15 ஆம் நூற்றாண்டில் தமிழகம் - பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு பின்பு நிகழ்ந்த

15 ஆம் நூற்றாண்டில் தமிழகம் - பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு பின்பு நிகழ்ந்த வரலாறு..!


கி.பி 14 ஆம் நூற்றாண்டில் தமிழகம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்திற்குட்படலாயிற்று. இதனால் இப்பேரரசின் நிர்வாகிகளான மண்டலேசுவரர்களும், மகா மண்டலேசுவார்களும் அவ்வப்பகுதிகளுக்கு தலைவர்களாய்த் திகழ்ந்து ஆட்சி புரியலாயினர். இதுவே 15 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் இதே பேரரசின் ஆட்சியாளர்களான மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்கள் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்தனர். 


திருமலைய்ய தேவமகாராஜன் :


15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசை, சங்கம குலமன்னன் மல்லிகார்ஜுனன், விருபாட்சன் போன்றவர்கள் ஆட்சி புரிந்தபோது தமிழகத்தை இம்மன்னர்களின் ஆட்சியாளனான (மகா மண்டலேசுவரன்) திருமலை தேவ மகாராஜன் நிருவகித்து வந்தான். கி.பி 1450 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீச்சரம் திருக்கோயிலில் வெட்டுவிக்கப் பெற்ற கல்வெட்டொன்று சாளுவ திருமலைய்ய தேவனை சோழமண்டலத்தின் மகா மண்டலேசுவரன் என்று குறிப்பிடுகிறது. இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள இரண்டு கல்வெட்டுக்கள் சாளுவ திருமலைய்யாவை விஜயநகர அரசின் சோழ மண்டல ஆட்சியாளனாகக் குறிப்பிடுகின்றன. (ARE 527 of 1920, 448 of 1922). இவை முறையே கி.பி 1452 மற்றும் 1458 ஆம் ஆண்டுகளுக்கு உரிய கல்வெட்டுக்களாகும். இம்மன்னவன் பட்டீச்சரம் தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம் கோபிநாதப்பெருமாள் கோயில் ஆகிய திருக்கோயில்களில் பல திருப்பணிகள் செய்ததோடு பல அறக்கொடைகளும் நல்கியுள்ளதை இங்குள்ள கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. இம்மன்னவன் பெயரால் சோழன் மாளிகையில் ஒரு குளம் "திருமலைராயன் குளம்" என்றுள்ளது. இதே போன்று காவிரியின் கிளை நதி ஒன்று "திருமலைராயன் ஆறு" என்றும், சோழ நாட்டு ஊர் ஒன்று "திருமலைராயன் பட்டினம்" என்றும் அழைக்கப்பெறுகின்றன. 


இவன் காளமேகம் என்ற புலவனுக்கு ஆக்கமளித்தான் என்பதை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. கோனேரி தேவமகாராயன் திருச்சி, தஞ்சைப் பகுதிகளான சோழமண்டலத்தை ஆண்ட சாளுவ திருமலைய்யனின் ஆட்சி கி.பி 1471 தமிழ் கரவருடம் இறுதி  எய்தியது ன்பதனைத் திருவரங்கம் வரலாறு கூறும் கோயிலொழுகு முன் கர வருஷத்திலே திருச்சிராப்பள்ளி ஒரு முதலானதுகள் திருமலை ராஜாவுக்கு நடந்த பின்பு பால்யங்கிற்கு கோனேரி ராஜா கர்த்தராய் திருச்சிராப்பள்ளியில் பாளையம்  பண்ணிக் கொண்டிருக்கையில் என்று கூறுகின்றது. எனவே திருமலை தேவமகாராயனின் ஆட்சிக்குப் பின்பு சோழநாட்டு அரசுரிமை தமிழ் மன்னனான கோனேரிராயன் என்பானுக்கு மாறியது என்பது தெளிவாகின்றது. பின்பு சோழமண்டலம் மட்டுமின்றித் தொண்டை மண்டலத்துக் மகா மண்டலேசுவானாய் திகழ்ந்து தனி ஆட்சி நடத்தினான் என்பதைச் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. 



மாபலி வாணாதிராயர்கள் :


இங்கு கோனேரிராயனின் ஆட்சி நிகழும் நாளில் பாண்டி மண்டலத்தில் வாணாதிராயர்களின் ஆட்சி நடைபெற்ற வாணர்கள் சங்க காலம் தொட்டு தமிழகத்து அரசியலில் முக்கிய இடம் வகித்தவர்கள். பல்லவர்களின் ஆட்சியின் போது வடதமிழகத்தில் இவர்களது செல்வாக்கு மிகுந்திருந்தது. பல்லவர் ஆட்சி முடிவு எய்திய போது வாணர்களின் ஆதிக்கம், காவிரிப்பகுதியில் திருச்சிக்கு அருகில் சிறந்திருந்தது. மூன்றாம் குலோத்துங்கன் மதுரையை வென்றபோது, மதுரையை வாணர் குல தலைவன் ஒருவனுக்கு அளித்து, "பாண்டியன்" என்ற பட்டமும் சூட்டினான். 


சுந்தரபாண்டியன் எழுச்சியால் வலிமை குன்றிய வாணர்கள், பாண்டியர்களின் மறைவிற்குப் பிறகு மதுரை, இராமநாதபுரம், கொங்கு நாட்டின் ஒருபகுதி ஆகியவற்றைத் தம் ஆட்சியின் கீழ் கொணர்ந்தனர். கி.பி 14 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இவர்கள் செல்வாக்கு பாண்டிய நாட்டில் சிறந்திருந்தது. வாணர்கள் கல்வெட்டுக்களில் "மஹாபலி வாணாதிராயர்” என்ற பெயரில் குறிக்கப் பெறுகின்றார்கள். 


வைணவ பக்தியல் திளைத்த இவர்கள் அழகர் கோயில் இறைவன் மீதும் , ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாளிடத்தும் அளவிலாப் பற்றுடன் திகழ்ந்தனர். வில்லிபுத்தூர் பெருங்கோபுரம் வாணர்குல் தலைவனால் எடுக்கப் பெற்றதாகும். "புவனேக வீரன்", " சேது மூல ரக்ஷாதுரந்தர்" என்ற பட்டங்களையும் புனைந்தனர். கோனேரிராயனின் சமகாலத்தில் வாழ்ந்த வாணாதிராயன் கல்வெட்டொன்று சிவலூரில்  (திருமெய்யம் வட்டம்) உள்ளது. அது  அம்மன்னனை  சுந்தரத் தோளுடையான், திருமாலிருஞ்சோலை நின்றான் என்று குறிப்பிடுகின்றது. 


கி.பி 1483 ஆம் ஆண்டு அந்தப் பெற்ற நெக்கோனம் கல்வெட்டொன்று இவனது - பட்டங்களாகச் சமரகோலாகலன், புவனேக வீரன், மதுராபரி காநாயகன், பாண்டிய குலாந்தகன், இராஜ குலசர்பகருடன், கருட கேதனன் என்றெல்லாம் குறிக்கின்றது. பாண்டிய நாட்டை ஆண்ட சுந்தரத்தோளுடையான் வானாதிராயனும் (புவனேக வீரன்) விஜய நகருக்கு உட்படாத தனி ஆட்சியை நடத்தினான். எனவே இவன் வெளியிட்ட காசுகளில் "புவனேக வீரன்" "சமர கோலாகலன்" என்ற தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன. 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாணா திராயர்கள் அனைவருமே இதே வகைக் காசுகளைத் தான் வெளியிட்டனர். ஆரம்ப காலக்காசுகளில் பாண்டியர் மரபை ஒட்டி அவர்களது சின்னங்களான இணைகயலும், செண்டும் இவர்களது காசுகளிலும் இடம்பெற்றன. 



தென்காசிப் பாண்டியர்கள் :


15 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை மாவட்டப் பகுதிகளை தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்ட தென்காசிப் பாண்டியர்கள் ஆட்சிசெய்தனர். ஜடாவர்மன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் (கி.பி 1422 - 63), குலசேகரன் எனும் ஸ்ரீ வல்லபன் (கி.பி 1430 - 1474), அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (கி.பி 1468 - 1486), ஜடாவர்மன் குலசேகர பராக்கிரம் பாண்டியன் (கி.பி 1480 - 1507) ஆகியோர் ஆட்சி புரிந்தனர். 


கோனேரிராயனின் சமகாலத்தில் வாழ்ந்த ஜடாவர்மன் குலசேகர பராக்கிரம பாண்டியனை நரசநாயக்கன் வென்று தமிழகத்தின் தென்பகுதியை விஜய நகரப் பேரரசின் கீழ் இணைத்தான். நரச நாயக்கனின் புகழ்பாடும் கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் குறிப்பிடும் "மானபூஷனன்" இத்தென்காசி பாண்டியனே என்று திரு KA நீலகண்ட சாஸ்திரியார் கருதுகின்றார். விஜயநகர அரசின் கீழும், பின்னர் பல்வேறு மன்னர்களாலும் ஆளப்பெற்ற தமிழகத்தை நோக்கி வந்த பாமினி சுல்தான் மூன்றாம் மஹமத்ஷாவின் படைகள் கி.பி 1481 ஆம் ஆண்டு காஞ்சி நகரத்தை கைப்பற்றி கொள்ளையிட்டு சென்றதாகவும், பின்னர் விஜயநகரப் பெரும்படையின் தாக்குதலால் முகமதியப் படை தோல்வியுற்றதோடு கொள்ளையிடப்பட்ட பொருள்கள் மீட்கப்பட்டதாகவும் ஆவணச் சான்றுகளால் அறிய முடிகிறது. 


இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போதும் '  15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடதமிழகம் விஜயநகர  ஆளுமைக்கு  உட்பட்டுத் திகழ்ந்த தென்பதும் பின்னர் கோனேரி ராயனின் எழுச்சியால் இந்நிலை மாறியது என்பதும் அறியலாம். அதே நேரத்தில் தென்தமிழகத்தில் இருந்த வாணர்களும், தென்காம் பாண்டியர்களும் தனித் தன்மையுடன் இருந்தனர். எனவே 15 நூற்றாண்டின் பிற்பகுதி தமிழகத்து மன்னர்களால் தனி தன்மையுடன் ஆளப்பெற்றது என்பதைத் தெளிவாக அறிய முடிகின்றது. மிகுந்த வலிமையுடன் திகழ்ந்த இம்மூன்று மரபினருமே தமிழ் மண்ணின் மைந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.