தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் சிரம்பரத்திற்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள மருதூரில் திருஅருட்பிரகாச வள்ளலார் அவதரித்தார்கள். பெருமானாரைப் பிள்ளையாகப் பெறும் பேறுபெற்ற பெற்றோர் இராமையபிள்ளை, சின்னம்மையார் என்போர். இவர்கள் சமயம் - சைவம். குலம் - வேளாண்குலம். மரபு - கருணீகர் மரபு. இராமைய பிள்ளை மருதூரின் கிராமக் கணக்கர். பிள்ளைகளைக் கூட்டிப்பாலஞ் சொல்லும் ஆசிரியராகவும் விளங்கினார். சின்னம்மையார், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகிலுள்ள சின்ன காவணத்தில் பிறந்த வளர்ந்தவர். இராமைய பிள்ளைக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர். ஐந்து மனைவியரும் மகப்பேறின்றி ஒருவர்பின் ஒருவராக இறக்கவே இராமைய பிள்ளை இவரை ஆறாவதாக மணம் முடித்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன் என்னும் இரு ஆண் மக்களும் உண்ணாமூலை, சுந்தராம்பாள் என்னும் இரு பெண்மக்களும் பிறந்தனர்.