முகப்பு வரலாறு உலக வரலாறு தெரிந்து கொள்வோம் ஆப்பிரிக்க பழங்குடிகளின் பண்பாடு - சுவாரஸ்யமான தகவல்கள்..!
ஆப்பிரிக்க பழங்குடிகளின் பண்பாடு - சுவாரஸ்யமான தகவல்கள்..!
பெரும்பான்மையான ஆப்பிரிக்க பழங்குடிகள் பலதரப்பட்ட வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். நீக்ரில்லோஸ் என்னும் காங்கோ குள்ளர்கள் வேடுவர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும் வாழ்கின்றனர். மேலும் விவசாய பொருட்களை நீக்ரோக்களிடத்திலிருந்து பண்டம் மாற்றும் முறையில் பெருகின்றனர். ஆயர்களும், உழவர்களும் தங்களின் முக்கிய தொழில்களோடு, உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற சிறு தொழில்களை மேற்கொண்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் பாண்டு (Bantu) பழங்குடிகள் கால்நடை வளர்த்தல், விவசாயம் செய்தல் போன்ற மிக முக்கியமான தொழில்களை மேற்கொண் டுள்ளனர். கால்நடைகள் இவர்களின் சமூக வாழ்விலும், சடங்குகளிலும் முக்கியத்வம் பெருகின்றன. இவர்களின் சமூகத்தில் ஒரு மனிதனின் மதிப்பு அவன் வைத்திருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்கும் போல் உயருகிறது. இங்கு கால்நடைகள் இல்லாதவன் நடைப்பிணம். இவன் சொல் அம்பலம் ஏறாது. இவன் வாழ்நாள் வீணாகும். இந்தியாவில் முதலில் விவசாயமும், பிறகு கால்நடையும் முக்கியத்துவம் பெற்றிருப்பது போன்று, ஆப்பிரிக்காவில் முதலில் கால்நடையும் பிறகு விவசாயமும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
ஆப்பிரிக்காவில் கால்நடை பணமாக பயன்படுத்தப்படுகிறது. தலைவனுக்குத் தரப்படும் கப்பமும், விசாரணை சபைகளில் செலுத்தப்படும் அபராதமும், திருமணத்தில் பெண் பரிசமும் கால்நடை உருவில் செலுத்தப்படுகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழும் அம்பா (Amba), அக்கோலி (Acholi), பண்டு (Bantu), டாமா (Dama), கண்டா (Ganda), ஹிமா (Hima), காரமோஜா (Karamoja) போன்ற பழங்குடிகள் உகாண்டாவின் பாலைவனப்பாங்கான பிரதேசத்தில் வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் கால்நடை வளர்த்தல், அதோடு வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், விவசாயம் செய்தல் போன்ற தொழில்களையும் மேற்கொண்டுள்ளனர்.
கால்நடைகளை காத்து வளர்த்தல் இவ்வித ஆப்பிரிக்க பழங்குடிகளின் பண்பாடாகும். கால்நடைகள் ஆண்களுக்குச் சொந்தமானவை. ஒவ்வொரு ஆண்மகனுக்கும் சராசரியில் 100 அல்லது 200 கால் நடைகள் சொந்தமாக இருக்கும். ஆயினும் காசமோஜா பழங்குடி யினிடத்தில் ஒரு ஆண்மகனுக்கு 5 முதல் 500 வரை கால் நடைகள் இருக்கலாம். இவ்வித பழங்குடிகளிடத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தொழில் பிரிவு உண்டு. ஆண்கள் கால்நடைகளை பராமரித்தும், பெண்கள் விவசாயம் செய்தும் வாழ்கின்றனர்.
ஆற்றங்கரை அருகிலுள்ள மலைச்சரிவுகளில் பெண்கள் புன விவசாயம் செய்வர். அவ்விடத்திலேயே அவர்கள் தங்களின் குடியிருப்பையும் அமைத்துக் கொள்ளுகின்றனர். இப்பெண்களே நிலத்தை பண்படுத்தி, உழுது, விதை விதைத்து அறுவடை செய்கின்றனர். இவர்களின் முக்கிய பயிர் சோளமாகும். மேலும் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை தோட்டங்களில் பயிரிடுகின்றனர். நிலத்திலிருந்து விளையும் பொருட்கள் பெண்களுக்குச் சொந்தமாகும். இவர்கள் தங்கள் வீடுகளையும், வேலிகளையும் காட்டு மரங்களைக் கொண்டும், வீட்டின் கூரையை விழல் கொண்டும் அமைத்துக் கொள்ளுகின்றனர். இவர்கள் சோளத்தை மாவாக்கி காய்கறிகளுடன் சேர்த்து உணவாக சமைப்பதற்கும், தண்ணீரைக் கொண்டுவருவதற்கும் மண்பாண்டங்களை உபயோகிக்கின்றனர். சோள மாவிலிருந்து மதுபானம் தயாராக்குகின்றர்.
ஆண்கள் கால்நடைகளின் உணவைத் தேடிக் கொண்டு கால்நடைகளுடன் வீட்டிலிருந்து வெகுதூரம் சென்று தங்கள் பண்ணைகளை அமைத்துக் கொள்கின்றனர். இப்பண்ணைகள் ஒரே இடத்தில் பல நாட்கள் நிலைத்து நிற்காமல் கால்நடைகளுடன் உணவிற்கு ஏற்றாற்போல் பல டெங்களில் சிதறியும், அடிக்கடி இடம்விட்டு இடம்மாறிக் கொண்டும் இருக்கும். கோடைக்காலங்களில் இங்கு விவசாய வேலைகள் இல்லாமையால், பெண்கள் தங்கள் ஆண்கள் வசிக்கும் பண்ணைகளில் வந்து சில நாட்கள் தங்குவது வழக்கம். பண்ணைகளில் ஆண்களின் முக்கிய உணவு பால், தயிர்,கால்நடைகளின் குருதியும் ஆகும். ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளைப் போல் வீட்டில் தங்கி விவசாயம் செய்யாமல், கால்நடைகளுடன் போய்க்கொண்டே இருப்பர். பண்ணைகளில் இருக்கும் பசுக்களை தினமும் பால் கறப்பதற்கும், எருதுகளை குருதி சேமிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஆனால் குருகி சேமித்தலுக்கு நாளுக்கு ஒரு எருது வீதமே பயன்படுத்தப்படுகிறது.
நிரந்தர விவசாயம் செய்யும் பெண்கள் மட்பாண்டங்களையும், ஆனால் அடிக்கடி இடம் விட்டு இடம் மாறும் ஆண்கள் பண்ணைகளில் மட்பாண்டங்களுக்குப் பதிலாக மாக்கலங்களையும் உபயோகிக்கின்றனர். ஆண் பிள்ளைகள் தண்ணீர் கொணர மரக்கலங்களை பயன்படுத்துகின்றனர். பால் பாத்திரங்களை சுத்தம் செய்யவும், கைகளைக் கழுவிக் கொள்ளவும், பாலை தயிராக் கவும் கோமயத்தை மரத் தொட்டிகளில் சேகரித்து உபயோகப்படுத்துகின்றனர். ஒவ்வொரு பையனுக்கும் அவன் தந்தை ஒரு கன்றை பரிசளிப்பார். பையனும், கன்றும் ஒன்றாகச் சேர்ந்து வளர்கின்றனர். 'கன்றுக்கு தந்தை' யென அப்பையனை அழைக்கின்றனர். இப்பையன் பனங்கொட்டை அல்லது ஆமை ஓட்டில் மணியைச் செய்து அக்கன்றின் கழுத்தில் அணிவிப்பான்.
கால்நடைகள் இவர்களின் நாடி. இதை தங்கள் எதிரிகள் கவர்ந்து செல்லாமல் பாதுகாப்பது இவர்களின் முக்கிய கடமையாகும். கால்நடைகளை வேலியமைத்த பண்ணைகளில் இருத்தியதோடல்லாமல், தங்கள் ஈட்டிகளையும் கேடயங்களையும் அருகினில் இருக்கும் மரங்களில் சாய்த்து வைத்து வெட்ட வெளிகளில் உறங்குவார்கள். எதிரிகளின் சலசலப்பு கேட்ட மாத்திரத்தில் எல்லோரும் விழித்துக் கொள்வதோடு, மரத்தில் சாய்த்துவைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு போருக்குத் தயாராவார்கள்.
ஆப்பிரிக்க பழங்குடி பண்பாட்டின் ஓர் முக்கிய அம்சம், 'மரப்பலகை' வழிபாடாகும். குடிமக்கள் ஒவ்வொருவரின் ஆன்மாவும் ஓர் மரப்பலகையில் குடியிருக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆடவனும் தன்னுடைய போர்க் கருவிகளையும், மரப்பலகையையும் எப்பொழுதும் சுமந்து செல்வான். இவ்வித மரப்பலகைகளில், அஷாந்தி (Ashanti) பொற் பலகை (Golden stool) சரித்திரப் பிரசித்திப்பெற்றது. 19 - ம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் குமாசி (Kumasi) என்ற இடத்தில் அஷாந்தி என்ற ஒரு பழங்குடியின் நாட்டை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ஆங்கிலேய கவர்னர் அஷாந்தி பொற்பலகையை தமக்கு உரிமையான பீடம் எனத் தவறாக எண்ணி அதைக் கொடுத்து விடும்படி கட்டளை இட்டார். இதை எதிர்த்து ஆயிரக்கணக்கான அஷாந்தி மக்கள் போராடி உயிர்துறந்தனர். ராட்ரே (Rattray) என்னும் ஆங்கில மானிடவியலாளர் இப் பொற்பலகையின் கருத்தை ஆங்கிலேய அதிகாரிகளுக்கு விளக்கினார். அஷாந்தி குடிமக்கள் அனைவரின் திரண்ட ஆன்மா அப்பொற்பலகையில் குடியிருப்பதாக அவர்கள் எண்ணியதால் அதை இழந்தால் அவர்கள் அழிந்து போவார்கள் என்று கருதி அதற்காக போர்புரிந்தனர். இதை விளக்கிய பிறகு ஆங்கிலேயர் அப்பொற்பலகையை குடிமக்களிடம் இருக்க அனுமதித்தனர். அப்பலகையின்மேல் எவரும் உட்காருவதில்லை. அதன் மகிமையினால் அதை குடிகள் தரையில் வைக்காமல் சதா காலமும் சுமந்து காத்து வருகின்றனர். அவர்களின் அரசர் பட்டம் ஏற்கும் விழாவின்போதே அதை மக்கள காண்பார்கள். மேற்கூறிய அஷாந்தி மரப்பலகை தங்க கவசம் அணிந்தது. இப்பொருட்காட்சிச் சாலையிலுள்ள மரப்பலகை அச்சோலி (Acboli) குடிமக்களுடையது ஆகும்.
ஆப்பிரிக்க பழங்குடிகள் வழிபடும் மற்றொரு முக்கிய கருவி 'காளை கர்ஜுப்பு' (Ball Roarer) ஆகும். இது ஆஸ்திரேலிய பழங்குடிகள் உபயோகப்படுத்துவதுபோல், வாலிபர்களின் உபநயனச் சடங்குகளில் உபயோகப்படுத்துகின்றனர். மேலும் இப்பழங்குடிகள் தங்களுடைய வழிபாட்டு விழாக்களில் நடத்தும் நடனங்களில் ‘சன்சா' (Sansa) என்னும் இசைக் கருவியை உபயோகிக்கின்றனர். இக்கருவியின் கம்பிகள் ஓர் குடைந்தெடுத்த தட்டையான மரக் குடுவையின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவ்விசைக்கருவி விரலால் வாசிக்கப்படுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடிகள் செய்து உபயோகிக்கும் கீழ்க்கண்ட பொருட்கள் அவர்கள் கால்நடை பண்பாட்டை விளக்கும் :
பால்குடுவை - இதை ஹிமா பழங்குடியினர் மரத்தில் குடைந்தெடுக்கின்றனர். ஒரு சுரை குடுவையை ஒத்துள்ளதோடு, ஓர் நார் உரியில் பொருத்தப்பட்டுள்ளது.
மரவுரி - மரவுரி தயாரிப்பது ஆண்களின் வேலையாகும். இங்கு காணப்படும் அழகிய பெரிய மரவுரி காண்டா பழங்குடி தயாரித்ததாகும். இவ்வுரி மரத்தின் உள்பட்டைகளை உரித்தும், மரத்தடிகளைக் கொண்டு அவற்றை அடித்தும் பதன் செய்யப்பட்டதாகும்.
புகைக் குழாய் - இவைகள் காண்டா பழங்குடிகள தயாரித்ததாகும். இப்புகைக் குழாயில் இரண்டு பாகங்கள் இருக்கின்றன. ஒன்று, புகையிலையை வைத்து நெருப்பு பற்றவைக்கும் பாத்திரம் (Container) . இது சுட்ட களிமண்ணால் ஆனது. மற்றொன்று, புகையை இழுக்கும் குழாய், இது மரத்தினால் ஆனது.
அம்பு முனைகள் - இவை இரும்பால் ஆனவை. அம்பா (Amba) பழம் குடிகள் இவற்றை உபயோகிக்கின்றனர்.
சக்கரப் பொறிகள் - இப்பொறிகள் உள்ளே வரும் விரோதிகளையும், வெளியேறும் கால் நடைகளையும் சிக்க வைக்க அம்பா பழங்குடிகள் பயன்படுக்துகின்றனர். இச்சக்கரப் பொறி பண்ணைகளின் எல்லைப்புறங்களில் பொருத்தப்பட்டிருக்கும்.
கால்நடையின் கழுத்து மனிகள் - இவைகளில் ஒன்று பனங்கொட்டையிலும், மற்றொன்று ஆமை ஓட்டிலும் செய்யப்பட்டவை.
ஆபரணங்கள் - இந்தியாவிலுள்ள கதபா பழங்குடி பெண்களைப் போல், இவ் ஆப்பிரிக்க பழங்குடி பெண்களும் உலோக வளையங்களை கழுத்திலும், பாதிலும், கையிலும், காலிலும் அதிக அளவில் அணிகின்றனர்.
உதட்டு அணி - காரமோஜா போன்ற ஆப்பிரிக்க பெண்கள் உதடுகளைத் இளைத்து, அத்துளையை நாளடைவில் பெருக்க வைத்து, உதட்டு அணிகளை அணிவது வழக்கம். இவ்வணிகள் உணவு உட்கொள்ளவும், பேசவும் தடங்கலாக இருப்பினும், அவர்களை அவ்வணியே அழகுபடுத்துவதாகக் கருதி அணிந்து வந்தனர்.
இதுவரையில் கண்ட ஆஸ்திரேலிய பழங்குடிகள், எஸ்கிமோக்கள், அமெரிக்க இந்தியர்கள், ஆப்பிரிக்கப் பழங்குடிகள் முதலியவர்களின் வாழ்க்கை, இம்மக்கள் இன்றளவும் நாகரீக பண்பாட்டோடு தொடர்பு கொள்ளாமல் தனியான ஓர் பண்பாடு கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதைத் தெரிவிக்கிறது. பழங்குடிகளை திடீரென நாகரிக மக்களாக மாற்ற எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், விபரீத விளைவில் போய் நிற்கின்றன. ஆனால், இந்தியப் பழங்குடிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பழம் பண்பாட்டை தாங்களே மாற்றிக்கொண்டு நாகரிக வாழ்க்கையை மேற்கொள்ளுவது மிக வரவேற்கத்தக்கதாக இருக்கிறது.