அயோத்தி வழக்கின் கதை: மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும்

அயோத்தியா.

மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 - 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில் அவருடைய ஆளுநர் மீர் பாகி என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.

அயோத்தியா.

ஆனால் பாபர் அல்லது பாகி இந்த நிலத்தை எப்படி வசப்படுத்தினார்கள் என்பது பற்றியும், மசூதி கட்டுவதற்கு முன்பு அங்கே என்ன இருந்தது என்பது பற்றியும் எந்த ஆவணங்களும் கிடையாது.

முகலாய மன்னர்கள், நவாப்கள், பிற்காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இந்த மசூதியின் பராமரிப்புக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது

பல சமயங்களில் இந்த இடம் தொடர்பான சர்ச்சையில் உள்ளூர் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு இடையே மோதல்கள் நடந்திருப்பதாகத் தகவல்கள் உள்ளன

அயோத்தியா.

1855ல் நவாப் ஆட்சிக் காலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பாபர் மசூதி அருகே திரண்டு, சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கர்ஹி கோவிலைக் கைப்பற்ற பேரணியாகச் சென்றனர் என்று பல பிரிட்டிஷ் வரலாற்றாளர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த இடத்தில் மசூதியை இடித்துவிட்டு கோவில் கட்டப்பட்டது என்று அவர்கள் கூறினர்.

அப்போது ஏற்பட்ட ரத்தக்களரியில் முஸ்லிம்களை வர விடாமல் இந்து சாதுக்கள் விரட்டியடித்தனர். முஸ்லிம்கள் தப்பிச் சென்று பாபர் மசூதி வளாகத்தில் ஒளிந்து கொண்டனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, அங்குள்ள அடக்க ஸ்தலத்தில் புதைக்கப்பட்டனர்.

மசூதியை சுற்றியுள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்று இந்து சமுதாய மக்கள் கருதி, அங்கு பூஜைகள் செய்து வந்தனர் என்று, கெஜட் பதிவு செய்த பலரும், வெளிநாட்டு பயணிகள் பலர் தங்களுடைய பயணக் குறிப்புகளிலும் புத்தகங்களிலும் பதிவு செய்துள்ளனர்.

அயோத்தியா

1857 கலகத்துக்குப் பிறகு நவாப் ஆட்சி முடிவுக்கு வந்து பிரிட்டிஷ் ஆட்சி உருவானது. பிரிட்டிஷ் நீதி நிர்வாக முறை அமலுக்கு வந்தது. அந்த காலக்கட்டத்தில் இந்துக்கள் அங்கு ஒரு பீடம் அமைத்து, பூஜைகளும், வழிபாடும் செய்து வந்தனர் என்று நம்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கு இடையில் பல முறை மோதல்கள் நடந்துள்ளன.

மசூதியை ஒட்டி இந்துக்கள் பீடம் அமைத்து, மசூதியின் சுவரில் `ராம் ராம்' என்று எழுதியிருக்கிறார்கள் என்று கூறி 1858 நவம்பர் 30 ஆம் தேதி, மசூதியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த முகமது அஸ்கர் ரிட் மனு தாக்கல் செய்தார்.

அயோத்தியா

எழுப்பப்பட்ட போதிலும், தங்களுடைய தொழுகைக்கு இந்துக்கள் இடையூறு செய்வதாக முஸ்லிம்கள் அடிக்கடி ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அந்த இடத்தில் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி 1883 ஏப்ரல் மாதத்தில் பைசாபாத் துணை ஆணையாளரிடம் நிர்மோஹி அகாரா அமைப்பு விண்ணப்பம் கொடுத்தது. ஆனால் முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

மே 1883ல் முன்ஷி ராம் லால் மற்றும் ராம் முராரி ராய் பகதூரின் ஊழியரான, லாகூரைச் சேர்ந்த குருமுக் சிங் பஞ்சாபி சில கற்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களுடன் அங்கு சென்று, கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அங்கிருந்து கற்களையும், கட்டுமானப் பொருட்களையும் துணை ஆணையர் அகற்றும்படி செய்தார்.

நிர்மோஹி அகாராவைச் சேர்ந்த மகந்த் ரகுபார் என்பவர், பீடம் அமைக்கப்பட்டுள்ள இடம் தான் ராமர் பிறந்த இடம் என்று உரிமை கோரினார். இந்திய அரசுக்கு எதிராகவும், முகமது அஸ்கருக்கு எதிராகவும் 1885 ஜனவரி 29 ஆம் தேதி சிவில் நீதிமன்றத்தில் முதலாவது மனுவைத் தாக்கல் செய்தார். 17 அடிக்கு 21 அடி அளவுள்ள பீடம் அமைந்துள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. கடவுளுக்கும், மத குருக்களுக்கும் வெயில், மழையில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் அங்கு கோவில் கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அயோத்தியா

அந்த நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என்றும், தங்களிடம் தான் நிலம் உள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. பீடம் இருக்கும் பகுதியில் இருந்து மனுதாரர் வெளியேற்றப்படவில்லை என்பதால் வழக்கிற்கு முகாந்திரம் இல்லை என்று அரசு வழக்கறிஞர் வாதாடினார். கோவில் கட்டுவதற்கு அரசு நிர்வாகம் பல முறை அனுமதி மறுத்திருப்பதாக முகமது அஸ்கர் தமது தரப்பு வாதமாக முன்வைத்தார்.

நீதிபதி பண்டிட் ஹர்கிஷண் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பீடத்தில் வழிபாடு நடப்பதையும், சிலை வைத்து வழிபாடு நடந்து வருவதையும் பார்த்தார். அதற்கு முன்பு வரையில் அந்த இடத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் வழிபாடு செய்து வந்தனர். சண்டைகள் மோதல்கள் வராமல் தடுப்பதற்காக சுவர் எழுப்பப்பட்டது. மசூதியின் சுவர்களுக்கு வெளியில் இருக்கும் நிலமும் பீடமும் இந்துக்களுக்கு சட்டபூர்வ உரிமைக்குப் பாத்தியப்பட்டவை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அயோத்தியா.

இந்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்த நீதிபதி பண்டிட்ட ஹர்கிஷண், பீடமும் மசூதியும் அருகருகே இருப்பதாகவும், அவற்றுக்கு ஒரே நுழைவாயில் இருப்பதாகவும் எழுதியுள்ளார். அங்கே கோவில் கட்டினால் மணியோசையும், சங்கொலியும் இரு சமுதாயத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் அமைந்துவிடும் என்பதால் தான், அங்கு கோவில் கட்ட அரசு நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது என்றும் அவர் எழுதியிருக்கிறார்.

நிர்மோஹி அகாரா மகந்த்தின் மனுவை நிராகரித்த நீதிபதி, அவ்வாறு அனுமதி கொடுத்தால், எதிர்காலத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் உருவாகக் காரணமாக அமைந்துவிடும் என்று காரணம் கூறியுள்ளார்.

மசூதி வளாகத்துக்கு வெளியே கோவில் கட்ட வேண்டும் என்று கோரிய வழக்கில் ஓராண்டு காலத்திற்குள் இப்படித்தான் நிர்மோஹி அகாரா அமைப்பு தோல்வி அடைந்தது.

பிறகு நீதிபதி சேமியரின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த இடத்தைப் பார்வையிட்டு மூன்று மாதங்களில் அவர் தீர்ப்பு அளித்தார். "இந்துக்கள் புனிதமானதாகக் கருதும் இடத்தின் மீது மசூதி கட்டப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. ஆனால் அந்தச் சம்பவம் 256 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருப்பதால், புகாரைத் தீர்த்து வைப்பதற்கு, கால தாமதமாகிவிட்டது" என்று மாவட்ட நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

"பீடம் அமைந்துள்ள இடம் கடவுள் ராமச்சந்திரன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது'' என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இப்போதைய நிலையில் மாற்றம் ஏற்படுத்துவதால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதுடன், அதற்கு மாறாக பாதிப்பை தான் ஏற்படுத்தும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இருந்தபோதிலும் சார்பு நீதிபதி ஹரிகிஷண் தீர்ப்பில் ஒரு பகுதியை நீதிபதி சேமியர் நீக்கிவிட்டார். இந்துக்களின் அனுபவத்தில் இருந்து வரும் பீடம், நீண்ட காலமாகவே அவர்கள் வசம் உள்ளது, அதன் உரிமை நிலையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அந்தத் தீர்ப்பில் இருந்த வரிகளை அவர் நீக்கிவிட்டார். அவை `தேவையற்றவை' என்று அவர் குறிப்பிட்டார்.

அயோத்தியா.

பின்னர் நிர்மோஹி அகாரா அமைப்பு, அவாத் நீதி ஆணையர் டபிள்யூ. யங் நீதிமன்றத்தில் இரண்டாவது மனுவை தாக்கல் செய்தது. ராமச்சந்திரன் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்பும் புனித இடத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் வேண்டுமென்றே மசூதி கட்டியுள்ளார் என்று 1886 நவம்பர் 1 ஆம் தேதி தாம் எழுதிய தீர்ப்பில் நீதி ஆணையர் டபிள்யூ. யங் கூறியுள்ளார். இப்போது அந்த இடத்தில் குறைவான பயன்பாட்டு வசதி மட்டுமே இந்துக்களுக்கு உள்ளது. அந்த எல்லையை அதிகரித்துத் தர வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீதா ரசோயி மற்றும் ராமச்சந்திரர் பிறந்த இடத்திலும் கோவில் கட்ட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று நிரூபிக்க, இந்து அமைப்புகளிடம் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியா.

மூன்று நீதிமன்றங்களின் தீர்ப்புகளுமே அந்த இடத்தின் மீது இந்துக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைப் பற்றி கூறியுள்ளன. ஆனால் ஆவணங்களில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும், அமைதியைப் பராமரிப்பதைக் கருத்தில் கொண்டும் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

1934ல் முஸ்லிம்களின் பக்ரீத் திருநாளன்று பசுக்கள் வெட்டப்பட்ட போது வகுப்புக் கலவரம் ஏற்பட்டதில் பாபர் மசூதி சேதம் அடைந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் அதை சீர் செய்து கொடுத்தது.

ஷியாசன்னி சர்ச்சை

அயோத்தியா.

1936 ஆம் ஆண்டில் இந்த மசூதிக்கு சொந்தம் கொண்டாடி ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களிடையே சர்ச்சை உருவானது.

இதுகுறித்து விசாரணைக்கு வக்பு ஆணையர் உத்தரவிட்டார். மசூதியைக் கட்டிய மிர் பாகி ஷியா இஸ்லாமியர் என்றும், அதனால் மசூதி ஷியா பிரிவினருக்கு தான் சொந்தம் என்றும் மசூதியின் மேலாளர் முகமது ஜாக்கி கூறினார்.

ஆனால் 1941 பிப்ரவரி 8 ஆம் தேதி தீர்ப்பு எழுதிய மாவட்ட வக்பு ஆணையர் மஜீத், இந்த மசூதியைக் கட்டுவதற்கு உத்தரவிட்ட சக்ரவர்த்தி சன்னி முஸ்லிம் என்றும், மசூதியின் இமாம்களும், வழிபாடுகளை நடத்திய குருமார்களும் சன்னி இஸ்லாமியர்கள் என்றும் குறிப்பிட்டு, அதனால் மசூதி சன்னி பிரிவினருக்கு தான் சொந்தம் என்று கூறியுள்ளார்.

அயோத்தியா

அதன்பிறகு சன்னி வக்பு வாரியத்துக்கு எதிராக பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் ஷியா வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.

ஷியா பிரிவினரின் உரிமை கேட்பை 1946 மார்ச் 30 ஆம் தேதி சிவில் நீதிபதி எஸ்.ஏ. அஹ்சன் நிராகரித்தார். மசூதி இடத்தை கோவில் கட்டுவதற்கு ஒப்படைக்கலாம் என்று கூறும் ஷியா பிரிவின் சில தலைவர்கள் கூறுவதால், இந்த வழக்கு இப்போதும் முக்கியத்துவமானதாக உள்ளது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வர இருந்த தருவாயில், பீடம் அமைந்துள்ள இடத்தில் கோவில் கட்டுவதற்கான முயற்சிகளை இந்துக்கள் மீண்டும் தொடங்கினர். ஆனால் இரு தரப்பினருடனும் கலந்து ஆலோசித்த நகர மாஜிஸ்ட்ரேட் ஷாஃபி, பீடம் உள்ள இடத்தில் நிரந்தரக் கட்டுமானம் செய்வதோ, சிலைகள் நிறுவுவதோ கூடாது என்று எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பித்தார். அப்போதுள்ள நிலையையே தொடர வேண்டும் என இரு தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இருந்தபோதிலும், அந்த இடத்தில் தொழுகை நடத்துவதற்கு இந்து சாதுக்கள் இடையூறு செய்வதாக முஸ்லிம்கள் தொடர்ந்து ரிட் மனுக்கள் தாக்கல் செய்து கொண்டிருந்தனர்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, பெருமளவிலான முஸ்லிம்கள், குறிப்பாக அங்கு செல்வாக்குடன் இருந்தவர்கள் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். பிரிவினைக்குப் பிறகு வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பிய, நல்லிணக்கத்தை மேம்படுத்த முயற்சித்த மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டார்.

ராமர் கோவில் தேர்தல் பிரச்சினையாக மாறியது

பிறகு காங்கிரசில் இருந்த சோஷியலிஸ்டுகள் விலகி தங்களுக்கென சொந்தமாக ஒரு கட்சியை ஏற்படுத்திக்கொண்டனர். ஆச்சார்ய நரேந்திர தேவ் உள்ளிட்ட அதன் அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் இருந்து ராஜிநாமா செய்தனர். அயோத்தி இடைத்தேர்தலில் ஆச்சார்ய நரேந்திர தேவ் -ஐ எதிர்த்து செல்வாக்குமிக்க இந்து மதத் தலைவர் பாபா ராகவ் தாஸ் என்பவரை முதல்வர் கோவிந்த் வல்லப பந்த் நிறுத்தினார்.

அயோத்தியா.

அயோத்தியில் கோவில் கட்டுவது என்பது தேர்தல் பிரச்சினையாக மாறியது. பாபா ராகவ் தாஸ் -க்கு ஆதரவு பெருகியது. ஆச்சார்ய நரேந்திர தேவ் -க்கு ராமர் கோவில் மீது நம்பிக்கை இல்லை என்று தனது தேர்தல் பிரச்சார பேச்சுகளில் முதல்வர் ஜி.பி. பந்த் கூறினார். இந்தியாவில் சோஷலிஸத்தின் முன்னோடியாக இருந்த ஆச்சார்ய நரேந்திர தேவ் அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார்.

வக்பு ஆய்வாளர் முகமது இப்ரஹிம், 1948 டிசம்பர் 10ம் தேதியிட்ட தனது அறிக்கையில், மசூதிக்கு உள்ள ஆபத்து குறித்து அரசு நிர்வாகத்துக்கு எச்சரிக்கையை அனுப்பினார். மசூதிக்கு எதிரே பல கல்லறைகளை இந்து சாதுக்கள் சுத்தம் செய்து, அங்கு ராமாயணம் படிக்கிறார்கள் என்றும், வலுக்கட்டாயமாக மசூதியை கைப்பற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றும் விரிவான அந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.

தடிகள் மற்றும் அரிவாள்கள் ஏந்திய இந்துக்களின் கும்பல் அங்கு குவிந்திருப்பதால், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே தொழுகை நடத்த முடிகிறது என்றும் அவர் எழுதியுள்ளார்.

அயோத்தியா

பாபா ராகவ் தாஸ் பெற்ற வெற்றியால், கோவில் கட்டும் முயற்சியை ஆதரிப்பவர்கள் மீண்டும் உத்வேகம் பெற்று 1949 ஜூலையில் உத்தரப்பிரதேச அரசுக்குக் கடிதம் எழுதினர். அங்கு கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் பிரச்சினை குறித்து விரைவாக சாதகமான அறிக்கையை அனுப்புமாறு கோரி பைசாபாத் துணை ஆணையர் கே.கே. நாயருக்கு, உத்தரப்பிரதேச துணைச் செயலாளர் சார் சிங் கடிதம் அனுப்பினார். சர்ச்சைக்குரிய நிலப் பகுதி அரசுக்குச் சொந்தமானதா அல்லது நகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமானதா என்று அறிய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நகர மாஜிஸ்ட்ரேட் குருதத் சிங் மாவட்ட ஆட்சியருக்கு அக்டோபர் 10 ஆம் தேதி தனது அறிக்கையை அனுப்பினார். மசூதிக்கு அருகே ஒரு சிறிய கோவில் உள்ளது என்றும், அது ராமர் பிறந்த இடம் என இந்துக்கள் நம்புகிறார்கள் என்றும், அங்கு பிரமாண்டமான கோவில் கட்ட அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் அறிக்கையில் அவர் கூறியிருந்தார். அது அரசுக்குச் சொந்தமான இடம் என்றும், அங்கு கோவில் கட்ட அனுமதி அளிப்பதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அறிக்கையில் அவர் பரிந்துரை செய்திருந்தார்.

புதிய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தைய இடைப்பட்ட காலமாக இது இருந்தது.

மசூதிக்குள் சிலைகள்

நவம்பர் 24-ல் மசூதிக்கு எதிரே இருந்த கல்லறையை இந்து சாதுக்கள் சுத்தம் செய்யத் தொடங்கினர். பூஜைகள் மற்றும் ராமாயண உரைகள் நடத்தியதால் பெருமளவு கூட்டம் சேர்ந்தது. பதற்றம் அதிகரிப்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் அங்கே காவல் துறை சாவடியை அமைத்து, துணை நிலை ராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்தியது.

இருந்தபோதிலும், 1949 டிசம்பர் 22 ஆம் தேதி இரவு அபய் ராம்தாஸ் மற்றும் அவருடைய சகாக்கள் சுவர் ஏறிக் குதித்து ராமர், ஜானகி, லட்சுமணன் சிலைகளை மசூதிக்குள் வைத்து, ராமர் அங்கே காட்சி தந்து தான் பிறந்த இடத்தை எடுத்துக் கொண்டார் என்று தகவலைப் பரப்பினர்.

அயோத்தியா.

வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் மசூதிக்குச் சென்றனர். ஆனால் அரசு நிர்வாகம் அவர்களைத் திருப்பி அனுப்பியது. சிறிது கால அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. மாவட்ட ஆட்சியர் நாயர் ரகசியமாக அபய் ராமின் திட்டத்துக்கு ஆதரவு அளித்தார் என்று கூறப்பட்டது. சம்பவம் நடந்த மறுநாள் காலையில் சம்பவ இடத்தை பார்வையிட அவர் சென்ற போதுகூட, அத்துமீறி நுழைந்து நடந்த நிகழ்வை சரி செய்வதற்கு அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, இடத்தை எடுத்துக் கொண்டதை வலுப்படுத்தும் வகையில் ஆதாரத்தை உருவாக்கும் வகையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காவல் துறையைச் சேர்ந்த காவலர் மாட்டா பிரசாத் அளித்த தகவலின்பேரில், அயோத்தி காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக இருந்த ராம்தேவ் துபே ஒரு வழக்கு பதிவு செய்தார். 50 முதல் 60 பேர் வரையில் சுவர் ஏறி உள்ளே குதித்து மசூதியின் பூட்டுகளை உடைத்து சிலைகளை வைத்து, சுவர்களில் பல இடங்களில் ஆண், பெண் தெய்வங்களின் ஓவியங்களை வரைந்தனர் என்று வழக்குப் பதிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. கெடு நோக்குடன் நடந்த இந்தச் செயலால் மசூதியின் களங்கம் செய்யப்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் துறையினரின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த நகர கூடுதல் மாஜிஸ்ட்ரேட், தண்டனைச் சட்டத்தின் 145வது பிரிவின் கீழ் அந்த இடத்தை கையகப்படுத்துமாறு அதே நாளன்று உத்தரவு பிறப்பித்தா.ர்

அதேசமயத்தில் டெல்லியில் வேதனையில் இருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல்வர் ஜி.பி. பந்த் -க்கு ஒரு தந்தி அனுப்பினார். ``அயோத்தியில் நடந்த சம்பவங்களால் நான் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட கவனம் செலுத்துவீர்கள் என்று மிகவும் நம்பிக்கையாக இருக்கிறேன். அபாயகரமான முன்னுதாரணம் ஏற்படுத்தப் படுகிறது. அது பேரழிவான பின்விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று அதில் நேரு கூறியிருந்தார்.

பைசாபாத் துணை ஆணையரை உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் லக்னோவுக்கு அழைத்து, கண்டனம் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை மாவட்ட நிர்வாகம் ஏன் தடுக்கவில்லை என்றும், காலையில் சிலைகளை ஏன் அகற்றவில்லை என்றும் அவர் கேட்டார்.

இந்த விவகாரம் குறித்து தலைமைச் செயலாளர் பாவன் சஹாய் -க்கு மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நாயர் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். மக்களிடம் இதற்கு பரவலான ஆதரவு இருக்கிறது என்றும், அரசு நிர்வாகத்தில் உள்ள மிகக் குறைந்த பேரால் அதைத் தடுக்க முடியாமல் போய்விட்டது என்றும் கடிதத்தில் கூறியிருந்தார். இந்து தலைவர்களைக் கைது செய்திருந்தால், நிலைமை மேலும் மோசமாகியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில் அமைந்திருந்த அந்தக் கடிதத்தில் மாவட்ட போலீஸ் கேப்டன் மூர்த்தியை மாற்றும் அரசின் முடிவில் தமக்கு ஒப்புதல் இல்லை என்றும் கூறியிருந்தார். அப்படிச் செய்வதாக இருந்தால் முதலில் தனக்குப் பதிலாக வேறு ஆட்சியரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த இடத்தை வசப்படுத்திக் கொள்வதற்கான செயல்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் உடன் தொடர்புடையவர்கள் தீவிரமாக ஆதரித்தனர்.

மாவட்ட ஆட்சியர் நாயர், நகர மாஜிஸ்ட்ரேட் குருதத் சிங் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெளிவாகத் தெரிய வந்தது. பின்னர் மக்களவைத் தேர்தலில் ஜனசங் வேட்பாளராக நாயர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ தலையிடுவதற்கு முன்னதாக, நகர கூடுதல் மாஜிஸ்ட்ரேட் மார்க்கண்டேய சிங், பாபர் மசூதி - ராமர் பிறந்த இட கட்டடத்தை தண்டனைச் சட்டத்தின் 145வது பிரிவின் கீழ் கையகப்படுத்திவிட்டார். ஓர் இடத்துக்குச் சொந்தம் கொண்டாடுவது மற்றும் கையகப்படுத்துவது தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சர்ச்சை மற்றும் சண்டைகளால் அமைதி கெட்டுவிடக் கூடாது என்று அவர் கூறினார்.

மாநகராட்சித் தலைவர் பிரியதத் ராம் இதன் நிர்வாக பொறுப்பை கவனிப்பார் என்றும், பூஜைகள் மற்றும் சிலைகளுக்கு இதர மத சம்பந்தமான விஷயங்களைச் செய்வார் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவங்களால் வருத்தமடைந்த பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலை லக்னோவுக்கு அனுப்பினார். அத்துடன் முதல்வர் ஜி.பி. பந்த்-க்கு பல கடிதங்கள் அனுப்பினார். தேவை ஏற்பட்டால் தாமே அயோத்தி செல்லப் போவதாகவும் நேரு கூறியிருந்தார்.

பிரிவினையைத் தொடர்ந்து நடந்த வகுப்புக் கலவரம் மற்றும் ஏராளமானோர் படுகொலை சம்பவங்களில் இருந்து நாடு மீளாமல் இருந்த காலக்கட்டம் அது. நிறைய பேர் இன்னும் பாகிஸ்தானுக்கு செல்லும் சூழ்நிலை அல்லது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வரும் சூழ்நிலை இருந்தது. பாகிஸ்தான் தாக்குதலை அடுத்து காஷ்மீர் நிலைமையும் பதற்றமாக இருந்தது.

அயோத்தியில் நடந்துள்ள சம்பவங்கள், நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தியாவிலேயே தங்குவதற்கு முடிவு செய்துள்ள காஷ்மீரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜி.பி. பந்த் -க்கு எழுதிய கடிதத்தில் நேரு குறிப்பிட்டிருந்தார்.

உத்தரப்பிரதேசம் தமக்கு சொந்த மாநிலமாக இருந்தாலும், அந்த மக்கள் தாம் சொல்வதைக் கேட்கவில்லை என்றும் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் வகுப்புவாத சிந்தனையில் செயல்படுகிறார்கள் என்றும் நேரு வருத்தம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பைசாபாத் காங்கிரஸ் மூத்த நிர்வாகி அக்சய் பிரம்மாச்சாரி நீண்டகாலம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.

அப்போது உத்தரப்பிரதேச உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கு அவர் ஒரு அறிக்கையும் அளித்தார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது. ஆனால் ஒரே வரியில் அரசு பதில் அளித்தது. பிரச்சினை நீதிமன்றத்தில் இருப்பதால், அதுபற்றி அதிகம் பேசுவது பொருத்தமாக இருக்காது என்று கூறிவிட்டது.

சிவில் வழக்குகள்

கோபால் சிங் விஷாரத் என்பவர் அரசுக்கு எதிராகவும், ஜாகூர் அகமது மற்றும் பிற முஸ்லிம்களுக்கு எதிராக சிவில் நீதிபதி நீதிமன்றத்தில் 1950 ஜனவரி 16 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். ராமர் பிறந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ள ராமர் மற்றும் பிற சிலைகளை அங்கிருந்து அகற்றக் கூடாது என்றும், மக்கள் அங்கு செல்வதையோ, அங்கு பூஜைகள் செய்வதையோ தடுக்கக் கூடாது என்றும் மனுவில் அவர் கோரியிருந்தார்.

சிவில் நீதிபதி அன்றைய தினமே இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தார். பின்னர் சிறிய திருத்தங்களுடன் மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் அது உறுதிபடுத்தப்பட்டது.

தடை உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு அந்த வழக்கு ஐந்து ஆண்டுகள் நிலுவையில் இருந்தது. புதிய மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஜே.என். உக்ரா தனது பிரமாணப் பத்திரத்தில், ``சர்ச்சைக்குரிய நிலம் பாபர் மசூதி என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. நீண்ட காலமாக முஸ்லிம்கள் அங்கு வழிபாடு செய்து வருகின்றனர். அது ராமர் ஆலயமாகப் பயன்படுத்தப்படவில்லை. ஸ்ரீராமச்சந்திரனின் சிலைகள் தவறான முறையில், டிசம்பர் 22 ஆம் தேதி இரவு கள்ளத்தனமாக வைக்கப்பட்டுள்ளன'' என்று கூறியிருந்தார்.

சில தினங்கள் கழித்து திகம்பர் அகாரா அமைப்பைச் சேர்ந்த மகந்த் ராமச்சந்திர பரமஹம்ஸ் -ம் விஷாராத் மனுவைப் போன்ற ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அவர் அந்தச் சிலைகளை வைத்தவர்களில் ஒருவர். பின்னர் விசுவ இந்து பரிஷத் போராட்டத்தில் அவர் முக்கிய பங்காற்றினார். இந்த வழக்கிலும் கூட சிலைகளை அகற்றக் கூடாது என்று உத்தரவிட்டு,, அந்த இடத்தில் பூஜைகளைத் தொடரலாம் என அனுமதி அளித்தது.

ராமர் சிலை அரசியல்சாசன அங்கமாகக் கருதப்பட வேண்டும் என்று கூறி, ஓய்வுபெற்ற நீதிபதி தேவகி நட்டன் அகர்வால் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வழக்கு தொடர்ந்தபோது, பரமஹன்ஸ் தனது வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

சிலைகளை வைத்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து நிர்மோஹி அகாரா அமைப்பு மூன்றாவது வழக்கை தாக்கல் செய்தது. ராமர் கோவிலில் பூஜை செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் நிர்மோஹி அகாரா அமைப்புக்கு உரிமை உள்ளது என்று இந்த வழக்கில் கோரப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1961-ல் சன்னி வக்பு வாரியம் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த ஒன்பது முஸ்லிம்கள் நான்காவது வழக்கைத் தொடர்ந்தனர். மசூதி இடம் மட்டுமின்றி, அருகில் கல்லறை இடத்துக்கும் உரிமை கோருவதாக அந்த வழக்கு இருந்தது.

நான்கு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து மாவட்ட நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது. இரண்டு தசாப்தங்களாக அந்த விசாரணை நீடித்தது. அந்தப் பகுதி முஸ்லிம்களும், இந்துக்களும் நல்ல நட்புடன் நல்ல அயலார்களாக வாழ்ந்ததால் வழக்கு நீடித்துக் கொண்டே போனது. அதுமட்டுமின்றி, விசாரணைகளின்போது, தாங்கள் ஒரே காரில் சென்றதாக, இந்த வழக்கில் பிரதான எதிர் மனுதாரர்களான பரமஹன்ஸ், ஹாசிம் அன்சாரி ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர். தாங்கள் அதிகம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது வழக்கம் என்றும் கூறினர். எந்தவிதமான தயக்கமும் இன்றி, தங்களுடைய வீடுகளுக்குச் சென்று வந்ததாகவும் தெரிவித்தனர்.

இருவரையும் மீண்டும் திகம்பர் அகாராவில் நான் நேர்காணல் செய்திருக்கிறேன. இப்போது அவர்கள் இருவரும் இல்லை.

கோவில் - மசூதி குறித்த அரசியல்

அயோத்தியா.

நெருக்கடி நிலை பிரகடனம் முடிவுக்கு வந்த பிறகு, ஜன சங் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜனதா கட்சியை உருவாக்கி 1977 தேர்தலில் இந்திரா காந்தியை ஆட்சியில் இருந்து அகற்றின. ஆனால் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக மூன்று ஆண்டுகளுக்குள் ஆட்சி கவிழ்ந்தது. 1980ல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

அரசியல் ரீதியில் இந்துக்களை ஒன்று திரட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். சிந்திக்கத் தொடங்கியது. இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடங்களுடன் தொடர்புடைய மசூதிகளை இலக்கு வைத்து ஒரு இயக்கம் தொடங்குவது என்று திட்டம் உருவாக்கப்பட்டது. ராமர், கிருஷ்ணர், சிவ வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடைய மசூதிகளை இலக்கு வைக்க திட்டமிடப்பட்டது. காசி, மதுரா, அயோத்தி ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள மசூதிகள் மீது குறி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த மூன்று இந்து வழிபாட்டுத் தலங்களையும் விடுவிப்பது என்று டெல்லியில் விக்யான் பவனில் ஏப்ரல் 7 - 8 தேதிகளில் நடைபெற்ற இந்து மத மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. உள்ளூரில் ஒப்புதல்களுடன் மசூதிகளுக்கு அருகே கோவில்கள் கட்டப்பட்ட காரணத்தால், அயோத்தி மீது கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டது.

அயோத்தியா.

ராம ஜன்ம பூமி முக்தி யாக்யா கமிட்டி 1984 ஜூலை 27ல் உருவாக்கப்பட்டது. ராமர், ஜானகி சிலைகள் கூண்டுக்குள் இருப்பது போல மோட்டார் வாகன ரதம் உருவாக்கப்பட்டது. அந்த ரதம் பிகாரில் சீதாமார்ஹியில் இருந்து செப்டம்பர் 25 ஆம் தேதி புறப்பட்டது. அக்டோபர் 8 ஆம் தேதி அந்த ரதம் அயோத்தி அருகே வருவதற்குள், தங்களின் அபிமான கடவுள்கள் கூண்டுக்குள் இருப்பதைப் பார்த்து இந்து மக்களிடம் வலுவான எதிர்ப்பும் அனுதாபமும் உருவானது.

மசூதியின் கதவுகளில் போடப்பட்டுள்ள பூட்டுகளை அகற்றி, அங்கே கோவில் கட்டுவதற்காக அந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்து சாதுக்கள் மற்றும் துறவிகளின் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு ராம் ஜன்மபூமி நியாஸ் என பெயரிடப்பட்டது.

ரத யாத்திரை வந்த வழிகளில் பெரும் ஆதரவு திரண்டது. லக்னோ வழியாக அக்டோபர் 31 ஆம் தேதி ரத யாத்திரை டெல்லியை அடைந்தது. அன்றைய தினம் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதால், ஏற்பட்ட தடங்கல்களைத் தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி ரத யாத்திரை முடித்துக் கொள்ளப்பட்டது. பெரிய அளவில் நடத்த உத்தேசித்திருந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

பொதுத் தேர்தலில் ராஜீவ் காந்தி அதிக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு அரசியல் மற்றும் நிர்வாக அனுபவங்கள் இல்லை.

பின்னர் மசூதியின் கதவுகளைத் திறக்க விசுவ இந்து பரிஷத் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. 1986 மார்ச் 6 ஆம் தேதி சிவராத்திரிக்குள் கதவுகளைத் திறக்காவிட்டால், தாங்களே பலவந்தமாக திறக்கப் போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்துவதற்காக, அதிக தீவிரமான செயல்பாடுகளைக் கொண்டதாக பஜ்ரங் தள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மக்களின் உணர்வுகளை அமைதிப்படுத்தும் நோக்கில் ராம் கதா பூங்கா அமைப்பதற்காக, சர்ச்சைக்குரிய இடத்தின் அருகே 42 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப் போவதாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த வீரபத்ர சிங் அரசு அறிவித்தது.சரயூ நதிக் கரைகளில் ராமரின் பாதங்களை கட்டும் பணியையும் அரசு தொடங்கியது. ஆனால் இந்துத்வா ஆதரவு அமைப்புகள் இதனால் திருப்தி அடைந்துவிடவில்லை.

பூட்டுகள் திறப்பு 

அயோத்தியா.

ராஜீவ் காந்திக்கும் அவருடைய சகாக்களுக்கும் நெருக்குதல் வந்தது என்றும், உமேஷ் சந்திர பாண்டே என்ற வழக்கறிஞரை, பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டார் என்றும் நம்பப்படுகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் உமேஷ் சந்திர பாண்டேவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல் துறை கேப்டன் ஆகியோர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, மசூதிக் கதவில் உள்ள பூட்டுகளைத் திறப்பதால் அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று உத்தரவாதம் அளித்தனர்.

அவர்களுடைய உறுதியின் அடிப்படையில், பூட்டுகளைத் திறப்பதற்கு மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே உத்தரவிட்டார்.

ஒரு மணி நேரத்துக்குள் அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டு, அதுபற்றிய செய்தி தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தன என்ற எண்ணத்தை உருவாக்குவதாக இது இருந்தது. இந்தியாவில் மசூதி - கோவில் தொடர்பாக சர்ச்சை உள்ளது என்பதை இந்தியா முழுவதற்கும், உலகிற்கும் தெரிவிப்பதாக இந்தச் சம்பவம் அமைந்தது.

முஸ்லிம் சமுதாயத்தினர் முகமது அசம் கான் மற்றும் ஜாபர்யப் கிலானி தலைமையில் பாபர் மசூதி எதிர்வினை கமிட்டியை உருவாக்கி, பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்கு எதிர்வினை போராட்டங்களைத் தொடங்கினர்.

இந்த காலக்கட்டத்தில், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்மணி ஷாபானுவுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்திக்கு முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார் ராஜீவ் காந்தி. அந்த முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

மறுபுறத்தில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விவகாரத்தில், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்வதற்குப் பேச்சு நடத்தினர். மசூதிக்கு அருகே பீடம் உள்ள இடத்தில் இருந்து வெளிப்புறமாக காலியாக உள்ள நிலத்தில் இந்துக்கள் கோவில் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும், மசூதியை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றும் முஸ்லிம்கள் ஆலோசனை கூறினர். ஆனால் அந்தத் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். நிராகரித்துவிட்டது.

இந்துக்களும் முஸ்லிம்களும் நாடு தழுவிய அளவில் வகுப்பு அடிப்படையில் ஆதரவு திரட்டத் தொடங்கினர். அப்போது பாஜக வெளிப்படையாக கோவில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது.

1989 ஜூன் 11ல் பாலம்பூர் காரியக் கமிட்டி கூட்டத்தில் இதுதொடர்பாக பாரதீய ஜனதா கட்சி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது என்றும், ஒப்புதலுடனோ அல்லது நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியோ, ராமர் பிறந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டிருந்தது.

அது தேசியப் பிரச்சினையாகிவிட்டது என்றும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அது எதிரொலிக்கும் என்றும் இப்போது மக்கள் கருதினர்.

இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக இதுதொடர்பான நான்கு வழக்குகளையும் பைசாபாத் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உத்தரப்பிரதேச காங்கிரஸ் அரசு மனு தாக்கல் செய்தது. 1989 ஜூலை 10 ஆம் தேதி, நான்கு வழக்குகளையும் பைசாபாத்தில் இருந்து உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரையில், மசூதி மற்றும் சர்ச்சைக்குரிய அனைத்து நிலங்களிலும், அப்போதிருந்த நிலையே தொடர வேண்டும் என்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

அடிக்கல்

கோவில் கட்டுவதற்கு நவம்பர் 9 ஆம் தேதி தாங்கள் அடிக்கல் நாட்டப் போவதாக விசுவ இந்து பரிஷத் அறிவித்தது. நாடு முழுக்க யாத்திரை நடத்தி , கோவில் கட்டுவதற்கான கற்களைப் பெறப் போவதாகவும் அறிவித்தது. ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் உள்துறை அமைச்சர் பூட்டா சிங், விசுவ இந்து பரிஷத் தலைவர்களை லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் என்.டி. திவாரியின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தங்களுடைய யாத்திரை அமைதியாக நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் அப்போது உத்தரவாதம் அளித்தனர்.

அயோத்தியா.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அப்போதைய நிலையைத் தொடர்வோம் என்று பரிஷத்தின் தலைவர்கள் அசோக் சிங்கால், மகந்த் அவைத்யநாத் மற்றும் அவர்களுடைய சகாக்கள் எழுத்துபூர்வமாக உறுதி அளித்தனர்.

பைசாபாத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ராஜீவ் காந்தி, ராம ராஜ்யத்தை உருவாக்கப் போவதாக அறிவித்தார்.

அதே சமயத்தில், அடிக்கல் நாட்டும் விழாவுக்காக மசூதி அருகே விசுவ இந்து பரிஷத் கொடி நட்டது.

அடிக்கல் நாட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இடம், சர்ச்சைக்குரிய பகுதிக்குள் வருகிறதா என தெளிவபடுத்த வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தை மாநில அரசு அணுகியது. சர்ச்சைக்குரிய இடத்தில், அப்போதைய நிலையைத் தொடர வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, அந்த இடம் சர்ச்சைக்குரிய பகுதிக்குள் தான் வருகிறது என்று நவம்பர் 7 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்றம் கூறியது.

அயோத்தியா.

இருந்தபோதிலும், நேரில் ஆய்வு செய்ததில் அது சர்ச்சைக்குள்பட்ட பகுதியில் இருந்து தள்ளி இருப்பதாகக் கூறி நவம்பர் 9 ஆம் தேதி உத்தரப்பிரதேச அரசாங்கம் அனுமதி அளித்தது.

சில திட்டங்களின் அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டு, அடிக்கல் நாட்டுவதற்கு மசூதியில் இருந்து 200 அடி தொலைவில் உள்ள இடத்தை தேர்வு செய்ததாகவும், அதற்கு துறவி தேவ்ரஹா பாபா ஒப்புதல் அளித்ததாகவும் நம்பப்படுகிறது.

அடிக்கல் நாட்டும் விழா முடிக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் இருந்து தீவிர எதிர்ப்பு கிளம்பியதைப் பார்த்த அரசாங்கம், மேற்கொண்டு எந்தப் பணியும் நடக்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தியது.

அந்த காலக்கட்டத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய வி.பி. சிங் தலைமையில் மூன்றாவது அரசியல் சக்தியாக ஜனதா தளம் உருவானது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றது. பாஜக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் வி.பி. சிங் பிரதமரானார்.

வி.பி. சிங்கும், ஜனதா தளமும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்பது தெளிவாக வெளிப்பட்டது.

சோஷலிஸ தலைவர் முலாயம் சிங் யாதவை உத்தரப்பிரதேச முதல்வராக ஜனதா தளம் நியமித்தது. விசுவ இந்து பரிஷத்தின் அயோத்தி போராட்டத்தை முன்னர் எதிர்த்தவர் முலாயம் சிங் யாதவ்.

இப்போது கோவில் தொடர்பான போராட்டத்தை எல்.கே. அத்வானி தலைமையில் பாஜக வெளிப்படையாக கையில் எடுத்துக் கொண்டது.

நாடு முழுக்க ஆதரவு திரட்டும் வகையில் 1990 செப்டம்பர் 25 ஆம் தேதி சோம்நாத் ஆலயத்தில் இருந்து அயோத்தியை நோக்கி அத்வானி ரத யாத்திரை தொடங்கினார். அக்டோபர் 30 ஆம் தேதி அயோத்தியை அடைவதாக அவர் திட்டமிட்டிருந்தார். அவருடைய ரத யாத்திரையின் போது நாட்டில் பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன.

பிகாரில் அவரை லாலு பிரசாத் யாதவ் கைது செய்து, ரத யாத்திரையை தடுத்து நிறுத்தினார்.

முலாயம் சிங் யாதவின் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தபோதிலும், பல்லாயிரக்கணக்கிலான கர சேவகர்கள் அல்லது இந்து தன்னார்வலர்கள் அக்டோபர் 30 ஆம் தேதி அயோத்தியை அடைந்தனர். காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு உள்பட, பலப்பிரயோகம் செய்தபோதிலும், பாபர் மசூதியின் மீது கர சேவகர்கள் ஏறிவிட்டனர்.

அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 கர சேவகர்கள் கொல்லப்பட்டனர். இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் கொல்லப்பட்டனர் என்றும் சரயூ நதி ரத்தத்தால் சிவப்பாகிவிட்டது என்றும் பல இந்தி பத்திரிகைகள் விசேஷ பதிப்புகளை வெளியிட்டன.

முலாயம் சிங் யாதவை முல்லா முலாயம் என்று விமர்சனம் செய்தனர். இந்துக்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு குறைந்தது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார்.

வி.பி. சிங் செயல்பாட்டால் கோபமடைந்த பாஜக, அவருடைய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. தேவிலால் கூட ஜனதா தளத்துக்கு எதிராக மாறினார்.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் அமல் செய்தார். அப்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய வகுப்பினருக்கு இடையில் தீவிர மோதல்கள் உருவாகத் தொடங்கின.

1991 மக்களவைத் தேர்தலின் போது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் நரசிம்ம ராவ் பிரதமராகப் பொறுப்பேற்றார். உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைவர் கல்யாண் சிங் முதல்வரானார். அவர் பதவியேற்றதும், மசூதிக்கு எதிரே 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றுலா மேம்பாட்டுக்காக கையகப்படுத்தினார். ராம் கதா பூங்காவுக்காக கையகப்படுத்தப்பட்ட 42 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் விசுவ இந்து பரிஷத்துக்கு வழங்கப்பட்டது.

பழைய சிவில் வழக்குகளில், அரசின் அறிவுரைகளின் அடிப்படையில், மாற்றப்பட்ட உண்மைகளுடன் அதிகாரிகள் புதிய பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யத் தொடங்கினர்.

சுற்றுலா துறைக்காக மசூதி எதிரே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கோவில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்பியது. கட்டுமானத்துக்காக கற்கள் செதுக்கப்பட்டன.

ஆனால் அந்த இடத்தில் நிரந்தரக் கட்டுமானம் எதையும் செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இருந்தபோதிலும், ஜூலை மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் தலையிட்டது. நரசிம்ம ராவ் அரசு இந்து சாதுக்கள் மற்றும் துறவிகளை கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தி கட்டுமானப் பணிகளை நிறுத்தியது.

மீண்டும் 1992 டிசம்பரில், கரசேவை அறிவிக்கப்பட்டது. அடையாளபூர்வமான கரசேவையால் மசூதிக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று கல்யாண் சிங் அரசும் விசுவ இந்து பரிஷத் தலைவர்களும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தனர்.

பலப்பிரயோகம் செய்யக் கூடாது என்று காவல் துறையினருக்கு கல்யாண் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார். மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியைப் பெறுவதற்கு கூட, மாவட்ட நிர்வாகத்தை அவர் அனுமதிக்கவில்லை. அதன்பிறகு டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த சம்பவங்கள் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்றுவிட்டன. எல்.கே. அத்வானி, ஜோஷி, சிங்கால் போன்ற உயர் தலைவர்கள் மற்றும் உச்சநீதிமன்ற பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட நீதிபதி தேஜ் சங்கர் மற்றும் காவல் துறையினரின் முன்னிலையில் லட்சக்கணக்கான கரசேவகர்கள் திரண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மசூதியின் ஒவ்வொரு செங்கல்லையும் இடித்து, இடிபாடுகளின் மீது தற்காலிக கோவிலையும் உருவாக்கினர்.

முன்பைப் போலவே நீதிமன்றம் நியமித்த பார்வையாளரின் முன்னிலையில் பக்தர்கள் வருகையும் பூஜைகளும் தொடங்கின. மத்திய அரசின் திறமையின்மை என்றும், மறைமுகமாக இந்து குழுக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டது என்றும் முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் அரசியல்சாசனத்தின் படி சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும், அந்த விதிமுறைகளின்படி மத்திய அரசு செயல்பட்டது என்றும் பிரதமர் கூறினார். மீண்டும் மசூதியை கட்டித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

மசூதி இடிக்கப்பட்ட சில தினங்களில், அரசு நிலம் கையகப்படுத்தியதை சட்ட விரோதம் என்று 1993 ஜனவரியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சர்ச்சைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்துடன், சர்ச்சைக்குரிய வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. சர்ச்சைக்குரிய இடத்தில் பழைய இந்துக் கோவில் எதையாவது இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதா என்பது பற்றி கருத்து தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் அந்த நிலம் தொடர்பான சர்ச்சையின் வரம்பு குறைக்கப்பட்டது.

தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமைந்தாலும், அந்தத் தரப்பினருக்கு வழிபாட்டுத் தலம் கட்டுவதற்கு, பிரதான பகுதி அளிக்கப்படும் என்பதாக புதிய சட்டம் இருந்தது. மற்றொரு தரப்பினர் தங்கள் வழிபாட்டுத் தலத்தைக் கட்டிக் கொள்ள, பிரதான வளாகத்தில் இருந்து சற்று தள்ளியிருக்கும் இடம் வழங்கப்படும். இரு வழிபாட்டுத் தலங்களுக்கும் தனித்தனி அறக்கட்டளைகள் உருவாக்கப்படும். பயணிகளுக்கான வசதிகள் உருவாக்கப்படும். மத்திய அரசின் மேற்பார்வை அதிகாரியாக பைசாபாத் ஆணையாளர் நியமிக்கப்பட்டார்.

ஆனால் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு இந்துக் கோவில் இருந்ததா என்ற கேள்விக்குப் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதுகுறித்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

இரு தரப்பினரும் நீதிமன்ற நடைமுறைகள் மூலமாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக, வழக்குகளை உயர்நீதிமன்றத்துக்கே உச்சநீதிமன்றம் திருப்பி அனுப்பியது.

பாபர் மசூதிக்கு அடியிலும், ராமர் பீடம் அமைக்கப்பட்ட இடத்திற்கு அடியிலும் தோண்டி ஆய்வு செய்யுமாறு தொல்லியல் பாதுகாப்புத் துறையை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதற்கு கணிசமான கால அவகாசம் ஆகிவிட்டது. ஆனால் வட இந்தியக் கோவில்களில் உள்ளதைப் போன்ற கட்டுமானங்களின் மிச்சங்கள் சிலவற்றை தாங்கள் கண்டறிந்ததாக தொல்லியல் பாதுகாப்புத் துறை அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், அந்த இடத்தில் ராமர் ஆலயம் இருந்தது என்று இந்து அமைப்பினர் உரிமை கோரினர். ஆனால் அதுபோன்ற குழப்பங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்று மற்ற வரலாற்றாளர்கள் கூறினர்.

நீண்டகால விசாரணைகளுக்குப் பிறகு, சாட்சி அறிக்கைகள் மற்றும் ஆவண ஆதாரங்களை ஆய்வு செய்தபிறகு 2010 செப்டம்பர் 30ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சந்தர்ப்ப ஆதாரங்கள் பலவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில், மசூதியின் மையப் பகுதிக்கு கீழே உள்ள பகுதி தான் ஸ்ரீராமச்சந்திரர் பிறந்த இடமாக இருக்க வேண்டும் என்று மூன்று நீதிபதிகளும் ஒப்புக் கொண்டனர். ஆனால் அந்த நிலத்தின் உரிமைக்கு யாரிடமும் வலுவான ஆதாரம் எதுவும் இல்லை.

நீண்டகாலமாக பராமரித்து வந்த அடிப்படையில் அந்த நிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, பகவான் ராமர், நிர்மோஹி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்துக்கு அளிக்கப்பட்டது. கிராமப்புற பஞ்சாயத்தின் தீர்ப்பைப் போல உள்ளது என்று அந்தத் தீர்ப்பு விமர்சனத்துக்கு ஆளானது. சர்ச்சையில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அந்தத் தீர்ப்பை நிராகரித்தனர்.

இப்போது சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்க உள்ளது.

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி அமைந்திருந்த சுமார் 1500 சதுர மீட்டர் அளவுள்ள நிலம் பற்றியதாக மட்டுமே நீதிமன்றத்தில் சர்ச்சை உள்ளது.

ஆனால் மதம், நம்பிக்கை மற்றும் அரசியல் என்ற கலவை காரணமாக அதை சிக்கல் மிகுந்ததாக, உணர்வுப்பூர்வமான விஷயமாக ஆக்கிவிட்டன. உச்சநீதிமன்றம் அளிக்கவுள்ள தீர்ப்பு இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியா மற்றும் அதையும் தாண்டிய பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.