விஜயநகர பேரரசும் அதன் பின் வந்த நாயக்கர் ஆட்சியும்..! - சுருக்கமான வரலாறு

விஜயநகர பேரரசும் அதன் பின் வந்த நாயக்கர் ஆட்சியும்..! - சுருக்கமான வரலாறு


தென்னிந்தியாவை ஆண்ட பெருமை படைத்த பேரரசுகளில் விசய நகரப் பேரரசும் ஒன்றாகும். இதன் வரலாற்றுச் சிறப்பு பற்றிப் பல வரலாற்றாசிரியர்கள் விரிவாக எடுத்துரைத் திருக்கின்றார்கள். எஸ். கிருட்டிணசுவாமி அய்யங்கார், சீவல், பி. ஏ.சேலலேடார், என்.வெங்கட்டரமணைய்யா, கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, டி.வி.மகாலிங்க, ஏ.கிருட்டிண சாமி, பார்டன்ஸ்டெயின் போன்றவர்களின் நூல்களின் மூலம் விசயநகரப் பேரரசு எத்துணையளவு சிறப்புவாய்ந்த பேரரசாக விளங்கியது என்பதையும் அப்பேரரசு காலத்துச் சமுதாயமும் பண்பாடும் நாகரிகமும் எவ்வண்ணம் விளங்கின என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. கி.பி.1336 -ல் துங்கபத்திரை ஆற்றங்கரையில் இப்பேரரசு தோற்றுவிக்கப் பெற்றது. அதன் தலைநகராக விசய நகரம் விளங்கிற்று. 

சங்கம் பரம்பரை (கி.பி.1336 -1485), 
சாளுவ பரம்பரை (1485 -1505), 
துளுவ பரம்பரை  (1505 -1570), 
ஆரவீடு பரம்பரை (1570 -1600) ஆகிய நான்கு பரம்பரைகளின் வழிவந்த அரசர்கள் இப்பேரரசை ஆண்டார்கள். இதன் ஆட்சிப்பரப்பு தென்னகத்தில் கிருஷ்ணா, துங்கபத்தினர ஆறுகளுக்குத் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பகுதிகள் இவர்களது ஆட்சிக்குள் விளங்கியதாகக் கல்வெட்டுக்களும், பிறசான்றுகளும் எடுத்து விளக்குகின்றன. தென்னிந்தியாவில் தேவகிரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த யாதவ ஆட்சியும், துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட போசாளர் ஆட்சியும், வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காகதீய ஆட்சியும் வடக்கேயிருந்து வந்த முகமதியர் படையெடுப்புகளால் அழிந்தபின்னர் தக்காணப் பகுதியில் பாமினி சுல்தான்களின் ஆட்சி விளங்கியது. 


தென்னிந்தியாவில் தொன்று தொட்டு சிறப்படைந்து வந்த பழைய பண்பாடு, நாகரிகம், சமயம் ஆகியவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாய் நின்றது. இச்சூழ்நிலையில் இவற்றைக் காக்கும் அரணாகத் தோன்றியதே விசயநகரப்பேரரசு. விசயநகரப் பேரரசைப் பற்றி எழுதிய வரலாற்றாசிரியர்கள் இப்பேரரசு, முகமதியர்கள் போன்றவர்களின் ஆதிக்கத்தில் எளிதில் அழிந்து போகவியலாது உடனே போருக்குத் தயாராகும் நிலையில் தம்மை உருவாக்கிக் கொண்ட இந்துக்களின் அரசாக விளங்கியது என்பர். விசயநகரப் பேரரசு தோன்றியதும் முதலில் தன்னைச் சுற்றியிருந்த காகதியர் ஆட்சிப்பகுதியையும், தெலுங்கு கருநாடகப் பகுதிகளையும் கைப்பற்றிக் கிழக்கிலும் மேற்கிலும் பரவியது. பின்னர் தமிழகத்தை நோக்கி விரிவடைந்ததும், முதல் புக்கணரின் மகனாக விளங்கிய குமாரகம்பணர் கி.பி.1363 - ல் தமிழகத்தின் வட எல்லை மண்டலமாக விளங்கிய தொண்டைமண்டலத்தை (இராஜகம்பீரராச்சியம்) படையுடன் வந்து அப்போது ஆண்டு கொண்டிருந்த சம்புவராயரிடமிருந்து கைப்பற்றினார். அதன்பிறகு சோழமண்டலத்தைக் கடந்து பாண்டிய மண்டலத்திற்குச் சென்று மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுல்தான்களின் ஆட்சியை நீக்கினார். இவ்வெற்றிக்குப் பின்னர் பாண்டிய மண்டலம், சோழமண்டலம், தொண்டைமண்டலம், கொங்குமண்டலம் முதலிய தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் விசயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அதன்பிறகு தமிழகம், கிருஷ்ணதேவராயர் ஆட்சி விசயநகரத்தில் ஏற்படும் வரையில் எவ்வித மாறுதலும் இன்றி விசயநகரவேந்தர்களாலும் தங்களை ஆதரித்து வந்த தமிழகத்துச் சிற்றரசர்களாலும், விசயநகர வேந்தர்களின் படைத்தலைவர்களாக விளங்கியவர்களாலும் ஆளப்பட்டு வந்தது.


மதுரை நாயக்கர் ஆட்சி


கி.பி.1509 - ல் விசயநகர வேந்தராக ஆட்சியேற்ற கிருஷ்ணதேவராயர் தமிழ் நாட்டில் நிகழ்ந்த உள்நாட்டுக் குழப்பங்களை அடக்கினார். தமிழ் நாட்டில் விளங்கிய நான்கு மண்டலங்களுக்கும் மகாமண்டலேசுவரர்களை (ஆளுநர்களை) நியமனம் செய்தார். பாண்டி நாட்டுப்பகுதிக்கு நாகம நாயக்கரையும், சோழநாட்டுப்பகுதிக்கு நரச நாயக்கரையும் ஆளுநர்களாக ஆக்கினார். மதுரையில் நாகம நாயக்கர் ஆளுநராக அமர்த்தப்பட்டமைக்குக் காரணம் அக்காலத்தில் சோழனுக்கும் பாண்டியனுக்கும் நடைபெற்ற ஆதிக்கப் போராட்டமேயாகும். சந்திரசேகரப் பாண்டியனிடமிருந்து பாண்டிய நாட்டை சோழன் கைப்பற்றிக் கொள்ளவே பாண்டியன் ராயரிடம் சென்று முறையிட்டான். பாண்டியன் வேண்டுதலுக்குச் செவிசாய்த்த ராயர் அவனை ஆட்சியில் அமர்த்த நாகம நாயக்கரைப் பெரும்படையுடன் மதுரைக்கு அனுப்பினார். நாகம நாயக்கர் சோழனை வென்று பாண்டிய நாட்டைப் பாண்டியனிடம் அளிக்காது தானே அதன் ஆளுநராக மதுரையில் இருந்துவந்தார். இதனால் கோபமுற்ற கிருஷ்ணதேவராயர் தனது அடைப்பக்காரனாக விளங்கிய நாகம நாயக்கரின் மகனான விசுவநாத நாயக்கனை நாகமநாயக்கரை வென்று சிறைப்பிடித்து வரும்படி கட்டளையிட்டான். ராயர் சொன்னபடியே விசுவ நாதன் தந்தையென்றும் பாராது அரசகட்டளையையேற்று நாகமனைச் சிறைப்பிடித்து ராயர் முன் கொண்டு வந்து நிறுத்தினான். இதனைக்கண்ட கிருஷ்ணதேவராயர் விசுவநாதனின் அரசப்பற்றினைப் பாராட்டி அவனையே பாண்டி மண்டலத்தின் ஆளுநராக இருந்து ஆண்டுவரும்படி செய்தார்.   மதுரைப்பகுதியை , விசுவநாதநாயக்கனின் வழிவந்து ஆட்சி செய்தவர்களே மதுரை நாயக்கர் ஆவார்கள். பாண்டிமண்டலமும், கொங்குமண்டலமும், திருச்சியை உள்ளடக்கிய சோழ நாட்டின் தென்பகுதியும் இவர்கள் ஆளுகைக்குட்பட்டிருந்தன. மதுரை நாயக்கரின் வரலாறு குறித்து சத்தியநாதைய்யர், அ.கி.பரந்தாமனார் போன்றோர் தனி நூற்கள் எழுதியுள்ளனர். விசயநகரப்பேரரசின் பிரதிநிதியாக விசுவநாத நாயக்கன் மதுரையில் பதவியேற்ற காலம் கி.பி.1529 - ஆம் ஆண்டு ஆகும். கி.பி.1529 - ல் தொடங்கிய இம்மதுரை நாயக்கர் ஆட்சி கி.பி.1736 வரை நீடித்தது. விசுவநாத நாயக்கர் தொடங்கி மீனாட்சி ஈறாக பதின்மூவர் மதுரை நாயக்க அரசர்களாக விளங்கியிருக்கின்றார்கள். இவர்கள் விசயநகரப் பேரரசின் அரசியல் கொள்கைகளையே பின்பற்றி ஆட்சி செய்தார்கள். சில வேளைகளில் தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தங்களது முறைகளை மாற்றவும் செய்திருக்கின்றார்கள். மதுரை நாயக்க மன்னர்களில் முதலில் ஆட்சிபுரிந்த ஆறு நாயக்கர்கள் விசயபேரரசருக்குக் கட்டுப்பட்டு அவர்களது பிரதிநிதிகளாகவே ஆட்சி நடத்தினர். அடுத்துவந்த எழுவரும் முழுவுரிமை பெற்ற மன்னர்களாக மதுரையில் ஆட்சி செய்தனர்.


ஆதார நூல் : திருமலைநாயக்கர் செப்பேடு புத்தகம்