சிவகங்கை மாவட்டத்தில் காலையில் கோரிக்கை மாலையில் நிறைவேற்றம்.
23 January 2025
சிவகங்கை மாவட்டத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க புதன்கிழமை காலையில் வருகை புரிந்த தமிழக முதல்வருக்கு, சிவகங்கை திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி, சாந்தா கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள், கல்லூரி செயலாளர் தலைமையில் வரவேற்பளித்தனர். அப்போது, கல்லூரி அருகே பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனடிப்படையில் அந்தக்கல்லூரி வாயிலருகே பேருந்து நிறுத்தம் அமைத்து அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, அரசு போக்குவரத்துக்கழக காரைக்குடி மண்டல பொது மேலாளர் எஸ்.பி. கந்தசாமி, அந்த வழித்தடத்தில் செல்லும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தினார். மேலும்,
மாலையில் கல்லூரி முன்பு பேருந்து நிறுத்த பதாகை இருமார்க்கங்களிலும் உடனடியாக வைக்கப்பட்டது. அங்கு மாலையில் பேருந்து நின்று சென்றது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக்கழக பொது மேலாளர் தெரிவித்தார். காலையில் விடுத்த கோரிக்கை மாலையில் நிறைவேற்றப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தமிழக முதல்வருக்கு அவர்கள் நன்றியையும் தெரிவித்தனர்.
செய்தியாளர்:-
சிவ பிரசாத்.கா