இது பேருந்து நிலையமா இல்லை நோய் தொற்று ஏற்படும் பகுதியா??
07 March 2025
சிவகங்கை மாவட்டம் வேலு நாச்சியார் நினைவு பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. இங்கு எங்கு பார்த்தாலும் குப்பைகள் பரவியுள்ளன. மேலும், கழிவுநீர் செல்லும் பகுதிகளில் குப்பைகள் அடைந்து, கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதனால், சுற்றுப்புறம் சுத்தமற்ற நிலைக்குள்ளாகி, நோய் தொற்று ஏற்படும் சூழலில் உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தின் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் தினமும் இத்தலத்தை பயன்படுத்துகின்றனர். இப்படி ஒரு முக்கிய இடத்தில் குப்பைகள் மற்றும் கழிவுகளால் சூழப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது.
மேலும், புதியதாக கட்டப்பட்ட கழிவறைகள் பல நாட்களாக பராமரிக்கப்படாமல் உடைந்த நிலையில் உள்ளன. இதனால் பயணிகள் அந்த கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது,
அதுமட்டுமல்லாமல் சிவகங்கை சிவன் கோயில் தெப்பக்குளத்தில் குப்பைகள் மிதந்து காணப்படுகின்றன. அங்கு நாய்களின் உடல்கள், மது பாட்டில்கள், வீட்டு குப்பைகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும், தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளை மதுபானம் அருந்த மது பிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், சிவகங்கை நகரில் குப்பைகள் மற்றும் கழிவுகளால் சூழப்பட்டு இருப்பது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையை சரி செய்ய நகராட்சி உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகங்கை செய்தியாளர்:
சிவபிரசாத்.கா