கொற்றவை என்பவள் யார் ?

14 January 2025

கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. கள்ளர், மறவர் மற்றும் எயினர் (எயினர் என்பவர்கள் பாலை நில வேட்டுவர்கள்) கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. வேட்டுவர் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும், அவர்கள் ஐவகை நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர். கொற்றவை என்பவள் குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாகப் சில பழந் தமிழ் நூல்களிலே குறிப்பிடப்பட்டாலும், பிற்காலத்தில் கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய தெய்வமாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறாள். கொற்றவை மறவர்களுக்கு தொழிலில் வெற்றியைக் கொடுப்பவள் என இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. கள்ளர்‌, மறவர்களுடைய வழிபடு கடவுளான கொற்றவை ஆனிரை கவரும்‌ வெட்சிப்‌ போர்த்‌ தெய்வமாகும். பாலை நில மாந்தராகிய கள்ளர் மறவருக்கு, அவரது போர்த் தொழிலில் கொற்றத்தைத் தருபவள் கொற்றவை.

இன்று கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்னும் ஒரு பிரிவு சொல்லப்படுகிறது. போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது.

காலத்தால் முற்பட்ட இந்த நூலிலேயே கொற்றவை இடம்பெற்றிருந்தும், சங்க இலக்கியங்கள் எதிலும் கொற்றவைத் தெய்வம் பெயர் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. கொற்றவை கானகத்தில் உறையும் மறவர்களுடைய கடவுள் ஆவாள்.

திருமுருகாற்றுப்படை, தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகனைக் "கொற்றவை சிறுவ","பழையோள் குழவி" என்னும் தொடர்களால் குறிப்பிடுகிறது. இது கொற்றவையை முருகக் கடவுளின் தாயாகப் பழந்தமிழர் கருதியதைக் காட்டுவதுடன், "பழையோள்" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் கொற்றவை வழிபாட்டின் தொன்மையும் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.

கொற்றவை பற்றிய நேரடியானதும் மறைமுகமானதுமான குறிப்புக்கள் முற்பட்ட நூல்களிலேயே காணப்படினும் சிலப்பதிகாரமே கொற்றவை பற்றிய விரிவான பல தகவல்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது பற்றிய தகவலும் அத் தெய்வம் பற்றிய விளக்கமும் காணப்படுகிறது. மழை வளம் இல்லாத பகுதியில் வாழும் மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும், அதற்குக் கைமாறாக வீரத்தன்மைக்கு அடையாளமான அவிப்பலியை எதிர்பார்ப்பவள் என்றும், அவள் நெற்றிக்கண்னை உடையவள், விண்ணோரால் போற்றப்படுபவள், குற்றம் இல்லாத சிறப்புக் கொண்ட வான நாட்டினை உடையவள் என்றும் கொற்றவையின் இயல்பும் சிறப்பும் விவரிக்கப்படுகின்றன.

மறவர் குடியிலே கொற்றவைக்குப் பலி கொடா விட்டால் ஏற்படக்கூடிய நிலையையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. மறவரின் மன்றங்கள் பாழ்படும், வழிப்பறி வாய்ப்பு இல்லாமல் மறவர் சினம் குறைந்து செருக்கு அடங்குவர், கொற்றவை மறவரின் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள், கள் குடித்து மகிழ்ந்து வாழும் வாழ்வு கிடைக்காது என்று மறவரின் தொழிலும், இயல்பும் வாழ்வும் பாழ்படும் நிலை கூறப்படுகின்றது.


கொற்றவையின் கோலம்:

சிலப்பதிகார வரியில், மறக்குலப் பெண்ணான சாலினி, கொற்றவையாகக் கோலம் புனைந்தது பற்றிய விவரங்கள் தரப்படுகின்றன. இது அக்காலத்தில் மக்கள் கொற்றவையை எப்படியான தோற்றத்தில் வழிபட்டனர் என்பதை அறிய உதவுகின்றது.

இவள் சிங்கக் கொடியும், பசுங்கிளியும் ஏந்தியவள். கலைமானை ஊர்தியாக உடையவள். பேய்களைப் படையாகப் பெற்றவள். ஒளியோடு வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள். நோலை (எள்ளுருண்டை), பொரி, அவரை, மொச்சை இவற்றின் புழுக்கல் (சுண்டல்), பிண்டி (அவல்), நிணம், குருதி, குடர், நெய்த்தோர் என்பவற்றால் நிறைந்த மண்டையை வலக்கையில் ஏந்தியவள். மறவன் ஒருவன் ஆகோள் கருதுவானாயின் அவனுக்கு அறுளவும், பகைவர் தமது பகை நீங்கவும் முற்பட்டு வருவாள்.

கொற்றவை, தலையில் பிறையாகிய வெண்ணிற இதழைச் சூடியவள், நெற்றிக்கண் உடையவள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப்போல் ஒளிவீசும் புன்னகையை உடையவள், நஞ்சை உண்டதனால் கருநிறமான கழுத்தை உடையவள், நச்சுப் பாம்புகளை மார்புக் கச்சாக அணிந்தவள், கையில் வளையல்களை அணிந்திருப்பவள், திரிசூலத்தை ஏந்தியிருப்பவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலில் சிலம்பும் வலக்காலில் கழலும் அணிந்தவள், வெற்றியைத் தருகின்ற வாளையுடையவள், மகிசாசூரனைக் கொன்று அவன் தலைமேல் நிற்பவள், கரு நிறத்தவள், கலைமானை ஊர்தியாக உடையவள் என்று கொற்றவையின் கோலம் கூறப்படுகின்றது.


கொற்றவை வழிபாடு !

பாவை, கிளி, காட்டுக்கோழி, மயில், பந்து, கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்து மான் மீது கொற்றவையை உலாவரச் செய்து, பின்னால் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி, மணமுள்ள சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, புகை முதலியவற்றைத் தாங்கியபடி பெண்கள் வருவர். வழிப்பறியின் போது கொட்டும் பறை; சூறையாடும்போது ஊதப்படும் சின்னம், கொம்பு, புல்லாங்குழல் என்பவை முன்னால் இசைத்துக்கொண்டு வருவர்.

மறவர் தமது தொழிலுக்கு வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகவே கொற்றவையைக் கருதி வழிபட்டனர். பழந்தமிழ்க் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டாள்.

சிவனின் துணைவி ! திருமாலின் தங்கை !

கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற சங்ககாலத்துக்குப் பிற்பட்ட நூல்கள் சிவனின் துணைவியாக உமையை முதன்மையாகப் பேசுகின்றன. எனினும் இம்மூன்று நூல்களும் கொற்றவை பற்றியும் பேசத் தவறவில்லை. திருமுருகாற்றுப்படை முருகனை "மலைமகள் மகன்" என்று உமையின் மகனாகக் காட்டுவதையும் காணலாம்.

கொற்றவை திருமாலின் தங்கையாகக் காட்டப்பட்டதுடன் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றையும் கொற்றவை தாங்கியிருப்பதாகக் காட்டப்பட்டது. சமஸ்கிருதமயமாக்கல் காரணமாக சில தமிழர்கள் அவளை சமஸ்கிருத வேதங்களில் இருந்து காளி என்று தவறாகப் புரிந்து கொண்டனர் (காளி எப்போதும் ஆடைகளை அணிந்த கோட்ரவைக்கு மாறாக நிர்வாணமாக இருப்பார்)

கொற்றவை என்பது ஆதி தமிழர்களின் தெய்வமாகவும் போர் தொழிலின் முதன்மையான தெய்வமாகவும் விளங்கினாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதி தமிழர்களின் வழிபாடான கொற்றவை வழிபாடு இன்று இல்லை என்பதே கசப்பான உண்மை.

ஆசிரியர்