முகப்பு வரலாறு தமிழ் சமுதாயம் வரலாறு இதர ஜாதிகள் ஊராளி இன மக்கள் வாழ்வியல் - பழங்குடியின் மரபுகள் பற்றிய ஆய்வு..!
ஊராளி இன மக்கள் வாழ்வியல் - பழங்குடியின் மரபுகள் பற்றிய ஆய்வு..!
ஒரு நாட்டில் உள்ள சமயம் அந்நாட்டில் உள்ள ஒழுக்கத்தை நிலை நிறுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஒரு சமுதாயத்திற்கு உட்பட்ட தெய்வ வழிபாடும் அதனோடு இணைந்த பண்டிகைகளும் அந்தச் சமுதாயக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் முழுமையான பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன. மானிடவியலாளர்கள் கருத்துப்படி முன்வரலாற்றுக் காலத்து மூதாதையர்களாக நியாண்டர்தால் மனிதன் காலத்திலேயே சமயம் தொடர்பான நம்பிக்கைகளும், எண்ணங்களும் தோற்றம் பெற்றுவிட்டதை அறிய முடிகிறது.
ஊராளி மக்களின் வரலாற்று சுருக்கம் :
ஊராளி என்னும் பழங்குடியினராவர் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வாழ்கின்ற ஒரு தமிழகப் பழங்குடிகள் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரையன், பில்லியன் என்னும் இரண்டு சகோதரர்களின் வம்சம் என்றும், இவர்கள் இருவரும் பாண்டிய அரசர்களுக்குக் குடை பிடித்தவர்கள் என்றும் கூறுவர். இவர்கள் மலையாளம் கலந்த தமிழ் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்களில் கல்கட்டி, குப்பர், புங்கர், பேராதவர், மோரிகர், வெள்ளகர், உப்பிலிகள் என்று ஏழு குலங்களாகப் பிரிந்துள்ளனர் இம்மக்கள். இந்த ஏழு குலங்களுக்கும் ஒரு தலைவர் இருப்பதுபோல, ஏழு தெய்வங்களும் இருக்கின்றன. ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் உடன் பங்காளி உறவு முறையினராக உள்ளனர். இதனால் ஒரே குலத்துக்குள் திருமணம் செய்வது கிடையாது.
ஊராளி மக்களின் பொருளாதாரம் வேளாண்மை, கால்நடைகளை மேய்த்தல் ஆகிய இரண்டையும் சார்ந்தே இருக்கிறது. வேட்டை அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு துப்பாக்கி இருந்தது. ஆனால், இப்போது அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடனர். இவர்களின் நிலங்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேயிலை, காபி போன்ற பணப் பயிர்கள் பயிரிடுவதற்காக ஆங்கிலேயர்களால் பறிக்கப்பட்டன. விடுதலைக்குப் பிறகு பெரும் பணக்காரர்களும், வணிகர்களும், மேல்தட்டு சாதியினரும் இம்மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நிலங்களைப் பிடுங்கிக்கொண்டனர். இன்றைக்கு அதே நிலங்களில் அன்றாடக் கூலிகளாக இருக்கிறார்கள்.
ஊராளிகளின் மதமும், தெய்வங்களும் :
இந்தியாவில் ஆதிவாசிகளின் மதம் என்று ஒன்று இருந்தது. இன்றும் இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளைப் போன்றே, தமிழக மேற்கு மாவட்டங்களான ஈரோடு, கோவை, நீலகிரி பகுதிகளில் வாழும் இருளர், குறும்பர், சோளகர் மற்றும் ஊராளிகள் பாரம்பரியமாக இயற்கை வழிபாட்டைக் கொண்டிருந்தனர் என்பதே வரலாற்று உண்மை.
இயற்கை வழிபாடு :
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் நம்பிக்கை உள்ளவர்களும் பல இடங்களில் தத்தம் கருத்துக்களால் வேறுபடுகின்றனர். ஆனால் 'மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி உள்ளது' என்ற கருத்தில் இவ்விருவரும் ஒன்றுபடுகின்றனர், இயற்கையோடு இணைந்திருக்கும் இத்தகு இறையாற்றலை, இயற்கையாற்றலை இயக்குவதற்கு ஒருவன் தேவை. அந்த "ஒருவன்” தான் இறைவன் ஆவான். குன்றிப் பகுதியில் வாழும் இருளர் மற்றும் ஊராளிகள் இயற்கையின் செயல்பாடுகள் அனைத்திலும் மனித சக்திக்கு மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது என நம்புகின்றனர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மலைகள், கற்பாறைகள், குன்றுகள், ஆறுகள், அருவிகள், குளங்கள், நிலம், வனம், மரம் என அனைத்து வகையான இயற்கை வடிவங்களை, இறை உருவங்களைப் புனிதம் எனப்பார்ப்பதே ஆதிவாசி மதம்.
இயற்கை வடிவினில் இணையில்லாமலும் ஒப்பாரும் மிக்காரும் இன்றி தனிப்பெரும் சோதி வடிவாகத் திகழ்வது சூரியன் ஆகும். இதன் அறிவியல் சிறப்பினையும், ஆன்மிக உணர்வினையும் அறிந்த ஊராளிகள் பொங்கல் விழா வைத்துச் சூரியனுக்கு வழிபாடு எடுக்கின்றனர். இந்த இயற்கையின் சக்தியே தங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயத்தையும் நிர்ணயிக்கின்றது என்று நம்புகின்றனர்.
இயற்கையை வழிபடுவதில் இவர்களுக்கும், தமிழகத்தில் உள்ள ஆதிவாசிகளுக்கும், ஏன் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வாழும் பல்வேறு ஆதிவாசிகளுக்கும் ஒற்றுமை உள்ளது என்பதனையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையை வழிபடுவது சாதாரணமாகக் குடும்ப அளவில் மட்டுமே இருக்கும். சில நேரங்களில் கிராம் அளவிலும், ஒரே விதமான இயற்கை வழிபாட்டு முறை இருக்கும். வழிபாடு எப்போது தேவையோ அப்போதெல்லாம் வழிபடுவது ஒருவித வாடிக்கை முறை ஆகும். உதாரணமாக வனத்திற்கு வேட்டைக்குச் செல்லும் முன் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்ற வேண்டுமென, வனத்தில் உள்ள சருகுகளைக் கும்பிடும் பழக்கம் இன்றும் உண்டு, இப்படி உருவானதுதான் "சருகுமாரி” எனும் கடவுள் ஆகும்.
கிராமக் கடவுள் வழிபாடு :
இயற்கையில் உள்ள அனைத்திற்கும் சக்தி உள்ளதால் அனைத்தையும் கடவுள்களாக ஏற்று, தனியாக அல்லது குடும்ப அளவில் வணங்கும் ஊராளி இன மக்கள் கிராம அளவில் தங்களுக்கு நல்லது செய்யும் கடவுள்கள் இருப்பதை நம்புகின்றனர். இந்தக் கடவுள்கள் சாதாரணமாகப் பெண் தெய்வங்களாக இருப்பதைக் காண இயலுகிறது. மாரி, மசனி, மடூர, மசி, மாகாளி, மல்லி, பண்ணாரி போன்ற பெண் தெய்வங்கள், கிராமத் தெய்வங்களுடன் வன தெய்வங்களையும் கும்பிட்டு வருகின்றனர். கிராமத்தினைக் காவல் காக்கும் தெய்வங்களாகக் கருப்புராயன், மஞ்சள்ராயன், முனியன், ஜமையன், ஆலுமலை அய்யன் என்ற தெய்வங்களும் கிராம தெய்வங்களாகக் கும்பிடப்படுகின்றன. ஆனால் அனைத்துத் தெய்வங்களும் இருக்குமிடம்
வ னப்பகுதியாக மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தெய்வங்கள் எல்லாவித நோய் நொடிகளிலிருந்தும், விபத்து ஆபத்துக்களிலிருந்தும், கஷ்ட நஷ்டங்களிலிருந்தும் நம்மைக் காக்கும் என்று கருதிக் கும்பிடுகின்றனர். அதே நேரத்தில் நல்ல விளைச்சல், திருப்தியான வேட்டை, தேன் சேகரிப்பு இவற்றிற்கெல்லாம் இந்தத் தெய்வங்கள் அருள் புரிகின்றன என்பதே இவர்தம் நம்பிக்கை ஆகும்.
பொதுவாக இத்தெய்வங்கள் ஊருக்கு வெளியே வனத்திற்குள் அமைதியான சூழலில், சுத்தமான இடத்தில் அமைந்துள்ளன. முந்தைய காலத்தில் ஆதிவாசிகள் வனங்களுக்குள்ளே கோவில் கொண்டிருப்பதை நாம் அறிய முடிகின்றது, மேலும் வனம் என்பதே புனிதமான இடம் என்ற சிந்தனையும் ஆதிவாசிகளுக்கு உண்டு. இந்தக் கோயில்களில் சிலை ஏதுமில்லை. தெய்வங்கள் அடையாளமாக ஒரு கல்லையே கொண்டுள்ளனர். மனத்தளவில் நினைத்து, தியானித்து வழிபடுகின்றனர். இந்தத் தெய்வங்கள் கிராமத்தெய்வங்களாக இருப்பதால் அந்தக் கிராமத்தில் உள்ள பூசாரிதான் பூசை செய்வார். இப்பகுதி வாழ் ஆதிவாசிகள் 12 குலங்களாக உள்ளனர். 12 குலத்தில் எந்தக் குலத்தினர் எண்ணிக்கையில் அதிக அளவில் இருக்கின்றார்களோ அந்தக் குலத்தினர்தான் பூசாரியாக இருப்பர். அவரது வழித் தோன்றலாகிய வம்சாவழியினரே பரம்பரை, பரம்பரையாகப் பூசாரிகளாக இருப்பர்.
பூசாரிகளுக்கு உதவுவதற்கு, குறிப்பாகப் பலியிடுவதில் உதவுவதற்கு மற்ற குலத்தில் உதவிப் பூசாரி இருப்பர். இந்தத் தெய்வங்களுக்கு வருடம் ஒருமுறை மாசி, பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் ராகி அறுவடை முடிந்த பிறகு ஒருநாள் விழா கொண்டாடுகிறார்கள், பொங்கல் படைத்தும், ஆட்டுக்கிடாய், கோழி, சேவல் வெட்டிப் படைத்தும் பூசை செய்கின்றனர். அதே நேரத்தில் சுத்த அபிஷேக பூசனையும் உண்டு. வேல், குடம், தீர்த்தச்சொம்பு, வெள்ளிக்குடம், குடை, தங்கத்தாலி முதலானவற்றை வேண்டுதல் நிறைவேறப் பெற்ற மக்கள் நேர்த்திக் கடன்களாகச் செய்கின்றனர். விழாக்களின்போது இசைக்கருவிகள் ஆடல் பாடலுடன் அன்னதானத்துடன் வெகு சிறப்பாகத் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர்.
இறந்தவர்களுக்கு க்கு வழிபாடு :
குன்றி மலைப் பகுதியில் வாழும் ஆதிவாசிகளில் குறிப்பாக ஊராளிகள் நம்பிக்கையில் மிகவும் முக்கியமானது இறந்தவர்களுக்குச் செய்யும் வழிபாடாகும். வாழும் வரை சராசரி மனிதனாக வாழ்ந்து, புனிதனாக விளங்கி இறந்தவர்களை இறைவனுக்குச் சமமாகப் பாவித்து வழிபடும் மரபு ஊராளிகளுக்கே உரியது. வள்ளுவன் வகுத்துள்ள தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் என்ற வரிசையில் முதல்நிலையில் இருப்பவர் தென்புலத்தாராகிய மூதாதையர் ஆவர். இறந்துபட்ட மூதாதையரைச் சமாதி நிலையில் வைத்து வழிபடுகின்றனர். சமாதி என்பது ( சம்பர் + ஆதி ) ஆதிக்குச் சமமாக மூதாதையரை வழிபடுவதாகும். இறந்தவர்களின் ஆன்மா சாகாது என்றும் நித்தியமானது என்றும் நம்புகின்றனர். மயானங்களில் புதைக்கப்படும் இறந்தவர்களை வருடம் ஒருமுறை கொப்பை எனப்படும் இறந்தவர் வாழும் தலங்களில் நடைபெறும் 'கல்பிடிப்பு' என்ற சடங்கின் மூலம் வெகு ஆடம்பரமாகவும், பயபக்தியாகவும் சேர்த்து வைப்பது ஆதிவாசிகளின் மிக முக்கியமான சடங்காக உள்ளது.
இறந்தவரின் பொருட்டுக் கல்பிடிப்பு விழா :
குன்றி மலையில் உள்ள கிராமங்களில் இறந்தவர்களைப் புதைப்பதற்கு மயானம் இருக்கும். ஆனால் செத்தவர் சாமி இருக்கும் கொப்பை, ஒரு சில இடங்களில் மட்டுமே அந்தந்தக் கோவில் குலத்திற்கென்று இருக்கும். ஆகவே, ஒரு கிராமத்தில் இறந்தவர்களைக் குலத்தின் அடிப்படையில் வருடம் ஒருமுறை சம்பந்தப்பட்ட கொப்பை அல்லது இறந்தவர் சாமிகள் கோயில் தலத்தில் சென்று சேர்த்து விடல் வேண்டும் என்பது ஊராளி இன மக்களின் பாரம்பரிய வழக்கமாக இன்று வரை நடந்து வருகின்றது. இறந்தவர்களின் எலும்புகளில் ஒன்றினைச் சிறிய துணியில் எடுத்துக் கொண்டு அதனுடன் சுடச்சுட சோறு அல்லது இராகிக் களியும் எடுத்துக் கொண்டு இரண்டினையும் துணியில் சேர்த்துக் கட்டிக் கொள்வர். குடும்பத்தில் உள்ள வலிமைவாய்ந்த ஆண்மகன் தலையில் துணியில் கட்டியதை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் எங்கும் நிற்காமல் தண்ணீர் கூட அருந்தாமல் கொப்பை இறந்தவர் சாமி திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும். கொப்பைக்கு அருகாமையில் மாமன் மச்சான் முறையினர் தயாராகக் காத்திருப்பார்கள். தண்ணீர் கொடுப்பார்கள். பின்பு பூசனை நடைபெறும். இறந்தவர் நினைவாக அக்கோயிலில் கல் நட்டி வைப்பர். அந்தக்கல்லுக்குப் பூசனை செய்வார்கள், பின்பு கருமாதி செய்வார்கள்.
தாளவாடியில் இருக்கும் கல்கட்டி குலத்தவர் நீலகிரியில் இருக்கும் இறந்தவர் சாமி கோயில்களுக்கு இப்படிச் சென்று வருவது இன்றும் தொடர்கிறது. குன்றி மலைப்பகுதியில் வாழும் ஊராளி இனமக்களும் இப்படியே கல்பிடித்து வைக்கும் வைபவத்தைப் பயபக்தியுடன் செய்கின்றனர். அப்பகுதியில் உள்ள சுமார் 10 பேர் இறந்த பிறகு அல்லது வருடம் ஒருமுறை கல்பிடித்தல் செய்து இறந்தவர் கோயிலில் சேர்க்கின்றார்கள். முதலில் கிராமத்தில் இருக்கும் தெய்வங்களையும்,
குலதெய்வங்களையும், குடை, பூசைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு இறந்தவர்க்கான சாமி (கல்) எடுக்கச் செல்வார்கள். ஆற்றை அடைந்ததும் பூசை நடைபெறும். பிறகு நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனத்தவர்க்காக ஒரு கல் (சாமி) தேடி எடுத்து அதற்குப் பூசை செய்வர். கொங்கு மானிடவியல் பிறகு சாமிகளை (கற்களை)த் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொண்டு வர, அனைவரும் ஊர்வலமாக, ஆடம்பரமாக ஊய் . . . ஊய் என்று அலை அலையாகச் சப்தம் செய்து கொண்டு இறந்தவர்கள் சாமி கோயிலுக்கு வருவர். கோயில் வனப்பகுதியில் மரங்களுக்கு இடையில் இருக்கும். கோயில் என்றால் கட்டிட அமைப்புக்கள் என்ற அளவில் இருப்பதில்லை. கல் சாமிகள் இருக்கும் இடம்தான் குடி (கொப்பை) என்னும் இறந்தவர் சாமி கோயில் ஆகும். கோயில் முகப்பில் ஆற்றிலிருந்து கொண்டு வந்த சாமிகளை ( கற்களை ) வைத்து, தண்ணீரில் கழுவி, மஞ்சள்தூள் தேய்த்துக்கழுவி, சாளுக்கி மரஇலைகளைக் கொண்டு ஆடையாக அலங்கரித்து உருவகம் செய்வர். திருமணமான 5 பேர்கள் முன்னால் வந்து கங்கணம் கட்டி நிற்க, பூசாரி இறந்தவர் சாமியை ஒவ்வொருவர் மேலும் வைத்துக் கொண்டு போவார்.
அவர்களில் ஒருவர் சாமியாடி இறந்தவர் எப்படி இறந்தார் என்ற உண்மையைச் சொல்லுவார். ஒவ்வொரு இறந்தவர்க்கும் இப்படிக் கல்பிடித்த பின்பு, கிடாய் வெட்டி, பலியிட்டு, சுளுக்கி இலையில் ஆட்டு ஈரலைப் படைப்பார்கள். அங்கேயே கருமாதிச் சோறு. அனைவரும் உண்டபின்பு வீடு திரும்புவர். ஊர் வந்தபிறகு அடுத்த நாள்வரை பூசை மற்ற சடங்குகளும், சம்பிரதாயங்களும் நடத்தி, பெரிய அளவில் விருந்து செய்து உற்றார் உறவினர்களுடன் உண்டு மகிழ்ந்து சடங்கைச் சிறப்பாகச் செய்து முடிப்பர். இவ்வாறாக இறந்தவர் சாமியானதும் அவரது ஆவி தங்கள் வம்சாவழியினர் குடும்பத்தில் குடியிருப்பதாக அவ்வூராளி இனமக்கள் நம்புகிறார்கள். குடும்பத்தில் நடக்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் முதலில் இறந்தவர்க்குப் படைத்து விட்டுத்தான் மற்ற காரியங்களைத் தொடங்குவார்கள். இயற்கையின் அளப்பரிய சக்தியையும் இறந்த முன்னோரின் ஆவிகளையும் முக்கியமாக வழிபட்டு வருகின்றனர் இப்பகுதி ஆதிவாசி மக்கள். இந்த முறையிலான நம்பிக்கையுடன் இவரது பாரம்பரியச் சடங்குகள் பல ஆண்டுகளாக நடந்தேறி வந்தன. இவர்களது மதம், ஆதி மதம் என்றே கூறலாம். ஆனால் வரலாற்றில் குறிப்பாகச் சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் மதத்தை மதிக்கவும் இல்லை. அங்கீகரிக்கவுமில்லை. இந்து, இசுலாம், புத்தம், கிறித்துவம் போல ஆதிவாசிகளின் மதமும் தனி மதம். இந்து மதம் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்னரே ஆதிவாசிகள் மதம் இந்தியாவில் இருந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மத்தியாசியாவிலிருந்து ஹைபர், போலன் ஆகிய கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களின் இந்து மதம், தொடக்க காலத்தில் ஆதிவாசிகளின் மதச்சடங்குகள், கதைகள், கடவுள்கள் முதலியவற்றை இந்த (ஊராளி அல்லது பிற ஆதிவாசிகள்) மதத்திலிருந்து பெற்றுக் கொண்டன. காலப்போக்கில் இந்து மதத்தின் சடங்குகள், சம்பிரதாயங்கள், கதைகள், ஆதிவாசிகள் மதத்திற்குள் கலக்கத் தொடங்கியது. எது எப்படி இருப்பினும், ஆதிவாசிகளின் மதம், இந்தியாவின் ஆதி மதம் என ஒருவாறு தெளியலாம்.
நிறைவுரை :
காட்சிக்கு உள்ளாகும் அனைத்தையும் புனிதமெனப் பார்க்கும் ஆதிவாசி மதத்திற்கும் வனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதிவாசிகளின் மதச் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் நிலை நிறுத்துவது வனம், ஆதிவாசிகளான ஊராளி இன மக்களுக்கு வேதநூல் என்றால் பாரம்பரியமிக்க வாய் மொழி மரபுகள் மட்டுமே ஆகும். இத்தகு வாய்மொழி மரபுகளை நிலை நிறுத்தப் பல கதைகள் உருவாக்கப்பட்டன. மறைந்து கொண்டிருக்கும் இத்தகைய கதைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஆதிவாசிகளின் மதம், ஊராளி மக்களின் நம்பிக்கை, இம்மக்களின் தெய்வங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். கிறித்துவ மதத்தைச் சார்ந்த ஊராளிகள், நிலப்பகுதியில் வாழும் கிறித்துவ வழிபாட்டு முறைகளையே பின்பற்றுபவர்களாக விளங்குவதைக் காணலாம்.