பிற்காலச் சோழர் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக்குப் பின் தமிழகம் விசயநகரப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. அவ்வாட்சியின் கீழ்த் தஞ்சை நாயக்கர், செஞ்சி நாயக்கர், மதுரை நாயக்கர் அரசுகள் தோற்றமும் ஏற்றமும் பெற்று விளங்கின.
விசயநகரப் பேரரசு, தென்னிந்திய சுதந்திரப் பேரரசு வரலாற்றில் என்றும் மறக்க முடியாத பெருமை பொருந்தியது. அழியும் நிலையில் இருந்த இந்து சமயத்தையும், தென்னாட்டு மக்களின் கலைப்பண்பையும் வழிவழியாய்ப் பாதுகாத்துப் போற்றிய பேரரசாகும். தென்னாட்டில் புதிதாக வந்த இசுலாம் ஆதிக்கத்தை ஒழித்து, முன்னாள் போல எந்நாளும் முழுவுரிமையோடு விளங்கப் போராடிய போராட்டத்தின் வரலாறாய் விளங்கிய அரசாகும். நாயக்கர் வரலாறு விசயநகரப் பேரரசு வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து நிற்பதால் அப்பேரரசின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது.
கி.பி.பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்திய மக்கள் இசுலாமியரின் ஆதிக்கத்தை வெறுத்து அவர்களின் பிடிப்பிலிருந்து விடுபட விடுதலை இயக்கத்தைத் தொடங்கினர். அப்போது வீர சைவம் என்ற புதுச்சமயம் தோன்றியிருந்தது. இச்சமயம் இவ்விடுதலை இயக்கத்தை ஆதரித்தது. மேலும் இசுலாமியர் ஆட்சியில் வரிப்பளுவால் சொல்லொணாக் கொடுமைகள் அடைந்த மக்கள் இவ்வியக்கத்துக்கு ஆதரவளித்தனர். தென்னிந்தியாவை இசுலாமியருக்குக் கப்பம் கட்டி ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர்களுள் பெரும்பாலோர் இவ்வியக்கத்தைப் பயன்படுத்திச் சுதந்திர மன்னர்களாகி விட்டனர். இவர்களுள் ஒருவன் சோமதேவன் என்கிற கம்பிலித்தேவன் ஆவான். இவன் அப்போது கம்பிலி நாட்டு ஆளுநராக (கவர்னராக) இருந்த மாலிக் முகமது என்பவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, கம்பிலி நகரில் இருந்த கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். கம்பிலி நாட்டுக் குடிமக்களும் ஆளுநருக்குத் திறை செலுத்த மறுத்தார்கள். கம்பிலி ஆளுநர் இன்னது செய்வது என்று அறியாதவனாய்த் தலைமைப் பீடமாகிய டில்லிக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் அனுப்பினான். இக்கடிதத்தைக் கண்ட டில்லி சுல்தான் முகமது பின் துக்ளக் கம்பிலித்தேவன் குடும்பத்தைச் சேர்ந்த ஹரிஹரர், புக்கர் என்ற இருவரை அனுப்பிக் கம்பிலியில் அமைதி நிலவும்படி செய்ய உத்தரவிட்டான். அதன்படி அவ்விருவரும் கம்பிலிக்கு வந்தனர். வந்து அங்குள்ள சில நாடுகளை வென்று ஒன்றுபடுத்தினர். துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் ஆனைக்குந்திக்கு எதிரில் ஒரு நகரை நிறுவினர். அதற்கு விசயநகரம் என்று பெயரிட்டனர். இதற்கு வெற்றி நகரம் என்று பொருளாகும். பின்பு ஹரிஹரர் கி.பி.1336இல் முடிசூட்டிக் கொண்டு ஹொய்சள நாட்டையும் கைப்பற்றி விசயநகரத்துடன் இணைத்துக் கொண்டார். இது நாளடைவில் விரிந்து கொண்டே போயிற்று. இவ்விசயநகரத்தைச் சங்கமப் பரம்பரை, சாளுவப் பரம்பரை, துளுவப் பரம்பரை, ஆரவீட்டுப் பரம்பரை என்னும் நான்கு பரம்பரையைச் சார்ந்தவர்கள் ஆட்சி புரிந்தனர்.
சங்கமப் பரம்பரையைச் சேர்ந்த முதல் அரசர் ஹரிஹரர் ஆவார். இவரது ஆட்சி கி.பி.1357இல் முடிவுற்றது. இவருக்குப் பின் வந்த முதலாம் புக்கர் கி.பி.1377 வரை இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது காலத்தில் நெல்லூர், கடப்பை, பெனுகொண்டா, பெல்லாரி, அனந்தபூர், மைசூரின் வடபகுதி, கோவா, தமிழ்நாடு ஆகியவை சேரவே, விசயநகரப் பேரரசு விரிவடைந்தது. இவருடைய புதல்வரான இரண்டாம் கம்பணர், இசுலாம் ஆதிக்கத்தை ஒழிக்கக் கருதித் தெற்கே படையெடுத்துச் சென்றார். தமிழகத்துத் தொண்டை நாட்டில் இருந்த படைவீடு ராஜ்ஜியத்தை வென்று பின்பு மதுரையில் முகமது பின் துக்ளக்கின் காலத்தில் ஏற்பட்டு நடந்து வந்த சுல்தான் ஆட்சியை ஒழித்து, அங்கே மதுரை நாயக்கர் நேரடி ஆட்சிக்கு வழிகோலி வைத்தார்.
விசயநகரப் பேரரசின் பகுதிகளாய் இருந்த தஞ்சை, செஞ்சி, இக்கேரி, மைசூர், வேலூர் இவற்றைப் பற்றி இங்குப் பார்க்கலாம். தஞ்சை விசய நகரப் பேரரசின் ஒரு பகுதியாக கி.பி.1532இல் அமைந்தது. தஞ்சையில் முதன்முதலில் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கியவர் செவ்வப்ப நாயக்கர் ஆவார்.
செஞ்சியும் கி.பி.1526இலிருந்து விசயநகரப் பேரரசிற்கு உட்பட்டு இருந்தது. செஞ்சியில் முதன்முதலில் நாயக்கர் ஆட்சியைக் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தொடங்கி வைத்தவர் வையப்ப நாயக்கர் என்பவர் ஆவார்.
கி.பி.1540இல் இக்கேரி என்னும் இடம் (இது மைசூரில் அடங்கிய ஷிமோகா ஆகும்) விசயநகரப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. சதாசிவன் என்பவன் இக்கேரியில் நாயக்கர் ஆட்சியைத் தொடங்கிவைத்தான். இக்கேரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்ததால் இவர்களை இக்கேரி நாயக்கர் என்பர்.
செஞ்சி நாயக்கருக்கு அடங்கிய நாயக்கர் ஆட்சி வேலூரில் ஏற்பட்டது. அங்கு நாயக்கர் ஆட்சியை நடத்தியவர் வீரப்ப நாயக்கர் என்பவர் ஆவார்.
நாயக்கர் என்னும் சொல் நாயக் என்னும் வடசொல்லின் திரிபாகும். இச்சொல் முதலில் தலைவன் என்னும் பொருளில் வழங்கி வந்து, பின்பு படைத்தலைவனைக் குறிக்கலாயிற்று. விசயநகரப் பேரரசில் இச்சொல், அப்பேரரசின் பகுதிகளாய் இருந்த தஞ்சை, செஞ்சி, இக்கேரி, வேலூர், மதுரை ஆகியவற்றை அரசச் சார்பாளர்களாகவோ (viceroys), ஆளுநர்களாகவோ (Governors) இருந்து ஆட்சி செய்தவர்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாயிற்று.