தமிழகத்தின் பள்ளிப்படைக் கோவில்கள்...!

தமிழகத்தின் பள்ளிப்படைக் கோவில்கள்...!


சோழப் பேரரசில் புகழ்பெற்ற மன்னராக விளங்கிய முதலாம் ராஜராஜனின் சமாதியான ராஜராஜனின் பள்ளிப்படை எங்கு உள்ளது என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


கும்பகோணம் அடுத்த உடையாளூர் என்னும் ஊரில் தமிழகத் தொல்லியல் துறை ஆய்வுகளை செய்து வருகிறது. இறந்தவர்களுக்கு நினைவிடங்கள் எடுத்து முன்னோர் வழிபாட்டை தொன்று தொட்டு செய்து வருபவர்கள் தமிழர்கள். இறந்தவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் எடுக்கிற வழக்கம் குறித்து சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றைப் பெருங்கற்படைச் சின்னங்கள் என பொதுவாக தொல்லியலாளர்கள் குறிப்பிடுவர்.


தொல்லியல் ஆய்வுகளில் இது போன்ற நினைவுச் சின்னங்கள் மிகுந்த அளவில் தமிழகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தாழியில் புதைத்தல், கற்பலகைகள் வைத்து ஈமச் சின்னங்களை அமைத்தல், கற்குவை, கற்பதுக்கை, பரலுயர் பதுக்கை போன்றவை பெருங்கற்காலச் சின்னங்களாகும். போரில் வெற்றி பெற்றவர்களுக்கும், ஊரினை எதிரிகளிடமிருந்து காத்தவர்களுக்கும் ஆநிரை கவர்ந்தவர்களுக்கும், பசுக்களை மீட்டவர்களுக்கும் நடுகற்கள் எடுக்கும் வழக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக இருந்தது.


இவற்றின் வளர்ச்சி பெற்ற நிலையே தனிக்கோவில்களாக விளங்கிய பள்ளிப்படைக் கோவில்களாகும். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம் மற்றும் ஆந்திர பகுதிகளிலும் இறந்த மன்னர்களுக்கு பள்ளிப்படைக் கோவில்கள் எடுக்கும் வழக்கம் நிலவியது. கர்நாடகத்தில் இவ்வகைக் கோவில்களை "பரோக்ஷ வினயம்" என்றும் ஆந்திராவில் "சிவாயதனம்" எனவும் அழைப்பர். தென்னிந்தியப் பண்பாட்டுக் கூறுகளின் தொடர்பால் தென்கிழக்காசிய நாடுகளிலும் இதுபோன்ற பள்ளிப்படைக் கோவில்கள் இருந்தன. இதனை தேவராஜா வழிபாடு எனக் குறிப்பிடுவர். இவை யாவும் இறந்தவர்கள் துயில் கொள்ளும் இடம் என்னும் பொருளில் அமைந்தவை.


நடுகல் வழிபாட்டைத் தொடர்ந்து தமிழகத்தில் வரலாற்றுத் தொடக்க காலத்தில் சமூகத்தில் உயர் நிலையில் இருந்த அரசர்களுக்கு சமாதிக் கோவில்கள் எடுக்கப்பட்டன. இவை பள்ளிப்படைக் கோவில்கள் என வழங்கப்படும். கோவில்கள் போன்ற அமைப்பில் அரசர்களின் பள்ளிப்படைகள் அக்காலத்தில் இருந்தன. பொதுவாக இவ்வகைக் கோவில்களின் கருவறைகளில் சிவனுக்குரிய லிங்க அமைப்பு காணப்படும்.


தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான பள்ளிப்படைக் கோவில் வேலூருக்கு அருகில் சோழபுரம் என்ற இடத்தில் உள்ளது. இவ்வூரின் மேற்கு பகுதியில் வயல்வெளிகளுக்கு இடையில் பல்லவர் காலத்தில் குறுநில மன்னராக விளங்கிய பிருத்துவி கங்கரையன் என்பவருக்காக அவரது மகன் ராஜாதித்யன் என்பவர் பள்ளிப்படைக் கோவிலைக் கட்டுகிறார். தன்னுடைய தந்தை பள்ளிப்படித்த இடத்தில் "அதீதகரகம்” எனக் கூறப்படும் பள்ளிப்படைக் கோவில் ஒன்றும், அதன் அருகில் சிவாலயம் ஒன்றும் கட்டினார். இதே போன்று காளஹஸ்திக்கு அருகில் தொண்டைமானாற்றூர் என்ற இடத்தில் சோழமன்னன் பராந்தக சோழனின் தந்தையும் விஜயாலய சோழனின் மகனுமான ஆதித்த சோழனுக்கு பள்ளிப்படைக் கோவில் உள்ளது. தொண்டைமானூற்றூரில் ஆதித்த சோழன் இறந்தமையால் இவர் "தொண்டமானாற்றூர் துஞ்சிய தேவர்" என வழங்கப்படுகின்றார்.


இதனை அடுத்து சோழப் பேரரசன் பராந்தகனுடைய மைந்தன் அரிஞ்சய சோழனுக்குப் பள்ளிப்படைக் கோவிலொன்று வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலைக்கு அருகில் மேல்பாடி என்ற இடத்தில் பொன்னையாற்றின் கரையில் அமைந்துள்ளது. சோழ மன்னன் முதலாம் பராந்தகன் காலத்தில் ராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் பாலாற்றின் கரை வழியாக இப்பகுதிக்கு படைகளுடன் வந்து பராந்தக சோழனின் மைந்தன் ராஜாதித்யன் தலைமையில் இருந்த சோழர்படைகளை தாக்குகிறார். இறுதியாக தக்கோலம் என்ற இடத்தில் ராஜாதித்யன் மூன்றாம் கிருஷ்ணனால் கொல்லப்படுகிறார். ராஜாதித்யனின் தம்பிகள் கண்டாரதித்தன் மற்றும் அரிஞ்சயன். பராந்தக சோழனுக்குப் பின் கண்டாராதித்தனும் அவருக்குப் பின் அரிஞ்சயனும் பட்டமேற்கின்றனர். அரிஞ்சயன் முதலாம் ராஜராஜனின் பாட்டனாவார். அரிஞ்சயன் இறந்த பின் அவருக்குப் பள்ளிப்படை ஒன்றை மேல்பாடியில் முதலாம் ராஜராஜ சோழன் கட்டுகிறார்.


மேல்பாடியில் உள்ள அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை சிறிய கற்றளியாகும். இக்கோவிலில் உள்ள கல்வெட்டு ‘பள்ளிப்படையான அரிஞ்சிகை ஈஸ்வரம்‘ என இக்கோவிலைக் குறிப்பிடுகிறது. இக்கோயிலுக்கு அருகில் வடக்குப் பகுதியில் சிவனுக்காக தனியாக மற்றொரு கோவில் ஒன்று உள்ளது. பொதுவாக பள்ளிப்படைக் கோவில்கள் சிவன் கோவிலுக்கு அருகில் தனியாக சிறிய கோவில்களாக அமைந்திருக்கும். தமிழகத்தில் மிக அதிகமான பள்ளிப்படைக் கோவில்கள் இருந்த பகுதி சோழர்களின் பூர்வீக ஊரான பழையாறைப் பகுதியாகும். சோழப்பேரரசர்களில் முதலாம் ராஜராஜனின் பள்ளிப்படைக்கோவில் கும்பகோணம் அருகிலுள்ள உடையாளூர் என்ற இடத்தில் உள்ளதாகக் கூறுவர். இவ்வூரிலுள்ள பால்குளத்து அம்மன் கோவில் தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டின் அடிப்படையில் இவ்வூரில் தான் ராஜராஜன் இறந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.


ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனின் பள்ளிப்படைக் கோவில் காஞ்சீபுரத்துக்கு அருகில் பிரமதேசம் என்ற இடத்தில் இருப்பதாகக் கருதுவர். பிரமதேசம் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ராஜேந்திர சோழனின் மனைவி வீரமாதேவிநாச்சியார்  என்பவர் தனது கணவர் ராஜேந்திர சோழன் இறந்தபின் அவர் இறந்த இடத்தில் நெருப்பை மூட்டி தீப்பாய்ந்து உயிர் விடுகிறாள். அரசி வீரமாதேவியிநாச்சியாரின் மனம் சாந்தியடைய அவரது அண்ணன் இக்கோவில் பகுதியில் தண்ணீர் பந்தல் ஒன்றை வைக்கிறார். எனவே ராஜேந்திர சோழனின் பள்ளிப்படை காஞ்சீபுரத்திற்கு அருகில் இருந்துள்ளது. இக்கல்வெட்டு உள்ள பிரமதேசம் கோவில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டதைக் கல்வெட்டு உறுதி செய்வதால் இக்கோவில் ராஜேந்திர சோழனின் பள்ளிப்படையாகக் கருத இயலாது. இதே போன்று விக்கிரம சோழனின் பள்ளிப்படைக் கோவில் ஒன்றை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகில் பள்ளிப்படை என்னும் பெயரில் ஊர் ஒன்றே உள்ளது. தென் தமிழகத்தில் பாண்டியர்களும் இறந்தவர்களுக்கு அவர்களது நினைவாக பள்ளிப்படைக் கோவில்களை கட்டி வழிபட்டனர். சமூகத்தில் உயர் நிலையில் இருந்து இறந்தவர்களுக்கு நினைவிடங்களாகப் பள்ளிப்படைக் கோவில் எடுப்பதில் தமிழகமே முன்னோடியாக அக்காலத்தில் விளங்கியது.


பேராசிரியர் சு.ராசவேலு, கடல்சார் வரலாறு தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.