முகப்பு வரலாறு தமிழக வரலாறு மூவேந்தர் வரலாறு சங்ககாலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் - இலக்கியங்கள் கூறும் வரலாறு..!
சங்ககாலத்தில் வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் - இலக்கியங்கள் கூறும் வரலாறு..!
பாண்டியரைப்பற்றி ஓரளவு தெளிவான சான்றுகள் சங்ககாலம் முதற்கொண்டு கிடைக்கின்றன என்று முன்னர் குறித்தோம். சங்க இலக்கியங்களே இக்காலத்தில் சான்றாகத் துணைபுரிகின்றன. இவ்விலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குரியதெனினும் இவை குறிப்பிடும் வரலாறு சுமார் கி.பி.முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குரியது என்பது பொதுவாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். சங்க நூல்களின் குறிப்புகளைக் கொண்டு பாண்டிய மன்னர்களின் வம்சாவளியையோ, முழுமையான வரலாற்று விவரங்களையோ அறிந்துகொள்வது சற்றுக்கடினமே. தொடர்பான வரலாற்றைக் கோர்வையாக எழுதுவதற்கான சிறப்பான வரலாற்று ஆதாரங்கள் என இவற்றை நாம் ஏற்க முடியாது. எனவே, இங்குச் சங்ககாலப் பாண்டி மன்னர்களைப் பற்றிய செய்திகள் தனித்தனியேயும் தொடர்பின்றியும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதிரியான வகைப்படுத்துதல் வரலாற்றுக்கு ஒவ்வாததெனினும், இம்முறையேயன்றி இச்சான்றுகளைக் கொண்டு கோர்வையான வரலாறு எழுத இயலாது.
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்:
தலைச்சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்தவனாகக் கருதப்படும் இப்பாண்டிய மன்னன் நெடியோன், நிலந்தரு திருவிற்பாண்டியன், பாண்டியன் மாகீர்த்திதேவன் எனவும் அழைக்கப்பட்டான். கடற்கோளால் இன்றைய குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நாட்டுப் பிரிவுகள் அழிவதற்கு முன்னர் பஃறுளி என்றதோர் ஆற்றை வெட்டுவித்தவன் என்றும், கடல் தெய்வத்திற்கு விழா வெடுத்தான் என்றும் புறநானூறு கூறும். தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இவ்வேந்தன் அவைக்களத்தே தொல்காப்பியம் அரங்கேற்றப்பெற்றதென மொழிகிறார். இம்மன்னன் மதுரையில் நடைபெற்றதான, திருவிளையாடல்களிலும் பங்கேற்றான் எனத் திருவிளையாடல் புராணம் குறிக்கும். இவனுக்குப் பிற்பட்ட காலத்தில் அளிக்கப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடுகளில் கடற்கோளால் உலகங்கள் அழிய ஒரு பாண்டிய மன்னன் மட்டும் உயிர் வாழ்ந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னமனூர்ச் செப்பேடுகளும் (இரண்டும்) பாண்டியன் கடல் மீது வேலெறிந்து பெரு வெள்ளத்தைத் தடுத்த கதையைக் கூறுகின்றன. இக்கதைகள், வடிம்பலம்ப நின்ற பாண்டியனைக் குறித்ததாகலாம் என்று வரலாற்றறிஞர் கருதுவர்.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி :
இவன் சங்ககாலப் பாண்டியர் வரலாற்றில் சிறப்புவாய்ந்த மன்னர்களுள் ஒருவனாகக் கருதப்படுகிறான். தான் ஆட்சி புரிந்த காலத்தில் பலயாகங்களைச் செய்து சிறப்புற்றவனாதலால் இவன் 'பல்யாகசாலை' என்னும் அடைமொழியைப் பெற்றான். 'பல்சாலை முதுகுடுமித் தொல்லாணை நல்லாசிரியர் - புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்' என்று மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் பாடியுள்ளார். 'நீ வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பல கொல்' எனப் புறநானூறு குறிப்பிடும். வேள்விக்குடிச் செப்பேடுகள் இக்கூற்றை உறுதிப்படுத்துகின்றன. வையையாற்றின் கரையில் பாகனூர்க்கூற்றத்துள் சோலைகள் சூழ்ந்த ஓரிடத்தில் வேள்வியிற் சிறந்த வேதியனான நற்கொற்றனுக்கு வேள்வி முற்றுவிக்க வேள்விக்குடி என்னும் கிராமத்தைத் தானமாகத் தந்தான். இவ்வரசன் 'கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னரை' அழித்தவன் எனப் புகழப்படுகிறான். மேலும் கடல் போன்ற படையைக் கொண்டு வேற்றரசர்களை வெற்றி கொண்டுள்ளான். ஆயினும், இவனிடம் தோற்ற அரசர் பற்றி எவ்விதக் குறிப்பும் நமக்குக் கிடைத்திலது. இவ்வரசன் பல பரிசில்களைப் புலவர்க்கும் அந்தணர்களுக்கும் வழங்கியுள்ளான். இம்மன்னன் குமரிக்கோடும், பஃறுளியாறும் கடல் கோளால் அழிவதற்கு முன்பே தமிழகத்தில் வாழ்ந்தவன் என்று சிலர் கருதுகின்றனர். இக்கருத்து ஏற்புடைத்தாகத் தெரியவில்லை. களப்பிரர் இடையீட்டுக்கு முன்பிருந்த பாண்டிய வேந்தன் என்பது வேள்விக்குடிச் செப்பேடுகளிலிருந்து தெரியவருகிறது. மேலும், மாங்குடி மருதன் இயற்றிய மதுரைக் காஞ்சியுள் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கும், தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுக்கும் முன்னர் வைக்கப்பட்டுள்ளான். மேலும் வடநாட்டு வேதவேள்விகள் முதுகுடுமியின் காலத்தில் அதிக அளவில் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதிலிருந்து வடநாட்டுத் தொடர்பு நெருக்கமடைந்த காலத்தில் வாழ்ந்த வனாகலாம் என்பது உறுதிப்படுகிறது. ஆயினும் களப்பிரர் இடையீட்டுக்கு எத்தனையாண்டுகள் முன்பிருந்து ஆண்டான் என அறிவதற்கான சான்றுகள் ஏதுமில்லை.
முடத்திருமாறன் :
இவன் இரண்டாம் கடற்கோளுக்கு முற்பட்ட பாண்டிய மன்னன் என்று பிற்கால நூலான இறையனார் அகப்பொருளுரை கூறும். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவனாகக் கருதப்படுகிறான். எனவே இம்மன்னனை இடைச்சங்க காலத்து இறுதியில் வாழ்ந்தவன் என்பர். கடற்கோளுக்குப் பின்னர், தமிழ்ப் புலவர்களுடன் வடக்கே சென்று மணலூர் என்னும் சிறு நகரில் தங்கினான் எனவும், பின்னர் மதுரையைத் தலைநகராக நிர்மாணித்துப் பாண்டிய ஆட்சியை நிலை நிறுத்தியவன் எனவும் சொல்லப்படுகிறது. இச்செய்தியைக் குறிப்பனபோல் பராந்தக பாண்டியனது தலைவாய்ப்புரச் செப்பேடுகள், 'தென்மது ராப்புரஞ் செய்தும், அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கமிரீத் தமிழ் வளர்த்தும்' என மொழிகின்றன. இம்மன்னனின் தமிழ்ப் புலமைக்கு எடுத்துக்காட்டாக நற்றிணையில் இரண்டு பாடல்கள் காணப்படுகின்றன.
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி:
இவ்வேந்தனைப்பற்றி விரிவான செய்திகள் ஏதும் கிடைத்தில. ஆயினும் 'கடலுண்மாய்ந்த' என்னும் அடைமொழியால் இம்மன்னன் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று துணியலாம். கலம் செலுத்திப் போரில் ஈடுபட்டபோது மாய்ந்தான் என்று கருதப்படுகின்றது. இம்மன்னன் பாடிய புறநானூற்றுப்பாடல் மூலம் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் சான்றோரால் தான் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது என்று குறித்தலால் இவ் வேந்தன் ஈகை, இரக்கம் போன்ற தூயநற்குணங்களுக்கு அளித்த சிறப்பிடத்தை அறியமுடிகிறது. பரிபாடலில் திருமாலிருஞ் சோலைமலையில் அமர்ந்திருக்கும் திருமாலின் அடிகளை வணங்குதலினால் ஏற்படும் சிறப்பை இசைத்துள்ளான். இதன்மூலம் இவ்வேந்தன் திருமாலிடம் கொண்ட ஈடுபாடு புலனாகிறது.
அறிவுடை நம்பி :
இவன் அரிய கல்வியும் பெருஞ்செல்வமும் ஒருங்கே பெற்றிருந்தான். கோப்பெருஞ் சோழனின் உயிர் நண்பரான பிசிராந்தை யார் இவ்வேந்தனைப் பற்றியும் பாடியுள்ளார். இவ்வரசன் சிறந்த செந்தமிழ்ப் புலமையுடையவன். இவன் பாடிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நூல்களில் உள்ளன. நேர்மையாக வரி பெறுவதனால் ஏற்படும் பலன்பற்றி மிகச்சிறந்த முறையில் அறிந்து வைத்துள்ளான். இது இம்மன்னனின் ஆட்சித்திறமைக்குத் தக்க சான்றாகமிளிரும். 'மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லை தாம் வாழும் நாளே' என்று பாடிய இவ்வேந்தன் குழவிச் செல்வத்தை உயர்ந்த செல்வமாக மதித்தான் எனலாம். இவன் பெருங்கொடை வள்ளலாக வாழ்ந்தவன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இவன் அறிவுசால் மன்னனும், சிறந்த போர்வீரனும் ஆவான். ஒல்லையூர் என்னும் ஊரை வெற்றி கொண்டவன் இவன் என்பதை இவன் பெற்றுள்ள அடைமொழியைக்கொண்டு குறிப்பிடலாம். இவ்ஒல்லையூர் எவ்விடத்தில் உள்ளது என்பது பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. ஒரு சாரார் திருவனந்தபுரம் தாலுக்காவில் உள்ளது என்றும், மற்றொரு சாரார் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓவியமங்கலம் எனவும் உரைப்பர். இவன் தனக்கரு கமைந்த குறுநில மன்னர்களுடன் நட்புறவு கொண்டு திகழ்ந்தான். மையல் என்னும் ஊரின் தலைவனான மாவன், எயில் ஊரின் தலைவனான ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் என்போரை நண்பர்களாகக் கொண்டிருந்தான். இவன் மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பூதப் பாண்டியன் இறந்தவுடன், பெருங்கோப்பெண்டு, ஈமத்தீயில் பாய்ந்து மாண்டாள். கைம்மை நோன்பின் கொடுமையை இவள்பாடிய பாடல் தெளிவுபட உணர்த்துகிறது.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் :
மதுரையில் இருந்து அரசாண்ட இம்மன்னன் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்தோனாவான். சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் கணவன் கோவலனைத் தவறுதலாகத் தண்டித்த வேந்தன் இவனே. தவற்றை உணர்ந்த இவன் அரியணையிலிருந்த வண்ணம் உயிர் துறந்தான் எனச் சிறப்பிக்கப்படுகிறான். உடன் இருந்த இவன் மனைவி கோப்பெருந்தேவியும் அக்கணமே உயிர் துறந்தாள் எனச் சிலப்பதிகாரம் குறிக்கும். ஆரிய மன்னர்களை வென்றதனால் இவன் 'ஆரியப்படை கடந்த' என்ற அடைமொழியை ஏற்றான் எனத் தெரிகிறது. இம்மன்னனுடன் போரிட்டுத் தோற்ற வட ஆரியர் யார் என்பது தெளிவாகவில்லை. இவன் கற்றோரைப் பெருமதிப்புடன் ஆதரித்தான் என்பதை இவன் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம்.
சித்திரமாடத்துத் துஞ்சியநன்மாறன் :
இவன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனின் தம்பியாவான். இவன் இளவரசாக இருந்தபோது வெற்றி வேற்செழியன் என்ற பெயருடன் கொற்கையிலிருந்து அரசாண்டான். அரசன் மதுரையில் இறந்தவுடன் கொற்கையிலிருந்து மதுரைக்கு வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றனன். இவன் காலத்தில், இவனது முன்னோன் செய்த தீவினையின் பயனால் நாடு மழை வளமின்றி வறுமையுற்றிருந்தது. இவ்இன்னல்களை நீக்கி நாடு வளம் பெறச் செய்வதற்காகவும் கண்ணகியின் சினம் தணியவும் பெருவிழா ஒன்று நடத்தினான். இதன் முடிவில் கண்ணகியின் சினம் தணிந்து, நாட்டில் செல்வச் செழுமை வளர ஆரம்பித்தது எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடும். சீத்தலைச் சாத்தனார் பாடிய பாடலில், தன்னைச் சார்ந்தோர்க்கு நன்மையையும், பகைவருக்குத் தீமையையும் தரும் வன்மை உடையவன் என்று இவன் குணச் சிறப்பைப் புகழ்கிறார். சித்திரமாடத்தில் இவன் மாய்ந்ததனால் இப்பெயர் இம் மன்னனுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் :
சங்ககாலப் பாண்டிமன்னருள் தலைசிறந்த மன்னனாக இவன் கருதப்படுகிறான். இவன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனின் புதல்வன் எனச் சிலர் கருதுவர். பத்துப்பாட்டிள்ள மதுரைக் காஞ்சியும் நெடுநல்வாடையும் இவ்வேந்தன்மீது பாடப்பட்ட பாடல்களாகும். இவன் இளமையிலேயே ஆட்சிப் பொறுப்பேற்றான். 'இளையோன் இவன்' என்று எண்ணிச் சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், சோழன் பெருநற்கிள்ளியும் ஒன்று சேர்ந்து, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவருடன் மதுரையை முற்றுகையிட்டு இவன்மீது போர் தொடுத்தனர். இவன் இளைஞனாயினும் சிறிதும் அஞ்சாமல் படையுடன் சென்று எதிரிகளுடன் பொருது அவர்களைப் புறமுதுகிட்டோடும்படி செய்தான். இப்பெரும் போர் தஞ்சை மாவட்டத்திலுள்ள தலையாலங்கானம் என்னும் ஊரில் முடிவுற்றது. இப்போர்க்களத்தில், யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர விரும்பொறை பாண்டியர்களால் சிறை பிடிக்கப்பட்டான். இவ்வெற்றியின் விளைவாகத் தமிழகப் பகுதியில் பெருவேந்தனாக மதிக்கப்பட்டான். இப்போரைத் தொடர்ந்து நடத்திச் சென்றான். பகைவரை உறையூர் வஞ்சி முதலிய நகரங்கள் வரை துரத்திச் சென்றான். வேளிர்களுக்குரியவையாகிய மிழலைக் கூற்றத்தையும், முத்தூற்றுக் கூற்றத்தையும் கைக்கொண்டு பாண்டி நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். இப்பெரு வெற்றியைப் பற்றிப் பிற்காலச் சின்னமனூர்ச் செப்பேடும் 'தலையாலங் கானத்திற்றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற்றலை துமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும்' என்று வர்ணிக்கிறது. 'ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும்' என்று தளவாய்புரச் செப்பேடும் குறிக்கின்றது. இவ்வரசனின் உயர் பண்புகளைப் பற்றியும், பெற்ற பெரு வெற்றியைப் பற்றியும் மாங்குடி மருதனார் தம் மதுரைக்காஞ்சி என்னும் நூலுள் புகழ்ந்து பேசுகிறார். இவனது நல்லாட்சியின் சிறப்புகள் மற்ற இடங்களுக்கும் பரவ வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார், கொற்கைக்காவலன் பரதவர் தலைவன் என்று இவன் போற்றப்படுகிறான். வைதிக சமயப்பற்றுமிக்கவன். பல வேத வேள்விகள் செய்தான்; அந்தணர்களை நன்கு ஆதரித்தான்; புலவர்களைச் சிறப்பாக மதித்தான். இவனது அரசவையில் மாங்குடி மருதன் தலைமையில் ஒரு சிறந்த புலவர் குழு இருந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. நக்கீரர், பரணர் போன்றோர் இவன் அவைக்களத்தில் இருந்தனர்.
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி :
இவன் சங்ககாலப் பாண்டிமன்னர்களுள் கடைசி அரசனாகக் கருதப்படுபவன். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் என்று கருதுவர். கானப்பேர் என்னும் அரணைத்தாண்டி அப்பகுதியை ஆட்சிபுரிந்த வேங்கைமார்பனைக் கைப்பற்றியதால் இப்பெயர் பெற்றனன் என்பர். இக்கானப்பேர் தற்போது காளையார்கோவில் என்னும் சிறு ஊராகும். இவன் காலத்தில் சேர நாட்டைச் சேரமான் மாவண்கோவும் சோழ நாட்டை இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஆண்டு வந்தனர். அவ்விருவரும் இவனுக்குச் சிறந்த நண்பர்களாய் இருந்தனர். இம்மன்னன் அரசவையில் தான் திருக்குறள் அரங்கேறியது என மொழிவர். இவ் அரசனே அகநானூற்றுப் பாடல்களைத் தொகுக்க வழி செய்தான் என்பர். இவன் இயற்றிய பாடல்கள் அகநானூற்றிலும் (26) நற்றிணையிலும் (98) உள்ளன. இப்பாண்டிய மன்னர்களேயன்றி மேலும் பல பாண்டி மன்னர்களைப் பற்றிய சில குறிப்புகள் சங்க நூல்களில் விரவிக்கிடக்கின்றன. இவற்றுள் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஆகியோர் பெருமை பெற்றவராகத் தெரிகிறது. வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெரு வழுதி சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனுடைய நண்பன். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனாரால் பாடப்பட்டவன் (புறம் - 58). கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி வட வரை வென்றவன் என்றும், பல மன்னர்களிட மிருந்து திறை பெற்றான் என்றும் தெரிகிறது. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு, படைச்செருக்குக் கூடாதென்றும், நீதிகோட்லே நன்று என்றும் அறிவுரை பகர்ந் துள்ளார் புலவர். நக்கீரர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் இவன் பராக்கிரமத்தைப் புகழ்ந்துள்ளனர். இவன் காலத்தில் யவனர்கள் மதுவகைகளை விற்று வாணிபம் செய்த செய்தி கூறப்படுகிறது. கீரன் சாத்தன் என்னும் பாண்டிய மன்னன் புறமுதுகிட்டோடும் மன்னரைத் தடுத்து நிறுத்தி அபயம் அளிப்பவன் என்பதாகப் புகழ்கின்றார் ஆவூர் மூலங்கிழார். மதிவாணன், பொற்கைப் பாண்டியன், கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி, பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி, நல்வழுதி, குறுவழுதி, நம்பி நெடுஞ்செழியன் ஆகியோரைப் பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. பன்னாடு தந்த மாறன் வழுதி சிறந்த செந்தமிழ்ப்புலவன். நற்றிணை இவனால் தொகுக்கப்பட்டது என்று கருதப்படுகிறது. இவர்கள் அனைவரும் மன்னர்களாக இருந்து அரசோச்சினர் என்பதும் அவர்களுக்குள்ள உறவுபற்றியும் உறுதியாகக் குறிப்பிடச் சான்றுகள் இல்லாதது ஒரு குறையாகும். ஒரே காலத்தில் பல பகுதிகளையும் ஆண்ட பாண்டியர் சிலர் ஆட்சி பொறுப்பேற்று இருக்கலாம். சிலர் அரச குமாரர்களாகவும் இளவரசர்களாகவும் இருந்திருக்கலாம்.
தொடரும்..