பாண்டியர்களின் சின்னம்
மாறவர்மன் ஓவியங்கள்
பாண்டிய நாடே பழம்பதி என்பது மாணிக்கவாசகரின் கூற்று.. பாண்டியர்களின் பெருமைமிகு சின்னம் என்பது இருகயல் மற்றும் சென்டோடு மட்டும் தான் அமையப் பெற்றிருக்கும் என இன்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்... இலக்கியங்கள் பல பாண்டியரின் பெருமைகளை கூறினாலும், இன்றைய ஆய்வாளர்களோ சங்க காலம், முற்கால பாண்டியர் , சோழர்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்னான மாறவர்மன் சுந்தர பாண்டியர் தொடங்கி வைத்த பிற்கால பாண்டிய எழுச்சி காலம் முதல் முகமதிய படையெடுப்புகளோடு பாண்டியர்களின் வரலாறு முடிந்துவிட்டதாகவே கருதுகின்றனர்..
பிற்கால பாண்டியர்கள் பற்றிய தேடல் மிக குறைவே.. தமிழை ஒத்த பழம்பெருமை வாய்ந்த பாண்டிய குலத்தவர்கள் மதுரையின் வீழ்ச்சிக்கு பின்னர் தென்காசி சென்று காடு திருத்தி ஆட்சி நிறுவி கயல் கொடி பறக்கவிட்டனர்..
பேரரசு அந்தஸ்து இல்லை என்றாலும், தாம் ஆட்சி புரிந்த பகுதிகளில் செல்வாக்கோடும் பொது தேவைகள் பூர்த்தி, ஆன்மீகம், கட்டிடக்கலை செழிக்க பல்வேறு கட்டங்களில் சிறப்புற பணியாற்றியுள்ளனர்.. சிறந்த ஆட்சியும் செலுத்தி உள்ளனர்... உதாரணமாக பிற்கால பாண்டியர்களின் வழித்தோன்றல்களில் சிறப்பிடம் பெற்ற பராக்கிரம பாண்டியர் எழுப்பிய தென்காசி விசுவநாதர் பேராலயம் பக்திக்கும், கட்டிட கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு..
அது நிற்க.. சங்க காலம் தொட்டே பாண்டியர்கள் தங்கள் இலச்சினையாக யானை, மலை, ஒற்றை மீன் போன்ற சின்னங்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.. (பார்க்க சங்க கால நாணயங்கள்).. புராணம் கூறும் மலயத்துவஜ பாண்டியன் (மலையை கொடியாக கொண்டவர்) பின்னர் இரட்டை மீன் (செண்டு அல்லாது), இருகயல் ஒரு செண்டு, இருகயல் இரு செண்டு, ஒரு கயல் ஒரு செண்டு, செண்டு நீளமாக மீன்கள் சின்னதாக, எதிர் எதிர் திசையில் இரு மீன்கள் சந்திப்பது போன்றும், ஒரு செண்டு ஒரு கமலம் ஒரு மீன் (தென்காசி பகுதியில் ஏராளமாக காணலாம்), இடையில் ராசி சக்கரத்துடன் ஒரு செண்டு ஒரு மீன், பின்னர் மீண்டும் பழங்கால வடிவம் போலவே ஒற்றை மீன் என பல பரிணாமங்கள் என பல மாற்றங்கள் பல பாண்டிய மன்னர்களின் காலத்தில் நடைபெற்று உள்ளன என்பதை கால வரிசைப்படி உள்ள இலச்சினைகளின் அமைப்புகளை கண்ணுற்றால் புரியும்..
செண்டு மற்றும் மீன்களின் அங்க அமைப்புகளிலே கூட நிறைய மாற்றங்கள் காண முடிகின்றது.. சங்க காலத்தில் முக்கோண அமைப்பில் கோடு வடிவமாக இருந்த மீன், பின்னர் கெண்டை மீன்கள், சிறு பற்கள் தெரியும் வண்ணம் உள்ள மீன் மற்றும் செண்டு,மகர மீன் மற்றும் செண்டு (பராக்கிரம பாண்டியரின் இலச்சினை) என வகைப்படுகிறது..
கோவில் சுவர்களில் காணப்படும் மீன் சின்னங்களை வளமையின் குறியீடு என ஆர்வலர்கள்/ஆய்வாளர்களால் பரவலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீன் மட்டும் தான் வளமையின் அடையாளமா? பிற்கால பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏனோ யாரும் பாண்டியர்களின் வரலாற்று தடங்களை அவ்வளவாக கண்டுகொண்டதாக தெரியவில்லை, அவர்களின் வீர தீர பராக்கிரமங்கள் ஏனோ பதிவு செய்யப்படவில்லை.. கயல் சின்னத்தைப் பற்றிய புரிதலே குறைவு என்னும் போது செண்டுடன் இருந்தால் மட்டுமே பாண்டிய இலச்சினையா கொள்வார்களோ இன்றைய ஆர்வலர்கள்/ஆய்வாளர்கள்?? மூத்த ஆய்வாளர்கள், அறிஞர்களின் ஆய்வுகளை மட்டுமே படித்து பின்பற்றினால் வரலாறு சரி என்று ஆகிவிடுமோ...? வட்டம் தாண்டி வெளி வந்து பார்க்க வேண்டாமோ பாண்டியரின் தொடர்ச்சியை...