திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தில் புதிய வேல் பொருத்தப்பட்டது..! 40 அடி உயரம் கொண்டது..!!
25 February 2025
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முக்கிய ஆன்மிக தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளும், கும்பாபிஷேக திருப்பணிகளும் நடந்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் 9-வது நிலையில் கட்டபொம்மன் காலத்தில் உள்ள ராஜகோபுர மணி பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மணி வருகிற கும்பாபிஷேக தினத்தன்று ஒலிக்க உள்ளது. மேலும் வர்ணம் பூசும் பணி என அனைத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ராஜகோபுரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 40 அடி உயரம் கொண்ட பிரமாண்ட வேல் பொருத்தும் பணிகள் நேற்று முன்தினம் முதல் தீவிரமாக நடைபெற்றது. இந்த பணிகள் நேற்று முடிவடைந்தது. இந்த வேலில் நவீன கால மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலின் மேல் பகுதியில் திருநீறு பூசியது போல் மின் விளக்குகளால் மூன்று கோடுகளும், கீழ் பகுதியில் ஓம் என்ற எழுத்தும் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராஜகோபுரத்தில் இருந்த வேல், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும். அதேபோல் புதிதாக பொருத்தப்பட்ட இந்த வேலும், பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பெறும் வகையில் அமைந்துள்ளது.