ஈராக் நாட்டின் அரசியல் - வரலாற்று பார்வை..! (பகுதி 1)
ஐரோப்பியர்கள் நாகரீகமடைவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, ஈராக்கியர்கள் நாகரீகமடைந்த மக்களாக வாழ்ந்துள்ளனர். அதனை நிரூபிக்கின்றன ஈராக்கின் புராதன நகரங்கள். இன்று ஈராக் என அறியப்படும் நாடு, கிரேக்கர்களால் "மெசொப்பொத்தாமியா" (இரு நதிகளுக்கு இடைப்பட்ட தேசம்) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. எனினும் அந்தப் பகுதிக்கு கிரேக்கர்கள் வருவதற்கு முன்னரே, அதாவது இன்றைக்கு 6000 வருடங்களுக்கு முன்பு, "சுமேரியர்கள்" என்ற பண்டைய நாகரிக சிறப்புமிக்க மக்கள் அங்கே அரசமைத்திருந்தனர். அந்த சுமேரியர் நாட்டின் தலைநகர் "ஊர்" என அழைக்கப்பட்டது. அதிலிருந்து சிறிது தொலைவில் "உருக்" என்ற நகரம் இருந்தது. இதனை பைபிள், "எரேக்" என்று குறிப்பிடுகின்றது. அதிலிருந்து தான் ஈராக் என்ற தற்கால பெயர் வந்திருக்க வேண்டும்.
சுமேரியத் தலைநகர் ஊரில் இருந்துதான் யூத, கிறிஸ்தவ, இசுலாமிய மும்மதத்தவருக்கும் பொதுவான தீர்க்கதரிசி ஆப்பிரஹாம் வந்தார். தமது மொழிக்கென எழுத்து வடிவத்தைக் கொண்டிருந்த சுமேரியர்கள் களிமண் தட்டுக்களில் இலக்கியங்களை எழுதி வைத்துள்ளனர். அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின்படி, விவிலிய நூலில் ஆதியாகமம் பகுதியில் வரும் பல கதைகள் இந்த சுமேரிய மண் தட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. (ஆனால் கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் மாறியுள்ளன).
சுமேரிய நாகரீகம் ஈராக்கின் தென்பகுதியில் வளர்ந்து வந்தது. அதேகால கட்டத்தில் வட ஈராக்கில் போர்க் குணம்மிக்க ஒரு புதிய இனம் தோன்றியது. (பைபிளில் வரும்) நோவா வின் மகன் "செம்" மின் வழித்தோன்றல்களே அவர்கள். செம்மில் இருந்துதான் யூத, அரேபிய இனங்களைக் குறிக்கும் செமிட்டியர் என்ற பெயர் வந்தது. செமிட்டிய இனத்தைச் சேர்ந்த "சார்கோன்” என்ற மன்னன் தோள் வலிமையால் பிற சிற்றரசர்களை வென்று, சுமேரியாவையும் அடிப்பணிய வைத்து, ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டினான். அதன் தலைநகர் "அக்காட்”. அந்த வெற்றிக்குப் பின்னர் தான், சுமேரியக் கதைகள் பைபிளினால் சுவீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஊகிக்கக் கூடிய ஆதாரங்கள் நிறைய உள்ளன.
நோவாவின் கதையில் வரும், ஊழிக்கால கடல் கொந்தளிப்பு கருங்கடல் பகுதியில் இடம் பெற்றுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூகோள வரைபடத்தைப் பார்த்தால், "செம்” மன்னனின் ராஜ்ஜியம் கருங்கடலில் இருந்து சிறிது தூரத்திலேயே அமைந்திருந்தது புலப்படும். மேலும் சார்கோன் மன்னனின் பிறப்பு பற்றிய கதை, யூதர்களின் மேசியா மோச்சின் கதையை ஒத்துள்ளது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், சார்கோன் மன்னனின் பிறப்பு வருடாவருடம் கொண்டாடப்பட்டது, செம் மன்னனின் வம்சாவழியினராக தம்மை காட்டிக் கொண்ட யூதர்கள், பண்டைய ஈராக் மண்ணுக்குரிய கதைகளை பைபிளில் எழுதி வைத்தார்கள். பின்னர் அவற்றை தமது பரம்பரைக் கதைகள் என்று உரிமை கோரினார்கள்.
கி.மு. 1500 ஆண்டளவில் "பாபிலோன்" என்ற புதிய அரசு தோன்றியது. இவர்களின் காலத்திலும் நாகரீகம் தழைத்தது. பாபிலோனியர்களால் போற்றப்பட்ட மன்னன் ஹமுராய் , மக்கள் நலச் சட்டங்களை இயற்றி, அவற்றின் வாசகங்களை நாடெங்கிலும் தூண்களில் பொறித்து வைத்தான். இதுவே நவீன சட்டங்களின் தோற்றமாக கருதப்படுகின்றது. பாபிலோனியர் காலத்தைக் கணிக்கும் காலண்டரும் பாவித்து வந்தார்கள். அவர்களின் நாட்காட்டியில் 12 மாதங்களும், ஒரு மாதத்திற்கு 30 நாட்களும், ஒரு நாளைக்கு 24 மணித்தியாலங்களும் இருந்தன. பாபிலோனிய சக்ரவர்த்தி நெபுகாநேசர் காலத்தில் சாம்ராஜ்யம் பாலஸ்தீனம் வரை விரிவுபடுத்தப்பட்டது. இது அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனிய தலைநகருக்கு நாடு கடத்தப்பட்டதாக யூத வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கீழ் வாழும் சிறுபான்மை இனத்தவர்களைப் போல, யூதர்களும் பாபிலோனிய தலைநகருக்கு இடம் பெயர்ந்திருக்க வாய்ப்புண்டு.
ஈராக்கிற்கு அரேபியர்கள் (முஸ்லீம்கள்) வருவதற்கு முன்னர், அதாவது கி.மு.331 முதல் கி.பி.636 வரை, ஈராக் முழுவதும் பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இடையில் சில காலம் அலெக்சாண்டரின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்து குடியேறிய கிரேக்கர்களும் அங்கே வாழ்ந்தனர். அரேபியரின் படையெடுப்பு இசுலாமை கொண்டு வரும் வரை, சாரதூசர் என்ற தத்துவஞானியின் மதம் உத்தியோகப் பூர்வமதமாக இருந்தது. "மாஸ்டா” என்ற கடவுளை வழிபடும் ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட மதமாக விளங்கியது. (சாராத்தூசரின் ஓரிறைக் கோட்பாடு யூத / கிறிஸ்தவ / இசுலாமிய மதங்களுக்கு முந்தியது). பாரசீக சாம்ராஜ்ஜியத்தினுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியும், உள்நாட்டுக் குழப்பங்களும், அரேபியரின் படையெடுப்புக்கு சாதகமாக அமைந்துவிட்டன. பாரசீகப் படைகள் இசுலாமியப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட பின்பு, ஈராக்கும்; இசுலாமியப் பேரரசின் ஒரு பகுதியாகியது. அரேபிய தீபகற்பத்தை சேர்ந்தவர்கள் ஈராக்கின் பல பகுதிகளிலும் சென்று குடியேறினார்கள்.
உள்ளூர் மக்களையும் இசுலாமிய மதத்தை தழுவச் செய்தனர். அவ்வாறு மதம் மாறியவர்கள் ஆளுபவர்களின் மொழியாகிய அரபு பேசக் கற்றுக் கொண்டார்கள். பாக்தாத் நகர் விரிவுபடுத்தப்பட்டு, பேரரசின் அரசியல் கலாச்சார மையமாகியது. சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகப் போக்குவரத்தினாலும் பாக்தாத் பலனடைந்தது. மேலும் கீழைத்தேய நூல்கள் பல பாக்தாத் அரசவையில் மொழி பெயர்க்கப்பட்டன. அந்த நூல்களில் சில ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் லத்தீனிலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன.
இசுலாமியர்கள் தமது மதத்தை நிறுவனப்படுத்தியபொழுது, அதன் தலைமை "உம்மா” (பாராளுமன்றம்) என்ற பிரதிநிதிகளின் குழு பொறுப்பேற்றது. உம்மாவின் பிரதிநிதிகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்) நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். உம்மாவின் உறுப்பினர்கள் தமக்குள் கூடி "கலீபா” என்ற பிரதிநிதியை (பிரதம மந்திரி) தெரிந்தெடுப்பார்கள். ஆரம்ப காலத்தில் இசுலாமிய அரசுகளின் கலீபாக்கள் அனைவரும் அவ்வாறு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டனர். இறைதூதர் முகமதுவின் மறைவுக்குப் பின்னர் தலைமைப் பதவிக்கு பலர் போட்டியிட்டனர். முகமது நபியின் மருமகன் அலியை சில பிரதிநிதிகள் உம்மாவின் தலைவராக தெரிவு செய்தனர். ஆனால் இன்னொரு பிரிவு அதனை எதிர்த்தது. கி.பி. 661 -ம் ஆண்டு, ஈராக் நகரான கூபாவில் வைத்து அலி படுகொலை செய்யப்பட்டார். இதன் விளைவாக அலியின் ஆதரவாளர்களும், எதிராளிகளும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டார்கள். அந்த சகோதர யுத்தம் இசுலாமிய மதத்தில் பிளவுக்கு வழி வகுத்தது. அன்றிலிருந்து அலியை பின்பற்றியோர் ஷியா (ஷியா அத் அலி - அலியின் கட்சி) முசுலிம்கள் என அழைக்கப்பட்டனர். ஏனையோர் சுன்னி முசுலீம்கள் என்று அழைக்கப்படலாயினர். ஷியா , சுன்னி முசுலீம்களுக்கு இடையிலான பகை இன்று வரை தொடர்கின்றது. இரண்டு பக்கமும் உள்ள மதவெறியர்கள் அந்தத் தணல் அணையாமல் பாதுகாக்கின்றனர். முதலாவது இசுலாமிய சகோதர யுத்தத்திற்கு பின்னர், ஷியா முசுலீம்கள் தமக்கென தனியான மதச் சம்பிரதாயங்களை பின்பற்றி தனிச் சமூகமானார்கள். இன்றைய ஈராக்கில் ஷியா முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்தபோதிலும், கிராமப்புற விவசாய சமூகமாக வாழ்ந்து வருவதால் அரசியலில் ஒதுக்கப்பட்டனர். சுன்னி முசுலீம்கள் பெருநகரங்களில் வாழ்ந்து வருவதால், நீண்டகாலமாக அரசு நிர்வாகத்தில் கோலோச்சினார்கள் 16 - ம் நூற்றாண்டில், அரேபிய அரச வம்சங்கள் இசுலாமியப் பேரரசை கட்டியாள தடுமாறிக் கொண்டிருந்தன.
மேற்கில் துருக்கி ஒரு பலமான அரசியல் சக்தியாக உருவாகியது. இசுலாமிய மதத்தை தழுவியதால் , பல்வேறு துருக்கி இனங்கள் ஒன்று சேர்ந்தன. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த துருக்கி இனங்கள், ஈராக்கில் நிலவிய உன்னதமான இசுலாமிய நாகரிகத்தை கண்டு வியந்தனர். (நமது நாட்டு மக்கள் ஐரோப்பியரின் நாகரிக வளர்ச்சியை கண்டு வியப்பதற்கு ஒப்பானது). ஒன்றிணைந்த துருக்கி இனங்களின் அரசியல் - இராணுவ தலைமை ஒஸ்மானியர்கள் (ஆங்கிலத்தில் ஓட்டோமான்) என்ற அரச வம்சத்தின் கைகளில் இருந்தது. விரைவிலேயே முழு அரபு பிரதேசங்களும் ஒஸ்மானியரின் ஆட்சியின் கீழ் வந்தன. முதலாம் உலகப் போரில் எதிரணியில் நின்ற ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், ஈராக் துருக்கியரால் ஆளப்பட்டு வந்தது. அதற்கு சாட்சியமாக இன்றைக்கும் துருக்கி மொழி பேசும் சிறுபான்மையினம் ஈராக்கில் வாழ்கின்றது
Source book : ஈராக் வரலாறும் அறிவியலும்
Author : கலையரசன்