இராஜராஜ சோழனும் தேவரடியாளும்..!

இராஜராஜ சோழனும் தேவரடியாளும்..! 


முற்காலத்தில் தெய்வீக வழிபாட்டின் அங்கமாக நாட்டியம் திகழ்ந்தது. பதினாறு அங்கங்களை உடைய வழிபாட்டு முறையில் கூத்து (நிருத்தம்) பதினைந்தாவது அங்கமாகக் குறிக்கப்படுகிறது. தாண்டவம் எடுத்துரைத்த தவச்செல்வர் சிவபெருமான் ஆதலின் அவர் உரைகின்ற கோயிலில் சுவர்களில் அப்பெருமான் ஆடிய 108 கரணங்களை சிற்பமாகச் செதுக்கி அமைத்த பெருமை இராஜராஜனையே சாரும். 


தில்லையிலே நடம்புரிகின்ற கூத்தப்பெருமானிடத்தில் எல்லையில்லா ஈடுபாடு கொண்ட இராஜராஜப் பெருந்தகை, தான் தோற்றுவித்த நடராஜப் பெருமானின் உருவங்களை 'ஆடவல்லான்' என்று அழைத்து அகமகிழ்ந்தான். தன் நாட்டில் வழங்கிய அளவுகளுக்கும் ஆடவல்லான் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தான். இறைவன் ஆடிய ஆடலில் தன் உள்ளத்தைப் பறி கொடுத்த இப்பெருந்தகை தன் நாட்டிலே ஆடலில் சிறந்து பெரும்புகழ் எய்திய நானூற்றுக்கும் மேற்பட்ட நாட்டிய மகளிர்களுக்குத் தான் தோற்றுவித்த பெருங்கோயிலில் நாட்டியப் பணிபுரியும் பேறு அளித்தான். இந்நாட்டிய மகளிர்கள் பல்வேறு கோயில்களிலே நாட்டியப் பணி புரிந்து சிறந்தவர்கள். இவர்களில் பலர் ஆடவல்லாள், ஐயாறு, புகழி, பெற்ற திரு, பாவை முதலிய அழகிய பெயர்களைக் கொண்டிருந்தனர். இராஜராஜன் மீது ஆறாத காதல் கொண்டிருந்த ஒருவள் 'இராஜராஜி' என்றே பெயர் கொண்டிருந்தாள். 


தேவரடியாளாகத் இருக்க வேண்டிய தகுதிகள்


இவர்கள் கோயிலிலே கூத்தாடுபவர்களே ஆயினும் இவர்களது தொழிலுக்குத் தேவையான தகுதியை இவர்கள் பெற்றிருக்கவேண்டும், உரிய கல்வியும் பயிற்சியும் உடையவர்களே தேவரடியாளாகக் கோயிலில் பணிபுரிய முடியும். இவர்களில் யாராவது இறந்துவிட்டால் அல்லது வேறு நாட்டிற்குச் சென்று விட்டால் இவரது அடுத்த வாரிசுகள் (அடுத்த முறை கடவார்) இப்பணியைச் செய்யலாம் என்ற குறிக்கப்பட்டது. இவர்களில் வாரிசாக இருந்தாலும் உரிய தகுதி, கல்வி பயிற்சி இல்லாவிட்டால் (அடுத்த முறை கடவார் தாம் தாம் யோக்யர் அல்லாதுவிடில் யோக்யராயிருப்பாரை ஆளிட்டு பணி செய்வித்துக் கொள்ளவும்) அவர்கள் பணி செய்யமுடியாது, ஆயினும் பணி தடைபடாமல் இவர்களே தகுதியுடைய வேறு ஆட்களை நியமித்து இப்பணி செய்யலாம் என்று இராஜராஜன் பணித்தான். இதிலிருந்து இரண்டு செய்திகளை அறிகிறோம். ஒன்று கோயில்களில் பணிபுரிவாரின் சந்ததிகளுக்கு வருங்கால வாழ்வுக்கு வழி வகுக்கப்பட்டது. வழிவந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே அவர்கள் பணி செய்ய உரிமை உண்டு என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சந்ததியாக இருந்தாலும் உரிய தகுதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தகுதி பெறாவிட்டால் சந்ததியினரே வேறு தகுதியுடைய ஆளை அமர்த்திக் கொண்டு பணி செய்விக்கலாம். இந்த வாய்ப்பு மிகவும் இன்றியமையாதது. காரணம் சந்ததியினர் உடல்நலக்குறைவாலோ அல்லது பிறப்பிலே ஏற்பட்ட குறைகளாலோ வாழ வகையின்றிப் போய்விடக்கூடாது என்பதாகும். அவ்வாறு குறைபாடு உள்ளவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறை அப்பணியைச் செய்யக் கூடுமாதலின் அவர்களுக்கு இவ்வாய்ப்பை அளிக்கவேண்டும் என்று இராஜராஜன் கருதியிருக்கிறான். 


இதிலிருந்து அவன் எந்த அளவுக்குப் பணிபுரிவாரின் வாழ்விலும், அவர்களது சந்ததியாரின் வாழ்விலும் நலனிலும் அக்கறை எடுத்துக்கொண்டான் என்பது தெளிவாகிறது. அவ்வாறு அடுத்த சந்ததியினர் இல்லாது போய்விட்டால் பதிலாகத் தகுதியுள்ளவர்களை நியமிக்கக் கோயில் நிர்வாகத்தினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இவ்வாறு நாட்டியப் பணிபுரியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓர் ஆண்டிற்கு 100 கலம் நெல் கொடுக்கப்பட்டது. 400 - க்கும் மேற்பட்ட இந்த ஆடல் மகளிர்களுக்கு வசிப்பதற்கு என்று பல தெருக்களை அமைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் எண் இட்டு, எந்த வீட்டில் யார் இருந்தார்கள் என்பதையும் இராஜராஜன் கல்வெட்டு குறிக்கிறது. இவர்களுக்கு நாயகம் செய்ய சாவூர் பரஞ்சோதி என்பவரும் கோவிந்தன் சோமநாதன் என்பவரும் நியமிக்கப்பட்டார்கள்.


இராஜராஜ சோழன் காலத்தில் மிகவும் புகழ் வாய்ந்தவர்களாக கருதப்பட்ட தேவரடியார்கள் பிற்காலத்தில் தவறான பெண்களாக சித்தரிக்கப்பட்டனர்.