பாண்டியர் போர் படைகள் பற்றி அறியாத தகவல்கள்..!

பாண்டியர் போர் படைகள் பற்றி அறியாத தகவல்கள்..! (பகுதி3) History of Pandiya kingdom army

படைத்தலைவர்களும் உயர் அதிகாரிகளும் :

படைத்தலைவர்க்குச் சேனாபதி, சாமந்தன், தண்டநாயகன் என்றும், உயர் தலைவர்களுக்கு, மகாசாமந்தன், மகாதண்ட நாயகன் என்னும் பெயர்களும் வழங்கின. மகாசாமந்தனாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் போரில் வல்லவர்கள் மட்டுமன்றிச் சிறந்த அறிவாளிகளாகவும் திகழ்ந்தனர். நெடுஞ்சடையப் பராந்தகன் காலத்தில் மகா சாமந்தனாய் கணபதியையும் அவனது தம்பி ஏனாதி எட்டிச் சாத்தனையும் எடுத்துக்காட்டுகளாய்க் கொள்ளலாம். படைத்தலைவனாகவும் பெருவீரனாகவும் விளங்கிய சாத்தன் தமிழ்ப் புலமையுடையவனாகவும் இருந்தான். வேள்விக்குடிச் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியில் பாண்டிவேந்தர் பலருடைய வர லாறுகளை அழகிய தமிழில் வரைந்துள்ளான். 'ஏனாதி' என்ற பட்டமும் பெற்றவன். இவ்வரசன் ஆட்சியின் பிற்பகுதியில் மகா சாமந்தனாய் விளங்கியவன் தீரதரன் மூர்த்தி என்பவன். 


அந்தணர் குலத்திலிருந்தும் பலர் மகாசாமந்தர்களாகவும் தண்டநாயகர்களாகவும் பணியாற்றினர். மேலே குறிப்பிட்ட மகாசாமந்தன் கணபதியும் அவனது தம்பியுமான ஏனாதிச் சாத்தன் களக்குடியில் (கரவந்தபுரம் அல்லது இப்போதைய உக் கான்கிரட்டை) வைதிக்குலத்தைச் சார்ந்தவர்களெனக் கல்வெட்டு குறிக்கிறது. அவர்களுக்குப் 'பிரம்மரையன்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. மாறவர்மன் குலசேகரன் காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்துப் பாண்டியப்படைக்குத் தலைமை தாங்கி வெற்றிவாகை சூடிய ஆரியச் சக்கரவர்த்தி என்பவன் சிறந்த 'மகாதண்டநாயகன்' என்றும், 'தனி நின்றுவென்ற பெருமாள்' என்றும் போற்றப்பட்டான். 


பொதுவாக, சிறந்த படைத்தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் மூவேந்த மங்கலப் பேரரையன், பாண்டி மங்கலப் பேரரையன், பாண்டி, மார்த்தாண்டப் பேரரையன், வீரமங்கலப் பேரரையன், பாண்டி இளங்கோ மங்கலப் பேரரையன் போன்ற பல சிறப்புப் பெயர்கள் வழங்கப்பட்டன. அரசருக்கு மெய்க்காப் பாளர் படை அணுக்கப்படை என்று வழங்கப்பட்டது. அதன் தலைவன் தென்னவன் அணுக்கப் பேரரையன் என்று வழங்கினான்.  


போர் வீரர்கள் : 


சில குடும்பத்தினர் பல தலைமுறைகளாகப் பாண்டியர்களிடம் . படைத்தலைவர்களாகப் பணியாற்றியுள்ளார்கள். திண்டுக்கல் அருகில் பெரும்புள்ளி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டொன்று பாண்டியனிடம் பணியாற்றிய வீரர் குடும்பத்தின் வரலாற்றைக் குறிக்கின்றது. அதன்படி பராந்தகப்பள்ளி வேளான் என்பான் நெடுஞ்சடையப் பராந்தகனுக்காக இடவைப் போரில் கலந்து கொண்டான். அவனது மகன் புள்ளன் நக்கன் என் பவன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனுக்காக விழிஞம், திருக்குடமுக்குப் போன்ற போர்களில் போர் சண்டையிட்டு வெற்றி தேடித்தந்த பெரு வீரனாவான். அவனது மகன் நக்கன் புள்ளன் இரண்டாம்  வரகுணனிடம் பணியாற்றியவன். ஆக, ஒரு குடும்பமே பாண்டிய நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டது என்பதை அறியலாம். பாண்டியரிடம் பணியாற்றிய மகாசாமந்தரும் படைத்தலைவர் களும் நாட்டுப்பற்றும் அரசப்பற்றும் மிகுந்த பண்பாளர் களாகவே திகழ்ந்தனர். பிற்காலத்தில் விசயநகர ஆட்சியிலும், மகமதியர் ஆட்சியிலும் நடந்தது போன்று படைவீரர்கள் அரசனுக்கே துரோகம் செய்து நாட்டைக் கைப்பற்றியதான நிகழ்ச்சி யேதும் பாண்டிய வரலாற்றில் நிகழவில்லை. வாழையடி வாழையாக வந்த பாண்டிய மன்னர்களுக்குப் படைத்தலைவர்கள் நன்றி விசுவாசத்துடன் பணியாற்றினர். படைத்தலைவர்கள் மட்டுமன்றிக் கீழ்மட்டப் படைவீரர்களும் தாங்கள் பட்ட செஞ்சோற்றுப் பெருங்கடனுக்காகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்தார்கள். அவ்வாறு உயிர் நீத்த இருவீரர்களின் தியாக வரலாற்றை விழிஞத்தில் கிடைத்துள்ள இரு வீரக்கற்கள் எடுத்துரைக்கின்றன


தொடரும்..