திருமலைநாயக்கர் வரலாறு..! சுருக்கமான தொகுப்பு

மதுரை நாயக்கர் குலத்தின் வழிவந்து தன்னை முதன் முதலில் முழுவுரிமை படைத்த மன்னராக ஆக்கிக்கொண்டவர் திருமலை நாயக்கரே ஆவார். மதுரை நாயக்கமன்னருள் விசுவநாத நாயக்கரை அடுத்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அதிகமான ஆண்டுகள் ஆட்சி நடத்தியவரும் திருமலை நாயக்கரே ஆவார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயினு அய்யிலுகாரு என்பதாகும். தந்தை முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் ஆவார். திருமலை நாயக்கர், முத்துகிருஷ்ணப்ப நாயக்கருக்கு கி.பி.1587 பார்த்திவ ஆண்டு தைப்பூச நாளில் மகனாகப் பிறந்தவர். இவர் கி.பி.1659 -ஆம் ஆண்டு மாசிமாதம் நான்காம் நாள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்தார். திருமலை நாயக்கர் தமது முப்பத்தொன்பதாம் வயதில் ஆட்சிப் பீடத்தில் ஏறி எழுபத்தைந்தாம் வயதுவரை ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தார். இவர் ஆட்சி கட்டில் ஏறிய காலத்தைச் சிலர் கி.பி.1623 என்றும் வேறு சிலர் கி.பி.1629 என்றும் கூறுவர். திருமலை நாயக்கர் தமது தலைநகரை கி.பி.1634 வரை திருச்சியிலும் அதன் பிறகு மதுரையிலும் கொண்டிருந்தார். திருமலை நாயக்கரின் புகழ்பெற்ற படைத்தலைவர் தளவாய் இராமப்பய்யர் ஆவார். இவர் திருமலையின் பல வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தவர் என்பதை அவரைப்பற்றிப் பாடப்பெற்ற இராமப்பைய்யன் அம்மானை எடுத்து கூறுகிறது. 

திருமலை நாயக்கர் தமது ஆட்சிப் பகுதியை விரிவடையச் செய்ய பலபோர்கள் நடத்தியுள்ளார். மைசூர்ப் போர், திருவாங்கூர்போர், சேது நாட்டுப்போர், விசயநகர வேந்தருடன் செய்தபோர், செஞ்சிப்போர், இரண்டாம் மைசூர் முக்கறுப்புப் போர் முதலிய போர்கள் இவர் வெற்றிகண்ட போர்களில் குறிப்பிடத்தக்கவையாகும். 


தொடக்கக் காலத்தில் விசய நகரப் பேரரசுக்குப் கட்டுப்பட்டு நடந்த திருமலை நாயக்கர் தமது படைபலத்தாலும் வெற்றித் திறத்தாலும் தன்னாட்சிபெற்ற மாமன்னராக மாறிப் புகழ்பெற்று விளங்கினார். காவல்மிகுந்த கோட்டைகள் பலவற்றைத் தன்னாட்சியில் உள்ள பல இடங்களில் திருமலை நாயக்கர் தோற்றுவித்திருந்தார் என்று டெயிலர் பாதிரியார் அவர்கள் பதிப்பித்த கையெழுத்துப் பிரதி எடுத்துக் கூறுகின்றது. திருமலை நாயக்கர் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் காளையின் உருவத்தைத் தமது கதை தமது குலச்சின்னமாகக் கொண்டிருந்தார். இது மதுரையிலும் திருப்பரங்குன்றத்திலும் இவர் நட்டுவித்த கோவிற்கொடி மரங்களில் இன்றும் காணப்படுகின்றது. திருமலை நாயக்கர் தெய்வ உருவங்கள் பொறித்த பல செம்புக்காசுகளை வெளியிட்டுள்ளார். இவரது அரசவருவாய் அக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கணக்கிட்டுள்ளனர். 


திருமலை நாயக்கர் தன்னாட்சியில் செய்து முடித்த கலைப்பணிகளும், சமயப்பணிகளும் பலவாகும். மதுரை மாநகரில் இவர் கட்டிமுடித்த அரண்மனை தென்னகத்தில் கி.பி.17ஆம் நூற்றாண்டு கட்டடக்கலைப் பணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்து, முகமதியர் ஆகியவர்களின் கலைப்பணிகளின் கூட்டுக்கலவையில் (Indo Ceracenic Art) அமைந்த இக்கட்டடம் தென்னகத்தின் தாஜ்மஹால் என்று போற்றத்தக்க முறையில் திகழ்கிறது. இதில் வெளிநாட்டு கட்டடக்கலையின் தாக்கத்தினையும் காணமுடிகிறது. 


மதுரை, அழகர்கோயில், திருப்பரங்குன்றம், திருப்புவனம், ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார் கோயில் ஆகிய இடங்களில் கோயில்களில் பலமண்டபங்களை எடுத்து அம்மண்டபங்களில் ஆண்டவனை வழிபட்டு நிற்கும் அடியவனாகத் தன்னுடைய சிற்பங்களைத் திருமலை நாயக்கர் செய்வித்துள்ளார். இந்த அளவுக்கு வேறு எந்த மதுரை நாயக்கமன்னர்க்கும் உருவச் சிலைகள் பாண்டிய நாட்டில் காணப்படவில்லை. திருமலை நாயக்கர் தனது ஆட்சிப்பகுதிகளில் ஊட்டத்தூர் முதல் குமரி வரையுள்ள ஊர்களில் அமைந்த கோயில்களின் முன்பாக இராயகோபுரம் எடுக்கத் திட்டமிட்டு அவற்றைத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் என்ன காரணத்தினாலோ அவை முற்றுப்பெறாமல் பெருத்த அடித்தளத்துடன் மொட்டைக் கோபுரங்களாய் இன்று காட்சியளிக்கிறது. 


மதுரைக்கோயிலில் திருமலை நாயக்கர் செய்த அறப்பணிகள் பலவாகும். மதுரைக் கோயில் திருப்பணிமாலை இவற்றைப் பற்றி எடுத்துரைக்கின்றது. திருமலை நாயக்கர் மதுரைக் கோயில் நிர்வாகத்தில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தி பூசைகள் சிறப்புடன் நடைபெற வழிவகை செய்தார். இதேபோன்று பழனி, ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் போன்ற பல இடங்களில் கோயில் நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்தார். மதுரை மாநகரை விழா நகராக மாற்றிய பெருமை திருமலை நாயக்கரையே சாரும். இன்று மதுரையில் நடைபெறும் தேரோட்டமும் சித்திரைத் திருவிழாவும் ஒருசேர வியக்கத்தக்க வகையில் சிறப்புடன் நடைபெறச் செய்தவர் திருமலை நாயக்கர் ஆவார். மதுரைக்கோயிலுக்கு அளித்த தானங்கள் போன்று தன்னாட்சியில் பிற பகுதிகளில் அமைந்த கோயில்களுக்கும் தந்துள்ளார். திருமலை நாயக்கர் தனது ஆட்சியில் சமயப் பணிகளோடு பலசமுதாயப் பணிகளையும் செய்துள்ளார். பல பயன் தரும் சாலைகளையும், அச்சாலையில் வழிச்செல்வோர் தங்கி செல்வதற்குச் சாத்திரங்களையும், பசித்து வந்த மக்களுக்கு அன்னமும் தண்ணீரும் தர ஏற்பாடு செய்தார். பாசனத்திற்குப் பயன்படும் வகையில் பல நீர் நிலைகளை ஏற்படுத்தினார். 


தான்மட்டுமல்லாமல் பல அறச் செயல்கள் புரிந்து வந்தோர்க்கு மானியங்கள் பலவற்றையும் திருமலை நாயக்கர் அளித்துள்ளார். பல பெருந்தமிழ்ப்புலவர்களும், தெலுங்கு வடமொழிப் புலவர்களும் திருமலை நாயக்கர் ஆதரவைப் பெற்று விளங்கியிருக்கின்றனர். குமரகுருபரரின் மீனாட்சிபிள்ளைத் தமிழ் திருமலைநாயக்கரின் முன்பு அரங்கேற்றப்பட்டதாகக் கூறுவர். குமரகுருபரரும் மீனாட்சியம்மை குறம் என்ற சிற்றிலக்கியத்தில் திருமலையைப் புகழ்ந்து பாடியுள்ளார். குமரகுருபரர் தவிர பிள்ளைப்பெருமாள் அய்யங்கார், சுப்பிர தீபக்கவிராயர் போன்ற தமிழ்ப் புலவர்கள் திருமலை நாயக்கர் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். திருமலைமன்னரின் ஆதரவு பெற்ற வடமொழி புலவர்களில் நீலகண்ட தீட்சிதர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் திருமலையின் அவைக்களத்தினை அலங்கரித்த புலவர்களில் ஒருவர். காமேஸ்வரகவி, க்ஷேத்திரரையா போன்ற தெலுங்குப் புலவர்கள் திருமலை நாயக்கரின் ஆதரவு பெற்றவர் ஆவார்கள். க்ஷேத்திரரையா திருமலையின் வேண்டுகோளுக்கிணங்கி அவரது அவைகளத்திற்கு வந்து கவிமழை பொழிந்து வெகுமதிகள் பல பெற்றவர். 


திருமலை நடத்திய போர்களையும் அவர் காலத்துச் சமுதாயத்தையும் விளக்கும் வகையில் இராமப்பைய்யன் அம்மானை இரவிகுட்டிப்போர், மதுரைவீரன் கதை போன்ற வாய்மொழி இலக்கியங்களும் திருமலை நாயக்கரின் காலத்தில் தோன்றியுள்ளன. திருமலை நாயக்கர் சைவ, வைணவ சமயங்களுக்கு மட்டுமல்லாது புறச்சமயமான கிறித்துவ சமயத்திற்கும் ஆதரவு அளித்துள்ளார். கிறித்துவ சமயத்து மக்களிடமும் அச்சமயத்துப் பாதிரிமார்களிடமும் திருமலை நாயக்கரின் அணுகுமுறை யாருக்கும் அனுதாபம் தரத்தக்க முறையில் அமைந்த மனிதாபிமானமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இராபர்ட்.டி.நோபிலி போன்றோர் நாயக்கரை நேரில் கண்டு வேண்டியதைப் பெற்று கிறித்துவத்தை வளர்த்திருக்கின்றார்கள். இத்தகைய சிறப்புகளைப் பெற்று விளங்கிய திருமலைநாயக்கரின் குணநலன்களையெல்லாம் பலவாறாக வரலாற்றாசிரியர்கள் எடுத்துரைத்திருக்கின்றார்கள். திருமலை நாயக்கர் வீரவுணர்வோடு தொடர்ந்து போராடும் மனவலிமை வாய்ந்தவர். சிறந்த சமயநெறியாளர், நாட்டில் நிலவி வந்த பண்பாட்டிற்கும் மரபிற்கும் மதிப்பளித்தவர். அறிவும் ஆற்றலும் சுறுசுறுப்பும் கொண்டவர். தன்னாட்சியை விரும்பிய மனப்பான்மை கொண்டவர். சிறந்த நீதிநெறியாளர். நாட்டில் எழுந்த சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டவர். அன்புள்ளம் கொண்டவர். எதனையும் மனம் திறந்து உடனே பாராட்டும் பண்புள்ளம் கொண்டவர். சிறந்த கலைரசிகர். கலைவிமர்சகர். கலைவல்லாருக்கு மதிப்பளித்தவர் என்று பாராட்டியுள்ளனர். மேலும் தன்னாட்சியில் நிலவிய சமூக முரண்பாட்டையும் சமுதாய முரண்பாட்டையும் ஒழிக்க முற்பட்டவர். அதற்காகப் பல ஏற்பாடுகளைச் செய்தவர் என்று வெளிநாட்டவரும் திருமலை நாயக்கரைப் புகழ்ந்து கூறுகின்றனர். திருமலையின் சில செயல்களைக் கண்டு அவரிடத்துக் குறை காண முற்பட்ட வரலாற்றாசிரியர்களும் அதனை அவரிடத்துக் காணும் கரும்புள்ளிகள் எனச் சமாதானம் கொண்டனர். சுருக்கமாகச் சொல்வோமானால் கி.பி.13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி நடத்திய மாமன்னர்களில் சிறந்த ஆளுமை படைத்த மன்னர்களில் ஒருவராக திருமலை நாயக்கரைக் கூறலாம்.


Reference book : திருமலைநாயக்கர் செப்பேடு