1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் அடக்குமுறைச் சட்டத்தை கொண்டுவந்தது.
இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் எனப்படும் இதுதான் உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆகும்.
காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி.
சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் சிறையில் ஏற்பட்ட பாதிப்புகளால் மரணத்தை தழுவினார்.
சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. தமிழ்நாட்டில் அவரது சொந்த ஊர், நாகை மாவட்டம் பூம்புகார் - மேலையூர் அருகில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் ஆகும்.