முகப்பு வரலாறு தமிழக வரலாறு மூவேந்தர் வரலாறு பாண்டியர் போர் படைகள் பற்றி அறியாத தகவல்கள்..! (பகுதி2)
பாண்டியர் போர் படைகள் பற்றி அறியாத தகவல்கள்..! (பகுதி2) History of Pandiya kingdom army
கடற்படை :
நீண்ட கடற்கரையை எல்லையாகப் பாண்டியர் பெற்றிருந்ததனால் அவர்கள் கடற்படையைப் பெற்றிருத்தல் வேண்டும் எனலாம். பல்லவர்களது போன்றோ சோழர்களது போன்றோ பாண்டியர்களது கடற்படை அவ்வளவு சிறப்புற்றிருந்ததாகச் சொல்ல முடியாது. சங்க காலத்திலேயே பாண்டியர் கடற்படையைப் பெற்றிருந்தனர். வடிம்பலம்ப நின்ற பாண்டியன் கப்பற்படை கொண்டு சாலி என்னும் தீவை வென்ற செய்தியை மதுரைக் காஞ்சி கூறுகிறது. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனிடம் தோற்ற மாயா பாண்டியன் என்பான் ஈழத்தரசனிடம் சரண் புகுந்தான்.
ஈழத்தரசன் பெரும்படை , திரட்டிப் பாண்டிய நாட்டின் மேல் படையெடுக்க ஆயத்தமாக இருந்தபோது ஸ்ரீமாறன், பல்லவ அரசன் நிருபதுங்கனுடன் நட்புக்கொண்டு, அவனது கடற்படைத் துணையால் ஈழத்தின்மீது படையெடுத்து வென்றான் என்று கூறப்படுகிறது. காயல்பட்டினத்தில் அரேபியா, பார்சீகம் போன்ற நாடுகளிலிருந்து கலங்கள் குதிரைகளை ஏற்றிக் கொண்டு வந்தனவென்று மார்க்கபோலோ குறிப்பிட்டுள்ளதால் அது ஒரு முக்கியத் துறைமுகமாய் விளங்கியதை அறியலாம்.
கொற்கை போன்ற துறைமுகங்களில் முத்து குளிப்பதற்கும் சிறிதும் பெரிதுமான கலங்கள் பயன்படுத்தப்பட்டதையும் மார்க்கபோலோ குறித்துள்ளார். 'மாபாரிலிருந்து' (பாண்டிய நாட்டிலிருந்து) சரக்குகளை ஏற்றி எட்டுப் பெரிய கலங்கள் ஏமனுக்குப் போவதற்காகத் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த போது ஈழக்கடற்படை அவற்றைப்பிடிக்க முயன்று ஆனால் தக்க பாதுகாப்பு இருந்ததால் அவற்றைப் பிடிக்கமுடியவில்லை என்பதை இபன்பதூதா நேரில் பார்த்ததாகக் குறித்துள்ளார். அக்காலத்தில் வணிகக் கலங்களுக்கும் போர்க்கலங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை என்று தோன்றுகிறது.
நிலைப்படை :
நாட்டின் மூலப்படைப் பகுதிகள் தலைநகரிலும் பிற முக்கிய நகரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன. புதிதாய் வெல்லப்பட்ட பகைவர் நாட்டிலும் இப்படைப் பிரிவுகள் நிறுத்தப்பட்டன. பாண்டிய நாடு சோழராட்சிக்கு உட்பட்டிருந்தபோது கோட்டாறு போன்ற இடங்களில் சோழர்களது நிலைப்படை நிறுத்தப்பட்டிருந்தது. பாண்டியர்களும் ஆய்மன்னர் போன்ற குறுநில மன்னரை வென்றபிறகு ஆங்காங்கே தங்களது நிலைப்படையை நிறுவினர். கலகங்களையும் எதிர்ப்புகளையும் அடக் கவும் நாட்டில் அமைதி காக்கவும் இப்படை உதவியது. தவிர, நாட்டு அரசு நிர்வாகத்தில் பணியாற்றிய அலுவலர்கள் அவர்களது பணியைச் செவ்வனே செய்வதற்கும் இப்படைத் தலைவர்கள் துணை செய்தனர். ஊர்ப் பொதுப் பணிகளிலும் இந் நிலைப்படைத்தலைவர்கள் உதவியதைப் பல கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டை ஒரு முக்கியப் படைத்தளமாக இருந்தது. நெடுஞ்சடையப் பராந்தகன் காலத்தில் கோட்டை கொத்தளங்கள் இங்குக் கட்டப்பட்டன.
மதுரைக்கருகிலுள்ள ஆனையூரில் ஒரு நிலைப்படை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவ்வூர்க் கோவில் நிர்வாகத்தையும் சில காலம் படைத் தலைவர்கள் நடத்தி வந்ததாகத் தெரிவிக்கின்றது. அவ்வாறே சில சந்தர்ப்பங்களில் திருவிடையபுத்தூர், கோட்டாறு, சுசீந்திரம், கோவில்பட்டி போன்ற கோவில்களில் நிர்வாகப் பொறுப்புகளைப் படைத்தலைவர்கள் ஏற்று நடத்தியதைக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இம்முறை எவ்வாறு இயங்கியது என்பது தெளிவாக விளங்கவில்லை.
ஆனால், அமைதி
குன்றிக் குழப்பங்கள் தோன்றிய காலங்களில் அரசனே நிலைப்படைத் தலைவர்களிடம் ஊர்களையும் கோவில்களையும் அவர்கள் பொறுப்பில் விட்டிருக்கலாம். சில ஊர்கள் படைத்தலைவருக்கு மானியமாக அளிக்கப்பட்டு அவ்வூர்களின் பொறுப்பில் விடப்பட்டன.
அவ்வூர்களில் வரிப்பணத்தை அவர்களே வசூலித்து அவர்களது குறிப்பிட்ட செலவுபோக மிகுதியை அரசிடம் செலுத்தினர். மாறவர்மன் குலசேகரன் குறிப்பிட்ட சில வரிப்பணத்தைத் திருவாதவூர் கோவிலுக்குத் தானமாக வழங்கிய கட்டளையை அவ்வூர்ப் படைக்கரணவருக்கு அனுப்பினான். நிலைப்படைக் கணக்குகளை வைத்திருக்கும் பொறுப்பை ஏற்றவர்களே படைக்காரணவர் என்பவர். அந்நிலைப் படைக்குத் திருவாதவூர் ஒரு 'மானிய கிராமமாக' இருந்திருக்க வேண்டும். இதன் காரணம் கொண்டே, வரிவசூலிக்கும் பொறுப்பை அது ஏற்றது போலும்.
பெரும்படையர் :
பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளில் 'முற்பேர் படையர்' , 'வளவன் உள்ளிட்ட, 'பெரும்படையர் ' , 'வலங்கை மாசேனையர்' என்ற பலவகைப் படைப் பெயர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. முன்னே குறிப்பிட்டுள்ளதுபடி இவர்களுக்கென ஆங்காங்கே சில ஊர்கள் மானியமாக அளிக்கப்பட்டன. ஊர்ச்சபைகள் போன்று, இவையும் வரி வசூலிப்பது, அறக்கட்டளைக் காத்தல் போன்ற பொறுப்புகளை ஏற்றிருந்ததை அக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவர்களுக்குள் 'சேனாபதி' , 'படைக்கணக்கு' போன்ற அலுவலர்கள் பணியாற்றினர் . இந்த 'முற்பேர் படை' அல்லது 'மூன்று கை மகாசேனையர்' என்பது கன்னட நாட்டில் வழங்கப்பட்ட 'மும்முடி தண்டம்' என்பதற்கு ஒப்பாகுமெனக் கருதப்படுகிறது.
பாண்டிய நாட்டில் இயங்கிய ஒரு பெரும் படையில் 8 சிறிய படைகள் இருந்ததாகக் குறிப்புக் காணப்படுகிறது. அவை முறையே முதலாம் படை, இரண்டாம் படை, மூன்றாம் படை போன்ற பெயரிலேயே வழங்கப்பட்டன. பெரும்படையை இக்கால ரெஜிமென்டிற்கும் (Regiment) சிறிய படையைப் பட்டாலியனுக்கும் (Battalion) ஒப்பிடலாம். இப்படைகளைப் பற்றிய மேலும் விவரங்கள் ஆராயப்பட வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள திருவாலீச்சுரத்திலிருக்கும் அரியதொரு கல்வெட்டு அங்குள்ள மூன்றுகை மகாசேனை (மூன்று அங்கங்களைக் கொண்ட பெரும் சேனை) யைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தருகிறது. அது சோழராட்சியின் போது அங்கு வைக்கப்பட்ட சேனை. அம்மகாசேனையைப் பற்றிப் பின்வரும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்கள் விஷ்ணுவையும் சிவபெருமானையும் வழிபட்டனர். கன்னரதேவனைத் (ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனை) தோற்கடித்தனர். கடற்கரையிலுள்ள விழிஞத்தை அழித்தனர்; கடல் கடந்து கிழக்கே சென்று மாதோட் டத்தை அழித்தனர்; மலை நாட்டைக் கைப்பற்றினர். சாளுக்கியரைப் புறங்காட்டி ஓடச் செய்தனர்; வனவாசி நகரைக்கைப் பற்றினர்; வடுகர்களை முறியடித்தனர்; இம்மகா சேனையினர் பாண்டிய நாட்டில் தங்கியிருந்தனர் என்றும் அஞ்சாநெஞ்சம் படைத்த வீரர்கள் என்றும் குறிக்கப்படுகின்றனர்.
மேலே கூறப் பட்ட வெற்றிகள் இராசராசன் - இராசேந்திரன் காலத்தில் நடை பெற்றவை. பாண்டிய நாட்டை அடக்கி ஆளச் சோழர் இப் பண்பட்ட படையைப் பாண்டிய நாட்டில் பல பகுதிகளில் நிறுத்தினர் போலும். மூன்று மகாசேனை போன்ற படைக் குழாங்கள் நல்ல தேர்ச்சி பெற்ற வீரமரபுகளில் தோய்ந்தவர்கள் என நாம் அறியலாம். மேலும், இப்படை 'மௌல' என்று அர்த்தசாஸ்திரத்தில் கூறப்படும் பரம்பரைப் படைவகையைச் சார்ந்ததெனக் கருதலாம். இப்படையினர் அன்றாடச் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டனர். அறக்கட்டளைகளைப் பராமரிக்க ஊர்ச்சபையோருடன் இணைந்து பணியாற்றினர் எனத் தெரிகிறது.
பாண்டியர்களின் படைதலைவர்கள் போர்வீரர்களை பற்றி பகுதி 3ல் காண்போம்.