காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியம் கௌரிபட்டி கிராமத்தில் அடிப்படை இல்லாமல் அவதி !!
13 March 2025
சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கௌரிபட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆதிதிராவிட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமலே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டிருந்தாலும், அதன் பராமரிப்பு சரியாக நடைபெறவில்லை. தற்போது அந்த தொட்டி பழுதடைந்து, குடிநீர் சேமிப்பதற்கான பயன்பாட்டிற்கு இல்லை. இதனால், கிராம மக்கள் குடிநீர் பற்றிய பிரச்சனையில் அதிக சிரமத்தை அனுபவிக்கின்றனர்.
மேலும், கிராமத்திற்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அந்தப் பகுதி சாலைக்கு அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் எந்தவொரு பணிகளும் செய்யப்படவில்லை. பல முறை புகார் அளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், அரசு வழங்கும் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இந்த கிராமத்தில் வாழும் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பிரச்சனைகளை பார்வையிட்டு, கிராம மக்கள் அதிகாரிகளிடமிருந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.