திருவேங்கடம் மலைப்பகுதிகளில் வாழ்ந்த களவர் என்பவர்கள் தான் இந்த களப்பிரரா என்ற ஆய்வுகள் இருந்த போதிலும், இப்பெயர் கன்னடத்தில் களபரு என்று மாறும்; வடமொழியில் களப்ரா என்று மாறுதல் பெறும். இது தமிழில் களப்பிரர் என உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர்; அரச பரம்பரையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வென்றவராகப் பாண்டியர்-பல்லவர் பட்டயங்கள் குறிக்கின்றன.
தமிழகத்துக்கு வெளியே வேற்றரசர் பட்டயங்களில் இவர்கள் குறிப்பிடப்படாமையின், இவர்கள் தென்னிந்தியாவினரே என்பது தேற்றம். வேள்விக்குடி - சின்னமனூர்ப் பட்டயங்களில் கடுங்கோனுக்கு முன்னும் சங்கத்தில் பாரதம் பாடப்பட்டதற்குப் பின்னும் பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது எண்ணிறந்த பேரரசர் ஆண்டு மறைந்தனர் என்பது காணப்படுகிறது.
பெரிய புராணத்தில் மூர்த்திநாயனார் காலத்தில் மதுரையில் வடுகக் கருநாடக வேந்தன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான் என்பது காணப்படுகிறது. எனவே, வேள்விக்குடிப் பட்டயம் குறிப்பிடும் கலியரசனே பெரிய புராணம் கூறும் வடுகக் கருநாடக வேந்தனாக இருத்தல் வேண்டும்; அஃதாவது அவன் களப்பிர அரசனாக இருத்தல் வேண்டும்.
கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி.பி. 250 எனக் கொள்ளினும், கடுங்கோன் களப்பிரரை விரட்டிப் பாண்டியர் அரசை நிலைநாட்டிய காலம் கி.பி 575 எனக் கொள்ளினும், களப்பிரர் பாண்டிய நாட்டை ஏறக்குறைய 300 ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்பதை உறுதியாக உரைக்கலாம். எனவே, இக்களப்பிரர் ஏறக்குறைய கி.பி. 250 இல் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர் என்னலாம்.
களப்பிரர் மன்னன் :
புகாரைத் தலைநகரமாகக் கொண்டு அச்சுத விக்ரந்தன் என்னும் களப்பிர அரசன் ஆண்டு வந்தான் என்பதைப் புத்தத்தர் குறிப்பிடுதல் கொண்டு உணரலாம். அவர் பாலி மொழியில் ‘அபிதம்மாவதாரம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். அவர் தமது நூலில் மேற்சொன்ன செய்தியைக் குறிப்பிட்டுள்ளனர். அப்பொரியார் காலம் புத்த கோஷரது காலமான கி. பி. 350 ஆகும் ‘அச்சுதக் களப்பாளன்’ என்னும் பெயர் கொண்ட வேந்தன் ஒருவன் முடியுடை மூவேந்தரையும் வென்று சிறைப்படுத்தினான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது.
இலக்கியத்தில் களப்பிரர்:
கி.பி.11ஆம் நூற்றாண்டினதான யாப்பருங்காலக்காரிகையில் ஒரு பாடல் அவன் சிறப்பைக் கூறுகிறது. அஃது,
"அடுதிறல் ஒருவ/நிற் பரவுதும்: ‘எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டொழில் மார்பில்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப்போர்வேல் அச்சுதன்
தொன்றுமுதிர்கடலுலகம் முழுதுடன்
ஒன்றுபு திகிரி உருட்டுவோன்’ எனவே”
என்பது.
இது விளக்கத்தனார் என்னும் பண்டைப் பாவலர் பாடியதாகும். யாப்பருங்கல விருத்தியில் மற்றொரு செய்யுள் காணப்படுகிறது. அது,
"பொருகுடை வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப்பாளர்க்(கு) ஈந்து மனமகிழ்ந்து
அருள்புரி பெரும்புகழ் அச்சுதக் கோவே/
நந்தி மாமலைச் சிலம்பு
நந்தி நிற் பரவுதல் நாவலர்க்கரிதே”
இச்செய்யுட்கள் பழையன என்பது இவற்றின் நடை கொண்டு கூறலாம். மேலும் முதற்பாட்டின் ஈற்றடி "ஒரு தனி யாழி உருட்டுவோன்” எனவே என வரும் சிலப்பதிகார அடியை ஒற்றிவருதல் இதனை நன்கு வலியுறுத்தும். எனவே, தமிழ் நூல்களில் கூறப்படும்.அச்சுதன் புத்ததத்தர்க்கறிய அச்சுதனே என்பது தெளிவாதல் காண்க. அறுபான் மும்மை நாயன்மாருள் ஒருவராகிய கூற்றுவ நாயனார் களப்பிரரே ஆவர். இவரைப்பற்றி நம்பியாண்டார் நம்பி,
"ஒதம் தழுவிய ஞாலமெல்லா மொரு கோலில்வைத்தான்
கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே"
என்று கூறுதல்காண்க. ‘இவர் பல அரசர்களைவென்றவர் முடிபுனைய விரும்பித் தில்லைவாழ் அந்தணரை வேண்டினர். அவர்கள், இவர் சோழர் அன்மையின் மறுத்துவிட்டனர். அதனால் இவர் இறைவனை வேண்ட, சிவபெருமான் தமது திருவடியை முடியாகச் சூட்டி அருளினார் என்பதைப் பெரியபுராணம் விளக்கமாகக் கூறுகிறது. இவரும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பதில் ஐயம் இல்லை மற்றொரு நாயனாரான இடங்கழி நாயனார் என்பவரும் இம் மரபினரே. இருவரும் கொடும்பாளுரை ஆண்ட குறுநில மன்னராவர்.
தொடரும்..
Reference book : பல்லவர் வரலாறு
Author : இராசாமணிகர்