இராஜராஜ சோழன் வெட்டி வீசிய மண்டையோடுகளா?
பொதுவாக பல்லவ - சாளுக்கிய போர்களிலோ, சோழ- சாளுக்கிய போர்களிலோ, பாண்டிய-சோழ சண்டைகளிலோ கூட தலைநகர் எரிக்கப்படும், அரண்மனைகள் கொளுத்தப்படும், பெண்களை சிறைபிடிப்பார்கள். ஆனால் இதுவரை மற்ற பேரரசுகளின் வழிபாட்டு தளங்களான கோவில்களில் யாருமே கைவைத்தது இல்லை என்றே இதுகாறும் படித்து வந்தோம். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அகழ்வாய்வு இந்த கருத்துக்கு எதிரான தகவல்களை தந்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் தார்வாடு மாவட்டம் அன்னிகிரியில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய்க்காக எடுக்கப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக நூற்றுக்கணக்கான மண்டையோடுகள் கிடைத்திருக்கிறது. உடனே அதிர்ச்சியில் உறைந்த அந்த பகுதியினர் அரசுக்கு தெரியபடுத்த, கர்நாடக அரசு தொல்லியல் துறை அந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்கு எடுத்து அகழ்வாய்வு செய்தது. அதில் 1.7 மீ ஆழம் வரையில் சுமார் 471 மண்டையோடுகள் கிடைத்தன.
இதற்கு விளக்கம் தந்தே ஆகவேண்டிய கடமையும் கட்டாயமும் கர்நாடக தொல்லியல் துறைக்கு ஏற்பட்டது. உடனே இந்த இடத்தில் ஏதாவது போர்கள் நடந்திருக்கலாம். இல்லையெனில் மிகப்பெரிய முறையில் கழுவேற்றம் நடந்திருக்கலாம் என அங்குள்ள ஆய்வாளர்கள் பலர் கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் பரபரப்பான ஒரு விளக்கத்தை கொடுத்தார் பேராசிரியர் JM நாகைய்யா (Dr RC Hiremath Institute of Kannada Studies [KUD]). அதாவது கிபி 1007இல் முதலாம் இராஜராஜ சோழன் மேலை சாளுக்கிய அரசனான சத்யாசிரியனை போரில் கொன்று , மான்யகேடத்தை கைபற்றி அங்குள்ள பிராமணர்களையும், குழந்தைகளையும், சில பெண்களையும் கொன்று, பல பெண்களை சிறைபிடித்து சென்றதாக Hottur எனுமிடத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. இதனை எடுத்துக்காட்டிய பேராசிரியர் நாகைய்யா அவர்கள், இராஜராஜன் ஈவிறக்கமின்றி மேலை சாளுக்கியர்களை சைவத்திற்கு மதம் மாற வற்புறுத்தியதாகவும் அதனை ஏற்காதவர்களை கொன்று குவித்துவிட்டு சென்றதாகவும் அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் மண்டையோடுகள் தான் இவை எனவும் கூறியதோடு மற்றொரு சோழ அரசரின் போரையும் குறிப்பிடுகிறார்.
அவர் வேறுயாருமல்ல, இராஜேந்திர சோழனின் மகனான இராஜாதிராஜர் தான்.
இராஜாதிராஜர் காலத்திலும் மேலை சாளுக்கியர்களுடனான போர் தொடர்ந்தது. அதில் சாளுக்கிய அரசனான முதலாம் சோமேஸ்வரனை வென்று கல்யாணபுரத்தை எரிக்கிறார் இராஜாதிராஜர். இது அனைவரும் அறிந்த தகவல் தான். ஆனால் பலரும் அறிந்திராத ஒரு கல்வெட்டு தகவல் ஒன்று கர்நாடத்தில் கிடைக்கிறது. அதாவது அன்னிகிரி அருகே கவார்வாட் (Gawarwad)எனுமிடத்தில் இரண்டாம் சோமேஸ்வரன் காலத்து கல்வெட்டொன்று கிடைக்கிறது. இது கிபி 1071ஐ சேர்ந்தது. இந்த கல்வெட்டின் ஒருவரியில் அன்னிகிரியில் மேலை கங்க மன்னன் இரண்டாம் படுகனின் (வடுகன்) காலத்தில் அவனால் கட்டப்பட்ட ஜைன கோவிலை சோழ மன்னனான இராஜாதிராஜன் அழித்தான் எனும் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டாம் படுகன் வேற யாருமில்ல, தக்கோல போரில் இராஜாதித்தனை வீழ்த்த இராஷ்ட்ரகூட அரசனுக்கு துணைநின்றவன்.
இந்த கல்வெட்டில் கூடவே இன்னொரு தகவலையும் இரண்டாம் சோமேஸ்வரன் தருகிறார். அதாவது சோழ மன்னனின் இந்த கொடிய பாவத்துக்கு தான் கொப்பத்து போரில் சாளுக்கிய அரசனாலேயே அவனுக்கு மரணம் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கிறார். உண்மையில் கொப்பத்து போரில் இராஜாதிராஜன் இறந்தாலும் சோழ படையின் உத்வேகத்தை துரிதபடுத்த போர்களத்திலேயே இராஜாதிராஜனின் தம்பியான இரண்டாம் இராஜேந்திரன் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டு அந்த போரில் வெற்றிவாகை சூடுவார்.
ஆகவே இந்த கல்வெட்டை கொண்டு பேராசிரியர் நாகைய்யா இன்னும் ஆணித்தரமாக இறங்கி, அன்னிகிரியில் கிடைத்துள்ள இந்த மண்டையோடுகள் நிச்சயமாக இராஜாதிராஜன் அழித்த ஜைன கோவிலை காக்க வந்தவர்களை அவர் வெட்டி வீழ்த்தியதாகத்தான் இருக்கும் என எழுதியிருக்கிறார். அவரது இந்த கட்டுரை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்துள்ளது. அதன் லிங்க் கமெண்டில் பார்க்கவும்.
மேலும் இந்த மண்டையோடுகளை கார்பன் டேட்டிங் செய்து சரியான காலத்தை கணிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பிகு. இரண்டு கல்வெட்டும் இருப்பது உண்மை. அதில் hottur கல்வெட்டில் குறிப்பிடும் செய்திகளில் மதம் மாற்ற வற்புறுத்தியதாக இல்லை. ஒருவேளை சில வார்த்தைகளை கொண்டு இவர் அனுமானித்து இருக்கலாம். மற்றொரு கல்வெட்டில் இராஜாதிராஜர் ஜைன கோவிலை அழித்த தகவல் உண்டு. ஆனால் அழிக்கும்போது காக்க வந்தவர்களின் தலைகளை வெட்டினார் என்பதெல்லாம் அதில் இல்லை. அதெல்லாம் விட முக்கியமான தகவல் ஒன்னு இருக்கு. இந்த கட்டுரை வெளிவந்து சில மாதங்களுக்கு பின் கார்பன் டேட்டிங் ஆய்வு முடிவு வெளிவந்தது. அதில் இந்த மண்டையோடுகள் 181 வருட பழமையானது என தெரியவந்துள்ளது. 😜
படம்: அன்னிகிரியில் கிடைத்த மண்டையோடுகள்.