திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்த ஓ பன்னீர்செல்வம்

21 January 2025

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடலோரத்தில் அமைந்துள்ளது என்பதும், இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும், சூரசம்ஹாரம், சஷ்டி போன்ற திருவிழாக் காலங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பக்தர்கள் இங்குள்ள கடலில் நீராடிவிட்டு முருகப் பெருமானை வழிபடுவது என்பதும் வாடிக்கை.

இப்படிப்பட்ட பிரசித்திப் பெற்ற திருக்கோவிலை ஒட்டியுள்ள கடற்கரையில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும், 20 அடி நீளத்திற்கும், 10 அடி ஆழத்திற்கும் கடலில் அரிப்பு ஏற்பட்டு மிகப் பெரிய பள்ளம் உருவாகியுள்ளதாகவும், இதனால் பக்தர்கள் நீராடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் கற்கள் கொட்டப்படுவதால்தான் அரிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.