவனந்தபுரத்தின் காந்தளூர்ச் சாலையும் இயங்கியதைப் பற்றிக் குறிப்புகள் கிடைத்துள்ளன. இவற்றுள் 'காந்தளூர்ச்சாலை' வரலாற்றுச் சிறப்புப் பெற்றது. இராசராசசோழன் ஆய் நாட்டைக் கைப்பற்றிய பிறகு      இச்சாலையையும் அங்குள்ள மறையவர்க்குச் சாலா போகமாக நிலதானம் அளித்தான். 'காந்தளூர்ச்சாலை கலமறுத் தருளிய ' என்ற சொற்றொடரை விருதுவாக ஏற்றான். இக்கல்லூரியில் மறையவர் ஆயிரத்தெண்மர் தங்கிக் கல்வி கற்றனர். இக்கல்லூரியில் இயங்கிய கல்வி முறையையும் சட்டதிட்டங்களையும் பின்பற்றியே பார்த்திவசேகரபுரத்தில் ஒரு சாலையை ஆய்மன்னன் கருநந்தடக்கன் கி.பி.866 -ல் தொடங்கினான் என்று அவனது பார்த்திபசேகரபுரச் சாசனம் கூறுகின்றது.

அவ்வரசன் முன்சிறை என்ற ஊர்ச்சபையோரிடம் நிலங்களை விலைக்கு வாங்கி அங்கு விஷ்ணு கோயில் ஒன்று அமைத்து அக்குடியிருப்புக்குப் பார்த்திவசேகரபுரம் என்று பெயரிட்டான். மேலும் அங்கு ஒரு கலாசாலையை நிறுவினான். அதில் 95 சட்டர்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடும் செய்து நிலங்களைச் சாலா போகமாக அளித்தான். சாத்திரங்களை நன்கு கற்றறிந்தோர் சாத்திரர் அல்லது சட்டர் எனப்பட்டனர் போலும், சட்டர் அவரவர்களுக்கு உரிய வேதத்தில் மட்டுமல்லாமல் மீமாம்சை, வியாகரணம், புரோகிதம் ஆகிய பிரிவுகளிலும் புலமை பெற்றிருந்தனர். இத்துறைகளில் சிறப்புக் கல்விபெற இச்சாலையில் சேர்த்து கொள்ளப்பட்டனர்.


இங்கு வேதசாஸ்திரங்களில் உயர்படிப்பைத் தவிர இராஜ்ய நிர்வாகப் பயிற்சியும் இராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டன. இச்சாலை இயங்கிய முறைகளைப் பற்றிப் பல அரிய செய்திகளைச் சுருக்கமாகக் கீழே காண்போம். சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களின் இராஜ்யங்களது (த்ரைராஜ்ய விவகாரத்துக்கு) நிர்வாக அமைப்பிற்கு வேண்டிய பயிற்சி தரப்பட்டது. இதைத் தவிரப் படைக்கலம் பிடிக்கவும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. நாட்டின் நிர்வாகம், போர் முறை ஆகிய இரண்டையும் நூல்வாயிலாகவும் நடைமுறை வழியாகவும் கற்பித்து வந்த ஒரு கலாசாலையாக இது இயங்கியதை உணரலாம். இக்காலத்தில் இயங்கிவரும் நிர்வாக அதிகாரிகள் பயிற்சி நிலையங்களும் ( Administrative staff training ), இராணுவப் பயிற்சிப் பள்ளிகளும் ( Military School ) செய்துவரும் பணிகளை ஓரளவு அக்காலத்துச் சாலைகளும் செய்துவந்தன என்று சொன்னால் மிகையாகாது.

அக்காலத்தில் நாட்டு நிர்வாகத் தலைவர்களுக்கு இராணுவ விஷயமான அறிவும் அனுபவமும் தேவையெனக் கருதப்பட்டது. இளவரசர்களும், மந்திரிகளும் தண்ட நாயகர்களும் இராணுவப் பயிற்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .