இந்தியாவின் பூகோள அமைப்பும் - அதன் வரலாறும்..!
கால நிலைக்குத் தக்கவாறு மக்களின் தோற்றம், மனநிலை, செயல்கள் போன்றவை வேறுபடுவதுபோன்று பூகோள அமைப்பும் ஒரு நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்துகின்றது. ஒரு நாட்டின் பூகோளத்தை ஒட்டி அதன் அரசியல் போக்கு, ஆட்சிமுறை, சமயத்தின் தன்மை, இலக்கியப் படைப்புக்கள், அறிவியல் வளர்ச்சி ஆகியவை ஏற்படுகின்றன என்பதைப் பல நாடுகளின் வரலாறு விளக்கவல்லது. மனிதன் தனது முயற்சியால் பண்பாட்டை வளரச் செய்ய இயலும்; ஆனால் ஒரு நாட்டின் பூகோள அமைப்பை மாறும்படி செய்ய வலிமையற்றவன். ஆகவே, இந்திய வரலாற்று மாணவர்கள் இந்நாட்டின் வரலாற்றை அறிய விழைவதற்கு முன்னர் அதன் பூகோள அமைப்பு எந்த வகையில் அரசியல் வரலாற்றிலும், பண்பாட்டிலும் பங்குபெறுகின்றது என்பதை அறிய விழைவது இயல்பே.
இந்தியாவின் அரண்கள் :
தீபகற்ப இந்தியா சுமார் 46,62,000 சதுர கிலோமீட்டர் பரப்பு உடையது.
1971 -ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி இந்நாட்டில் 54,81,59, 652 மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முக்கோண வடிவில் அமைந்துள்ள இந்தியாவிற்கு இயற்கை அரண்கள் பாதுகாப்பு அளிப்பது அதன் தனிச்சிறப்பு. வடக்கில் இமயமலையும், தெற்கில் இந்துமகா சமுத்திரமும், கிழக்கில் வங்காளவிரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும் சூழ்ந்துள்ளன, இவைகள் இந்தியாவைப் பிறநாடுகளிலிருந்து பிரித்துத் தனித்து இயங்கச்செய்து பண்பாட்டில் கலப்பு ஏற்படாமல் பாதுகாத்துள்ளன எனக் கூறலாம். அன்னியரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பை அளிப்பது குறிப்பிடத்தக்கதொண்டாகும். வடக்கிலுள்ள இமயமலையின் பனிஅடர்ந்த சிகரங்கள் வானத்தைத்தொட்டுத் தொங்குவதுபோன்று காட்சி தருகின்றன. இதில் போக்குவரத்திற்குப் பயன்படும் கணவாய்கள் குறைவு. இமய மலையைக் கடந்து வெளி நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவதோ அல்லது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதோ மிகவும் கடனமானதாகும். ஆயினும், திபெத்திலிருந்து நேப்பாளத்திற்குச் சாலைகள் உள்ளன. அவைகள் வழியாகச் சமயத் துறவிகளும், மற்றும் பலரும் பண்பாட்டு நோக்குடனும், சிலபோது இராணுவ வீரர்களும் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்கள். இமயமலை வேற்று நாட்டுப் படையெடுப்பிலிருந்து இந்தியாவிற்குப் பாதுகாப்பு அளிப்பதுபோன்று திபெத்திலிருந்து வீசும் குளிர்ந்த காற்றையும் இந்நாட்டில் புகாமல் தடுக்கின்றது. வட இந்தியாவை வளம்பெறச் செய்யும் ஆறுகளான சிந்து, கங்கை, பிரமபுத்திரா ஆகிய நதிகள் இதிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. இமயமலைக்கு மாறாக வடமேற்கிலுள்ள இந்துகுஷ் மலையில் காணப்படும் கைபர், போலன் கணவாய்கள் இந்தியாவின் நுழை வாயிலாகச் செயல்பட்டு வருகின்றன. தொன்றுதொட்டு இவைகள் வாணிபத்தைப் பெருக்கும் பெருவழியாகவும், இராணுவத்ன நடத்திச் செல்லும் சாலையாகவும் பயன்பட்டு வருகின்றன. பார சீகர்கள், கிரேக்கர்கள், சித்தியர்கள், குஷாணர்கள், ஹுணர்கள், துருக்கியர்கள், முகலாயர்கள் ஆகியோர் இக்கணவாய்கள் வழியாக இந்தியாவிற்கு வந்தனர். இந்திய நாகரிகம் கிணற்றுத் தவளை என்ற நிலையை மாற்றி அயல் நாடுகளோடு தொடர்பு கொள்ளும் படி செய்துள்ளன. இக்காணவாய்கள், பன்னாட்டு வாணிபம் பெருக வழி வகுத்தன; காந்தாரக்கலை இந்தியாவில் தோன்றுவதற்குக் காரணமாயிற்று. இனக்கலப்பு ஏற்படப் பலவகைப்பட்ட ஒழுக்கங்கள் தோன்றின. அன்னியர் படையெடுப்பைத் தூண்டியதன் விளைவாக இந்திய அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. வடகிழக்கிலுள்ள மலைகளில் காணப்படும் இடைவெளிகள் வழியாக திபெத்து, பர்மா ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறியுள்ளார்கள். இப்பகுதியிலுள்ள அடர்ந்த காடுகள் இராணுவத்தை நடத்திச் செல்வதற்குத் தடையாகவுள்ளன.
கடற்கரைகள் :
தரைப் பகுதியைச் சுற்றி மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து இந்தியாவை ஒரு தீபகற்பமாக மாற்றியுள்ளது. கடற்கரைகள் வளைவுகளின்றி நேராக அமைந்துள்ளமையால் இயற்கைத் துறைமுகங்கள் அதிகமில்லை. பழங்காலம் முதற்கொண்டு பேரரசுகள் பல தோன்றி மறைந்தும் அவைகள் சிறந்ததொரு கப்பற்படையைப் பெறுவதற்குப் பூகோள அமைப்புத் தடையாக நின்றது. காவிரிப் பகுதியை ஆண்டுவந்த சோழ மன்னர்கள், குறிப்பாக இராஜேந்திரர் பெற்றிருந்த கப்பற்படை கடல்களையும் கடந்து கடாரத்தைக் கைப்பற்றுமளவுக்குச் சிறப்புப் பெற்றிருந்தமை விதிவிலக்கு. பிறநாடுகளோடு ஒப்பிடும்போது இந்நாட்டு ஆறுகளும் பெருமளவில் போக்குவரத்திற்குப் பயன்படவில்லை.
மேற்குக் கரையில் சில பயன்தரும் இயற்கைத் துறைமுகங்கள் உண்டு. எகிப்து, சுமேரியா, பாபிலோனியா, இஸ்ரேல், ரோமப் பேரரசு ஆகிய நாடுகளோடு தென் இந்திய வணிகர்கள் தொடர்பு கொண்டு விலையுயர்ந்த கற்கள், தங்கம், கருங்காலி மரம், சந்தன மரம், வாசனைத் திரவியங்கள், மயில் போன்றவற்றை ஏற்றுமதி செய்துள்ளார்கள். 1498 -ஆம் ஆண்டு வாஸ்கோட காமா கள்ளிக் கோட்டையில் வந்திறங்கியதைத் தொடர்ந்து கப்பற்படையில் வலிமை பெற்றிருந்த ஐரோப்பியர்களைப் பாதுகாப்பற்ற இத்துறை முகங்கள் வரவழைத்தன. வாணிபத்திற்காக வந்தவர்கள் காலப்போக்கில் முகலாயர்களோடும், சுதேச மன்னர்களோடும் போரிட்டு நாட்டைக் கைப்பற்றி அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஐரோப்பிய பண்பாட்டிற்கு வித்திட்டு, கல்வி நிலையங்களை அமைத்து, போக்குவரத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி, வாணிபத்தைப் பெருக்கி இந்நாட்டிற்கு ஆற்றிய தொண்டிற்கு இந்தியர்கள் எந்நாளும் கடமைப்பட்டிருக் கின்றார்கள். சுதந்திர உணர்ச்சியால் உந்தப்பட்ட இந்தியத் தலைவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரில் இறங்கவும் வேண்டியதாயிற்று.
நிலப்பிரிவுகள் :
இந்தியாவை விந்திய, சாத்பூர மலைகளும், நர்மதை, தப்தி ஆறுகளும், அடர்ந்த காடுகளும் வட இந்தியா, தென்னிந்தியா என இரு பெரும் நிலப்பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இயற்கை இவ்விரு பகுதிகளின் வரலாற்றையும் தொன்றுதொட்டு தனித்து இயங்கச் செய்திருக்கின்றது. வடக்கிலும், தெற்கிலும் ஆண்டுவந்த அரசர்கள் பலர் இவ்விரு பகுதிகளையும் இணைத்து அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் பயன்தரவில்லை. சான்றாக, சந்திரகுப்த மௌரியர், சமுத்திரகுப்தர், ஹர்ஷர், அக்பர், ஒளரங்கசீப் போன்ற மன்னர்கள் தெற்கில் அரசியல் அதிகாரத்தை ஏற்படுத்தும் பணியில் சிறிதளவு வெற்றியைக் கண்டாலும் அவர்களது நோக்கம் முற்றுப்பெறவில்லை. இரு பிரதேச மக்களும் இனம், மொழி, நடையுடைபாவனை சமுதாய வழக்கங்கள் என்பனவற்றில் வேறுபட்டுள்ளார்கள்.
வட இந்தியாவும் அதன் நதிகளும் :
சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா நதிகளும், அதன் உபந்திகளும் வளப்படுத்திய வட இந்தியா பழங்காலத்தில் ஆரியவர்த்தம் என்று அழைக்கப்பட்டது. பருவகாலங்களில் மழை நீரும்; கோடைகாலத்தில் இமயமலையிலுள்ள பனிமலைகள் உருகியும் இவ்வாறு களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ஆறுகள் அடித்து வரும் வண்டல்மண் இருமருங்கிலும் படிந்து செழிப்பூட்டுகின்றன. நீர் வளமும், நிலவளமும் நிறைந்த இப்பகுதி அந்நியரைக் கவர்ந்தமையால் பல தாக்குதல்களுக்கு ஆளாயிற்று. வரலாற்றில் சிறப்புறும் பேரரசுகள் இப்பிரதேசங்களில் தோன்றின. கங்கை நதிப்பிரதேசத்தில் மகதப்பேரரசு தோன்றியது. நைல், டைகிரீஸ், யூப்பிரட்டீஸ் நதிகளைப் போன்று இந்நதிகளின் கரைகளில் நகரங்களும், நாகரிகங்களும் தோன்றின. குறிப்பாக, உலகம் போற்றும் சிந்துவெளி நாகரிகம் சிந்து நதிக்கரையில் தோன்றிற்று. ஆறுகள் போக்குவரத்திற்கும் உதவின. ஆரியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றியது முதற்கொண்டு மக்கள் தொகை வளர்ந்து வருகின்றது. "வளமிக்க வங்காளத்தையும் கங்கை சமவெளியையும் கைப்பற்றிய தன் விளைவாகவே ஆங்கிலேயர் முயற்சி கைகூடியது என்று V . A . ஸ்மித் கூறுகின்றார்.
தார் பாலைவனம் :
ஆரவல்லி மலையில் தொடங்கி மேற்கில் இராணக்குட்ச் (Rann of Cutch) வரையிலும் நீண்டு கிடக்கின்றது இராஜபுதனப் பாலைவனம். நீரின்றி வறண்ட பாலைவனம் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறாது என்னும் கருத்து தவறானது என்பதனை இது விளக்கவல்லது. இந்திய இராணுவத்திற்கு வீரப்புதல்வர்களை ஈன்றெடுத்த பகுதி இது என்று கூறினால் மிகையாகாது. வடமேற்கிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லீம்களோடு இராஜபுத்திரர்கள் போராடி பல நூற்றாண்டுகள் (கி.பி.712 முதல் 1193 வரை) இந்நாட்டிற்குப் பாதுகாப்பளித்துள்ளார்கள். முகலாயர்கள் ஆட்சி நிறுவப்பட்ட பின்னரும் இந்து பண்பாட்டையும், இந்து அரசுகளையும் காப்பதற்கு அயராது போரிட்டமை புகழ்ச்சிக்குரியதாகும்.
தென்னிந்தியா :
இயற்கை இந்தியாவை இருபெருங்கூறுகளாகப் பிரிப்பதோடு நின்றுவிடாது தென்னிந்தியாவை இன்னும் பல பாகங்களாகப் பகுக்கின்றது. மேற்குத் தொடர்ச்சிமலையும், கிழக்குத் தொடர்ச்சிமலையும் இதில் முக்கிய பங்கு பெறுகின்றன.
1) தக்காணம் : வடக்கில் தென்னிந்தியாவை வட இந்தியாவிலிருந்து பிரிக்கும் அரண்களுக்கும், கிழக்கிலும் மேற்கிலுமுள்ள மலைகளுக்கும் இடையில் அமைந்திருக்கின்றது.
2) சோழ மண்டலம் : கிழக்கு மலைதொடருக்குத் தென்பாலுள்ள பகுதி சோழ மண்டலம் என்று அழைக்கப்படுகின்றது.
3) மலபார், கொங்கணம் :
அரபிக்கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையில் நெடுந்தூரம் நீண்டு கிடக்கின்றது.
தென்னிந்தியாவின் இயற்கையையொட்டி தனி அரசுகளும் தோன்றியுள்ளன. கி.பி. ஏழாவது நூற்றாண்டில் மதுரையில் பாண்டியர்களும், காஞ்சியில் பல்லவர்களும் ஆண்டு வந்தபோது தக்காணத்தில் சாளுக்கியர்கள் ஆதிக்கம் பெற்றிருந்தார்கள். இந்து, முஸ்லீம் மன்னர்கள் தென்னிந்தியாவின் தென் கோடியிலுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றித் தங்களது பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்த முயன்றும் பயன்தரவில்லை. தடுப்புச் சுவர் போன்று விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலை தனிப்பட்ட பண்பாட்டை வளர்த்துள்ளது. கேரளத்தில் ஒரு பெண் பலரை மணக்கும் வழக்கம் நிலவி வந்தது. அங்குள்ள ஆண்கள் மனைவி வழி சொத்துக்கு உரிமை உடையவர்கள். இயற்கை வேறுபட்ட பகுதிகளைத் தனித்தியங்கச் செய்தாலும் ஆறுகளும், மலைகளும் அரசியல் ஆதிக்கத்திற்கும் தடையாக் நிற்கவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் பாலக் காட்டுக் கணவாயும், ஆரல்வாய் மொழிக் கணவாயும் போக்கு வரத்திற்கும் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கும் பயன்படுகின்றன.
மூவேந்தர் காலத்தில் மலபாரை மையமாகக் கொண்ட சேரநாடு மேற்குமலைத் தொடருக்குக் கிழக்கிலும் பரவியிருந்தது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி மூன்று நாடுகளுக்கும் பொதுவான மொழியாக விளங்கியது. மேற்கு மலைத் தொடரின் இரு பகுதிகளிலும் வாழும் மராத்தியர்கள் ஒரே மொழியையும்; பழக்க வழக்கங்களையும் உடையவர்கள். தென்னிந்தியாவில் ஓடும் நதிகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி ஆகியவைகளும் அரசியலிலும் , பண்பாட்டிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன . கிருஷ்ணா, துங்கபத்திரா ஆகிய நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதியை உரிமை கோரித்தமிழ் வேந்தர்களுக்கும், தக்காணத்தை ஆண்டுவந்த மன்னர்களுக்கும் இடையில் பகைமை ஏற்பட்டது பாமினி சுல்தான்களையும் விஜயநகரப் பேரரசர்களையும் இரெய்சூர் (Raichur) கவர்ந்தமையால் அதைக் கைப்பற்றுவதற்காக இருசாராரும் போர்க்களத்தில் பலமுறை சந்தித்தார்கள், இந்நதிகளின் கரைகளில் தோன்றி பெருமைபெற்ற நகரங்கள் நாகரிகங்களின் இருப்பிடங்களாக விளங்கின. பழங்காலத்தில் தென்னகத்து ஆறுகள் உள்நாட்டுப் போக்குவரத்திற்கு மிகவும் பயன்பட்டன. காவிரி முகத்துவாரத்தில் சிறப்புற்றிருந்த காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்று பிற நதிகளின் முகத்துவாரங்களிலும் காணப்பட்ட துறைமுகங்கள் வாணிபத்தை வளர்ப்பதற்கும், குடியேற்றங்களைப் பெருக்குவதற்கும் பண்டைய காலத்தில் பயன்பட்டன.