நெல்லையில் தமிழர் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்தது !!
05 February 2025
லாட்டரியில் சீட்டுக்களை வாங்கும் பலரும் இந்த முறையாவது அதிர்ஷ்ட காற்று நம் பக்கம் வீசாதா, இந்த முறையாவது அதிர்ஷ்ட தேவதை கண்ணை திறக்காதா என்று யோசித்து பகல் கனவு கண்டு வருவார்கள். இதனை மெய்ப்பிக்கும் வகையில் நெல்லையை சேர்ந்த நபருக்கு லாட்டரியில் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் பரிசு அடித்துள்ளது. இதனால் அந்த நபர் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்
கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. அந்த மாநில அரசே லாட்டரி சீட்டு விற்பனையை நடத்தி வருகிறது. இதனால் அங்கு ஏராளமானோர் லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறார்கள். அதுபோக பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் அங்கு லாட்டரிகளை வாங்கி வருகிறார்கள். இதனால் அவ்வப்போது தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் லாட்டரியில் பரிசு கிடைத்து கோடீஸ்வரர் ஆகி வருகிறார்கள்.
இதேபோல் உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. அங்கும் பலரும் இப்படி லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறார்கள். வாழ்க்கையில் ஒருமுறையாவது அதிர்ஷ்ட தேவதை கண் திறக்காதா என்றும், இந்த முறையாவது நம் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசாதா என்றும் பகல் கனவு கண்டு வருகிறார்கள். அப்படித்தான் துபாயில் வேலை பார்த்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவருக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறந்ததாளோ என்னவோ லாட்டரியில் ரூபாய் 2 கோடியே 35 லட்சம் பரிசாக கிடைத்துள்ளது. இது பற்றிய விவரத்தை பார்க்கலாம்.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருகிறார்கள். உள்ளூரில் போதிய வருமானம் கிடைக்காமல் கடல் கடந்து சென்றாவது குடும்பத்தை காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் பலரும் இப்படி வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பதை பார்க்க முடிகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் போன்ற இடங்களில் லாட்டரி டிக்கெட்டு விற்பனையும் நடைபெறுகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டுகளை அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களும் வாங்குகிறார்கள். அவ்வப்போது இந்த லாட்டரிகளில் முதல் பரிசு இந்தியர்களுக்கும் அடிப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் தற்போது தமிழகத்தின் நெல்லையை சேர்ந்தவருக்கு லாட்டரியில் 2.35 கோடி பரிசு அடித்துள்ளது.
தமிழகத்தில் நெல்லையை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் (வயது 41). இவா் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் மூத்த எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். தனியார் நிறுவனம் நடத்திய லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கலில் பீர் முகம்மது ஆதம் வாங்கிய சீட்டுக்கு 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி) பரிசு கிடைத்துள்ளது. தனக்கு பரிசு அடித்ததால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த பீர் முகம்மது, இது தொடர்பாக கூறியதாவது:-
இந்த முறை எனது பெயரில் லாட்டரி டிக்கெட் வாங்கி குலுக்கலில் பங்கு பெற்றோம். கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.35 கோடி) பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதை நம்பவே முடியவில்லை. பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
எனது நண்பர்களுக்கு இந்த தொகையை பகிர்ந்து அளித்து இருக்கிறேன். எனக்கு கிடைத்த தொகையை வைத்து எனது குடும்பத்திற்கும் எதிர்கால சேமிப்புக்கும் பயன்படுத்துவேன். லாட்டரியில் பரிசு அடித்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.