திருச்செந்தூரில் தீவிரமாக நடைபெறுகிறது தைப்பூச திருவிழாக்கான ஏற்பாடுகள்!!
05 February 2025
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மற்றும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் சுவாமி கோவிலில் வருகின்ற பிப்ரவரி 10-ந்தேதி ஸ்ரீ சண்முகர் ஆண்டு விழாவும், 11-ந்தேதி தைப்பூச திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு 10-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு, அலைவாயுக்கந்த பெருமான் திருவீதி உலா வந்து கோவில் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தைப்பூச திருநாளான 11-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன