தமிழகத்தில் மார்க்கோ போலோ - பாண்டிய மன்னனை நேரில் சந்தித்த பயணி..!

தமிழகத்தில் மார்க்கோ போலோ - பாண்டிய மன்னனை நேரில் சந்தித்த பயணி..!


மார்க்கோ போலோ அன்றைய தமிழகத்தைப் பற்றியும், தமிழக மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும், தமிழகத்தில் தன்னுடைய பயண அனுபவங்களை இல்மிலியோன் - மார்க்கோ போலோவின் பயணங்கள் (II Milione - The Travels of Marcopolo) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 


மார்க்கோ போலோ இத்தாலி நாட்டில் உள்ள வெனீஸ் நகரைச் சேர்ந்தவர். மார்க்கோ போலோவின் தந்தையார் நிக்கலோ ஒரு வியாபாரி. நிக்கலோ, வியாபார ரீதியாக சீனா சென்றார். நிக்கலோவிற்கும் சீன அரசரான குபிலாய் கானுக்கும் நட்பு உண்டானது. 


குபிலாய் கான், நிக்கலோவின் மூலம் போப்பாண்டவருக்கு ஒரு விண்ணப்பக் கடிதத்தை கொடுத்தனுப்பினார். அதில் தனக்கு வானசாஸ்திரம், கணிதவியல், வடிவக் கணிதம், இசை, இலக்கணம், தர்க்கவியல் ஆகியவற்றில் தேர்ச்சிப் பெற்ற நூறு கிறித்துவர்களை  சீனாவிற்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை  விடுத்தார். மேலும் குபிலாய் கான், நிக்கலோவிடம் ஜெருசலம் அங்கு தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்துகளில் எரியூட்டப்பட்ட புனித எண்ணெயைக் கொண்டு வரும்படியும் வேண்டுகோள் விடுத்தார். 


குபிலாய் கானின் வேண்டுகோளை நிறைவேற்றும் பொருட்டு  நிக்கலோ சீனாவிலிருந்து வெனீஸ் நகரம் திரும்பினார். வெளி நகரத்திற்கு திரும்பிய பிறகுதான் நிக்கலோ, முதன் முதலாக தன்னுடைய மகனான மார்க்கோ போலோவைப் பார்த்தார் ஏனென்றால் மார்க்கோ போலோ பிறப்பதற்கு முன்னதாகவே நிக்கலோ, வெனிஸ் நகரை விட்டு சீனா சென்றுவிட்டார். நிக்கலோ திரும்பிவரும்போது மார்க்கோ போலோவுக்கு வயது 16. 


நிக்கலோ சீனாவிற்கு மீண்டும் செல்லும்போது, மார்க்கோ போலோவையும் உடன் அழைத்துச் சென்றார். கி.பி.1271ம் ஆண்டு நிக்கலோ, அவரது சகோதரன் மாஃபியோ மற்றும் மார்க்கோ போலோ மூவரும் வெனீஸிலிருந்து சீனாவிற்குப் புறப்பட்டனர். சீனா செல்வதற்கு, அவர்களுக்கு மூன்றரை ஆண்டுகள் பிடித்தன. 


நிக்கலோவின் மூலம் குபிலாய் கானுக்கு ஜெருசலத்திலிருந்து எண்ணெய் கிடைத்தது. நூறு கிறித்துவர்களைத் திரட்டிக், கொண்டுவர முடியாததற்கு மன்னிப்பு கேட்டார் நிக்கலோ. கோபமடைந்த குபிலாய் கானை, மார்க்கோ போலோ தன் சாமர்த்தியமான பேச்சுத் திறமையால் சமாளித்தார். மார்க்கோ போலோவிற்கு நான்கு மொழிகள் தெரிந்திருந்தன. மேலும் அவர் திறமைசாலியாகவும் அறிவாளியாகவும் இருந்ததால், குபிலாய் கான் மார்க்கோ போலோவை தன்னுடைய அரசாங்கத்தில் முக்கியமான பொறுப்புகளில் நியமனம் செய்தார். 


மார்க்கோ போலோ சீனாவில் இருபதாண்டுகளுக்கும்  மேல் தங்கினார். பின்னர், மார்க்கோ போலோ குபிலாய் கானிடம்  தான் வெனிஸ் நகரம் திரும்பிச் செல்வதாக தெரிவித்தார். குபிலாய் கான் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் மார்க்கோ போலோவிற்கு, சீனாவிலிருந்து கிளம்புவதற்கு அதிர்ஷ்டவசமாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. குபிலாய் கானின் உடன் பிறந்தவனின் பேரன் பாரசீக நாட்டை  ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு நல்ல வரன் தேடி பாரசீகத்திலிருந்து வந்த குழுவிற்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மார்க்கோ போலோவை குபிலாய் கான் பணித்தான். வரன் தேடும் வேலை முடிந்து குழு பாரசீகத்திற்குப் புறப்பட்டது. மணப்பெண்ணை பத்திரமாக பாரசீகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எனவே அக்குழுவுடன் செல்லுமாறு மார்க்கோ போலோவிற்கு குபிலாய் கான் உத்தரவிட்டான். 


மார்க்கோ போலோ பாரசீகம் செல்லும் வழியில், சுமத்ரா தீவு, சிங்கப்பூர், இலங்கை, தமிழகம் ஆகிய பகுதிகளுக்குச் சென்றார். மார்க்கோ போலோ பாரசீகம் செல்வதற்கு இரண்டாண்டுகள் பிடித்தன. அந்தக் கடுமையான பயணத்தில், அறு நூறு பேர் அடங்கிய குழுவில், மார்க்கோ போலோவையும் சேர்த்து வெறும் பதினெட்டு பேர் மட்டுமே எஞ்சினர். பாரசீகத்தில் மணப்பெண்ணை பொறுப்புடன் கொண்டு சேர்த்த மார்க்கோ போலோ அங்கிருந்து வெனீஸ் நகரம் திரும்பினார். வெனீஸக்கும் ஜெனோவாவுக்கும் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் மார்க்கோ போலோ வெனிஸ் நகரம் சென்றதால், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த சமயத்தில்தான் அவருடைய சிறை நண்பரான ரஸ்டிசெல்லோ டா பிஸ்ஸா என்பவருக்குத் தன்னுடைய பயண அனுபவங்களைக் கூறினார். 


ரஸ்டிசெல்லோ டா பிஸ்ஸா, மார்க்கோ போலோ வெனீஸிலிருந்து சீனா சென்றது, சீனாவில் குபிலாய் கானிடம் பணியாற்றியது, சீனாவிலிருந்து வெனீஸக்கு பாரசீகம் வழியாக திரும்பியது பற்றிய 24 வருட பயண அனுபவங்களை "மார்க்கோ போலோவின் பயண அனுபவங்கள்" என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டார். இப்புத்தகம்தான் ஐரோப்பியர்களை கிழக்கு ஆசியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. மார்க்கோ போலோவின் அனுபவங்கள்தான், பின்னர் கொலம்பஸ் போன்ற பல பயணிகளை ஐரோப்பாவிலிருந்து இந்தியாவைத் தேடி வரச்செய்தது. அச்சு இயந்திரம் புழக்கத்தில் வராத அக்காலத்தில், கைப்பிரதிகளாக 'மார்க்கோ போலோவின் பயண அனுபவங்கள்' புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது. சுமார் 150 மொழிகளில் பல்வேறு திரிபுகளுடன் கிடைக்கின்றன. மார்க்கோ போலோ தமிழகத்திற்கு வந்த வருடம் கி.பி.1293. அவர் தஞ்சைக்கு அருகாமையில் உள்ள காவிரிபூம்பட்டினத்தில் வந்திறங்கினார். மார்க்கோ போலோ தமிழகத்தைப்  பற்றியும் தமிழக மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும்  பின்வருமாறு கூறுகிறார். 


தமிழகத்தில் அரசர்களும் பிரபுக்களும் தரையில் அமர்ந்துகிறார்கள். இதனால் ஆச்சரியப்பட்டு அந்த அரசர்களிடம்  தரையில் அனைவரும் அமர்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு  தரையில் அமர்வது பெருமைக்குரியது. மண்ணிலிருந்தும் அனைவரும் தோன்றினோம். இறந்த பிறகு மண்ணுக்குள்ளே போகப் போகிறோம்  என்று பதிலளித்தார்கள். 


தமிழகத்தின் சீதோஷ்ண நிலை வெப்பமாக இருந்தது. பெண்கள் எளிய ஆடைகளை உடுத்தியிருந்தனர். அரசர்களும் மெலிதான ஆடைகளையே உடுத்தியிருந்தனர். ஆனால், அவர்களுடைய ஆடைகளில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. வர்த்தகர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். வர்த்தகம் நன்கு நடைபெறுகிறது. அரசனும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவனாக இருக்கிறான். இரவிலும், பயணிகள் நெடுஞ்சாலைகளில் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு எந்தவிதப் பயமும் இல்லாமல் பயணம் செய்கிறார்கள். 


நான் பயணம் செய்த ஊர்களிலேயே தமிழகம்தான் உலகத்திலேயே செல்வம் மிகுந்த, அற்புதமான பிரதேசம்.  


உலகில் உள்ள அநேக முத்துகளும் ரத்தினங்களும், தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும்தான் கிடைக்கிறது. 


அரிசி மட்டும்தான், தமிழகத்தில் பயிர் செய்யப்படும் ஓர் தானியம். உணவு உண்பதற்கு, மக்கள் வலது கையைப் படுத்துகிறார்கள். மற்ற காரியங்களைச் செய்வதற்குத்து இடது கையைப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக தமிழகம், மதுபானங்கள் அருந்துவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள்கென்று பிரத்யேகக் குடுவையை வைத்துக்கொண்டு அதில் சேமித்து வைத்துப் பருகுகிறார்கள். 
தமிழர்கள் தாம்பூலம் போடுவதை முக்கிய பழக்கமாக  வைத்திருக்கிறார்கள்.
வெற்றிலை, சுண்ணாம்புடன் வாசனைத் திரவியங்களையும் சேர்த்து வாயில் போட்டு மென்று விட்டு கண்ட இடங்களில் துப்புகிறார்கள். பெரிய குற்றங்கள் செய்தவர்கள் மீது மக்கள் காரி உமிழ்கிறார்கள். இதனால் பெரிய சண்டைகளெல்லாம் ஏற்படுகிறது. 


உலகிலேயே தமிழர்கள்தான் ஆருடம் பார்ப்பதிலும், குறி கேட்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். நல்ல சகுனத்தையும், கெட்ட சகுனத்தையும் வேறுபடுத்துவதில் வல்லவர்கள் தமிழர்கள். 


முத்துக் குளிப்பவர்கள், முத்துக்களைத் தேடி கடலில் இறங்குவதற்கு முன்னர், சுறா மீன்கள் அவர்களைத் தாக்காமல் இருக்க பிராமணர்கள் மந்திரங்களை உச்சரிக்கிறார்கள். இதற்காக, அந்த பிராமணர்களுக்கு 20 முத்துகளுக்கு 1 முத்து என்ற வீதத்தில் சன்மானம் வழங்கப்படுகிறது. மக்கள் பசுக்களை தெய்வமாக வணங்குகிறார்கள். மாட்டிறைச்சி உண்பதில்லை. வீடுகளின் தரைகளெல்லாம் சாணம் கொண்டு மெழுகப்படுகிறது. 


போர்களில் நீண்ட ஈட்டிகளும் கேடயங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தமிழர்கள் பராக்கிரமசாலியாக இல்லை. கடல் தாண்டி ஒருவன் பயணிக்கிறான் என்றால் அவன் பெரிய கஷ்டத்தில் இருப்பதாகக் கருதுகிறார்கள். 


உடலுறவின் போது எந்த விதமான புணர்தலில் ஈடுபட்டாலும் அது பாவமாகக் கருதப்படவில்லை.  


 கன்னிப் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒவ்வொரு மாதமும்  சுவையான உணவுகளையும் மாமிசத்தையும் சமைத்து தெய்வங்களுக்கு படையல் செய்கிறார்கள். தெய்வங்களின் முன் ஆடலும் பாடலும் நடைபெறுகின்றன. தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட  பின்னர் அந்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்கிறார்கள். இச்சடங்கு தெய்வங்களின் குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக நடைபெறுகிறது. விழா முடிந்த அடுத்த நாள், 'கோயில் பூசாரி தெய்வங்கள் கீழிறங்கி வந்து படையலை' எடுத்துக் கொண்டதாகவும், அருள் பாலித்ததாகவும் கூறுகிறார். இதனால் அனைவருக்கும் ஆனந்தமும் நிம்மதியும் பிறக்கிறது.


கருப்புத் தோல் உடையவர் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் மார்க்கோ போலோ தேய்த்துக் குளிப்பாட்டுகிறார்கள். இதனால் அக்குழந்தை மேலும் கருப்பாக வளரும் என்று நம்புகிறார்கள். கடவுள் சிலை அனைத்தும் கருப்பாகத் தோற்றம் அளிக்கச் செய்கிறார்கள். சாத்தான்களுக்கு பனி போல் வெண்மை நிறத்தை உருவமாக வைக்கிறார்கள். 


தமிழகத்தில் நிறைய யோகிகள் இருக்கிறார்கள். யோகிகள் சிறிது உணவை உட்கொண்டு மற்றவர்களைவிட அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள். சில யோகிகள் 200 ஆண்டுகள் வரைகூட உயிர் வாழ்கிறார்கள். சில மதங்களைச் சேர்ந்த யோகிகள் கடினமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். நிர்வாணத்தைக் கடைபிடிக்கிறார்கள். இவர்கள் அனைத்து உயிர்களிடமும் ஆன்மா குடிகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையால் எந்த ஜீவராசிக்கும் தீங்கு செய்யாமல் பார்த்துக் கொள்கிறார்கள். யோகிகள் காய்ந்த இலைகளில்தான் தங்கள் உணவை உட்கொள்கிறார்கள். 


நான் யோகிகளிடம் நீங்கள் ஏன் உங்கள் ஆண்குறி மறைக்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவ நீங்கள் அதைப் பயன்படுத்தித்தான் துன்மார்க்கத்திலும் பாவாத்திலும் ஈடுபடுகிறீர்கள். அதனால்தான் வெட்கப்பட்டுக் அதை மூடி மறைக்கிறீர்கள். நாங்கள் எந்தத் தவறும்  செய்வதில்லை. அதனால் நாங்கள் எதற்கும் வெட்கப்பட வேண்டியதில்லை என்று பதிலளித்தனர். காமத்தை வென்றவர்கள் யோகிகளாக முடியும் என்று கூறினர். சிலை வழிபாடு இவர்கள் மிகவும் கண்டிப்பானவர்களாகவும், அவர்களுடைய  தவறான நம்பிக்கைகளில் பிடிவாதமாகவும் இருக்கிறார்கள். (மார்க்கோ போலோ கிறித்துவ மதத்தில் தீவிர நம்பிக்கையும் பற்றும் உடையவர். அவரால் மற்ற மதங்களின் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை) 


அரசர்களுக்கு 500 மனைவிமார்கள் இருக்கிறார்கள். இருப்பினும், அரசனுக்கு அடுத்த நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அவனுடைய தம்பியின் மனைவி அழகாக இருந்தால் அவளைக் கவர்ந்து வந்துவிடுகிறார். இதனால் இரு நாடுகளக்குமிடையே பல சந்தர்ப்பங்களில் போர் மூழ்ந்திருக்கின்றது. இச்சமயங்களில் அரசனின் தாயார் தலையிட்டு சண்டையைத் தவிர்த்து விடுகிறார். சண்டை உருவான சமயத்தில் இரண்டு சகோதரர்களுக்கும் இடையில் அவர்களது தாயார் வாளுடன் வந்து நின்று, நீங்கள் சண்டையிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாலூட்டிய என்னுடைய மார்பகங்களை வெட்டி விடுவேன்  என்று எச்சரிக்கை செய்கிறார். தாயின் எச்சரிக்கைக்குப் பயந்து, சகோதரர்கள் சண்டையைத் தவிர்த்து விடுகிறார்கள். தாயார் இறந்தவுடன் சகோதரர்கள் மீண்டும் போரில் ஈடுபடக்கூடும். 


தமிழகத்தில் குதிரைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை. ஏடன் நாட்டிலிருந்து வருடா வருடம் சுமார் 2000 குதிரைகள் கப்பல் மூலமாக பாண்டிய நாட்டின் துறைமுகத்தில் வந்திறங்குகின்றன. வந்திறங்கிய குதிரைகளில் ஒரு வருடத்தில் சுமார் 100 குதிரைகள் மட்டுமே உயிருடன் இருக்கின்றன. காரணம், குதிரைகளைச் சரியான முறையில் பராமரிக்காததுதான். ஒரு குதிரை 200 தினார்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படுகிறது. வெளிநாட்டு குதிரை வியாபாரிகள், கால்நடை மருத்துவர்களை தமிழகத்திற்கு அனுப்புவதில்லை. கால்நடை மருத்துவர்கள் தமிழகத்திற்குப் போவதையும் தடுத்து விடுகிறார்கள். காரணம், அரசருடைய குதிரைக் கொட்டத்தில் குதிரைகள் இறந்தால்தான், அன்னிய குதிரை வியாபாரிகளுக்கு லாபம். 


நான் பார்த்ததில் காயல்தான் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழைய காயல்) பெரிய துறைமுகமாக உள்ளது. உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் காயல் துறைமுகத்திற்கு நிறைய கப்பல்கள் வந்து செல்கின்றன. தமிழகத்திற்கு வரும் வியாபாரிகளுக்கும், வெளிநாட்டவர்களுக்கும், அரசர் நிறைய வகுமதிகள் வழங்குகிறார். அதனால் நிறைய வெளிநாட்டவர்கள் தமிழகம் வருவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். அரசர் உறமையாகவும் பாராபட்சமில்லாமலும் அரசை நிர்வகித்து வருகிறார். மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஸ்திரமாக செய்து, அரசுக் கருவூலத்தில் நிறைய செல்வங்களைச்  சேர்த்து வைத்திருக்கிறார். 


மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளிலிருந்து, தமிழகம் உன்னத நிலை அடைந்திருந்ததை உணர முடிகிறது. 


மார்க்கோ போலோ தமிழகத்தை விட்டுச் செல்லும் போது கடைசியாக மயிலாப்பூருக்கும், புனித தோமையார் ஆலயத்திற்கும் சென்றதாக தெரிவித்துள்ளார். 


அன்னிய வர்த்தகர்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு பதில் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரை மூலமாக வர்த்தகம் செய்வதையே விரும்பினார்கள். இதற்குக் காரணம், பருவ மழைக் காலங்களில் மேற்கு கடற்கரைப் பகுதியில் கப்பல்கள் செல்லும்போது, அதிகமாக கரைபக்கம் ஒதுங்குமாம். இப்படிக் கரை ஒதுங்கும் கப்பல்களெல்லாம் அந்தப் பகுதியை ஆட்சி செய்யும் அரசர்களுக்கே சொந்தம் என்ற சட்டம் இருந்ததாம். அதனால்தான், பொதுவாகவே அன்னிய வியாபாரிகள், இந்தியாவின் கிழக்குப் பகுதியின் வழியாகவே, குறிப்பாக தமிழகத்தின் வழியே வர்த்தகம் செய்ய முற்பட்டனர்.