மராட்டியர் ஆட்சியில் தஞ்சாவூர் - சுருக்கமான வரலாறு..!

மராட்டியர் ஆட்சியில் தஞ்சாவூர் - சுருக்கமான வரலாறு..!

தஞ்சையின் கடைசி நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கருக்கும், மதுரை நாயக்க மன்னர் விசயரங்க சொக்கநாத நாயக்கருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினபோது தஞ்சைக்குப் பீஜப்பூர்ப் பேரரசின் உதவிப்படையாக வந்த தளபதிகளுள் ஒருவரே பெங்களூர் ஜாகீர்தாரான ஏகோஜியாவார். இவரை வ்யங்காஜி என்றும் கூறுவர். சத்ரபதி சிவாஜி இவரது சகோதரர் ஆவார். 


பீஜப்பூரிலிருந்து தன்னுடன் வந்த முகமதியத் தளபதிகளான காதர் யெக்கலாசு, அப்துல்ஹலிம்  என்பவர்களின் தூண்டுதலால் விசயராகவ நாயக்கரை எதிர்பாராத நேரத்தில் தாக்கிக் கொன்றுவிட்டுத் தஞ்சை அரசைக் கைப்பற்றினர். இது நிகழ்ந்தது 3.2.1675 ஆம் ஆண்டாகும். இவருக்குத் தீபாபாய், அணணுபாய் என்ற இரண்டு மனைவியர் இருந்தனர். கி. பி.1675 மார்ச்சு 17ஆம் நாளில் ஏகோஜி தஞ்சை மன்னராக முடி சூடினார். 


தன் குடும்பச் சொத்துக்களில் முறையான பங்கைக் கொடுக்காததால் சிவாஜி ஏகோஜிபால் வெறுப்புற்றார். கி.பி.1676இல் தென்னாட்டின்மீது படையெடுத்துச் செஞ்சியைக் கைப்பற்றிய சிவாஜி வேலூர், வாலிகண்டபுரம் ஆகிய பகுதிகளையும் தனதாக்கிக் கொண்டு, கொள்ளிடத்தின் வடபால் உள்ள திருமழபாடியில் முகாமிட்டு, தஞ்சையிலிருந்த ஏகோஜியை அழைத்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். ஏகோஜி சிவாஜிக்குக் கட்டுப்படாமல் தஞ்சைக்குத் திரும்பினார். பின்னர் சிவாஜி ஏகோஜிக்கு நான்குமுறை கடிதம் எழுதினார். அவற்றுள் ஒரு கடிதத்தில்  "போரில் குதித்துத் துரியோதனனைப் போல் அறிவு கெட்டுக் குடிமக்களைக் கொல்கிறீர்கள். நடந்தது நடந்தவிட்டது இனியும் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். பதின்மூன்று ஆண்டுகள் நீங்கள் எல்லாவற்றையும் நுகர்ந்தீர்கள். ஆரணி, பெங்களூர், கோலார், ஹஸ்கோட், கார்கோன் மற்றும் தஞ்சாவூர் போன்ற அப்பகுதிகள் உங்கள் கையில் இருக்கின்றன. அவற்றை மக்கள் கையில் விட்டுவிடுவது நல்லது. என்னைக் காண வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தாங்கள் என்னைக் கண்டு பேச வாய்ப்பு உண்டாக்கிக் கொண்டால் தங்கட்குத் துங்கபத்திரைப் பக்கத்தில் பான்ஹால் என்ற பகுதியில் மூன்று இலட்சம் ஹொன்ன மதிப்புள்ள நாட்டைக் கொடுப்பேன்." என்று எழுதியுள்ளார். 


எதற்கும் ஒத்துவராத ஏகோஜியின்பால் வெறுப்புற்ற சத்ரபதி சிவாஜி, ரகுநாத் நாராயண் என்பவர் தலைமையில் மராட்டியப் படையைத் தஞ்சையைத் தாக்குவதற்கு அனுப்பினார். அய்யம்பேட்டையில் நடந்த சண்டையில் தஞ்சைப் படை தோல்வியைத் தழுவியது. பின்னர் ஏகோஜியின் மனைவியான தீபாபாய் (தீபாம்பாள்) ரகுநாத் நாராயணரோடு பேச்சு வார்த்தை நடத்தி ஒரு உடன்படிக்கை ஏற்பாடாயிற்று. அதன்படித் தஞ்சைப் பகுதி மட்டும் ஏகோஜிக்கு உரியது என்றும், அதற்காக 3 லட்சம் 'பர்தோக்கள்' சிவாஜிக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பெற்றது. 


நம்பிய நாயக்க மன்னருக்குத் துரோகம் செய்து, ஆட்சியைக் கைப்பற்றிய ஏகோஜியின் தஞ்சை அரசு சத்திரபதி சிவாஜியின் நடவடிக்கைகளால் அவரது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பின்னர் சிவாஜியே விட்டுக் கொடுத்த போதும், ஏகோஜி மன அமைதியின்றி இறுதிக் காலத்தைத் தஞ்சையில் கழித்தார். கி.பி.1680இல் சத்திரபதி சிவாஜி இறந்தார் . இதன் பின்னர் ஏகோஜி கி.பி.1683 இல் மரணமடைந்தார். 


ஏகோஜியின் முதல் மகனான சாஹஜி கி.பி.1684 இல் தஞ்சை அரசராக முடிசூடினார். தஞ்சை மராட்டிய மன்னர்களிலேயே மிகவும் புகழ்பெற்றவர் இவர். சிறந்த கல்விமானாகவும், சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கியவர். பல மொழிகளில் கவிதை இயற்றும் ஆற்றலும் பெற்றிருந்தார். பல புலவர்களை ஆதரித்துத் தஞ்சையை இலக்கியச் சோலையாக மாற்றியவர். இசையில் தானே சிறந்த விற்பன்னராகவும் திகழ்ந்தார். தஞ்சையில் இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலைகள் பொற்காலம் கண்டன. சகம் 1633 நந்தன வருடம் (கி.பி.1712) இல் தஞ்சையை அடுத்த வல்லத்தில் இயற்கை எய்தினார். 


இவருக்குப் பின்னர் இவரது தம்பி முதலாம் சரபோஜி தஞ்சைமராட்டிய மன்னராக முடிசூடி கி.பி.1728 வரை ஆட்சி புரிந்தார். முதல் சரபோஜி மன்னர் மறைவிற்குப் பின்பு அவரது இளவல் துக்கோஜி எனும் முதலாம் துளஜா 1729 இல் பட்டம் ஏற்றார். முதலாம் சரபோஜியும், துளஜா மன்னரும் தமது மூத்த சகோதரரான சாஹஜி மன்னர் போன்றே பன்மொழிப் புலமையிலும், கலைகளிலும் சிறந்தவர்களாகத் திகழ்ந்து தஞ்சை மண்ணுக்குப் பெருமை சேர்த்தனர். துளஜாவின் ஆட்சி கி.பி.1736இல் முடிவுற்றது. 


18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆர்க்காட்டு நவாப்புக்கு அடங்கி இருக்கவேண்டிய நிலை தஞ்சை மராட்டியருக்கு ஏற்பட்டது. தஞ்சை அரசர் நவாப்புக்குக் கப்பம் செலுத்தினர். கி.பி.1732 இல் சந்தாசாயேபு தஞ்சையின்மீது படையெடுத்தார். துக்கோஜி பெரும் பொருள் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டார். துக்கோஜிக்கு ஆறு மனைவியர் இருந்தனர். இவர்களுள் மராட்டியர் வழக்கப்படிக் கத்தி வைத்துக் திருமணம் செய்து கொண்ட அன்னபூர்ணா என்பவரும் ஒருவராவர். அண்ணபூர்ணாவின் மகனே பிரதாபசிம்மர் ஆவர். துக்கோஜியின் முதல் மகனான பாவாசாகிப் எனும்மராட்டியர் ஆட்சியில் தஞ்சாவூர் 1591 இரண்டாம் ஏகோஜி கி.பி.1736 - 37 இல் ஓராண்டே ஆட்சி புரிந்தார். இவருக்குப் பின்பு இவரது முதல் மனைவியான சுஜான்பாயி தஞ்சை சிம்மாசனம் ஏறினார். சுஜான்பாயியின் ஆட்சியும் ஓராண்டே நீடித்தது. 


கி.பி.1739 இல் பிரதாபசிம்மன் முடி சூடினார். 1763 வரை இவரது ஆட்சி நீடித்தது. தஞ்சை மராட்டியர் வரலாற்றில் பிரதாபசிம்மரின் ஆட்சியில்தான் பல போர்க்களங்களைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. பிரதாபசிம்மனின் முன்னவர்களின் ஆட்சி போர் நிகழ்ச்சிகளின்றி அமைதியாகவும், பின்னவர்களின் ஆட்சி ஆங்கிலேயர்களுக்குப் பணிந்த அரசாகவும் திகழ்ந்தது. இவரது காலத்தில் தஞ்சை அரசுக்கு நவாப், நிசாம், ஆங்கிலேயக் கம்பெனியார், பிரெஞ்சுக்காரர்கள் முதலானவர்களின் பலமுனைத் தாக்குதல்கள் மற்றும் தலையீடுகளைச் சமாளிக்க வேண்டிய மிகக் கடுமையான நிலை உருவாயிற்று. 


பிரதாபசிம்மரின் தானைத் தலைவரான மானோஜி என்பவரின் பெருவீரத்தாலும், நுண்ணறிவின் திறனாலும் பல வெற்றிகளை அடையமுடிந்தது மானோஜியைப் போன்றே டபீர் பண்டிதரின் உறுதுணையும் தஞ்சை அரசுக்குப் பெருங்காப்பாக அமைந்தது. தஞ்சையைச் சுற்றிலும் மொகலாயர் ஆதிக்கம் தலைவிரித்த சூழலில், பிரதாபசிம்மர் தஞ்சையை அவர்களிடம் சிக்க விடாமல் காக்க வேண்டியதாயிற்று. திருச்சியில் பிரெஞ்சுக்காரர்களுடன் சந்தாசாகிப், தஞ்சையில் காட்டுராஜாவான சாகுஜி, புரட்சி செய்யும் கில்லேதார் சையத், கிழக்கிந்தியக் கம்பெனியின் உறவுடன் கருநாடக நவாப் மற்றும் நிசாம் போன்ற பலரின் எதிர்ப்புகளைச் சந்தித்து, சமாளித்து , ஆட்சி நடத்திய பெருவீரர் பிரதாபசிம்மராவார். 


முகமதியர்களின் தாக்குதல் அதிகமான போது, தஞ்சை மராட்டியர்களின் உறவின ரான சாகு மகாராஜா மராட்டிய மாநிலம் சதாராவிலிருந்து ராகோஜி போன்ஸ்லே என்பவரின் தலைமையில் பத்தாயிரம் போர் வீரர்களை அனுப்பிப் பிரதாபசிம்மனுக்கு உதவினார். பின்னர்ப் பிரதாபசிம்மன் கி.பி.1740 இல் நடத்திய போரில் தோஸ்த் அலிகான், சந்தாசாகிப் எனும் இருவரும் தோல்வியடைந்து கைதிகளாகச் சதாராவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 


காட்டுராஜா பிரெஞ்சுக்காரர்களின் துணைகொண்டு ஆட்சியைப் பிடிக்கச் செய்த முயற்சிகள் தோல்வியுறவே, கிழக்கிந்தியக் கம்பெனியார் பிரதாபசிம்மனின் ஆளுகையின் கீழ் இருந்த தேவிகோட்டையைக் கைப்பற்ற முயன்றனர். இக்கோட்டையைக் காத்த மானோஜியின் திறமையாலும், வலிமையாலும் கிழக்கிந்தியக் கம்பெனியார் எடுத்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. இரண்டாம் முயற்சியில் லாரன்சு, கிளைவ் முதலான தளபதிகள் தலைமை தாங்கத் தேவிகோட்டை கம்பெனியாரிடம் வீழ்ச்சியடைந்தது. இதனால் பிரதாபசிம்மன் கம்பெனியாரிடம் சமாதானமாகச் செல்ல வேண்டியதாயிற்று. தஞ்சாவூர் இந்நிகழ்ச்சி தான் கிழக்கிந்தியக் கம்பெனியார் தென்னாட்டில் வணிகத்தை விடுத்து அரசு கட்டில் ஏறக்கால்கோள் விழாவாக அமைந்தது.  


தாக்குதல்கள் காரணமாகப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் காரைக்காலையும், டச்சுக்காரர்களுக்கு நாகப்பட்டினத்தையும் பிரதாபசிம்மன் தானம் அளிக்கும் சூழ்நிலைகள் உருவாயின. முகமதியர்களின் ஆதிக்கத்தைத் தவிர்க்க முற்பட்ட பிரதாபசிம்மன் தன் ஆட்சி அமைதியாக நடைபெற வேண்டி மேலை நாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு இடம்கொடுக்க வேண்டியதாயிற்று. இது இந்திய வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். 1763 டிசம்பர்த் திங்கள் 12ஆம் நாளில் பிரதாபசிம்மன் இறந்தார். 


பிரதாபசிம்மனுக்கும் யமுனாம்பாள் அம்மையாருக்கும் மகவாய்ப் பிறந்த இரண்டாம் துளஜா 1763 இல் பட்டம் ஏற்றார். இவர் காலத்தில் ஆற்காடு நவாப்பும், கிழக்கிந்தியக் கம்பெனியாரும் சேர்ந்து கொண்டு கடும் தொல்லைகள் கொடுத்தனர். இதன் விளைவாக ஆற்காடு நவாப்புக்கு ஒரு பெரும் தொகை கொடுப்பது என முடிவாயிற்று. கம்பெனியாரும் இதற்கு ஆதரவு காட்டினர். ஆனால் துளஜாவால் அத்தொகையைக் கொடுக்க முடியவில்லை. 


நவாப் முகமது அலி, கம்பெனியாரின் உதவியுடன் 1773 இல் தஞ்சையைத் தாக்கி துளஜாவை அரண்மனையிலேயே சிறை வைத்தான். மூன்றாண்டுகள் சிறைவாசம் தொடர்ந்தது. தஞ்சை அரசும் நவாப்பின் ஆளுகையின் கீழ் இருந்தது. 1776 இல் ஆங்கிலக் கம்பெனியின் மேல் நிர்வாகம் (Court of Directors of England) சென்னையில் கவர்னராக இருந்த லார்டு பிகாட் என்பவரைத் தஞ்சைக்கு அனுப்பித் துளஜாவை மீண்டும் அரியணையில் அமர்த்தியது. 


நவாப்பின் ஆட்சி நீங்கித் துளஜா மீண்டும் அரசு எய்தியபோதிலும் பிறிதொரு தொல்லை வந்தது. 1781 இல் ஹைதர் அலி தஞ்சையைத் தாக்கி, ஏறத்தாழ ஆறுமாதங்கள் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். இதனால் இப்பகுதி மிகவும் பாதிக்கப் பெற்றது. 1782 இல் திப்புசுல்தான் ஆங்கிலேயப் படையைத் தோல்வியுறச்செய்து மாயூரம், சீர்காழிப் பகுதிகளைச் சூறையாடினான். துளஜா ஆங்கிலேயருடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களால் ஆங்கிலேயப் படைகள் தஞ்சையில் நிறுத்தப்பட்டன. மராட்டிய மன்னர் சேனைகள் இல்லாத வெறும் அரசராக ஆனார். 1787 இல் துளஜா இவ்வுலக வாழ்வை நீத்தார். 


இதன்பிறகு பிரதாப் சிம்மரின் மற்றொரு மகனான அமர்சிங், துளஜாவின் சுவீகார மகன் என ஒரு பிரிவினரால் கூறப்பெற்ற சரபோஜிக்கு எதிராகச் செயல்பட்டு அரசுக்கட்டிலில் அமர்ந்தார். இவர் அரசரானதை அரசு குடும்பத்தைச் சேர்ந்த சிலர்மராட்டியர் ஆட்சியில் எதிர்த்தனர். தனது ஆட்சி உரிமையை நிலைநிறுத்த அந்நாளைய கவர்னர் ஜெனரலுக்கு அமரசிம்மர் கடிதம் எழுதினார். லார்ட் காரன்வாலிஸ் சென்னை கவர்னருக்கு எழுதினார். அப்போது கவர்னராக இருந்த சர் அர்சிபால்ட் காம்பெல் 1787 இல் தஞ்சைக்கு வந்து 12 பண்டிதர்களின் கருத்தைக் கேட்டார். அவர்கள் சரபோஜியின் சுவீகாரம் செல்லாது என எழுதிக் கொடுத்தனர். அமரசிம்மரின் ஆட்சி தொடர்ந்தது. 


தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மானியப் பாதிரியார் ஸ்வார்ட்ஸ் என்பவர் தஞ்சை அரசியலில் தலையிட்டு அமரசிம்மனுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார். ஸ்வார்ட்ஸ் எடுத்த முயற்சிகளினால் சரபோஜியின் உரிமை பற்றி மீண்டும் விசாரணை நிகழந்தது. அமரசிம்மனின் ஆங்கிலேய எதிர்ப்பு உணர்வு பாதகமாய் செயல்பட்டது. சரபோஜிக்குச் சாதகமாய் பண்டிதர்கள் எழுதித்தர, சரபோஜியின் சுவீகாரத்தினை ஏற்றுக் கொண்டு, அமரசிம்மனின் ஆட்சி உரிமையை 1798 இல் ஆங்கிலேயர் ரத்துச் செய்தனர். 


இரண்டாம் சரபோஜி 1798 இல் அரசரானதும் கம்பெனியாருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படித் தஞ்சை நகரம் மட்டும் இவர் ஆட்சிக்கு உட்பட்டதாயிற்று. எஞ்சிய சோழ மண்டலம் முழுவதும் ஆங்கிலேயர்களின் வசம் ஆயின. சரபோஜி ஒரு லக்ஷம் வராகனும், மொத்த நிகர வசூலில் 5 இல் ஒரு பங்கும் பெறலாயினார். 1832 மார்ச்சு 7 ஆம் நாள் வரை பெயரளவில் மட்டும் தஞ்சை அரசர் என்று வாழ்ந்து மடிந்தார். இவர் காலத்தில் தஞ்சை அரண்மனையில் புதிய கட்டடங்கள் எழுந்தன. சரஸ்வதி மஹால் நூலகம் விரிவு பெற்றது. 


இரண்டாம் சரபோஜிக்கு இரண்டாம் சிவாஜி என்ற ஒரே மகன் இருந்தார். இவர் 1832 வரை தஞ்சை அரசராக இருந்தார். இவருக்கு மகப்பேறு இல்லாததால் இவரோடு பெயரளவில் இருந்த தஞ்சை மராட்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தது.


Source book : தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு